Saturday, March 29, 2014

ஆயிரம் வாக்குகளைவிடவும் மதிப்பு வாய்ந்தது



இன்று திருவள்ளூரில் பாஸ்டர் திரு. மாத்யூ விக்டர் என்பவரை சந்தித்து ஆதரவு கேட்பதற்காகச் சென்றிருந்தோம். அவரது வீட்டின் கூடத்துச் சுவரில் நிறைய ஓவியங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இவையெல்லாம் யார் வரைந்தவை எனக் கேட்டேன். தனது மகள் வரைந்தவை எனப் பெருமையோடு ஒரு சிறுமியை அறிமுகப்படுத்தினார். அவரது கையைக் குலுக்கிப் பாராட்டினேன். உடனே அந்த சிறுமி உள்ளே ஓடிச்சென்று பூக்கள் நிரம்பிய சிறு கூடை ஒன்றை எடுத்துவந்து எனக்குப் பரிசளித்தார். அதுவும் கலைநயம் மிக்கதாக இருந்தது. அதையும் அவரே தயாரித்திருந்தார். " உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? " எனக் கேட்டேன். " டாக்டர்" என்றார். " சாந்தம் தவழும் உங்கள்  முகத்தைப் பார்த்தாலே பாதி வியாதி குணமாகிவிடும்" என்று வாழ்த்தினேன். 


இன்றைய நாளை அர்த்தமுள்ளதாக்கிய அந்தச் சிறுமிக்கு நன்றி! ' குழந்தைகளால் ஆளப்படும் நாடு' குறித்து அண்மையில் நான் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. 


தேர்தல் போல சுயமரியாதைக்குச் சவால் விடும் ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது. அங்கு எந்த அளவுக்கு நீங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு மற்றவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ' பொது வாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது' என்பதைப் புரிந்திருந்தாலும்கூட இந்த நடைமுறை வலிக்கவே செய்கிறது. இன்றைய ரணத்துக்கு இந்தக் குழந்தையின் அன்பு மருந்திட்டது! தேர்தல் முடியும் வரை தினம் இப்படி ஒரு குழந்தையை சந்தித்தால் போதும். இதுவே இன்றைய பிரார்த்தனை! 


No comments:

Post a Comment