Thursday, February 16, 2012

தமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பிரபலமடைந்திருந்த அவர், தலித் இலக்கியம் குறித்த விவாதங்கள் தீவிரம் பெற்றிருந்த 1980 -90 களில் அதில் நேரடியாகப் பங்கேற்கவில்லை எனினும் '"அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம்'  "  ‘ பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்ற தனது மொழிபெயர்ப்பு நூல்களின் மூலம் அதற்குப் பங்களிப்புச் செய்தவர்.
1985 ஆம் ஆண்டு நான் பாண்டிச்சேரிக்குப் பணி மாறுதல் பெற்று வந்த சில மாதங்களிலேயே அவரது அறிமுகமும் தொடர்பும் எனக்குக் கிடைத்தது. 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற எனது திருமண நிகழ்வில் வெளியிடப்பட்ட எனது கவிதை நூலான ‘ இதனால் யாவருக்கும்’ அவரது முன்னுரையோடு வெளிவந்தது. அவரது தம்பியும் தற்போது புகழ்பெற்று விளங்கும் திரைப்பட கலை இயக்குனருமான மஹி அந்த நூலுக்கு அட்டைப் படம் வரைந்து தந்தார்.

சாதியின் கொடூர நிழல் இருளாகக் கவியாத சென்னைப் பெருநகரச் சூழலில் பிறந்து வளர்ந்தவர் இந்திரன். ஓவியக் கலையோடு நெருங்கிய தொடர்புகொண்ட குடும்பம் அவருடையது. சாதிக் கொடுமைகளை அனுபவிக்காதவர் என்றாலும் சாதி குறித்த தெளிவு அவருக்கு உண்டு. மும்பையில் பணியாற்றியபோது அங்கு எழுச்சியோடு பரவிக்கொண்டிருந்த தலித் பேந்தர்ஸ் இயக்கத்தின் செயல்பாடுகளையும், அதன் முன்னணியில் இருந்த தலித் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர் நெருக்கமாக அறிந்தவர்.

1986 ஆம் ஆண்டு வாக்கில் தலித் இலக்கியத்துக்கென சிற்றிதழ் ஒன்றைத் துவக்கவேண்டுமென்று நானும் அவருமாக பாண்டிச்சேரி கடற்கரையில் அமர்ந்து முடிவுசெய்தோம். ‘அடையாளம்’ என்று அதற்குப் பெயரையும் தேர்வுசெய்தோம்.அதற்கான படைப்புகள் சிலவற்றையும் தொகுத்தோம். அதற்காக நான் ‘ காடாக சம்பு … ‘ எனத் தொடங்கும் கவிதை ஒன்றையும் எழுதித் தந்தேன். ( அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தற்போது நானும் அழகரசனும் தொகுத்து ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்தின்மூலம் வெளியிட்டிருக்கும் Tamil Dalit Anthology இல் இடம்பெற்றிருக்கிறது.) அந்த இதழை அச்சிடும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். தலித் இலக்கிய இதழ் ஒன்றை நடத்துவதில் அவருக்கிருந்த தயக்கத்தாலும், அந்த நேரத்தில் அவரது நண்பரகள் சௌந்தர் மற்றும் கதிர்வேலன் ஆகியோர் ஆரம்பித்த ‘பயணம்’ என்ற சிற்றிதழாலும் ’அடையாளம்’ வெளிவராமல் போயிற்று.அப்போது நான் எடுத்த முயற்சி செயல்வடிவம் பெற சுமார் பத்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. ‘தலித் ‘ என்ற பெயரில் நான் பத்திரிகையைத் துவக்கியதன்மூலமே அது நிறைவேறியது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளையும் கவனித்து வருகிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் பெரும்பாலும் தன்னார்வத்தின் அடிப்படையிலேயே அதைச் செய்கிறார்கள். ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்கள் அப்படியல்ல.  

சாகித்ய அகாதமி நிறுவனம் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் தமிழில் ஒரு தலித் எழுத்தாளருக்குக்கூட அந்தப் பரிசு தரப்படவில்லை என நான் அண்மைக்காலமாகக் குரலெழுப்பி வந்தேன். அது உரியவர்களின் காதுகளை எட்டிவிட்டதுபோலும். 


