Sunday, August 6, 2017

மணற்கேணியின் புதிய நூல்

பெண்ணியத்தின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டும் முக்கியமான நூல். பிரதிகளுக்கு தொடர்புகொள்க: மணற்கேணி +91 81109 06001



Monday, July 17, 2017

ரவிக்குமார் கவிதை

 

பகலில் எரிந்துகொண்டிருக்கும் 
தெருவிளக்குபோல்
இவன் நேசம்

நாய்க்குட்டிக்கு வைக்கும் சோற்றை
கோழிகள் தின்றுவிடுகின்றன என்கிறாய் நீ

காக்கை வராததால் 
விரதத்தோடு காத்திருக்கிறேன் என்கிறான் இவன்


2015 ல் எழுதியது

Friday, July 14, 2017

மணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்

21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேணி ஆய்விதழ் குறித்து எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி.இங்கே அதைப் படியுங்கள்: 

நண்பர் ஒருவரின் மேஜையில் ரவிக்குமார்  நடத்தும் "மணற்கேணி' இருமாத இதழின் நவம்பர் - டிசம்பர் 2012 இதழ் இருந்தது.  இப்படி ஓர் அற்புதமான இலக்கிய ஆய்வு இதழை நண்பர் ரவிக்குமார் நடத்தி வருவதற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும்.

புதுவையில் "மணற்கேணி' சார்பில் நடத்திய, "தமிழும் சமஸ்கிருதமும்' என்கிற ஆய்வரங்கச் சொற்பொழிவுகள் கட்டுரைகளாகத் தரப்பட்டிருக்கின்றன. அ. மணவாளன், இரா. கோதண்டராமன், பெ. மாதையன், இரா. அறவேந்தன், பக்தவத்சல பாரதி ஆகியோரின் சிந்தனையைத் தூண்டும் வாதங்கள் வருங்கால ஆய்வுகளுக்கே கூடத் தரவுகளாக அமையும் தன்மையன.

அம்பை எழுதியிருக்கும் "மரத்தடியில் திருவள்ளுவர்' என்கிற சிறுகதை, தமிழும் தமிழனும் இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. படித்து முடித்து விட்டு, அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்கு பதிலாக, மீண்டும் ஒருமுறை படிக்கத் தோன்றியது.
அரை நூற்றாண்டு காலத் தொல்லியல் ஆய்வைப் பற்றிய சிறப்புப் பகுதியில் படிக்க வேண்டிய 33 நூல்களையும், தொல்லியல் துறை தொடர்பாகச் செய்ய வேண்டிய 50 பரிந்துரைகளையும் தொகுத்து வழங்கி இருப்பது பயனுள்ள முயற்சி.
ஐயாயிரம் ரூபாய் கொடுத்து "மணற்கேணி'யின் புரவலராகலாம்; மூவாயிரம் கொடுத்து "மணற்கேணி' குழாமில் சேரலாம்; ஆயிரம் கொடுத்து "ஊருணி' திட்டத்தின் மூலம் யாருக்காவது "மணற்கேணி' பரிசளிக்கலாம். முன்னூற்று அறுபது கொடுத்து ஆண்டு சந்தாதாரர் ஆகலாம். என்ன செய்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆனால், தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு இலக்கியப் பணியாற்றிவரும் "மணற்கேணி' தொடர்ந்து வெளிவர உதவாமல் இருந்து விடாதீர்கள். தொடர்புக்கு9443033305 அல்லது manarkeni@gmail.com.

Saturday, July 8, 2017

நாம் என்ன செய்யப்போகிறோம்? - ஃபைஸ் அகமது ஃபைஸ் தமிழில்: ரவிக்குமார்



எண்ணற்ற ஏக்கங்கள்
சமைந்து கிடக்கின்றன 
உனது விழிகளில் எனது விழிகளில்
வகிரப்பட்ட இருதயங்கள்
திருகிக்கொண்டு கிடக்கின்றன 
உனது தேகத்தில் எனது தேகத்தில்
மரத்துப்போன விரல்கள்
செயலற்ற எழுதுகோல்கள்
விறைத்துச் சிதைந்த மனங்கள்
நமது விருப்பத்துக்குரிய 
நகரின்
ஒவ்வொரு வீதியிலும் 
சமாதியாக்கப்பட்டுள்ளன 
உனது தடங்கள் எனது தடங்கள்

நமது இரவு விண்மீன்கள்
திறந்த புண்கள் 
நமது காலை ரோஜாக்களின்
உதிர்ந்த இதழ்கள்
இருட் காற்று சூறையாடி
பிய்த்தெறியப்பட்ட விழித்திரைகள்
குணப்படுத்தமுடியாதவை
நமது வாதைகள்
ஆற்ற இயலாதவை 
நமது காயங்கள் 
சிலவற்றின்மீது 
நிலவின் சாம்பல்
சிலவற்றின்மீது
காலைப் பனியின் ரத்தம்
இது நிஜமா? 
இது பிரமையா? 
இது
உனது எனது மூடநம்பிக்கையெனும் 
சிலந்தி பின்னிய வலை மட்டும்தானா ? 

