Monday, October 3, 2011

மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துறை நொபெல் பரிசு



உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய நமது புரிதலை மேம்படுத்திய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்துக்கான மருத்துவத் துறைக்கான நொபெல் பரிசு வழங்கப்படுகிறது.

உயிரினங்களில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு உந்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்தமைக்காக அமெரிக்காவின் புரூஸ் பட்லர் மற்றும் பிரஞ்சுக்காரர் ஜூல்ஸ் ஹொஃப்மன் ஆகியோருக்கும், புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது என்பதைக் கண்டறிந்தமைக்காக கனடாவைச் சேர்ந்த ரல்ஃப் ஸ்டெய்ன்மனுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பட்லரும் ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர்.


நோய் எதிர்ப்பு கட்டமைப்பின் இரு பிரிவுகள்

உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பில் இரண்டு முக்கிய பிரிவுகளாக வகுக்களாம்.

எவ்வித கிருமித் தாக்குதலுக்கும் பொதுவாக ஒரேமாதிரியாக செயல்படக்கூடியது முதல் ஒரு பிரிவு, அதனை ஆங்கிலத்தில் இன்னேட் இம்யூன் சிஸ்டம் என்று சொல்கின்றனர்.

தாக்குகின்ற கிருமியின் வகைக்கு ஏற்ப உருமாறி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செயல்படக்கூடிய பிரிவை அடாப்டிவ் இம்யூன் சிஸ்டம்என்று கூறுகின்றனர்.

உடலுக்குள் ஏதாவது கிருமி நுழைந்தவுடன் அதனை எதிர்த்து போராடுகின்ற பணியை செய்வது இன்னேட் பிரிவு தான்.

இன்னேட் நோய் எதிர்ப்புத் தொகுதியின் முக்கிய அங்கமான டோல் என்ற மரபணுவை பேராசிரியர் ஹொஃப்மன் 1996ல் பழக் கொசுக்களில் கண்டறிந்தார்.

இதே போன்ற மரபணு சுண்டெலிகளிலும் காணப்படுவதை பேராசிரியர் பட்லர் 1998ல் கண்டறிந்தார்.

மனிதர்களிலும் டோல் ஜீன்களை ஒத்த மரபணுக்கள் டஜனுக்கும் அதிகமான ரகங்கள் காணப்படுவது பிற்பாடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் ஸ்டெய்ன்மன் 1973ல் டெண்ட்ரிடிக் வகை உயிரணுக்களை கண்டறிந்தார்.

இருவகை நோய் எதிர்ப்புத் தொகுதிகளுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்படுவது இந்த வகை உயிரணுக்கள்தான் என்று அவர் நிரூபித்திருந்தார்.

ஒரு கிருமித் தொற்று ஏற்படும்போது, உடல் அதனைச் சமாளிக்க அடாப்டிவ் நோய் எதிர்ப்புத் தொகுதியின் பணி தேவையா தேவையில்லையா என்று முடிவுசெய்ய டெண்டிரிடிக் உயிரணுக்கள் உதவுவதாக அவர் காட்டியிருந்தார்.

இந்த மூன்று பேரின் பங்களிப்பும் மருத்துவத்துறையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தன என்று நொபெல் பரிசுக்குழு பாராட்டியுள்ளது.

இவர்களது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்து புதிய வகை மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன.


பரிசு வழங்கப்பட்ட விஞ்ஞானி ஒருவர் இறந்துவிட்டார்

கனடாவின் ரல்ஃப் ஸ்டெய்மன் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் இறந்திருந்துள்ளார் என்பது அவர் பெயரை அறிவித்த பின்னர்தான் பரிசுக் குழுவுக்கு தெரியவந்துள்ளது.

இறந்தவர் ஒருவருக்கு சாதாரணமாக பரிசு வழங்குவதில்லை என்ற வழக்கத்தை நொபெல் தேர்வுக் குழு வைத்துள்ளது.

ஆனால் பரிசை அறிவித்தபோது ரல்ஃப் இறந்ததை அது அறிந்திருக்கவில்லை என்ற நிலையில் ரல்ஃப்புக்கு பரிசு செல்லுமா என்பது பற்றி தேர்வுக் குழு தனது விதிகளை ஆராய்ந்து வருகிறது.


நன்றி : பிபிசி தமிழோசை 


No comments:

Post a Comment