Wednesday, October 30, 2013

எஸ்.வி.ஆரை சந்தித்தேன் அ.மார்க்ஸை சந்திப்பேனா?


 

19 ஆம் நூற்றாண்டில் சென்னையிலிருந்து செயல்பட்ட ‘ இந்து சுயாக்கியானிகள் சங்கம் ‘ என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தத்துவ விவேஸினி, Thinker ஆகிய வார இதழ்களின் பிரதிகளை சேகரித்து அவற்றில் வெளியாகியிருந்த செய்திகளையும் கட்டுரைகளையும் ஆறு தொகுதிகளாகப் பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்து வெளிக்கொணர்ந்திருக்கிறார். சுமார் 3500 பக்கங்கள் கொண்ட அந்தத் தொகுப்புகளின் வெளியீடு மற்றும் அது தொடர்பான இருநாள் கருத்தரங்கினை சென்னைப் பல்கலைக்கழகமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன(அக்டோபர் 29, 30 ) 29 ஆம் தேதி பிற்பகல் அமர்வில் நான் கலந்துகொண்டு பேசினேன்.( எனது உரையை ஓரிரு நாட்களில் பதிவேற்றம் செய்கிறேன்).


பேராசிரியர் வீ.அரசு அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு இந்தத் தொகுப்புகளை உருவாக்கியிருக்கிறார். ஒரு நிறுவனம் செய்யும் பணியை அவர் செய்து முடித்திருப்பதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 19 ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவதற்காக ஒரு அமைப்பு இருந்ததையும் அது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இரண்டு வார இதழ்களை நடத்தியதையும் அறியும்போது அறிவுத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடியான பணிகளைச் செய்த தமிழகத்தின் முக்கியத்துவம் புலப்படுகிறது. இந்தத் தொகுப்பு முயற்சி பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தாலும் அது வெளியாகியிருக்கும் தருணம் பொருத்தமானதாயிருக்கிறது. அந்த இதழ்கள் நடத்தப்பட்ட காலத்தில் இருந்ததைவிடவும் மோசமாக மதவாதக் கருத்துகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில் இந்தத் தொகுப்புகள் வெளியாகியிருப்பது மதவாதத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு உதவியாக அமையும். காலத்தால் செய்த இந்த உதவிக்காக மீண்டும் பேராசிரியர் வீ.அரசு அவர்களைப் பாராட்டுகிறேன்.


பல நேரங்களில் இப்படியான கருத்தரங்குகளில் நிகழ்த்தப்படும் உரைகளைவிடவும் கருத்தரங்குகளுக்குச் செல்லும்போது நீண்டநாட்களாக நாம் சந்திக்காமல் இருக்கும் தோழர்களை சந்திக்கக் கிடைக்கும் வாய்ப்பு முக்கியமானதாக நினைவுகூரத்தக்கதாகமாறிவிடும். நேற்றைய தினம் எனக்கு அப்படித்தான் அமைந்துவிட்டது. நேற்றைய கருத்தரங்கின்போது நான் தோழர் எஸ்.வி.ஆர் அவர்களைச் சந்தித்தேன். காலை அமர்வில் தோழர் வ.கீதா பேசிக்கொண்டிருந்தபோதுதான் நான் அரங்கத்துக்குப் போனேன். அமெரிக்காவிலிருந்து இங்குவந்து ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் மைக்கேல் காலின்ஸ் என்ற நண்பரும் என்னோடு வந்திருந்தார். வ.கீதா பேசிக்கொண்டிருந்தபோது மேடையில் பார்த்தேன் தமிழவனைப்போல தோற்றம்கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார். கீதா பேசி முடித்தபோது மேடையில் அமர்ந்திருப்பவர் யார் என என்னிடம் மைக்கேல் காலின்ஸ் கேட்டார். நானும் தமிழவன் என்றே சொன்னேன். அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அது தமிழவன்போல இல்லையே என எனக்குள் ஒரு பொறி தட்டியது. அப்புறம் உன்னிப்பாகப் பார்த்தால் அது தோழர் எஸ்.வி.ஆர்! அவரது தலைமுடியின் தோற்றம்தான் என்னைக் குழப்பியிருக்கிறது. வ.கீதாவுக்குப் பிறகு தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பேசி காலை அமர்வு முடிந்ததும் மேடைக்குச் சென்று தோழர் எஸ்.வி.ஆருடன் கை குலுக்கியபோது எனது குழப்பத்தைப் பகிர்ந்துகொண்டேன். அவர் தனக்கே உரிய நகைச்சுவையோடு “ நல்லவேளை தமிழவனைபோல இருக்கிறேன் என்று சொன்னீர்கள். அவரைப்போல பேசினேன் என சொல்லாமல் விட்டீர்களே” என்றார்.


