Showing posts with label cauvery. Show all posts
Showing posts with label cauvery. Show all posts

Sunday, December 9, 2012

கவிழும் கர்னாடகா - கை நழுவும் காவிரி




எடியூரப்பாவின் கர்னாடக ஜனதா கட்சியின் உதயம் அந்த மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் பா.ஜ.க ஆட்சியின் அஸ்தமனத்தை அறிவிப்பதாக இருக்கிறது.அதுமட்டுமின்றி காவிரியில் இனி தமிழகத்துக்கான தண்ணீர் கிடைப்பதிலும் மிகப்பெரிய சிக்கலை அது ஏற்படுத்தியிருக்கிறது.

 224 உறுப்பினர்களைக்கொண்ட கர்னாடக சட்டப்பேரவையில் பா.ஜ.க 118 காங்கிரஸ் 71 மதச்சார்பற்ற ஜனதாதளம் 26 சுயேச்சைகள் 7 காலி இடம் 2 என கட்சிகளின் பலம் உள்ளது. தற்போது பா.ஜ.க வின் சுமார் 40 எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடியூரப்பாவுக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.அமைச்சர்கள், எம்.பி க்கள், எம்.எல்.சிக்கள் என ஏராளமானவர்கள் இன்று ( 09.12.2012 ) அவர் நடத்திய பேரணியிலும், அதன் பிறகு நடைபெற்ற விருந்து உபசாரக் கூட்டத்திலும் கலந்துகொண்டுள்ளனர். ஐந்து உறுப்பினர் மெஜாரிட்டியில் மட்டுமே ஆட்சி நடத்திவந்த பா.ஜ.க அரசு இப்போது பெரும்பான்மையை இழந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் மாநில அரசு கலைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

தனது ஆட்சியின் முடிவு தெளிவாகிவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் சூழலில் நாளை ( 10.12.2012 ) உச்சநீதிமன்றத்தில் கர்னாடக அரசு தனது நிலைபாட்டைக் கடுமையாக்குவதற்கே வாய்ப்பு அதிகம். தனது பலத்தை இழந்து ஆட்சி கவிழ்வதைவிடவும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்து மாநில நலனைக் காப்பதற்காக ஆட்சியை இழந்தோம் எனக் காட்டுவது கர்னாடக ஆளும் கட்சியான பா.ஜ.க வுக்கு தேர்தலில் லாபம் கொடுக்கும். எனவே அத்தகைய நிலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள். தேர்தல் உறுதியாகிவிட்ட சூழலில் மற்ற கட்சிகளும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாது என  போட்டி போட்டுக்கொண்டு பேசுவார்கள்.

அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தும் கர்னாடக அரசின்மீது அரசியலமைப்ப்புச் சட்ட உறுப்பு 365 இன் படி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என நான் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அதற்கு இனி அவசியமே இல்லை. மத்திய அரசுக்கு அந்த சிரமம் இப்போது இல்லை. கர்னாடக அரசு தானாகவே கவிழப்போகிறது.

காவிரியில் தண்ணீர் விட மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்த மாநில அரசு இனி தொடரப்போவதில்லை. மத்திய அரசின் ஆட்சிதான் அங்கு நடக்கப்போகிறது. எனவே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்க இப்போது கூடுதல் வாய்ப்பிருக்கிறது என்பதுபோல் தோன்றலாம். அது காட்சிப் பிழைதான். மத்திய அரசு என்பது காங்கிரஸ் அரசுதான். அவர்களுக்கும் தேர்தல் தான் முக்கியம்.எனவே ஒருபோதும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராது.

உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்பதே இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வி. காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டதை வழிமொழிந்து 12 டி.எம்.சி தன்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றமும் சொல்லக்கூடும். ஆனால் அதை நிறைவேற்றுவதற்குத்தான் எவரும் இருக்க மாட்டார்கள்

Thursday, December 6, 2012

காவிரியில் தண்ணீர் வராது ?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்குக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் நகரங்களுக்குக் குடிதண்ணீருக்கும், தமது மாநிலத்தில் பயிர்செய்யப்பட்டிருக்கும் பயிர்களைக் காப்பாற்றுவதற்கும் தம்மிடம் உள்ள தண்ணீர் போதாது . எனவே தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என கர்நாடக  அரசு கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வந்ததுமே கர்நாடகத்தில் இருக்கும் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்தனர். அவர்களின் அழுத்தமே கர்நாடக அரசு தற்போதைய  முடிவை எடுப்பதற்குக் காரணம். 

தமிழ்நாட்டின் நிலை என்ன என்கிற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்துள்ளது. மத்திய அரசு பிறப்பிக்கும் நியாயமான உத்தரவுகளை நிறைவேற்ற ஒரு மாநில அரசு மறுக்கும்போது அந்த மாநில அரசை முடக்கி வைப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 365 ஐப் பயன்படுத்த வழிவகை உள்ளது. ஆனால் இந்தப் பிரிவைப் பயன்படுத்த மத்திய அரசோ குடியரசுத் தலைவரோ முன்வரப்போவதில்லை.

இந்தக் கோரிக்கையை நாம் ஏன்  எழுப்பக்கூடாது என நான் வினவியபோது " இது நடைமுறை சாத்தியம் அற்றது. அப்படி மாநில அரசை முடக்கினால் அது கர்நாடகத்தில் உள்ள பி.ஜே.பி அரசை வலுப்படுத்திவிடும் " என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். அடுத்து வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டுதான் அங்கிருக்கும் அரசு அவ்வாறு செயல்படுகிறது. இதில் பி.ஜே.பி கட்சியின் திட்டத்தை மட்டுமே மனதில் கொண்டு நாம் இந்த பிரச்னையை அணுகமுடியுமா ?

இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின்மூலம் மட்டும் தீர்த்துவிட முடியாது. தமிழக மக்களின்  உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ளும் விதமான போராட்டங்களை இனியாவது தமிழக அரசியல் கட்சிகள் அறிவிப்பார்களா ?