இது உண்மையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
இது உண்மையில்லையென்றால்
நாம் என்ன செய்யப்போகிறோம்?
எனது புத்தியில் கூர் ஏற்று.
எனக்குப் புரிதலை உண்டாக்கு. 
சொல்!

( ஃபைஸ் அகமது ஃபைஸின் O City of Lights , OUP, 2006 தொகுப்பிலிருந்து )


Tuesday, July 4, 2017

யாருமில்லை ஹமா துமா தமிழில்: ரவிக்குமார்

I

இறந்துபோன மனிதன் 
அவன் யாருமில்லை, கிழிசல்களை உடுத்தியிருந்தான், 
செருப்புகூட இல்லை
சட்டைப்பையில் ஒரு நாணயம்
அடையாள அட்டை ஏதுமில்லை
பேருந்துக்கான பயணச் சீட்டும் இல்லை
அவன் யாருமில்லை
அழுக்காக, எலும்பும் தோலுமாக
அடையாளமற்றவன், அவன் யாருமில்லை, 
இறப்பதற்கு முன்னர் கையை இறுக மூடியிருந்தான் 
கஷ்டப்பட்டு அவர்கள் அவன் விரல்களைப் பிரித்துப் பார்த்தபோது 
அந்த யாருமில்லை என்ற 
மனிதனின் கையில்
மொத்த நாடும் இருக்கக் கண்டார்கள்  

* ஹமா துமா : எதியோப்பிய கவிஞர், சிறுகதை ஆசிரியர், அரசியல் செயற்பாட்டாளர். தற்போது ஃப்ரான்ஸில் வாழ்கிறார்


Friday, June 16, 2017

துப்புரவுத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு - ரவிக்குமார்



* துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கான நிதி ஒதுக்கீடு 2013-14ல் 557 கோடி, 2017-18 பட்ஜெட்டில் மோடி அரசு ஒதுக்கியிருப்பது வெறும் 50 கோடி

* 2014-15 ல் பாஜக அரசு பட்ஜெட்டில் இதற்காக 439.04 கோடி ஒதுக்கி 47 கோடி மட்டுமே செலவு செய்தது

* 2015-16 பட்ஜெட்டில் துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வுக்கு 470.19கோடி ஒதுக்கப்பட்டு 10.01 கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது

* 2016-17 பட்ஜெட்டில் வெறும் 10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிலும் ஒரே ஒரு கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது

இதை காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு எதிர்கட்சியும் சுட்டிக்காட்டவோ எதிர்க்கவோ இல்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம்

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்




தோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவிட இயக்கம், ஹியூகோ கொரிஞ்சியின் புதிய நூல், மணற்கேணி இதழ், அம்பேத்கர், நிறப்பிரிகை என்று பல விஷயங்களைப் பேசினார். நடப்பு அரசியல் பின்னணியில் சமீபத்தில் அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், ‘கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ என்னும் தலைப்பில் நூலாக தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக அம்பேத்கர் திடல் சென்றிருந்தேன்.

தலைப்பு சரிதான், ஆனால் ‘தலித் பார்வையில் பாஜக ஆட்சி’ என்னும் உப தலைப்பை ரவிக்குமார் வைத்தது ஏன் என்னும் கேள்வியை எழுப்பினார் சிறப்புரை ஆற்றிய தோழர் ஜி. ராமகிருஷ்ணன். ‘மதவாதம், வெறுப்பு அரசியல், சாதிய பாகுபாடுகள், தீண்டாமை, வகுப்புவாதம் என்று அனைத்தையும் ரவிக்குமார் இடதுசாரி நிலைப்பாட்டில் நின்று எதிர்த்திருக்கும்போது எதற்குத் தனியாக ‘தலித் பார்வையில்’ என்று  அட்டையில் குறிப்பிடவேண்டும்?’ வலதுசாரிகளின் பலம் சமீபகாலமாக பெருகிவருவது குறித்து அவநம்பிக்கை கொள்ளவேண்டியதில்லை என்றார் ஜிஆர். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கையளிக்கும்படியாக இருக்கிறது. குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி என்று மாநில அரசாங்கங்கள் இறங்கிவருவது இந்தப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி. ‘வர்க்கப் போரட்டத்தின் ஒரு பகுதியாகவே விவசாயப் போராட்டத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.’ என்றார் தோழர் ஜிஆர்.

