பெயர் தெரியாத தாவரம் ஒன்று
முளைத்திருந்தது
கொல்லைப்புறத்தில்
அடர் பச்சை இலைகளும்
கம்பி போல் தண்டுமாய்
எப்போதும் அது சிரித்தபடி இருந்தது
’இது பாம்புக் கடிக்கான பச்சிலை
நல்ல பாம்போடு சண்டைபோட்டுவிட்டு
கீரிப்பிள்ளை வந்து இதில்தான் புரளும்’ என்றார் அப்பா
‘அதுவொரு கீரை
மாவோடு கலந்து தோசையாய் சாப்பிட்டால்
மூட்டுவலி போகும்’ என்றார் தாத்தா
எவ்வளவு உயரம் வளரும்
என்ன நிறத்தில் பூக்கும்
அதற்கு என்ன பெயர் வைப்பது
குழந்தைகள் மனதில் ஆயிரம் கேள்விகள்.
அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே
வந்தாள் அம்மா
‘ செடி கொடி மண்டினால்
பூச்சி பொட்டு அண்டும்’ என்று
வேரோடு பிடுங்கி வீசிவிட்டுப் போய்விட்டாள்
No comments:
Post a Comment