 இந்தத் தெரிவு எப்படி செய்யப்பட்டிருந்தாலும் இந்த விருதுக்கு முற்றிலும் தகுதியான ஒருவர்தான் இந்திரன். அவரை   வாழ்த்துகிறேன். 

4 comments:

 1. இப்பதிவுக்கான என் எதிர்வினையை என் முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பாக் எழுதியுள்ளேன். அதன் உள்ளடக்கம் பின்வருமாறு: (பகுதி 1)

  “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகளைச் செய்துவருகிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளையும் கவனித்து வருகிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் பெரும்பாலும் தன்னார்வத்தின் அடிப்படையிலேயே அதைச் செய்கிறார்கள். ஆனால் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்கள் அப்படியல்ல. அவர்கள் அதைத் தொழிலாகச் செய்கிறார்கள். நான் கவனித்த இன்னொரு விஷயம் : ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பலர் தலித்துகள்- இந்திரன், ரவிக்குமார், ராஜ்கௌதமன். பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டிருக்கும் சா.தேவதாஸ் ஒரு தலித் என யாரோ சொன்ன நினைவு. இதற்கு நேர் மாறாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பலர் பிராமண சமூகத்தவர்களாக உள்ளனர். அவர்களில் பலருக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்குத் தமிழ் தெரியவில்லை என்பது அவர்களது மொழிபெயர்ப்புகள் காட்டும் உண்மை.”

  தமிழ் வாசகர்களுக்கிடையில் நன்றாக அறியப்பட்ட எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ரவிக்குமார் அவர்கள் தன் வலைத்தளத்தில் அண்மையில் வலையேற்றிருக்கும் இடுகையில் (சுட்டி: http://nirappirikai.blogspot.in/2012/02/blog-post_16.html?spref=tw) மேற்கண்டவாறு எழுதியுள்ளார். தற்காலத் தமிழ்க் கவிதை மற்றும் புனைவிலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணியை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக செய்துவருபவன் என்ற முறையிலும் அவர் குறிப்பிட்டிருக்கும் சமூகத்தில் பிறந்த காரணத்தால் அவர் பொத்தாம்பொதுவாக, விதிவிலக்குகளன்றி வெளிப்படுத்தியிருக்கும் மேற்படி கருத்துகளுக்கு உட்பட்டவன் என்ற முறையிலும், சில எதிர்வினைகளை இங்கு பதிவு செய்யத் தலைப்படுகிறேன்.

  நானறிந்தவரை, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்பவர்கள் பல்வேறு சமூகத்தினிரிடமிருந்தும் வருபவர்கள்தாம், பிராமணர்கள் மட்டுமல்ல. இவர்களில் அ-பிராமணர்களாக கல்வித்துறையாளர்கள் ரா. அழகரசன், எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆ.இரா. வேங்கடாசலபதி, ம.லெ. தங்கப்பா மற்றும் சூ. ஆர்ம்ஸ்ட்ராங்; எழுத்தாளர்கள் சிவகாமி மற்றும் மீனா கந்தசாமி; பல்துறை வல்லுனர் சு. தியடோர் பாஸ்கரன் ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இது போலவே, பெ. நா. அப்புசாமி, சரஸ்வதி ராம்னாத்திலிருந்து தொடங்கி க.நா.சு, சுந்தர ராமசாமி போன்றோரைத் தாண்டிவந்து இன்றைய வெ. ஸ்ரீராம், பத்ரி சேஷாத்ரி மற்றும் யுவன் சந்திரசேகர் வரை கணக்கற்ற பிராமண சமூகத்தினர் ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து தொண்டாற்றி வந்துள்ளனர்.

  மொழியாக்கம் இதுவரை சாதிப்பிளவுகளின் பிடிக்குள் சிக்காத தளமாகத்தான் இருந்து வருகிறது. தீவிர திராவிட இயக்கக் கோட்பாட்டு ஆதரவாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி, சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ புதினத்தையும் பிராமண சமூகத்தில் பிறந்த லக்‌ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ நாவலையும் இயல்பாக மொழிபெயர்க்கும் தளமாகத்தான் இது இயங்கி வருகிறது. எனவே, தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய சில தலித் மொழிபெயர்ப்பாளர்களைக் குறிப்பிட்டுவிட்டு, உடனே ”இதற்கு நேர் மாறாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பலர் பிராமண சமூகத்தவர்களாக உள்ளனர்” என்று ரவிக்குமார் எழுதியிருப்பதற்கு உள்ளபடியே அடிப்படை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை

