மதச்சார்பின்மை என்ற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என சிவசேனா கட்சி கோரியிருக்கிறது. பாஜகவைவிட தாங்களே இந்துத்துவாவை உயர்த்திப்பிடிப்பதாகக் காட்டிக்கொள்வதற்கு அக்கட்சி பல தந்திரங்களைக் கையாண்டு வருகிறது. அதில் இந்தக் கோரிக்கை இப்போது சேர்ந்திருக்கிறது.
சிவசேனாவின் கோரிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் புறம்பானதாகும். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான இந்திய சட்டக் கமிஷனின் பரிந்துரைகளுக்கும்கூட இக்கருத்து முரணானதாகும்.
ரஷ்யா போன்ற நாடுகள்கூட சிதறித் துண்டு துண்டாகிவிட்ட நிலையில் இந்தியாவை ஒரே நாடாகக் காப்பாற்றிக்கொண்டிருப்பது அரசியலமைப்புச் சட்டம்தான். அதன் ஆன்மாவாக இருப்பது மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கம். அதை அழிப்பது இந்தியாவைத் துண்டாடவே வழிவகுக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவான மதச்சார்பின்மையை அழிக்கும்விதமாக சிவசேனா முன்வைத்திருக்கும் கோரிக்கை இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.
இந்தியாவில் மேற்கொள்ளவேண்டிய தேர்தல் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்த இந்திய சட்டக் கமிஷன் தனது 170 ஆவது அறிக்கையில் ” ஜனநாயக நெறிமுறைகளைத் தன்னளவில் மதிக்காத ஒரு அரசியல் கட்சி இந்த நாட்டை ஆளும்போது அதைப்பின்பற்றும் என நாம் எதிர்பார்க்கமுடியாது. உள்ளுக்குள் சர்வாதிகாரமாகவும் வெளியில் ஜனநாயகமாகவும் அதன் செயல்பாடு இருக்க முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தது. மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்துகொண்ட ஒரு கட்சி சட்டமன்றம் பாராளுமன்றம் முதலான அமைப்புகளில் பங்கேற்பது நாட்டுக்கு ஆபத்தாகவே முடியும். அதற்கு சிவசேனா ஒரு உதாரணம்.
S.R.Bommai v. Union of India (1994 (3) SCC1)என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் “"Inspired by the Indian tradition of tolerance and fraternity, for whose sake, the greatest son of Modern India, Mahatma Gandhi, laid down his life and seeking to redeem the promise of religious neutrality held forth by the Congress Party, the Founding Fathers proceeded to create a State, secular in its outlook and egalitarian in its action... if any party or organisation seeks to fight the elections on the basis of plank which has the proximate effect of eroding the secular philosophy of the Constitution it would certainly be guilty of following an unconstitutional course of action.... if the Constitution requires the State to be secular in thought and action, the same requirement attaches to political parties as well." என்று கூறியிருக்கிறது.
சிவசேனாவின் கோரிக்கை பற்றி கருத்து தெரிவித்திருக்கும் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்புலத்தில் சிவசேனா கட்சியின்மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment