வலயப்பட்டி என்று அழைக்கப்படும் தவில் இசை மேதை திரு. சுப்ரமணியன் அவர்களை நேற்று ( 06.04.2015) மாலை நண்பர்களோடு சென்று சந்தித்தேன். அவர் கடந்த பத்து ஆண்டுகளாகப் புதுவையில்தான் வசிக்கிறார் என்பது நேற்றுதான் எனக்குத் தெரியும். சுமார் இரண்டுமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்படிச் சொல்வதைவிட பேசிக்கொண்டிருந்தார் என்று சொல்வதே பொருத்தம்.
சுவர் முழுதும் பல்வேறு தலைவர்களோடு அவர் இருக்கும் படங்கள், மேசையில் அவரைப்பற்றி செய்திகள் வெளியான மலர்கள், இதழ்கள். டிவியில் அவர் கலைஞருக்கு தங்க நாதஸ்வரம் பரிசளித்த விழாவின் வீடியோ ஓடிக்கொண்டிருந்தது.
வலயப்பட்டி என்னவெல்லாம் பேசினார் என எழுதினால் அது நூறு பக்கங்களுக்கு நீளும். நானி பல்கிவாலாவின் ஜப்பான் பயணத்தில் ஆரம்பித்து வலயப்பட்டிக்குச் சென்று தமிழகத்துக்கும் கேரளத்துக்குமிடையே சஞ்சரித்து நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த பேச்சு வண்டியிலிருந்து நாங்கள் குதித்துத்தான் இறங்கினோம். நேரம் ஆகிவிட்டது என்பதும் அதற்கு ஒரு காரணம்.
வலயப்பட்டியின் பேச்சில் தமிழ்ப் பற்றும் சமயப் பற்றும் ; தமிழ் அடையாளமும் இந்து அடையாளமும் பிரிக்கமுடியாதபடி பின்னிக் கிடந்தன. நாட்காட்டியில் தமிழ்த் தேதியை அச்சிடவேண்டும், தமிழ்த் தேதியை வைத்தே பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும் - எனப் பல்வேறு யோசனைகள் அவரிடம் உள்ளன. தத்துவ நாட்டமும் இருக்கிறது. சிவாஜிகணேசனின் நடையழகை சாய்பாபா ரசித்த கதை; புறாக்கள் தற்கொலை செய்துகொள்ளும் கதை எனப் பல்வேறு சுவாரஸ்யங்கள் உண்மைபோலவே பேச்சினூடே வந்துவிழுகின்றன.
பிரபலங்களைப் பேரும் புகழும் இயல்பாக இருக்கமுடியாமல் நாசமாக்கிவிடுவதுண்டு. வலயப்பட்டி புகழால் சீர்கெடவில்லை. எளிமையும் நேசமும் அவரது இதயத்தை உற்சாகத்தோடு வைத்திருக்கின்றன. ஆனால் வயது அவரது வாயைத் திறந்துபோட்டுவிட்டுப் போய்விட்டது. அவர் கைகளால் வாசிக்கும் தவிலுக்கு சற்றும் குறைவற்றது அவரது பேச்சு. வாத்திய இசையைக் கேட்டுக்கொண்டிருக்கலாம், வார்த்தைகளை ? அதற்கு நிறையவே பொறுமைவேண்டும்.
வலயப்பட்டியிடம் விடைபெற்றுத் திரும்பும்போது எனது முதுமைக் காலம் குறித்த பயம் அதிகரித்துவிட்டது. ஒருவேளை நான் 75 வயது வரை வாழ நேர்ந்தால் ( அந்தக் கொடுமை வேண்டாம் என்பதே என் வேண்டுதல்) அப்போது எனக்குப்பேசமுடியாமல் போய்விட்டால் நல்லது என நினைத்துக்கொண்டேன்.
No comments:
Post a Comment