  ReplyDelete
 2. பகுதி 2

  முப்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் பணியாற்றிவரும் இச்சிறு குழுவில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதன் சமூகப் பயனோ பொருளோ எளிதில் தென்படக்கூடியதன்று. உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது போலத்தான் இருக்கிறது இச்செயல். ஆயினும்,. ரவிக்குமாரின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது, அவர் இதன்மூலம் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களத் தனிமைப்படுத்தி அவர்களைப் பற்றி பொதுப்படையாகவும் சிறுமைப்படுத்தும் முகமாகவும் இரண்டு கருத்துகளை முன்வைக்க விரும்புகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஓன்று, தலித் மொழிபெயர்ப்பாளர்களின் தன்னார்வத் தொண்டுக்கு மாறாக இவர்கள் மொழியாக்கத்தை தொழிலாகச் செய்கிறார்கள். இரண்டு, இவர்களில் பலருக்கு ஆங்கிலம் தெரியும் அளவுக்கு தமிழறிவு கிடையாது. இவற்றைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

  தன்னார்வத் தொண்டுக்கும் தொழிலுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. தன்னார்வத் தொண்டு, தொடர்ச்சியாக இல்லாமல் அவ்வப்போதும் பலனை எதிர்பாராமலும் செய்யப்படுவது. தொழிலோ, முழுநேர ஈடுபாட்டின் அடிப்படையில், பிழைப்புக்காக செய்யப்படுவது. என் பார்வையில், இலாப அடிப்படையில் இயங்கும் ஒரு நிறுவனத்துக்காக ஆற்றப்படும் எப்பணியும் சன்மானத்திற்குரியதே ஆகும். ’பறவைகள் ஒருவேளை தூங்கிப்போயிருக்கலாம்’ என்ற மொழியாக்க நூலுக்காக அதைப் பதிப்பித்த சாஹித்ய அகாடமியிடமிருந்து கவிஞர் இந்திரன் அதற்குரிய சன்மானத்தை அந்த நிறுவனத்தின் நடைமுறைப்படி பெற்றிருப்பார் என்று உறுதியாக நம்பலாம். மிகக்குறைவாகவே எப்போதும் தரப்படும் மொழிபெயர்ப்புக்கான சன்மானம் பெறப்படவில்லையென்றால் அது சுரண்டலுக்கு ஒப்பாகும். எனவே, ரவிக்குமாரின் ‘தன்னார்வத் தொண்டு’ எனும் சொற்றொடர் கேள்விக்குரியது. அதுபோலவே, இலக்கிய மொழிபெயர்ப்பைத் தொழிலாகக் கொண்டு எந்த முழுநேர மொழிபெயர்ப்பாளரும் பிழைக்க முடியாது. மாற்று வருவாயின்றி எவரும் முழுநேர மொழிபெயர்ப்புத் ‘தொழிலில்’ (!) ஈடுபட முடியாது. மற்றும் மொழிபெயப்பாளர்களுக்கு – ஒரு சிலரைத் தவிர - பொதுவாக எந்தவிதமான சமூக அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவதில்லை. என்வே ஒருவர் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கான லோகாயத காரணிகள் ஏதுமில்லை என்றுதான் கூறவேண்டும். மாறாக, தன்னளவில் மனநிறைவோ அல்லது சமூகப் பங்களிப்புக்கான உந்துதலோ அல்லது இரண்டுமோ தான் காரணமாக இருக்கமுடியும். இது எல்லாவிதமான மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பொருந்தும். எனவே, ரவிக்குமார் இங்கே சுட்டும் ‘தன்னார்வத் தொண்டு / தொழில்’ என்னும் பாகுபாட்டிற்கு உண்மையில் அடிப்படைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

  பொதுவாக, ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு ‘இலக்கு’ மொழியில்தான் புலமை தேவைப்படுகிறது. இரு மொழிகளிலும் போதுமான தேர்ச்சி பெற்றிருப்பினும் அவர் ’இலக்கு’ மொழியில்தான் மொழியாக்கப் பிரதியைப் படைக்கிறார். உலகெங்கும் மொழிபெயர்ப்பாளர்கள் வழமையாக தங்கள் தாய்மொழியையே ’இலக்கு’ மொழியாக கொண்டிருக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் நம் பின்காலனீய வரலாற்றுப் பின்னணியில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள் அம்மொழியில் தேர்ச்சி பெற்று ,இந்திய மொழிப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டிருக்கின்றனர். எந்த நோக்கிலும், எவர்மூலம் நிறைவேறினாலும் இது தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றப்படும் ஒரு முக்கியமான சமூகக் கடமைதான்.

