Friday, October 19, 2018

தேச பக்தியிலிருந்து பயங்கரவாதத்துக்கு - ரவிக்குமார்

தோழர்களுக்கு வணக்கம் ! 
 
பேராசிரியர் கல்யாணி பேசும்போது 1989ல் பனையடிக்குப்பம் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டையும் அதற்காக அமைக்கப்பட்ட உண்மையறியும் குழு பற்றியும் குறிப்பிட்டார். மரண தண்டனைக்கு எதிராக நடத்தப்பட்ட மாநாடு குறித்து திரு ஹென்றியும் இங்கே சுட்டிக்காட்டினார். வகுப்புவாதத்தை எதிர்த்து சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னால் பாண்டிச்சேரியில் நானும் சில தோழர்களும் நடத்திய போராட்டத்தைப்பற்றிய நினைவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 
 
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மேலெழுந்த வகுப்புவாத அலையால் உற்சாகமடைந்த சங்கப் பரிவாரங்கள் இந்த மசூதியை இடிப்போம், அந்த தேவாலயத்தைத் தகர்ப்போம் என ஆங்காங்கே பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நேரம். 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் நாள். பாண்டிச்சேரி வரலாற்றில் மறக்கக்கூடாத நாள். பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கட்டப்பட்ட புகழ்பெற்ற தேவாலயம்.சம்பா கோயில் என மக்களால் அழைக்கப்படும் ஜென்மராக்கினி மாதா கோயில். தென்னிந்தியாவில் உள்ள சிறப்பு வாய்ந்த தேவாலயங்களில் ஒன்று. அந்த மாதா கோயிலில் சனாதன பயங்கரவாதிகள் இருவர் நுழைந்து கற்பூரம் ஏற்றிவிட்டனர். பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டபோது சிவன் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மாதா கோயில் கட்டப்பட்டதாகவும் அங்கே மீண்டும் சிவன் கோயிலைக் கட்டவேண்டும் எனப் புரளி கிளப்பினர். நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த  சம்பவத்தை பெரிய கட்சிகள்கூட கண்டித்துக் களமிறங்கவில்லை. ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக இருந்த நாங்கள் சும்மா இருக்கவில்லை. சம்பா கோயில் பற்றிய வரலாற்றையும் அதற்கு ஆதாரங்களாக இருந்த ஆவணங்களையும் திரட்டினோம்.  தமிழறிஞரும் ஐ ஏ எஸ்  அதிகாரியாக இருந்தவருமான பி.எல்.சாமி அவர்களை சந்தித்துப் பல ஆதாரங்களைப் பெற்றோம் . அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து சிறு நூலொன்றை வெளியிட்டோம். எந்தவொரு கோயிலையும் இடித்துவிட்டு அங்கே மாதா கோயில் கட்டப்படவில்லை என்பதை ஆதாரபூர்வமாக நிறுவினோம். அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்களின் பங்கேற்போடு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அதன்பிறகுதான் பெரிய கட்சிகள் அதைப்பற்றிப் பேசினார்கள். அதன் காரணமாக வகுப்புவாத சக்திகளின் அந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது . அத்துடன் இங்கே முளைவிட்ட மதவாதம் என்ற நச்சுச் செடியை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டதாக நினைத்தோம். சனாதன பயங்கரவாதம் புதுச்சேரி மண்ணிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக நம்பினோம். 
