எடியூரப்பாவின் கர்னாடக ஜனதா கட்சியின் உதயம் அந்த மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் பா.ஜ.க ஆட்சியின் அஸ்தமனத்தை அறிவிப்பதாக இருக்கிறது.அதுமட்டுமின்றி காவிரியில் இனி தமிழகத்துக்கான தண்ணீர் கிடைப்பதிலும் மிகப்பெரிய சிக்கலை அது ஏற்படுத்தியிருக்கிறது.
224 உறுப்பினர்களைக்கொண்ட கர்னாடக சட்டப்பேரவையில் பா.ஜ.க 118 காங்கிரஸ் 71 மதச்சார்பற்ற ஜனதாதளம் 26 சுயேச்சைகள் 7 காலி இடம் 2 என கட்சிகளின் பலம் உள்ளது. தற்போது பா.ஜ.க வின் சுமார் 40 எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடியூரப்பாவுக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.அமைச்சர்கள், எம்.பி க்கள், எம்.எல்.சிக்கள் என ஏராளமானவர்கள் இன்று ( 09.12.2012 ) அவர் நடத்திய பேரணியிலும், அதன் பிறகு நடைபெற்ற விருந்து உபசாரக் கூட்டத்திலும் கலந்துகொண்டுள்ளனர். ஐந்து உறுப்பினர் மெஜாரிட்டியில் மட்டுமே ஆட்சி நடத்திவந்த பா.ஜ.க அரசு இப்போது பெரும்பான்மையை இழந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் மாநில அரசு கலைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
தனது ஆட்சியின் முடிவு தெளிவாகிவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் சூழலில் நாளை ( 10.12.2012 ) உச்சநீதிமன்றத்தில் கர்னாடக அரசு தனது நிலைபாட்டைக் கடுமையாக்குவதற்கே வாய்ப்பு அதிகம். தனது பலத்தை இழந்து ஆட்சி கவிழ்வதைவிடவும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்து மாநில நலனைக் காப்பதற்காக ஆட்சியை இழந்தோம் எனக் காட்டுவது கர்னாடக ஆளும் கட்சியான பா.ஜ.க வுக்கு தேர்தலில் லாபம் கொடுக்கும். எனவே அத்தகைய நிலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள். தேர்தல் உறுதியாகிவிட்ட சூழலில் மற்ற கட்சிகளும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாது என போட்டி போட்டுக்கொண்டு பேசுவார்கள்.
அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தும் கர்னாடக அரசின்மீது அரசியலமைப்ப்புச் சட்ட உறுப்பு 365 இன் படி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என நான் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அதற்கு இனி அவசியமே இல்லை. மத்திய அரசுக்கு அந்த சிரமம் இப்போது இல்லை. கர்னாடக அரசு தானாகவே கவிழப்போகிறது.
காவிரியில் தண்ணீர் விட மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்த மாநில அரசு இனி தொடரப்போவதில்லை. மத்திய அரசின் ஆட்சிதான் அங்கு நடக்கப்போகிறது. எனவே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்க இப்போது கூடுதல் வாய்ப்பிருக்கிறது என்பதுபோல் தோன்றலாம். அது காட்சிப் பிழைதான். மத்திய அரசு என்பது காங்கிரஸ் அரசுதான். அவர்களுக்கும் தேர்தல் தான் முக்கியம்.எனவே ஒருபோதும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராது.
உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்பதே இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வி. காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டதை வழிமொழிந்து 12 டி.எம்.சி தன்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றமும் சொல்லக்கூடும். ஆனால் அதை நிறைவேற்றுவதற்குத்தான் எவரும் இருக்க மாட்டார்கள்
No comments:
Post a Comment