Thursday, January 22, 2015

எது வீரவணக்க நாள்? - ரவிக்குமார்

எது வீரவணக்க நாள்?- - ரவிக்குமார்


+++++++++++++++++


·         27.01.2015 மொழிப்போர் தியாகி மாணவர் ராசேந்திரன் நினைவுப் பொன்விழா நாள் !


·         மொழிப்போர் தியாகி மாணவர் ராசேந்திரன் புதைக்கப்பட்ட பரங்கிப்பேட்டையில் நினைவுச் சின்னம் எழுப்புக!


·        மேம்பாலத்துக்கு அவரது பெயரை சூட்டுக!


+++++++++++++++++  


1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ராசேந்திரன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி எதிர்வரும் 27.01.2015 அன்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைகிறது.மொழிப்போரில் துப்பாக்கிக்க்குண்டுக்கு முதலில் பலியானவர் ராசேந்திரன்தான். அவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி (கணிதம்) இரண்டாமாண்டு பயின்றுகொண்டிருந்தார்.அவரது சொந்த ஊர் சிவகங்கை. அவரது தந்தை காவல்துறையில் காவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 


ராசேந்திரனின் சொந்த ஊரான சிவகங்கையில் அவரது நினைவாக ஏதும் உள்ளதா அவரது உறவினர்கள் இப்போதும் அங்கு வாழ்கிறார்களா என அங்குள்ள நண்பர்கள் மூலம் இன்று விசாரித்தேன். அப்படியொன்றும் இல்லை என்றார்கள். ராசேந்திரனின் உறவினர்களையும் கண்டறியமுடியவில்லை என்று கூறினார்கள். அந்தப் போராட்டத்தில் முனைப்போடு பங்காற்றியவரும் முன்னாள் துணைவேந்தருமான திரு க.ப.அறவாணன் அவர்களிடமும், ஓய்வுபெற்ற பேராசிரியர் திருமாவளவன் அவர்களிடமும், அந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததற்கும் அடுத்த ஆண்டில் அங்கு படிக்கச் சென்ற திரு அரணமுறுவல் அவர்களிடமும் இன்று (22.01.2015) அந்தப் போராட்ட அனுபவங்களைக் கேட்டறிந்தேன்.


மத்திய அரசின் கட்டாய இந்திக் கொள்கையை எதிர்த்து 1965 ஆம் ஆண்டு தமிழகமெங்கும் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டத்தின் அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ” “ அப்போது சி.பி.ராமசாமி அய்யர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். பேராசிரியர்கள் என்றாலே மாணவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.. குடியரசு தினமான ஜனவரி 26 க்கு மறுநாள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து சிதம்பரம் நகரை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டோம். எங்களைக் காவல்துறையினர் மறித்தார்கள். அவர்களது தடுப்புகளைத் தாண்டிக்கொண்டு போக முயன்றோம். அப்போது தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த கற்களை எடுத்து போலிஸ்காரர்கள்மீது வீசத் தொடங்கிவிட்டார்கள். அதனால் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. அதை எதிர்பார்த்திருந்தநாங்கள் தயாராக வைத்திருந்த வெங்காயத்தைப் பிழிந்து கண்களில் விட்டுக்கொண்டு போலிஸாரை எதிர்த்துப் போராடினோம். போலிஸார் விரட்டியபோது மாணவர்கள் வழி தெரியாமல் ஒரு முட்டு சந்துக்குள் நுழைந்துவிட்டார்கள். மேலே போக வழியின்றித் திரும்பிவந்த மாணவர்களை போலிஸ்காரர்கள் தலையிலேயே தடியால் அடித்தார்கள். அந்தத் தடியடியில் பல மாணவர்களுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. அதன் பின்னர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தற்போது ராசேந்திரன் சிலை வைக்கப்பட்டிருக்கிறதே அதற்கு முன்னால் 100 அடி தூரத்தில் ஆசிரியர்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு மரம் இருந்தது அதன்கீழேதான் குண்டடிபட்டு ராசேந்திரன் விழுந்து கிடந்தார். தமிழ் படித்துக்கொண்டிருந்த மாணவரான நெடுமாறன் தோளில் குண்டடிபட்டு ரத்தம் பீறிட ஓடினார். நாங்களெல்லாம் சிதறி ஓடினோம்” எனப் பேராசிரியர் திருமாவளவன் கூறினார்.


“ அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடந்ததது. தஞ்சையில் ம.நடராசன் அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். பெ.சீனுவாசன், காளிமுத்து, எல்.கணேசன் முதலானவர்களின் பணி முகாமையானது. நாங்கள் தயாரித்த துண்டறிக்கைகள் ஆயிரக் கணக்கில் தமிழ்நாடு முழுதும் பரப்பப்பட்டன. பெருஞ்சித்திரனாரும், இறைக்குருவனும் எங்களுக்கு மிகவும் ஊக்கமாக இருந்தனர். பெங்களூரிலும் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. அங்கு ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டத்தில் மேற்கு வங்கத்திலிருந்தும்கூட மாணவர்கள் வந்து கலந்துகொண்டனர் ” என்று திரு க.ப.அறவாணன் அந்த நாட்களை நினைவுகூர்ந்தார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குண்டடிபட்டு வீழ்ந்த ராசேந்திரனின் உடல் பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. ” ராசேந்திரனின் நினைவு நாளில் ஆண்டுதோறும் அங்கு சென்று மாணவர்கள் மரியாதை செய்வது வழக்கம். அங்கு படிக்கும்போது நானும் அப்படிப் போயிருக்கிறேன்” என அரணமுறுவல் சொன்னார். 


1969 ஆம் ஆண்டு ராசேந்திரனுக்கு சிலை அமைக்கப்பட்டது. அப்போது நினைவு மலர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 1967இல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு ராசேந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அது ஏற்கப்படவில்லையென்றும் செய்திகள் உண்டு.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நினைவாக ஜனவரி 25 ஆம் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக தி.மு.கவும் பிற கட்சிகளும் கடைப்பிடித்து வருகின்றன. 1965 ஜனவரி 26 ஆம் தேதி நடக்கவிருந்த போராட்டம் ஒரு நாள் முன்னதாக அந்த நாளில் துவக்கப்பட்டு எராளமானோர் கைதுசெய்யப்பட்டனர் என்பது தவிர 1965 ஆம் ஆண்டில் அந்த நாளுக்கு வேறு முக்கியத்துவம் ஏதுமில்லை. ஆனால் 1964 ஆம் ஆண்டு அந்த நாளில் கீழப் பழூர் சின்னசாமி என்ற திமுக தொண்டர்  திருச்சியில் தீக்குளித்து தியாகியானார். மொழிப்போரில் தீக்குளித்த முதல் இளைஞர் அவர்தான்! அறிஞர் அண்ணாவும் பிற போராட்டக்காரர்களும் விடுதலை செய்யப்படவேண்டும் என அவர் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். 


இந்தி எதிர்ப்புப் போரில் 1939 ஆம் ஆண்டு முதல் களப்பலியான நடராசனின் நினைவு நாளான ஜனவரி 15 ஆம் தேதியை வீரவணக்க நாளாக அறிவித்திருந்தால் அந்த தியாகம் மதிக்கப்பட்டிருக்கும். பல்வேறு கட்சிகளும் பங்கேற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நீண்ட வரலாறும் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். 


அதுபோலவே 1965 ஆம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் முதல் பலியாகி தியாகியான ராசேந்திரனின் நினைவு நாளான ஜனவரி 27 ஆம் தேதியும் நாடு தழுவிய அளவில் நினைவுகூரப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யப்பட்டிருந்தால் இந்தி எதிர்ப்பு உணர்வு மாணவர்களிடம் தொடர்ந்து காப்பாற்றப்பட்டிருக்கும். 

ராசேந்திரனின் நினைவுப் பொன்விழா நாளான 27.01.2015 அன்று அண்ணாமலை நகரில் இருக்கும் ராசேந்திரனின் சிலைக்கு மட்டுமின்றி பரங்கிப்பேட்டையில் அவர் புதைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று வீரவணக்கம் செலுத்தவும், பரங்கிப்பேட்டையில் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புமாறு தமிழக அரசை வலியுறுத்தவும் தமிழ் உணர்வாளர்கள் முன்வரவேண்டும். 


சிதம்பரம் நகரை அண்ணாமலை நகரோடு இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்துக்கு ராசேந்திரன் பெயரை சூட்டவேண்டும் என நான் வலியுறுத்தினேன். அது கடந்த ஆட்சியில் ஏற்கப்படவில்லை. ராசேந்திரனின் நினைவுப் பொன்விழா ஆண்டான இந்த ஆண்டிலாவது தமிழக அரசு அதை நிறைவேற்ற வேண்டும்.

No comments:

Post a Comment