எழுத்தாளர், திரைப்பட, தொலைகாட்சி நடிகர் தி.சு. சதாசிவம் மறைந்தார்
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் தொலைக்காட்சி ஆளுமையுமான திரு. தி.சு. சதாசிவம் இன்று (05.02.2012, ஞாயிறு) காலை காலமானார். சிறிது காலமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.
திரு. சதாசிவம் கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் ஈடுபட்டவராக அறியப்பட்டவர். 1997இல் சாரா அபுபக்கரின் சந்திரகிரி ஆற்றங்கரையில் என்ற புகழ்பெற்ற கன்னட நாவலை மொழிபெயர்த்ததற்காக திரு. சதாசிவத்திற்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. 25க்கு மேற்பட்ட அவரது மொழிபெயர்ப்புகள் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன. அவர் முதன்மையாக கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தாலும் மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலிருந்தும் மொழிபெயர்த்திருக்கிறார்.
யூ.ஆர். அனந்தமூர்த்தி, சிவராம காரந்த், மொகல்லி கணேஷ், சந்திரசேகர கம்பார், லங்கேஷ் போன்ற முக்கியமான கன்னட எழுத்தாளர்கள், பெர்டோல்ட் பிரெக்ட், அகிரா குரசோவா போன்ற சர்வதேச ஆளுமைகள் ஆகியோரின் படைப்புகளை திரு. சதாசிவம் தனது நேர்த்தியான மொழிபெயர்ப்பின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
சாகித்ய அகாதமி விருது மட்டுமின்றி திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (1998), நல்லி திசை எட்டும் விருது (2006), நெய்வேலி புத்தக விழா அமைப்பு அளித்த வாழ்நாள் சாதனை விருது (2007) போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.
தமிழில் மாற்றுத் திரைப்பட ரசனை இயக்கம் மற்றும் நாடக விமர்சனத்தின் முன்னோடிகளில் ஒருவர் திரு. சதாசிவம். கடந்த 15 ஆண்டுகளாக அவர் நடிப்பிற்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். அவர் பல திரைப்படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் பத்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் இயக்கிய நம்மவர் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மர்மதேசம், விடாது கருப்பு, அண்ணாமலை, கோலங்கள் உள்ளிட்ட பிரபல தொடர்களில் அவர் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார்.
நாடகத் துறையில், குறிப்பாக வீதி நாடகத்தில், இவர் இயக்கம், நடிப்பு என பல படைப்புகளுக்கு காரணமாக இருந்திருக்கிறார். சென்னையில் பரீக்ஷா அமைப்புடன் இணைந்து செயல்பட்டார்.
திரு. சதாசிவம் இடதுசாரி கலை-இலக்கிய வட்டங்களிலும் தமிழ் தேசிய, தலித் இயக்கங்களிலும் முனைப்புடன் பங்கேற்றார். அவர் 15.03.1938இல் அன்று வட ஆற்காடு மாவட்டமாக இருந்த திருப்பத்தூரில் பிறந்தார். அவர் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியை பெங்களூரில் கழித்தார்.
அவருக்கு மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
avar fotovai pottirukkalame!
ReplyDelete