தோழர் எஸ்.வி.ஆர் ஒரு அபூர்வமான மனிதர். இப்போது அவரைப் போன்றவர்கள் அருகிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். அவரளவுக்கு விரிந்த படிப்பு கொண்டவர்கள் புரிதல் கொண்டவர்கள் இன்றைய தலைமுறையில் இல்லை. செயல்பாட்டிலும் அவர் பலவற்றுக்கு முன்னோடி. தமிழ்நாட்டின் மார்க்சிய லெனினிய இயக்கத்தின் வரலாற்றை எழுதினாலும், திராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுதினாலும், மனித உரிமை இயக்கத்தின் வரலாற்றை எழுதினாலும் அவரைத் தவிர்த்துவிட்டு அவற்றை எழுதமுடியாது. தமிழில் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தியதிலும் அவரளவுக்கு இன்னொருவரை நாம் குறிப்பிடமுடியாது. உத்தரவாதமான வருமானமோ, ஆரோக்கியமான உடல்நிலையோ இல்லாத இன்றைய நிலையிலும் அவர் தனது சமூகப் பொறுப்பை உணர்ந்து அயராமல் எழுதிக்கொண்டிருக்கிறார்.


ஆழ்ந்த விமர்சனப் பார்வைகொண்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படமாட்டார்கள் என்ற பொதுவான இலக்கணத்துக்கு நேரெதிரானவர் தோழர் எஸ்.வி.ஆர். அவர் அன்பு காட்டும்போது நமக்கு அம்மாவின் நினைவு வரும். அவர் கோபப்படும்போது நமக்கு நம் குழந்தையின் ஞாபகம் வரும். குழந்தையைப் போலவே வீம்பும் பிடிவாதமும் கொண்டவர்.


நானும் அவருமாகச் சேர்ந்துதான் மரணதண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள் சந்திப்பை சென்னையில் ஏற்பாடு செய்தோம். இரண்டாயிரமாவது ஆண்டு பிறந்த போது புத்தாண்டு தினத்தில் அவருக்குத் தொலைபேசி செய்து நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. வேண்டுமென்றே உருவாக்கிக்கொண்ட புத்தாயிரம் குறித்த கற்பனாவாதத்தில் நான் என்னை மூழ்கடித்துக்கொண்ட நாள் அது.


பேராசிரியர் அ.ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளியான ஊடகம் என்ற சிற்றிதழில் யர்மோலா என்ற கற்பனையான சிந்தனையாளருடன் ஒரு நேர்காணலைப் பதிவுசெய்து வெளியிட்டிருந்தோம். அதில் பெரும்பாலான பகுதிகளை நான் எழுதியிருந்தேன். மிஷேல் ஃபூக்கோவை மனதில் வைத்து மார்க்ஸியம் மீதான சில கருத்துகளை அதில் பதிவுசெய்திருந்தேன். அவரை உண்மையான பாத்திரமெனக் கருதிக்கொண்டு தோழர் எஸ்.வி.ஆர் என்னிடம் கடுமையாக சண்டைபோட்டார். ”யார் அந்த முட்டாள் கிழவன்? கண்டபடி உளறியிருக்கிறான். வெளிநாட்டுக்காரனென்றால் யாரிடம் வேண்டுமானாலும் பேட்டி எடுப்பதா?” என்று கடிந்துகொண்டார். மார்க்ஸியத்தை ஆதரித்து அவர் வெளிப்படுத்திய சீற்றத்தை நான் மிகவும் மதித்து ரசித்தேன். 


சென்னையில் மிகவும் தோழமையோடு நான் அணுகிப் பேசக்கூடியவராக இருந்தவர் தோழர் எஸ்.வி.ஆர் மட்டும்தான். வீட்டுக்குப் போன நெரங்களில் அவரே தயாரித்து அளிக்கும் தேநீரின் சுவை இன்னும் நாவில் இருக்கிறது. அவரோடு பழகிய எவரும் அவரது விருந்தோம்பலை நினைவுகூராமல் இருக்கமாட்டார்கள். வயது வித்தியாசம் பாராமல் என்னிடம் தோழமை பாராட்டிய எஸ்.வி.ஆர் நான் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  பெரியாரியம் குறித்து விமர்சிக்க ஆரம்பித்ததும் என்னோடான உறவை முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டார். பெரியார் குறித்து ஆய்வு நூல்களை எழுதினாலும் அடிப்படையில் அவரை ஒரு மார்க்ஸியவாதியென்றே நான் கருதியிருந்தேன். அதனால் அவரது கோபம் எனக்கு வியப்பாக இருந்தது. நானும் வீம்பாக அவரோடு தொடர்புகொள்ளாமல் இருந்துவிட்டேன். பல ஆண்டுகள் கழித்து சில மாதங்களுக்கு முன்னர் அவரோடு மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். இடையில் இத்தனை ஆண்டுகள் தொடர்பற்று இருந்த எண்ணமே எழாதபடி இருந்தது அவரது பேச்சு.அவரைப் பார்ப்பதற்காகவே கோத்தகிரிக்குப் போகவேண்டுமென நினைத்திருந்தேன்.