ஆனால் அவர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்து வேலை செய்திருக்கிறார்கள். இப்போது புதுச்சேரியின் அதிகாரம் தங்கள்  கைகளில் இருக்கிறது என்ற நினைப்பில்  வகுப்புவாதிகள் மீண்டும் 
உற்சாகமடைந்துள்ளனர்.  இலக்கியத் திருவிழா என்ற பெயரில் அவர்கள் இங்கே நடத்தவிருந்த விழாவை நாம் சரியான நேரத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறோம் என்றாலும் வகுப்புவாத சக்திகள் முன்பைவிட இப்போது பலத்தோடு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள், முன்னிலும் அதிகமான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புறக்கணித்துவிடக்கூடாது. புதுச்சேரியைத் தங்களது பரிசோதனைகூடமாக மாற்றுவதற்கு அவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் சங்கப் பரிவார அமைப்புகள் முளைத்தெழுந்தன. தலித்துகள் மத்தியில், ஆதிவாசிகளின் மத்தியில், பெண்கள் மத்தியில்  தனித்தனி அமைப்புகள் உருவாக்கப்பட்டன . அரசியல் கட்சிகள் வெகுஜன அமைப்புகளை வைத்திருப்பார்கள்.தொழிலாளர்களுக்காக சிபிஐ எம் கட்சி சிஐடியுவை வைத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏஐடியுசி, காங்கிரசுக்கு ஐ.என்.டி.யு.சி . அதைப்போல விவசாய அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பழங்குடியினருக்கான அமைப்புகள் - இப்படி பல அமைப்புகள் உள்ளன. அவை வெளிப்படையாக செயல்படும் அமைப்புகள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு உருவாகியிருக்கும் அமைப்புகள் அப்படியல்ல. அவை தம்மை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகளாகக் கூறிக்கொள்வதில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சொல்வதில்லை. ஆனால் அவை யாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புகள்தான். இந்த சங்கப் பரிவாரங்கள்மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அமைப்பேகூட தனது நோக்கம் இதுதான் என வெளிப்படையாக சொன்னது கிடையாது. இன்னொரு உண்மையையும் நினைவில்கொள்ள வேண்டும். இன்று உலகின் பல நாடுகளில் வலதுசாரிக் கட்சிகள் அதிகாரத்துக்கு வந்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஆனால் உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப்போல 93 ஆண்டுகள் இடையறாத தொடர்ச்சிகொண்ட ஒரு வலதுசாரி அமைப்பு இல்லை. நாடு முழுவதும் ஷாக்காக்கள் என அழைக்கப்படும் 56 ஆயிரம் கிளைகளைக்கொண்ட அமைப்பு, பல்லாயிரக்கணக்கான முழு நேர ஊழியர்களையும், திருமணம் செய்துகொள்ளாமல் துறவிகளாக இருக்கிறோம் எனச் சொல்கிற ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறுப்பாளர்களையும் கொண்ட அமைப்பு - ஆர்.எஸ்.எஸ் போல ஒரு அமைப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை. அந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோதே இதுதான் தனது அரசியல் திட்டம் எனக் கூறியதில்லை. ஒரு ரகசிய அமைப்பைப்போலவே செயல்பட்டது. 
 
