Monday, September 23, 2013

கௌரவக் கொலைகளின் காலத்தில் பூனா ஒப்பந்தம்

Published: September 24, 2013 09:25 IST Updated: September 24, 2013 09:25 IST

கௌரவக் கொலைகளின் காலத்தில் பூனா ஒப்பந்தம்

ரவிக்குமார்
 
படம்: டி.சிங்காரவேலு
 
 
வரலாறு யாவும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் என்றார் கார்ல் மார்க்ஸ். அதை நமது நாட்டுக்குப் பொருத்திப்பார்த்தால் ‘இந்திய வரலாறு என்பதே சாதிப் போராட்டங்களின் வரலாறு’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு இந்திய சமூகத்தை நிர்ணயிக்கும் அம்சமாக இன்றும் சாதி என்பது செயல்பட்டுவருகிறது. நாம் கௌரவக் கொலைகளின் காலத்தில் வாழ்கிறோம்.
சாதிப் போராட்டங்களின் தொகுப்பாக விளங்கும் இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பட்டியலிட்டால் அதில் தவறாமல் இடம்பெற வேண்டிய நிகழ்வு பூனா ஒப்பந்தம். 1932- செப்டம்பர் 24-ம் தேதி பூனாவில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைதான் ‘பூனா ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகிறது.
தமது பிரதிநிதிகளைத் தாங்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகுக்கும் வகுப்புவாரி உரிமையை தலித் மக்கள் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வாதாடிப் பெற்றனர். முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் முதலானோருக்கு அதற்கு முன்பே அத்தகைய உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தலித் மக்களுக்கு அதை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த காந்தியடிகள் பிரிட்டிஷ் அரசின் முடிவை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். "இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என இந்தியாவில் மூன்று வகுப்பினரை மட்டும்தான் அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்க வேண்டும். கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய மற்ற மூன்று பிரிவினருக்கும் அரசியல் சட்டத்தில் எந்த இடமும் வழங்கப்படக் கூடாது. அவர்கள் மற்ற பிரிவினரோடு கலந்துவிட வேண்டும்" என்பதுதான் காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸார் கலவரச் சூழலை ஏற்படுத்தினார்கள். ஆங்காங்கே தலித் மக்கள் தாக்கப்பட்டார்கள். தலித் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய ரத்தக் களறி நடக்கும் என்ற அச்சத்தின் காரணமாக காந்தியைச் சந்தித்துப் பேச்சு நடத்த அம்பேத்கர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அதன் இறுதியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே ‘பூனா ஒப்பந்தம்’.
பூனா ஒப்பந்த நாளை தமது உரிமை பறிக்கப்பட்ட துரோக நாளாக தலித் மக்கள் கடைப்பிடிப்பது வழக்கம். தலித் மக்கள்தமது உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அந்த ஒப்பந்தம் பறித்துக்கொண்டது உண்மைதான் என்றாலும் இந்திய அரசியல் வரலாற்றில் தலித்துகளை ஒரு தரப்பாக அங்கீகரித்து அவர்களோடு இந்துக்கள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள் என்ற விதத்தில் அதுவொரு முக்கியமான நிகழ்வாகவே கருதப்படவேண்டும்.
பூனா ஒப்பந்தம் பெரும்பாலும் தேர்தல் தொடர்பான அம்சங்களையே கவனத்தில் கொண்டிருந்தது என்றாலும் பிறப்பின் அடிப்படையில் பேதம் பாராட்டக் கூடாது என்று வலியுறுத்துகிற ஒரு பிரிவும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. "ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அரசுப் பதவிகளில் நியமிக்கப்படும்போதோ உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போதோ எந்த விதமான இடையூறும் ஒருவருக்கு செய்யப்படக் கூடாது. அவற்றிலெல்லாம் நியாயமான அளவில் அவர்கள் இடம்பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்" என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு காந்தியின் ஆலோசனையின்படி 1932 செப்டம்பர் 30-ம் தேதி மும்பையில் மாநாடு ஒன்றுகூட்டப்பட்டு ‘தீண்டாமை எதிர்ப்புக் கழகம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் மையக் குழுவில் அம்பேத்கரும், தமிழகத்தைச் சேர்ந்த தலித் தலைவர்களான எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். அந்த அமைப்பு உண்மையிலேயே பயனுள்ள வேலைகளைச் செய்யும் என அம்பேத்கரும் மற்றவர்களும் எதிர்பார்த்தனர். அந்த நேரத்தில் அம்பேத்கர் மூன்றாவது வட்ட மேசை மாநாட்டுக்குச் செல்ல நேர்ந்ததால் ‘தீண்டாமை எதிர்ப்புக் கழகம்’ செய்ய வேண்டியவை குறித்த தெளிவான செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த ஏ.வி. தக்கருக்கு அனுப்பிவைத்தார்.
காந்தியோ தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் பிற உறுப்பினர்களோ அம்பேத்கரின் திட்டம் குறித்துக் கருத்தெதுவும்சொல்லவில்லை. அந்தக் கடிதத்துக்குப் பதில்கூட எழுதவில்லை. அதனால் அம்பேத்கரும் எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரும் அந்த அமைப்பிலிருந்து விலகினார்கள். அந்த அமைப்பின் பெயரை ‘ஹரிஜன சேவா சங்கம்’என காந்தி மாற்றியமைத்தார். அது தீண்டாமையை ஒழிப்பதற்குப் பதிலாக காங்கிரஸ்காரர்கள் சிலருக்குப் பதவி வழங்குவதற்கான ஏற்பாடாகச் சுருங்கிப்போனது.
காந்தி காலத்தில் மட்டுமல்ல; தலித் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் காலங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் தலித் மக்கள் மீதான தமது கரிசனையை வெளிப்படுத்துவார்கள். ஆனால், நெருக்கடி முடிந்ததும் அந்தத் திட்டங்களும் குப்பைக்குப் போய்விடும். தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதில் உண்மையிலேயே ஆட்சியாளர்களுக்கு அக்கறையிருந்தால் அதற்கான திட்டத்தைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டாம். அம்பேத்கர் 1932-ல் தயாரித்தளித்த திட்டம் இப்போதும்பொருத்தமாகவே இருக்கிறது.
குடிமை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பிரச்சார இயக்கம், சம வாய்ப்புகள் கிடைக்கச் செய்தல், சமூகக் கலந்துறவாடுதல், தொண்டர்களை உருவாக்குதல் - இந்த நான்கு அம்சங்களைக் கொண்டதே அம்பேத்கர் தயாரித்தளித்த அந்தத் திட்டம். அதில் முதல் அம்சத்தை மட்டும் நிறைவேற்றினாலே போதும், வன்கொடுமைகள் பெருமளவில் குறைந்துவிடும்.
குடிமை உரிமைகளை நிலைநாட்டுதல் தொடர்பாக அம்பேத்கர் முன்வைத்தது இதுதான்: " தீண்டாமை எதிர்ப்புக் கழகத்துக்குக் கிராமப் பகுதிகளில் தொண்டர்களை உருவாக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராட நடவடிக்கைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்தத் தொண்டர்கள் உதவ வேண்டும்."
இப்படியொரு வேலைக் கிராமங்களில் நடந்தால், "இந்து சமூகத்தில் புரட்சி நடக்கும். அத்தகைய சமூகப் புரட்சி நடக்காமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக அந்தஸ்து பெறுவது ஒருபோதும் கைகூடாது" எனக் கருதிய அம்பேத்கர், "சாதி இந்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களிடம் பரிவோடுஇருப்பவர்கள், தேவைப்பட்டால் தமது உற்றார் உறவினர்களை எதிர்த்துப் போராடவும் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
அம்பேத்கர் முன்வைத்த திட்டம் ஓர் அமைப்பு செய்ய வேண்டிய பணிகளை மட்டுமின்றி ஒவ்வொரு தனிமனிதரும் செய்ய வேண்டிய பணிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் சாதியிலிருந்து விடுபட வேண்டும், தான் பிறந்த சாதியின் நலனைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் முன்வைத்த தீர்வு. சுருக்கமாகச் சொன்னால் ‘சொந்த சாதியின் நலனுக்குத் துரோகம் செய்யும் ஒருவர்தான் ஜனநாயகத்துக்குக் காவலராக இருக்க முடியும்.’
பூனா ஒப்பந்தத்தால் பறிக்கப்பட்ட தனி வாக்காளர் தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் எனச் சிலரும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் எனச் சிலரும் இப்போது வலியுறுத்திவருகின்றனர். தலித் மக்களின்உண்மையான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் விதமாக நமது நாட்டின் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால் அதைவிடவும் முக்கியம்... தலித் மக்களுக்கான குடிமை உரிமைகளை வென்றெடுப்பது!
ரவிக்குமார், எழுத்தாளர் - தொடர்புக்கு: manarkeni@gmail.com

No comments:

Post a Comment