‘தலித் பார்வையில் பாஜக ’ என்று உபதலைப்பு இடவேண்டிய அவசியத்தை ரவிக்குமார் பின்னர் விளக்கினார். பாஜகவின் தலித் வாக்கு வங்கி முன்பைவிட இப்போது அதிகரித்திருக்கிறது. ராம் விலாஸ் பாஸ்வான், அத்வாலே ஆகிய தலித் தலைவர்களை உள்ளிழுத்துக்கொண்டு தலித் வாக்குகளைத் தீவிரமாக வேட்டையாடிக்கொண்டிருக்கிறது மோடியின் பாஜக. கேரளாவில் அய்யன்காளி புகழ் பாடுகிறார் மோடி. அவ்வாறே நாராயண குருவையும் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறார். மற்றொரு பக்கம், புரட்சியாளர் அம்பேத்கரை இந்துத்துவ வலைக்குள் சிக்கவைக்க அவர் கட்சியினர் முயன்றுகொண்டிருக்கிறார்கள். தலித்துகளைக் கவர்ந்திழுக்கவும் நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பர்கள்தாம் என்று காட்டிக்கொள்ளவும் இத்தகைய முயற்சிகளில் மோடி ஈடுபட்டு வருகிறார். இது தவறான, மோசடியான போக்கு என்பதை நிரூபிக்கவேண்டும். நடைபெறுவது தலித்துகளுக்கும் விரோதமான ஆட்சி என்பதை அழுத்தமாக உணர்த்தவே அந்த உபதலைப்பு என்றார் ரவிக்குமார்.

முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டுமல்ல; தற்சமயம் நடைபெறுவது அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சி என்றார் ஜவாஹிருல்லா. மோடியின் ஆட்சியை ஏன் ஜனநாயக ஆட்சி என்று அழைக்கமுடியாது என்பதை விரிவாக விவரித்தார் திருமாவளவன். மக்களின் முடிவுகள் அல்ல, குறிப்பிட்ட சில கும்பல்களின் முடிவுகளே இன்று நம்மை ஆதிக்கம் செய்கின்றன. நம் அன்றாட வாழ்வில் இந்தக் கும்பல்கள் தலையிட்டுக்கொண்டிருக்கின்றன. ஒருவருடைய வீட்டு சமையலறைக்குள் சென்று, என்ன சமைக்கப்பட்டிருக்கிறது என்று சரிபார்த்து பிறகு தாக்கும் துணிச்சல் எங்கிருந்து சிலருக்கு வருகிறது? மாடுகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளை இடைமறித்து, தகுந்த ஆவணங்கள் இருந்தாலும் தாக்கும் அதிகாரத்தைச் சிலருக்கு யார் அளித்தது? இந்தக் கும்பல்கள் தங்களுக்கான அதிகாரத்தை எங்கிருந்து பெறுகின்றன? 

மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது நிலவும் கும்பலாட்சி கொடுங்கோன்மை ஆட்சியாக மாறிவிடும். கும்பலாட்சிக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. ஆனால் கொடுங்கோன்மை ஆட்சிக்கு அந்த அங்கீகாரமும் கிடைத்துவிடும். அப்படி நேர்வதை நாம் அனுமதிக்கக்கூடாது என்றார் திருமாவளவன். மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். ‘விமரிசனங்கள் பல இருந்தாலும் அதிமுக ஆட்சி கலைக்கப்படுவதை நாங்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அதுதான். திமுகமீதும்கூட விமரிசனங்கள் இருக்கின்றன என்றாலும் பாஜக அவர்களையும் சேர்த்தே வீழ்த்த நினைக்கிறது. அதிமுகவின் இடத்தில் ஒருவேளை சிபிஎம் வந்து அமர்ந்தால் ரத்தனக் கம்பளம் விரித்து வரவேற்கலாம். ஆனால் பாஜக போன்ற ஜனநாயக விரோத சக்திகள் வருவதை எப்படிப் பொறுத்துக்கொள்ளமுடியும்?’

வகுப்புவாத அபாயத்துக்கு எதிரான அணிதிரட்டலை எப்படி மேற்கொள்வது? ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதன்மூலம் என்றனர் திருமாவளவனும் ரவிக்குமாரும். வர்க்க உணர்வை வலுப்படுத்துவதன்மூலம்  என்றார் தோழர் ஜிஆர். 

அழைப்புக்கும் உரையாடலுக்கும் நன்றி, தோழர்  ரவிக்குமார்.  உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தோழர்கள் முகமது யூசுஃப், சிந்தனைச்செல்வன் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

( தோழர் மருதன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருக்கும் பதிவு )