காந்தியடிகளின் படுகொலைக்குப்பிறகு இரண்டாவது முறையாகத் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தன் மீதான தடையை விலக்குமாறு கேட்டபோது அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் பட்டேல் மறுத்துவிட்டார். உலகிலேயே பெரிய சிலையை எந்த பட்டேலுக்கு இப்போது பாஜக நிறுவுகிறதோ அதே பட்டேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்மீதான தடையை நீக்க மறுத்துவிட்டார். உங்களுடைய அமைப்பின் சட்ட திட்டம் என்ன? என்பதை எழுத்துபூர்வமாக சமர்ப்பியுங்கள், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும் ஏற்றுக்கொள்கிறோம் என எழுதிக்கொடுங்கள் எனக் கூறிவிட்டார். அதனால் கோபமடைந்த ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் பல பகுதிகளில் பட்டேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஆனாலும் நேரு தலைமையிலான அன்றைய அரசு ஆர்.எஸ்.எஸ் கோரிக்கையை ஏற்கவில்லை. வேறு வழியில்லாமல் அது அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டது, அமைப்பு விதிகள் என ஒப்புக்கு எதையோ எழுதி அரசிடம் காட்டியது. 
 
இந்தியா சுதந்திரம் அடைகிற நேரத்தில் இந்த நாட்டை இந்து ராச்சியம் என அறிவிக்கவேண்டும், இதன் தேசியக் கொடியாக மூவர்ணக்கொடியை வைக்கக் கூடாது காவிக் கொடியைத்தான் அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள். ஆனால் அதைப் புரட்சியாளர் அம்பேத்கரும் மற்ற தலைவர்களும் நிராகரித்துவிட்டனர். மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை இயற்றித்தந்து இந்த நாட்டை ஒரு குடியரசாக அறிவித்ததோடு, தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியையும் அதன் நடுவே அசோகச் சக்கரத்தையும் இடம்பெறச் செய்தவர் அம்பேத்கர். அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் சின் இந்து ராச்சியக் கனவில் மண்ணை அள்ளிப்போட்டவர் அம்பேத்கர். ‘ இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தவொரு இடத்திலும் மனு நீதியின் மகத்துவம் சுட்டிக்காட்டப்படவில்லை. அதன் அம்சங்கள் இதில் இடம்பெறவில்லை. எனவே இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிக்கிறோம், இந்த மூவர்ணக் கொடியை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என அறிவித்தது ஆர்.எஸ்.எஸ். சுதந்திரதினத்தில் அரசு அலுவலகங்களில் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்படுவது வழக்கம். இடதுசாரிக் கட்சிகள்கூட தேசியக்கொடியை ஏற்றுவார்கள். ஆனால் சுதந்திரம் அடைந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நாக்பூரில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்ற மறுத்த இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். இப்போதுகூட அதன் அமைப்புவிதிகள் என்னவென்பது எவருக்கும் தெரியாது. எல்லா அரசியல் கட்சிகளும் தமது அமைப்பு விதிகள் இதுதான் என்பதை தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பது மட்டுமின்றி அதை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளன. அப்படி வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் நடந்துகொண்டதில்லை. 
 
1925 ஆம் ஆண்டு ஹெட்கேவார் என்பவரால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். மூஞ்சே என்பவரால் பயிற்றுவிக்கப்பட்டவர் ஹெட்கேவார். அவரால் கலகத்தாவுக்கு அனுப்பப்பட்டு அங்கே தலைமறைவாக செயல்பட்டுக்கொண்டிருந்த அனுசீலன் சமிதி என்ற பயங்கரவாத அமைப்பிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுத் திரும்பிவந்தவர். அதன் பின்னர் சிலகாலம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டபடியே கிரந்தி தள் என்ற தீவிரவாத அமைப்பில் ரகசியமாக இயங்கி வந்தவர். ஜெர்மனியின் ஹிட்லரைபோல , இத்தாலியின் முசோலினியைப்போல ராணுவத்தைப் பயன்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஹெட்கேவார் விரும்பவில்லை. நிதானமாக, பொறுமையாக இந்த நாட்டை முற்றிலுமாக ஒரு இந்து ராச்சியமாக மாற்றுவதற்கு அவர் முயற்சித்தார். அப்படி மாற்றப்பட்டால் அதன்பிறகு விடுபடவே முடியாத ஒரு நிலையை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ் சால் இயக்கப்படும் அல்லது அதன் கொள்கையால் வழிநடத்தப்படும் சுமார் நாற்பது அமைப்புகளில் ஒன்றுதான் ’சனாதன் சன்ஸ்தா’ என்ற அமைப்பு. 
 
