நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013
அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன்
வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை
இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும்
இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
அடுத்து நோக்கவுரை ஆற்றிய ரவிக்குமார் இந்த விருது ஏன் ஏற்படுத்தப்பட்டது
என்பதை விளக்கினார். வகுப்பறைகளில் நிலவும் பல்வேறுவிதமான பாகுபாடுகளிலும் மிகவும்
கொடுமையானதாக சாதிய பாகுபாடு உள்ளதென்று கூறிய அவர், அத்தகைய பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்கும், அதற்காக பாடுபடுகிறவர்களைக் கௌரவிப்பதற்கும்தான் இந்த முயற்சி
எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ விருதுகள் அளிக்கப் படுகின்றன. ஒரு
விருதை யார் கொடுக்கிறார்கள் என்பதைப்போலவே அது யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதும்
முக்கியம். கல்விக் கூடங்களில் சமத்துவத்தை ஏற்படுத்த இதுவொரு சிறிய துவக்கம்தான்,
பலரும் இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் விருதுபெற்ற
ஆசிரியர் த.பாலு ஏற்புரையாற்றினார். அவர் பேசும்போது “ அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள்
பள்ளிக்கு வெளியே வந்து நல்ல காரியங்களைச் செய்வதைவிடவும் பள்ளியில் ஒழுங்காகப் பாடம்
சொல்லிக்கொடுத்தாலே போதும். காசுகொடுத்துப் படிக்க முடியாத ஏழைப் பிள்ளைகள்தான் அரசுப்
பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களைப் நன்றாகப் படிக்க வைத்தால் அதுவே மிகச்சிறந்த சேவை. ரவிக்குமார் எந்த தளத்தில் செயல்பட்டாலும் அங்கே அடித்தளத்து மக்களுக்காக ,
யாரும் கண்டுகொள்ளாத மக்கள் தொகுதிக்காக, ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கிறார் என்பது
முக்கியம். எனவேதான் அவர் கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பாகுபாடுகளுக்கு எதிராகச்
செயல்படும் பள்ளி ஆசிரியருக்கும், கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்கிற விருதைத்
தனது சொந்த பங்களிப்பில் வழங்குகிறார்.
விருதுகள்
என்றாலே ஒத்த கருத்துகளுக்கு இடமில்லாமல் பெரும்பாலும் சர்ச்சைகள் எழுவது உண்டு. பாரத்
ரத்னா விருதை அளித்ததில்கூட எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் அண்ணல் அம்பேதகருக்கு வழங்கினார்கள்
என்பதை நினைத்துப் பார்க்கும்போது அத்தகைய விருதுகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல்
விருப்பு வெறுப்புகள் நமக்குத் தெரிகிறது.ஆனால் ரவிக்குமார் ஒரு அரசியல் இயக்கத்தைச்
சேர்ந்தவராக இருந்தும் கட்சி அரசியல் அடையாளம் ஏதுமில்லாமல் இந்த நிகழ்வை நடத்துகிறார்.
என்னிடம் நற்கூறுகள் ஏதேனும்
இருக்கிறதென்றால் அவை பலராலும் ஏற்படுத்தப்பட்டவை. குறிப்பாக பழமலையும் கல்யாணியும்,
கோச்சடை, ரகமத்துல்லா கான், லோகியா போன்ற பேராசிரியர்களும் ஏற்படுத்திய தாகம்தான் அதற்குக்
காரணம்.குறிப்பிட்ட சிந்தனைப் போக்கும், இயக்கச் சூழலும் களச் செயல்பாடுகளும் சேர்ந்து
உருவாக்கிய கூட்டு மனம்தான் நான். நிறைய செவிலித் தாய்களால் உருவாக்கப்பட்ட எனக்கு
அளிக்கப்படும் விருது அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் விருதுதுதான். இந்த விருதை
அவர்கள் அனைவரின் சார்பில் நோபல் பரிசாக நினைத்து ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார். அடுத்து பேராசிரியர் அ.ராமசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.
