Sunday, March 30, 2014

தேர்தல் பிரச்சார காலத்தைக் குறைக்கலாமா?



நேற்று இரவு(30.3.2014) பிரச்சாரம் முடிந்து சாப்பிடும் நேரத்தில் தேர்தல்முறை குறித்து விவாதம் வந்தது. எங்கள் தலைவர் சில கருத்துகளை முன்வைத்தார்: "தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து எத்தனையோ ஆலோசனைகள் சொல்லப்பட்டுவருகின்றன. தேர்தலில் நடக்கும் முறைகேடுகள், வன்முறை எல்லாவற்றுக்குமே ஊற்றுக்கண் தேர்தல் பிரச்சாரம்தான். எவ்வளவுதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்தாலும் தேர்தல் பிரச்சார காலத்தைக் குறைக்கவில்லையென்றால் தேர்தல் செலவைக் கட்டுப்படுத்தமுடியாது." என்றார். அமெரிக்காவில் நடப்பதுபோல பிரச்சாரத்தை மாற்றி அமைக்க வழி இருக்கிறதா என்றும் விவாதித்தோம். 


எனக்குத் தோன்றும் யோசனைகள்: 


1. வேட்புமனு தாக்கல் முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் இறுதிசெய்து அறிவிக்கப்பட்ட பிறகே பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவேண்டும். 


2. சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஒருவாரம் பிரச்சார காலம் இருந்தால் போதும். 


3. காட்சி/அச்சு ஊடகங்களை பிரச்சாரத்துக்கு அதிகம் பயன்படுத்தலாம்.


4. மக்களவை தொலைக்காட்சி சேனலை முதன்மையான பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தவேண்டும். 


5. போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரச்சாரத்தை பத்து நிமிடப் படமாகத் தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கவேண்டும். சென்சாருக்குப் பிறகு அதை மக்களவை டிவியில் ஒளிபரப்பவேண்டும். உள்ளூர் சேனல்களையும் பயன்படுத்தலாம். 


6. மக்களவை உறுப்பினருக்கான தேர்தல் செலவு இருபத்தைந்து லட்சமாகக் குறைக்கப்படவேண்டும். 


7. தேர்தல் பிரச்சாரத்தில் ஃப்ளக்ஸ் போர்டுகள் வைப்பதையும் , தோரணங்கள் கட்டுவதையும் முற்றாகத் தடைசெய்யவேண்டும். 

No comments:

Post a Comment