புத்தகங்களில் இருந்த மரங்களைக்கூடப்
பிடுங்கியெறிந்துவிட்டது காற்று
பாவம் குழந்தைகள்
பாடப்புத்தகங்களின்ஒவ்வொரு பக்கத்திலும் சாய்ந்துகிடந்தன
பலப்பல விருட்சங்கள்
தென்னை வாழை பலா வேம்பு
ஆல் அரசு என ஆயிரம் வகைகள்
திகைத்த குழந்தைகள்
பெற்றோரை அழைத்தனர்
அவர்களுக்கோ ஆயிரம் வேலைமரங்கள் இல்லாத புத்தகங்கள்
சுமப்பதற்கு சுளுவாகத்தானே இருக்கும்
என்றொரு நினைப்பு
குழந்தைகளுக்குத்தான் தெரியும்
மரங்கள் இல்லாத புத்தகங்களில்
பறவைகளும் இருக்காது என்பது
பறவைகள் இல்லாதுபோனால்
வானமும் இருக்காது
வானம் இல்லாவிட்டால்
மேகமும் இருக்காது
அப்புறம்
நிலா எங்கிருக்கும்
சூரியன் எங்கிருக்கும்
நட்சத்திரங்கள் எங்கு வசிக்கும்
கவலையோடு புத்தகங்களைப் புரட்டுகிறார்கள்
குழந்தைகள்
உதிரும் சருகுகள்
ஊரெங்கும் பறக்கின்றன
No comments:
Post a Comment