 

நேற்று அவரை சென்னைக் கருத்தரங்கில் நேரில் பார்த்தபோது அவரை நீண்டகாலமாகப் பார்க்காமல் இருந்த உணர்வே எழவில்லை. ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவை ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு கலாய்த்துக்கொண்டிருந்தார். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.ஆழ்ந்த விமர்சனப் பார்வையைப் போலவே அசாத்தியமான நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அவர். எந்தவித சம்பிரதாயங்களும் அவரிடம் தென்படாது.


நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எங்களது பழைய தோழரும் பேராசிரியருமான தெய்வசுந்தரம் அவர்களின் துணைவியார் முனைவர் பத்மாவதி அவர்கள் அங்கு வந்தார். என்னிடம் காட்டுவதற்காகத் தனது மகனின் திருமண ஆல்பத்தையும், எஸ்.வி.ஆரிடம் காட்டுவதற்கென்று அவரது கறுப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் அவர் கொண்டுவந்திருந்தார். அந்தப் புகைப்படத்தில் எஸ்.வி.ஆரின் மடியில் குழந்தையாக அமர்ந்திருந்தார் தோழர் பத்மாவதியின் மகன். மிகவும் அபூர்வமான அந்தப் புகைப்படத்தை நான் எனது மொபைலில் படமெடுத்துக்கொண்டேன். இந்த சந்திப்புகளால் நேற்றைய தினம் என்றென்றும் நினைவுகூரத் தக்கதாகிவிட்டது.


கருத்தரங்கு முடிந்து ஊர் திரும்பும்போது வீ.அரசு அவர்களை ஃபோனில் கூப்பிட்டுப் பேசினேன். எங்களுக்கிடையே இருந்த பொதுவான ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டோம். மதவெறியையும் சாதிவெறியையும் எதிர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியது எனக்கு ஆறுதலாக இருந்தது.


தோழர் எஸ்.வி.ஆரை மீண்டும் எப்போது சந்திப்பேன் எனத் தெரியவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவரைப் பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமின்றி அவரது நல்ல பண்புகள் சிலவும் என்னிடம் படிந்திருப்பதாகத் தோன்றியது. அது உணமையாக இருக்குமேயானால் அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.


இந்தக் குறிப்பை எழுதும்போது அ.மார்க்ஸின் நினைவு குறுக்கிடுகிறது. இதை ஒருவேளை அவர் படிக்க நேர்ந்தால் நிச்சயம் ஒருசில நொடிகளேனும் நெகிழ்ந்துபோவார் என நம்புகிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தோழர் எஸ்.வி.ஆருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற நிலை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது நிறப்பிரிகை சார்பில் நாங்கள் இருவருமாகக் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை நண்பர்கள் சிலருக்கு அனுப்பினோம். ஒரு சிறு தொகையைச் சேர்த்து அதை தோழர் வ.கீதா மூலமாக அவரிடம் சேர்ப்பிக்கச் சொன்னோம். எஸ்.வி.ஆரின் நண்பர்கள் பலர் பெரிய உதவிகளைச் செய்ய முன்வந்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் நிறப்பிரிகை சார்பில் அளிக்கப்பட்டதை மட்டும் ஏற்றுக்கொண்டதாகவும் கீதா என்னிடம் சொன்னார். அவர் எங்கள்மீது வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாக இருந்தது அது. அந்த நேரத்தில் அவர் ஆஞ்சியோ சிகிச்சையோடு குணமாகித் திரும்பிவிட்டார்.


எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ் முதலானவர்களோடு எனக்கு இப்போதும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் வேறுபாடுகளைவிட ஒற்றுமைகளே அதிகம் எனத் தோன்றுகிறது. சமூகத்துக்குக் கேடு விளைவிக்க விழையும் வலதுசாரி சக்திகள் தமக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் சேர்ந்து செயல்படுகிறார்கள்.ஆனால் சமூக மேம்பாட்டை விரும்புவோரிடம் அத்தகைய ஒற்றுமை இல்லாமல்போய்விட்டது. புறச்சூழலின் அபாயத்தைக் கருதியேனும் அந்த ஒற்றுமை உருவாக்கப்படவேண்டும். இந்திய அரசியல் வானில் மீண்டும் காவி இருள் கவிகிறது. அதற்கு வழிகாட்டுவதுபோல சாதி வெறி கனல்கிறது.அதை எதிர்கொள்ள தமிழகத்தில் கடப்பாடும் பொறுப்பும் மிக்க அறிவுஜீவிகள் நிறையபேர் தேவை. அதற்கு முன்னால் இப்போது இருப்பவர்களுக்குள் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை. அ.மார்க்ஸ்,எஸ்.வி.ஆர் முதலான தோழர்களோடு இணைந்து பணியாற்றவேண்டுமென மனம் அவாவுகிறது. அத்தகைய ஒருங்கிணைப்பை உருவாக்கும் திசையில் எடுத்து வைக்கப்படும் முதல் அடியாக இந்தக் குறிப்பு அமைகிறதா பார்ப்போம்!                

No comments:

Post a Comment