  ReplyDelete
 3. பகுதி 3

  மூலப்பிரதியை உள்வாங்கிக் கொண்டு செய்யப்படும் மொழியாக்கத்தின் பின்னணியில் மூலமொழியறிவு ஒரு சிறுபகுதியாக மட்டுமே இயங்குகிறது. தரமான மொழியாக்கத்திற்கு, நிலப்பரப்பு; பல்வேறு தளத்தில் இயங்கும் பண்பாட்டுக் கூறுகள்; தாவர, மிருக வளம்; வட்டார, குழு வழக்குகள், பழம் சொல்லாடல்கள் என்று வாழ்க்கையின் எத்தனையோ வகையான அம்சங்களைப் பற்றிய அறிவும் அவற்றை ஆய்ந்தறிந்து புரிந்து கொள்வதற்கான உழைப்பும் தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் இப்பணியை அகராதிகள், உரைகள், வல்லுனர்கள் மற்றும் பலதுறைகளைச் சார்ந்த அறிஞர்களின் துணைகொண்டு ஆற்றிவருகின்றனர். எடுத்துக்காட்டாக, ‘ஆழி சூழ் உலகு’ நாவலில் வரும் கடல்சார் சொல்லாடல்கள், மீன்வகைகள், பரதவர் பற்றிய சங்ககாலப் பாடல்கள் போன்றவற்றை வேற்று சமூகத்தினர் எவரும் – ரவிக்குமார் உட்பட - உடனடியாகப் புரிந்து கொள்வது கடினம். ‘தமிழறிவு’ என்று பேசும்போது எக்காலத்திய தமிழ், யாருடைய தமிழ் எனும் கேள்விகள் எழாமல் இருக்க வாய்ப்பில்லை. இது இப்படியிருக்க, மொழிபெயர்ப்பில் குறைபாடுகள் காணப்பட்டால் அவை மொழிபெயர்த்தவரின் உழைப்பில் இருந்திருக்கக்கூடிய குறைபாடுகள்தாம்; அவருடன் சேர்ந்து அப்பிரதியை உருவாக்கிய பதிப்பாசிரியரின் பணியில் ஏற்பட்டிருக்கக்கூடிய கவனக்குறைவுதான். இதற்கும் ’மொழியறிவு’க்கும் ஒரு நேரடித் தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை.

  எனவே, ’இலக்கு’ மொழி தெரிந்த அளவுக்கு ‘மூல’ மொழி தெரியவில்லை என்ற குற்றச்சாட்டில் எந்த சாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. இது பிராமண சமூகத்தைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று பொருள்படும் வகையில் கூறியிருப்பது கூடுதல் அபத்தம். இது பொதுவாக எங்கும், எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் – ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துவரும் ரவிக்குமார் உட்பட - இயல்பாகப் பொருந்தும் என்பதே உண்மை.

  ஆக, மொழிபெயர்ப்பு என்னும் செக்யூலர் இயங்குதளத்தில் ஒரு தலித் எழுத்தாளர் முதன்முறையாக சாஹித்ய அகாடமியால் அவரது மொழிபெயர்ப்பு சாதனைக்காக கௌரவிக்கப்படுவது நம் அனைவருக்குமே பெருமைதான். அதன் மறுபக்கமாக,. பிராமண சமூகத்தில் பிறந்த மொழிபெயர்ப்பாளர்களை இழிவு செய்யும் விதத்தில் சில மேலோட்டமான, சாரமற்ற கருத்துகளை ரவிக்குமார் உதிர்த்திருப்பது வருந்தற்குரியது.