வாழ்த்துரை ஆற்றிய பேராசிரியர் கல்யாணி “ வகுப்பறையில் பல்வேறு
பாகுபாடுகள் இருக்கின்றன. இந்த விருது வழங்கப்படுவது குறித்து கலந்துபேசுவதற்காக என்னை
சந்திக்க வந்த ரவிக்குமார் ஆங்கிலத்தில் இருந்த அறிக்கை ஒன்றை என்னிடம் தந்துவிட்டுப்
போனார். முதலில் அதை நான் படிக்கவில்லை. பிறகு ஒருநாள் எடுத்துப் பார்த்தேன். தேசிய
ஆலோசனைக் கவுன்சில் வழங்கிய அறிக்கை அது. அதைப் படித்தபோதுதான் எத்தனைவிதமான பாகுபாடுகள்
இருக்கின்றன, அவற்றைக் களைவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது.
அந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.
இந்த விருதை அளிக்க முடிவு செய்ததற்காக மணற்கேணி பத்திரிகையின் ஆசிரியர் ரவிக்குமாரைப்
பாராட்டவேண்டும். எனக்கு தலித் பிரச்சனை குறித்து இந்த அளவுக்கு புரிதல் ஏற்பட அவரும்
ஒரு காரணம். எந்தவொரு விஷயத்தையும் மனதில் தைப்பதுபோல அவர் சொல்லுவார். இந்த நிகரி
விருதுக்கான நினைவுப் பரிசை வடிவமைத்தவர் அவரது மகன் அதீதன். மிகச் சிறப்பாக அதைச்
செய்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.”
”இந்த சமத்துவ ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கும் பாலு பள்ளி
மாணவராக இருந்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கமானவர். அப்போதே நல்ல பேச்சாளர். சமச்சீர்
கல்வியை அவர் சார்ந்திருந்த ஆசிரியர் சங்கம்
ஏற்காதபோது தனது சொந்த முயற்சியில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டு
வினியோகித்தவர். பேராசிரியர் ராமசாமி தலித் பிரச்சனையில் நல்ல தெளிவான பார்வை கொண்டவர்.
அரசு அதிகாரிகளுக்கு எஸ்.சி/ எஸ்.டி பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்
திட்டம் 2001 ஆம் ஆண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது. நான், ரவிக்குமார் போன்றவர்களெல்லாம்
பயிற்சி கொடுத்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி கொடுத்தபோது ராமசாமி அவர்களும்
வந்து அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தார்.”
”இங்கே சிறப்புரையாற்ற வந்திருக்கும் வசந்திதேவி அவர்கள்தான்
நான் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடக் காரணம் என்று சொல்லலாம். கடலூர் சிறையில் இருந்த
தமிழிந்தியன் என்ற கைதி எனக்கொரு கடிதம் எழுதினார்.அதை அறிந்த வசந்திதேவி அவர்கள்தான்
என்னை உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று அங்கு இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளராக
இருந்த திரு ராஜா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகுதான் மனித உரிமை தொடர்பான
பிரச்சனைகளை நான் கையிலெடுத்தேன்.”
”தலித்துகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.அவற்றை எதிர்த்து
அவர்கள் சாதி அடிப்படையில் திரள்வதற்கு நியாயமிருக்கிறது. ஆனால் பி.சி யோ அல்லது எம்.பி.சியோ
அப்படி சாதி அடிப்படையில் திரளுவதற்கு எந்த நியாயமும் இப்போது இல்லை. முன்பு இருந்திருக்கலாம்,
இப்போது இல்லை என்பதுதான் எனது வலுவான கருத்து. சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பற்றி
ஆசிரியர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த விழாவுக்குப் பிறகாவது அந்த விழிப்புணர்வை
ஏற்படுத்த நாம் முயற்சிக்கவேண்டும்” என்று கல்யாணி குறிப்பிட்டார்.
விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய முனைவர் வசந்திதேவி சுமார்
ஒரு மணி நேரம் பேசினார். கல்வித்துறையில் நிலவும் பல்வேறுவிதமான சீர்கேடுகளையும் அவர்
தனது உரையில் சுட்டிக்காட்டினார். ”வர்க்க அடிப்படையிலான போராட்டம் வர்ண அடிப்படையிலான
போராட்டம் என இனிமேல் பிரித்துப் பார்க்கக்கூடாது.இரண்டும் ஒன்றுதான் என அணுகவேண்டும்
எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மனது
வைத்திருந்தால் இந்நேரம் அந்தப் பள்ளிகள்தான் தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த பள்ளிகளாக
இருந்திருக்கவேண்டும்.ஆதிக்க சாதியினர் தலித் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருவதில்
அக்கறைகாட்டவில்லை என நாம் குற்றம் சாட்டுகிறோம். அது உண்மைதான். ஆனால் தலித் ஆசிரியர்கள்
என்ன செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள்
தலித் ஆசிரியர்களில்லையா? அவர்கள் தமது கடமையை சரியாகச் செய்யவேண்டும் என்று நாம் கேட்கவேண்டும்.”