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மேலெழுந்த இந்துத்துவ அலையின் காரணமாக 1995 ல் உருவாக்கப்பட்ட அமைப்பு சனாதன் சன்ஸ்தா. மும்பையின் சியோன் பகுதியில் வசிய மருத்துவராக தொழில் செய்துகொண்டிருந்த ஜெயந்த் அத்வாலே என்பவர்தான் ’சனாதன் சன்ஸ்தா’, ’ஹிந்து ஜனஜாகிருதி சமிதி’ ஆகிய இரு அமைப்புகளையும் உருவாக்கியவர். இங்கிலாந்தில் ஏழு ஆண்டுகள் ’ஹிப்னோ தெரபி’ எனப்படும் வசிய மருத்துவத்தில் பயிற்சி பெற்று நாடு திரும்பி  1990 வரை மும்பையின் சியோன் பகுதியில் டாக்டராகத் தொழில் செய்தவர் ஜெயந்த் அத்தவாலே. கோவாவைச் சேர்ந்த அஷுதோஷ் பிரபுதேசாய் என்ற மனோதத்துவ டாக்டரின் தொடர்பு கிடைத்ததற்குப்பிறகு அவர் ஆன்மீக வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றுவதோடு வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் பத்தி, கற்பூரம் போன்றவற்றையும், சிறிய அளவிலான சாமி சிலைகளையும் விற்பனை செய்யத் தொடங்கினார். அந்த ஆன்மீக வியாபாரம் லாபகரமாக இருந்ததால் ஊக்கமடைந்த அவர், பக்தர்களிடையே இந்து ராச்சியம் அமைக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்த ஆரம்பித்தார். 1999 ஆம் ஆண்டிலேயே தனது ஆதரவாளர்களுக்குத் தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்தார். ‘ தீய சக்திகளை’ வீழ்த்துவதற்கு ஆயுதம் ஏந்தவேண்டியது அவசியம் என்று வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தார். போலீஸையும், ராணுவத்தையும் எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும் எனப் பேசினார்.  ”இந்தியாவை இந்து ராச்சியமாக மாற்றுவதற்கான போராட்டத்தில் ஐந்து சதவீதப் போராட்டம்தான் ஆயுதம் ஏந்திய போராட்டம். எனவே இந்த அமைப்பில் உள்ளவர்களில் ஐந்து சதவீதம்பேர் ஆயுதப் பயிற்சி எடுத்தால் போதும். நமக்கான ஆயுதங்களை ஆணடவனே ஏதோ ஒரு வழியில் நமக்குக் கொண்டுவந்து சேர்ப்பார்” என எழுதினார். ” 2025 ஆம் ஆண்டுக்குள் இந்து ராச்சியத்தை அமைக்கவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் ‘துர்ஜன்களை’ அதாவது கெட்டவர்களை அழித்தொழிக்கவேண்டும் என்பது அதற்கான முன்நிபந்தனை” என குறிப்பிட்டார். அவர்களைப் பொருத்தவரை முஸ்லிம்களும், கிறித்தவர்களும், முற்போக்காளர்களும்தான் துர்ஜன்கள். சனாதன் சன்ஸ்தா உருவாக்கி வைத்திருக்கும் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் தேர்தலோ, ஜனநாயகமோ,  நீதி அமைப்போ இருக்கக்கூடாது என்கிறது. அந்த அமைப்பின் கல்வி முறையின் நோக்கம் இந்து மதத்தைப் பரப்புவது மட்டும்தான்.
 
சங்கப் பரிவார அமைப்புகள் ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார்கள். தாங்கள் ஆர்.எஸ்.எஸ் சால் இயக்கப்படுவதாக அவர்கள் சொல்லிக்கொள்வதில்லை. சில அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ் சை விமர்சித்துப் பேசுவதுபோல நாடகம் ஆடுவார்கள். சனாதன் சன்ஸ்தாவும் அப்படித்தான். அதன் நிறுவனரான ஜெயந்த் அத்வாலே ஆர்.எஸ்.எஸ் சைக் கடுமையாக விமர்சிப்பார். அது நீர்த்துப்போய் விட்டது, சமரசமாகிவிட்டது எனக் குறை கூறுவார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் லட்சியமும் சனாதன் சன்ஸ்தாவின் லட்சியமும் ஒன்றுதான். அதுதான் ‘இந்து ராச்சியம்’. கௌரி லங்கேஷ் கொலையில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் ஈடுபட்டனர் எனத் தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் அமோல் காலே என்ற பயங்கரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில்தான் எனது பெயர் உட்பட 34 பேர்கள் அடங்கிய கொலைப்பட்டியல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டிலும் 2011 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளிலும் தொடர்புடையது எனத் தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் ஜெயந்த் அத்வாலேவைப் போலத்தான் ’ஷிவ ப்ரதிஸ்தான் ஹிந்துஸ்தான்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சம்பாஜி பிடே என்பவரும், ’சமஸ்தா ஹிந்து ஆகாதி’ என்ற அமைப்பின் தலைவர் மிலிந்த் ஏக்போடே என்பவரும் செயல்பட்டு வருகிறார்கள்.
 
எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் விதமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தன்னெழுச்சியாக இந்தியாவின் பல பகுதிகளிலும் தலித்துகள் போராடினார்கல். நாடே ஸ்தம்பித்தது. அதை பெரிய கட்சிகள் எவையும் ஒருங்கிணைக்கவில்லை. அப்படியிருந்தும் எப்படி இந்த அளவுக்கு எழுச்சி ஏற்பட்டது என மத்திய அரசு குழம்பிப்போனது. அந்த நிலையில்தான் பீமா கோரேகான் என்னுமிடத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது பேஷ்வாக்களின் படையை மஹர் ராணுவ வீரர்கள் தோற்கடித்த வெற்றியின் 200 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடுவதற்காக 2018 ஜனவரி 1 ஆம் தேதி தலித்துகள் லட்சக் கணக்கில் கூடினார்கள். அவர்கள் மீது சனாதன பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். தலித்துகள் பலரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள். அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது சம்பாஜி பிடேவும்,. மிலிந்த் ஏக்போடேவும்தான் எனப் புகார் அளிக்கப்பட்டு அவர்கள்மீது வழக்கும் பதியப்பட்டது. ஆனால் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக சொல்கிறது. ஆனால் பிரதமர் மோடி மகராஷ்டிராவுக்கு வந்தால் அங்கே விஐபியாக நின்று மோடியை வரவேற்பவர் சம்பாஜி பிடேதான். இப்படி சங்கப் பரிவார அமைப்புகள் எல்லாமே ஒரு வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ளன.
 
பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகள் போராடினார்கள். ராமர் கோயில் கட்டுவோம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு அதன்மூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைத்த பாஜக படு தோல்வி அடைந்தது. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆட்சி மத்தியில் அமைந்தது. ஆனால் 1998 ல் பாஜக ஆட்சி அமைத்தது. சில மாதங்களில் அந்த ஆட்சி கவிழ்ந்த காரணத்தால் 1999 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை பாஜக அமைத்தது. மாநில உரிமைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள், சமூக நீதியை அடைவதற்காகத் துவக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் எல்லாம் பாஜகவின் கூட்டணியில் இணைந்தன. அந்தக் கட்சிகள் தங்களது அதிகார மோகத்தை மறைப்பதற்காக ’கெட்ட கட்சியில் ஒரு நல்ல மனிதர்’ என்று தன்னார்வத்தோடு வாஜ்பாயிக்கு நற்சான்று வழங்கின. ஆனால் அந்த நல்ல மனிதரின் ஆட்சிக்காலமான 1999 – 2004 என்பது பல்வேறு வகுப்புவாத செயல்திட்டங்களை இந்திய அரசியலில் சோதித்துப் பார்க்க வாய்ப்பேற்படுத்தித் தந்தது. அந்தக் காலத்தில்தான் அணுகுண்டு வெடிப்புச் சோதனை செய்யப்பட்டது; குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. இப்போது செய்யப்படுவது போலவே வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலும் அரசு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஊடுருவினர். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி கல்வியைக் காவி மயமாக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்தினார்.
 
வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில்தான் நீதிதுறையிலும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் திட்டமிட்ட முறையில் ஊடுருவினார்கள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்குவதற்கான தீர்ப்பை அளித்தவரும் தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக இருப்பவருமான நீதிபதி ஏ.கே.கோயல் நீதிபதி ஆவதற்குமுன் ஆர்.எஸ்.எஸ் சின் வழக்கறிஞர் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். அவரை நீதிபதியாக நியமிப்பதற்கு அன்று மத்திய சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெய்ட்லி பரிந்துரை செய்தபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அதை நிராகரித்துவிட்டார். மீண்டும் பரிந்துரைக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் ஒப்புக்கொள்ள நேரிட்டது. நீதிபதி ஏ.கே.கோயலைப்போல ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்கள் இன்னும் எத்தனைபேர் நீதித் துறைக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
 
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு உறுத்தலாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டுத் தங்களுக்கு உகந்த ஒரு சட்டத்தை எழுதுவதற்கு வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிபதி வெங்கடாசலையாவின் தலைமையில் அதற்காக குழு அமைக்கப்பட்டது. அது ஒரு வரைவையும் தயாரித்தது. ஆனால் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் வெளிப்படையாக அந்த முயற்சியை எதிர்த்த காரணத்தால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட
வெங்கடாசலையா கமிஷனின் அறிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
 
வாஜ்பாயி ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளும் சனாதன சக்திகள் தம்மை அரசாங்க ஆதரவோடு வலுப்படுத்திக்கொண்டன. அதனால்தான் 2004 முதல் 10 ஆண்டு காலம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தாலும் 2014ல் மிகப்பெரிய ஆதரவோடு பாஜகவால் வெற்றிபெற முடிந்தது.
 
இங்கே பேசிய தோழர்கள் பலரும் பாஜகவை 2019 பொதுத் தேர்தலில் தோற்கடிப்பதைப்பற்றி பேசினார்கள். அதுவொரு சவால் என நான் கருதவில்லை. புதுச்சேரியில் தற்போது எம்.பி ஆக இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் பாஜகவுக்கு ஆதரவளித்திருக்கிறார். ஆனால் அவரே கூட 2019 தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டால் வெற்றிபெறுவது கடினம். தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் தனித்தனியே போட்டியிட்டதால்தான் 2014ல் ஒரு தொகுதியில் பாஜக வென்றது. இந்தத் தேர்தலில் அந்த ஒரு தொகுதியில்கூட அது வெற்றிபெற முடியாது. இந்திய அளவில் பாஜகவுக்கு போன தேர்தலில் கிடைத்த அளவுக்கு இடங்கள் இப்போது கிடைக்காது என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இப்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் பாஜக அல்லாத அரசே மத்தியில் அமையும் என்று தோன்றுகிறது. அப்படி அமைந்துவிட்டால் சனாதன பயங்கரவாத ஆபத்து நீங்கிவிட்டது என்று அர்த்தமல்ல. அவர்கள் இந்திய சமூகத்துக்குள் செலுத்தியிருக்கிற வெறுப்பு என்னும் விஷத்தை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதுதான் சவால் நிறைந்த பணி. அதை அரசியல் கட்சிகள் மட்டும் செய்ய முடியாது. மனித உரிமை அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும் இணைந்துதான் செய்யவேண்டும்.
 
சனாதன பயங்கரவாதிகள் கொலைப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள 34 பேர்களும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அங்கெல்லாம் அந்த எழுத்தாளர்களுக்கு போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். ஆனால் எந்தவொரு மாநிலத்திலும் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து ஒரு பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்படவில்லை. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் செய்துவருகிறது. அவர்களது கொலைப்பட்டியலில் இருப்பதால் எனக்கு ஆபத்து என நாங்கள் கருதவில்லை. இதை ரவிக்குமாருக்கான ஆபத்தாக,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாக கருதாமல் சனாதன பயங்கரவாதிகளால் இந்த தேசத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாக எமது தலைவர் எழுச்சித் தமிழர் பார்த்தார். அதனால்தான் தேசம் காப்போம் என்ற மாநாட்டை அறிவித்திருக்கிறார். 

ஏனென்றால் இந்தக் கட்சியே ஒரு மனித உரிமை இயக்கம்தான். பொடா சட்டம் வந்தபோது அதை எதிர்த்து அடக்குமுறை சட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பை உருவாக்கியது விசிகதான். இப்போதும்கூட கூடங்குளம் போராட்டமாக இருந்தாலும் சேலம் சென்னை எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் முதலில் களத்தில் நிற்பது விசிகதான். திரு ஹென்றி அவர்கள் கடந்த திமுக ஆட்சியின்போது மனித உரிமைக் கல்வியை அரசுப் பள்ளிகளில் கற்றுத்தரும் ஒரு திட்டத்தை செயல்படுத்தினார். அப்போது விசிகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் தமிழக சட்டப்பேரவையில் குரல் கொடுத்து அதை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தேன். வீரப்பனைக் கொன்ற அதிரடிப்படையில் விடுபட்டுப் போனவர்களுக்கு விருது தரவேண்டும், வீடு தரவேண்டும் என எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்திய நேரத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப் படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என நான்  வாதாடினேன். அதற்குக் காரணம் நாங்கள் அரசியல் கட்சியாக இருந்தாலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக எங்களை உணர்வதால்தான். எனவே சனாதன பயங்கரவாதத்தை முறியடிக்கிற சவால் நிறைந்த பணியில் உங்களோடு எப்போதும் நாங்கள் உடனிருப்போம் என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.வணக்கம்
 
( 15.10.2018 அன்று மாலை 
புதுச்சேரியில் மனித உரிமை அமைப்புகளால் 
ஒருங்கிணைக்கப்பட்ட ‘பொது உரையாடலில்’ பங்கேற்றுப் பேசியதன் சுருக்கம் )

No comments:

Post a Comment