  இறுதியாக, வியப்புக்குரிய ஒன்றை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  சென்ற ஆண்டில் வெளிவந்த ‘No Alphabet in Sight: New Dalit Writing from South India’ (Penguin) தொகுப்பின் தமிழ் பகுதிக்கு பங்களிப்பு செய்திருக்கும் 16 மொழிபெயர்ப்பாளர்களில் அதிகபட்சம் 5 பேர்தான் பிராமண சமூகத்தினராகத் தென்படுகிறார்கள். அழகரசனுடன் இணைந்து ரவிக்குமார் தொகுத்திருக்கும் ‘Tamil Dalit Writing’ (OUP, 2012) நூலில் பங்கேற்றிருக்கும் 16 மொழிபெயர்ப்பாளர்களில் 11 பேர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றுகின்றனர். நானறிந்தவரை அனவருமே தொகுப்பில் பங்கேற்க முறையாக அழைக்கப்பட்டவர்கள். இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் மொழிபெயர்ப்புத் துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்கள்; சாதனை படைத்தவர்கள். இவ்வளவு சிறிய தொகுதியை வைத்துக்கொண்டு எந்த ‘உண்மையையும்’ அறிவியல் முறைமைப்படி நிறுவ இயலாது என்பது பாலபாடம்.

  இருந்தாலும், தான் பொறுப்பேற்றிருக்கும் ஒரு பணியைச் செவ்வனே செய்துமுடிக்க இன்றியமையாத வகையில் உதவியிருப்பவர்களை எவ்விதத்திலும் பாராட்டாமல், ஒட்டுமொத்தமாக ‘பலர்’ என்று குறிப்பிட்டு ஜாதி அடிப்படையில் பொத்தாம்பொதுவாக குறைகூறியிருக்கிறார் ரவிக்குமார். இச்செயலின் மூலம் ஒரு பிரதியின்/ஆசிரியரின் நிறைகுறைகளைப் பற்றி அதை பிரசுரத்துக்குத் தயார் செய்யும் தொகுப்பாசிரியரோ பதிப்பாசிரியரோ பொதுவெளியில் விமர்சிப்பதில்லை எனும் - பரவலாக உலகெங்கும் (தமிழ்நாட்டிலும்!) கைப்பிடிக்கப்படும் - பதிப்புலக நாகரிகத்தையும் காரணமின்றி மீறியிருக்கிறார். தமிழ்நாட்டின் தலையாய அரசியல் சிந்தனையாளர்களில் ஒருவராக அறியப்படும் திரு ரவிக்குமாரிடம் இத்தகைய சறுக்கல்களை எதிர்பார்க்கவில்லை என்று வியப்புடனும் வருத்தத்துடனும் கூறி இக்குறிப்பை முடித்துக் கொள்கிறேன்.
  =====

  ReplyDelete
 4. திரு கல்யாணராமன்
  எனது குறிப்பை மீண்டும் படிக்கும்போது அந்தக் குறிப்பு சற்றே கடுமையாகவும் ,பொதுவாகவும் இருக்கிறது என்பதை உணர்கிறேன். ‘பலர்’ என்ற சொல் தவறான புரிதலைத் தருகிறது. ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுள் தலித்துகளின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கும்.எனவே அங்கும்கூட ‘பலர்’என்ற சொல் பொருத்தமற்றது என்றே படுகிறது.எனவே எனது குறிப்பைத் திருத்தம் செய்து வெளியிட்டிருக்கிறேன். பிராமணர்களைத் தனிமைப்படுத்திக் குறைகூறுவது எனது நோக்கமல்ல. நீங்கள் ஒரு பிராமணர் என்பதும் எனக்குத் தெரியாது. எனது குறிப்பு உங்களைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.
  தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பவர்கள் தங்களுக்கு இருக்கும் ஆங்கில மொழித் தேர்ச்சியைப் போன்று தமிழிலும் தேர்ச்சி கொண்டவர்களாக இருந்தால் தரமான மொழிபெயர்ப்புகளை வழங்கமுடியுமே என்ற ஆதங்கத்தைத்தான் நான் வெளிப்படுத்த நினைத்தேன்.
  மொழிபெயர்ப்பவர்கள் எத்தகைய பிரதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அதை எவ்வாறு மொழிபெயர்த்து எவ்விதமாகப் பிரசுரிக்கிறார்கள் என்பதன் பின்னணியில் இயங்கும் அரசியல் , அதில் கலந்திருக்கும் சாதியச் சார்புகள் ஆகியவை குறித்து நாம் திறந்த மனதோடு விவாதிக்கவேண்டும். உங்களது எதிர்வினையை அதற்கான துவக்கமாகக் கருதுகிறேன்.
  நன்றி.
  அன்புடன்
  ரவிக்குமார்

  ReplyDelete