என அவர் வலியுறுத்தினார்.
”சில தலித் சிந்தனையாளர்கள் தலித் குழந்தைகள் ஆங்கிலத்தில்
படிப்பது நல்லது என்கிறார்கள்.அது திசைதிருப்பும் கருத்து. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக்
கற்பதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால் தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். உலகின்
பெரும்பாலான நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.தலித் பிள்ளைகள் அத்தனைபேரும் ஆங்கிலத்தில்
படித்து கர்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குப் போக முடியுமா? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி
வகுப்புகளைத் திறப்பது ஆபத்தாகத்தான் முடியும். டென்னிஸ் த மெனேஸ் என்ற கார்ட்டூன்
கதையில் டென்னிஸ் சொல்வான் ’நீ வெற்றிபெற வேண்டுமென்றால் விளையாட்டின் விதியை நீ தீர்மானிக்கவேண்டும்’.
அதுபோலத்தான் தங்களுக்கு சாதகமான விதத்தில் கல்வியின் விதிகளை ஆளும் சாதியினரும் வர்க்கத்தினரும்
வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற கல்வியைப் படியுங்கள் என்கிறார்கள்.”
“நாம் சமூக நீதி என்றாலே இட ஒதுக்கீடு என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
அரசு வேலைவாய்ப்புகளில்தான் இட ஒதுக்கீடு.தனியார் துறையில் அது இல்லை. இப்போது அரசுத்
துறைகளில் எங்கே வேலைவாய்ப்பு இருக்கிறது? தனியார் துறையில்தான் இருக்கிறது. இட ஒதுக்கீடு
இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு இல்லை, வேலை வாய்ப்பு இருக்குமிடத்தில் இட ஒதுக்கீடு
இல்லை.தனியார் துறைதான் இன்று அனைத்து சலுகைகளும் கொடுத்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.அங்கே
உயர் சாதிக்கும் உயர் வர்க்கத்துக்கும்தான் இடம் கொடுப்பார்களே தவிர தலித் பிள்ளைகளுக்கு
எங்கே வேலை கொடுப்பார்கள்?”
“ இன்று நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் யாருடைய
நன்மைக்கு உருவாக்கப்படுகின்றன? இந்த நாட்டிலிருக்கும் கோடீஸ்வரர்களுக்காக உருவாக்கப்படுகின்றன.
இந்த நாட்டின் இயற்கை வளங்களெல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் மாற்றப்படவேண்டுமென்றால்
கல்வியால்தான் முடியும். அந்தக் கல்வியை நாம் பெறவேண்டும். 1964 இல் கோத்தாரி கமிஷன்
உருவாக்கப்பட்டது. இந்த நாட்டில் எந்தத் துறையில் புரட்சி ஏற்படவேண்டுமென்றாலும் அதற்கு
கல்வியிலே முதலில் புரட்சி ஏற்படவேண்டும் என்று அந்தக் கமிஷன் சொன்னது. அந்தக் கல்விப்
புரட்சி உண்டாவதற்கு பொதுப் பள்ளி முறை, அருகமை பள்ளி முறை வந்தாகவேண்டும். அதுமட்டுமல்ல
பள்ளிகள் யாவும் அரசாங்கத்தால்தான் நடத்தப்படவேண்டும். இதைக் கொண்டுவருவதற்கு நாம்
போராடவேண்டும். அப்போதுதான் சாதியற்ற சமுதாயம் உருவாகும்” என்று வசந்திதேவி பேசினார்.
விழாவில் பேராசிரியர்கள் பழமலை,ரஹமத்துல்லா கான், முன்னாள்
விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், எழுத்தாளர்
இமையம், உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை உமாபதி, ரவிகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment