சைவ வைணவ ஒற்றுமையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் சிவன் பெயரையும் பெருமாள் பெயரையும் சேர்த்து பெயர்சூட்ட்டிக்கொள்வது என்பதும் ஒன்று. ஆனால் முருகன் பெயரும் விஷ்ணுவின் பெயரும் சேர்த்து சூட்டப்படுவது அபூர்வம்தான். பெருமாள் முருகன் என்று பெயர் வைத்து சமயப் பொறையைக் காட்டுவது ஒருபுறமிருக்க முருகனே பெருமாள் ஆன நிகழ்வு கோயமுத்தூர் வரலாற்றில் இருக்கிறது. கோயமுத்தூரின் வரலாற்றை 1939 இல் எழுதி 1949 இல் வெளியிட்ட கோவை கிழார் ’ இதுவோ எங்கள் கோவை’ என்ற அந்த நூலில் ( கோவை நிலையப் பதிப்பகம் , கோயமுத்தூர் முதற் பதிப்பு 1949 ) மேற்குறிப்பிட்ட நிகழ்வை விவரித்திருக்கிறார்.
கோயமுத்தூரில் இப்போது கோட்டைமேடு என வழங்கப்படும் இடத்தில் முன்னர் பெரிய கோட்டை இருந்தது. அந்தக் கோட்டைக்குள் ஈஸ்வரன் கோயிலும் பெருமாள் கோயிலும் இருந்தன. மொகலாயப் படையெடுப்புக்கு அஞ்சி கோயில்களில் இருந்த உற்சவ மூர்த்திகளை நிலத்துள் புதைத்துவிட்டு அர்ச்சகர்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்களாம். படையெடுப்பு முடிந்த பின்னால் சில அர்ச்சகர்கள் ஊர் திரும்பினார்கள், சிலர் திரும்பவில்லை. பெருமாள் கோயில் அர்ச்சகர் ஊர் திரும்பவில்லை. பெருமாளின் உற்சவ மூர்த்தியைப் புதைத்த இடம் அவருக்குத்தான் தெரியும், புதிதாக நியமிக்கப்பட்டவருக்குத் தெரியவில்லை.
இதனிடையில் ஆங்கில ஆட்சி ஏற்பட்டு அரசாங்கத்தார் 1842 ஆம் ஆண்டு இனாம் உறுதி செய்தார்கள். உற்சவ மூர்த்திகளைக் கொண்டுவந்து காட்டியவர்களுக்கே இனாம் உறுதி செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துவிட்டது. என்ன செய்வதென்றுதெரியாத பெருமாள் கோயில் புது அர்ச்சகர் ஈஸ்வரன் கோயில் அர்ச்சகரோடு கலந்து பேசினாராம். “சந்திரசேகரரைக் குருக்கள் கொண்டு காட்டுவதென்றும், சுப்பிரமணிய மூர்த்தியை அர்ச்சகர் பெருமாள் உருவம் ஆக்கி கொண்டுபோய்க் காட்டுவதென்றும் தீர்மானித்தர்கள்.இது சுலபமாக இருந்தது. சுப்பிரமணிய மூர்த்திக்கு ஒரு தலை நான்கு புஜம் இரண்டு தேவிமார் உண்டு. பெருமாளுக்கும் ஒரு தலை நான்கு புஜம் இரண்டு நாய்ச்சியர் உண்டு. சங்கு சக்கரங்கள் சேர்க்கப்பட்டன, வேலாயுதம் எடுக்கப்பட்டது. இந்த மாறுதல்களோடு மூர்த்திகளைக் கொண்டுபோய்க் காட்டி இரண்டு கோயில் பணியாளர்களும் தஸ்தீக் பணதைப் பெற்றுக்கொண்டார்கள். . . . அதுமுதல் முருகப் பெருமான் தன் மாமனார் ஆகிய பெருமாள் கோலத்துடன் அருள் புரிந்துவந்தார். இவ்விதம் 1917 வரை நடந்து வந்தது. தேவஸ்தானச் சபையில் ஒரு சைவர் தலைவரானார். இம்மாறுதலை அறிந்த அவர் 1000 ரூபாய் செலவு செய்வித்து வேறாகப் பெருமாள் உபய நாச்சியார்களைச் செய்வித்துப் பெருமாள் கோயிலில் எழுந்தருளப்பண்ணிப் பழைய முருகப் பெருமாள் தேவிமார்களுடன் பழைய உருவத்திற்குக் கொண்டுவந்து தம் சொந்த ஆலயத்தில் எழுந்தருளப் பண்ணினார்” என கோவை கிழார் அந்த நூலில் விவரித்துள்ளார். ( பக்கம் 103 – 105 )
”பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான். பெ.முருகன் என்ற ஆசிரியன் மட்டும்தான் இப்போது இருக்கிறான்” என எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்தது இப்போது பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. கோட்டையிலிருந்த பெருமாளை மொகலாய படையெடுப்புக்கு அஞ்சி மண்ணுக்குள் புதைத்ததுபோல இப்போது இந்துத்துவ தாக்குதலுக்கு அஞ்சி பெருமாள் என்ற தனது முன்னொட்டை அவர் புதைத்திருக்கிறார். அந்தப் பெருமாள் விக்கிரகம் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு தற்போது லண்டன் நகரில் இருக்கிறதாம். அதுபோல பெ.முருகனால் புதைக்கப்பட்ட ‘பெருமாளும்’ தோண்டி எடுக்கப்படுவார் என்று நம்புவோம்!
No comments:
Post a Comment