Sunday, June 1, 2014

வலதுசாரிகளின் எழுச்சி!


திமுக அணியின் தோல்விக்கான காரணங்களை விவரித்து திமுகவுக்கு ஆலோசனை சொல்லி எழுதப்பட்டிருக்கும் செய்திக்கட்டுரைகளில் பெரும்பாலும் அதற்கான அகநிலைக் காரணிகளே அலசப்பட்டிருக்கின்றன. அதிமுகவின் வெற்றியும்கூட ஊடகங்களால் அப்படித்தான் மதிப்பிடப்படுகிறது. 


வெற்றியோ தோல்வியோ எதுவொன்றுக்கும் அக- புற காரணங்கள் இருக்கும். இரண்டையும் சேர்த்துதான் ஆராயவேண்டும். 


திமுகவின் தோல்விக்கு இளைய தலைமுறை அக்கட்சியை ஏற்காதது ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுவரை பேசப்பட்டுவந்த சமூகநீதி அரசியலை அதனால் பயனடைந்துகொண்டிருக்கும் தலைமுறையே நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதன் விளைவு இது. இட ஒதுக்கீடு தேவையில்லை என அவர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். தனியார்மயத்தால் உருவான மனோபாவம் இது. தனியார்துறையில் இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் அதற்கான போராட்டம் எதையும் சமூகநீதி பேசும் கட்சிகள் முன்னெடுக்காத நிலையில் இத்தகைய மனோபாவத்தை மாற்றுவது கடினம். 


இன்னொரு முக்கிய அம்சம் திமுகவின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களிடம் மேலோங்கியிருக்கும் சுயசாதி அபிமானம். சமூகநீதி அரசியலை அவர்கள் சாதி அபிமானமாகச் சுருக்கிவிட்டார்கள். இது பல தொகுதிகளில் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறது. 


பாமக முன்னெடுத்த சாதிவெறிப் பிரச்சாரம் மேலோட்டமாகப் பார்த்தால் தலித்துகளுக்கு எதிரானதாகத் தெரியலாம். அது சமூகநீதி அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் சேர்த்தே குழிபறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இருந்த தெளிவு திமுக அணிகளிடம் இல்லை. 


இன்று தமிழகத்தை சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்து வலதுசாரி மனோபாவத்தின் எழுச்சி! இந்த எழுச்சி இந்துத்துவ அமைப்புகளின் உழைப்பால் உருவானதல்ல. இதற்குப் பெருமளவில் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளும்( இவர்களிலிருந்து மைய மற்றும் இடதுசாரித் தமிழ்த்தேசியவாதிகளை வேறுபடுத்திப் பார்ககவேண்டும்), சாதியவாதிகளும் காரணமாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் வலதுசாரி அரசியலை எதிர்ப்பதென்பது மத அடிப்படைவாதத்தை எதிர்ப்பதோடு முடிந்துவிடாது. இன மற்றும் சாதிய அடிப்படைவாதங்களையும் சேர்த்தே எதிர்த்தாகவேண்டும். 


இந்த நிலையை எதிர்கொள்ள மையநிலை சக்திகளும், இடதுசாரி சக்திகளும் இணைந்து செயல்படவேண்டும். அதற்கான முன்னெடுப்பை அரசியல் தளத்தைக்காட்டிலும் கருத்தியல் தளத்தில்தான் ஆரம்பிக்கவேண்டும். நம் ஆய்வுகள் அதைக் கவனத்தில்கொண்டால் நல்லது. 

No comments:

Post a Comment