Wednesday, July 4, 2012

கபில் சிபலின் 'கல்விப் புரட்சி '



மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் விகடனில் நான் எழுதிய கட்டுரை இது. தோரட்  கமிட்டி அறிக்கை குறித்த விவாதங்கள் நடக்கும் இவ்வேளையில் ஒரு நினைவு படுத்தலுக்காக இதை இங்கே தருகிறேன்..உயர் கல்வி குறித்த யஷ்பால் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்தச் சொல்லி நமது கல்வியாளர்கள் குரல் எழுப்பக் கூடாதா ?



ரவிக்குமார்

பாராளுமன்றத் தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றிக்கு ‘நூறு நாள் வேலைத் திட்டம்’ ஒரு முக்கிய காரணம் என்பதைத் தெரிந்து கொண்டதாலோ என்னவோ இப்போது தனது அமைச்சரவையில் இருக்கும் காபினட் அமைச்சர்கள் அனைவருக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை கொடுத்திருக்கிறார் மன்மோகன் சிங். ஒவ்வொரு துறையிலும் அடுத்த நூறு நாட்களில் செய்யப்போவது என்ன என்பதை அமைச்சர்கள் ஒவ்வொருவராக இப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு துறைகளிலும் இப்படி திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ள அறிவிப்புதான் இப்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரத்தில் அமைச்சர் கபில்சிபல் கல்வித்துறையில் செய்யவிருக்கும் தலைகீழ் மாற்றங்களைப்பற்றிய திட்டத்தை வெளியிட்டார். சட்டரீதியான மாற்றங்கள், கொள்கைரீதியான மாற்றங்கள், நிர்வாக ரீதியான மாற்றங்கள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருபத்துநான்கு அம்சங்கள் கொண்ட புதிய திட்டத்தை அமைச்சர் அறிவித்திருந்தார். அதைக் கேள்விப்பட்டதும் நாடெங்குமிருந்து அதற்கு ஆதரவு, எதிர்ப்பு என பல்வேறுவிதமான குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.
கபில்சிபல் செய்திருந்த அறிவிப்புகளிலேயே அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிடலாம் என்ற அறிவிப்புதான். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கட்டாயமாக வைத்திருப்பதற்குப் பதிலாக தேவைப்பட்டவர்கள் மட்டும் எழுதலாம் என்ற அடிப்படையில் மாற்றலாம் என கபில்சிபல் கூறியிருந்தார். இது அவர் வெளியிட்டிருந்த நூறு நாள் வேலைத் திட்டத்தில் இல்லை என்றபோதிலும் இதுதான் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது.
கபில்சிபல் கூறியிருக்கும் கருத்துகளை விமர்சிப்பதற்கு முன்பு அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். சட்டரீதியாக செய்யப்படவிருக்கும் மாற்றங்கள் என்ற தலைப்பில் உயர்நிலைக் கல்விக்காக ஒரு உயர் அதிகார அமைப்பு நிறுவப்படும் என்றும்; கல்வியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், தண்டிக்கவும் சட்டம் ஒன்று இயற்றப்படும் என்றும்; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இங்கே அனுமதிப்பது குறித்து சட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கொள்கை ரீதியான மாற்றங்கள் என்ற தலைப்பில், பொருளாதார ரீதியில் பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதற்காக வாங்குகிற கல்விக்கடன்களுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வது பற்றியும்; ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ‘சமவாய்ப்பு அலுவலகங்கள்’ உருவாக்குவது பற்றியும்; தொலை தூரக்கல்வி குறித்து புதிய கொள்கையொன்றை உருவாக்குவது பற்றியும்; எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு ஊக்கம் தரும் விதத்தில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பது பற்றியும் அவர் பேசியிருந்தார். பின்தங்கிய நூறு மாவட்டங்களில் புதிதாக மாதிரி கல்லூரிகள் உருவாக்குவது பற்றியும் அவரது திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
நிர்வாக ரீதியில் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்த அமைச்சர் கபில்சிபல் தற்போதுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது குறித்தும்; பல்வேறு மாநிலங்களில் புதிதாக நூறு பாலிடெக்னிக்குகள், நூறு பெண்கள் விடுதிகள் ஆகியவற்றை அமைப்பது குறித்தும்; புதிதாக பத்து என்.ஐ.டி.களை உருவாக்குவது பற்றியும் பேசியிருந்தார். இந்தத் திட்டங்கள் எந்தவிதத்திலும் மக்களுக்கு எதிரானவையெனக் கூறமுடியாது. ஆனால், இந்தத் திட்டங்களை வெளியிட்டபோது அமைச்சர் தெரிவித்த மற்ற கருத்துகள்தான் இப்போது விவாதத்தை கிளப்பியுள்ளன. பள்ளிக் கல்வியில் தாம் செய்யவிருக்கும் மாற்றங்கள் குறித்து விவரித்தபோதுதான் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யப்போவது பற்றியும், இந்தியா முழுவதற்கும் ஒரே விதமான ‘போர்டை‘ ஏற்படுத்துவது பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை கொண்டு வருவது பற்றியும்கூட அமைச்சர் அப்போது தெரிவித்திருந்தார். பள்ளிக் கல்வியில் தனியாரின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்ற கருத்தும் அவரால் கூறப்பட்டிருந்தது.
கபில்சிபல் அவர்கள் வெளியிட்டுள்ள திட்டத்தைப் பார்க்கும்போது அது கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிற ஒரு திட்டம் போலத்தான் தெரிகிறது. இப்போது ஒரு மாணவனின் அறிவுத்திறனை சோதிப்பதற்கு தேர்வு என்ற  முறைதான் கையாளப்படுகிறது. இது மிகவும் மோசமான ஒரு முறை என்று கல்வியாளர்கள் எவ்வளவோ எடுத்து கூறியிருந்த போதிலும் இதற்கு மாற்று வழிமுறை எதுவும் இதுவரை உருவாக்கப்படாமலேயே இருந்துவந்தது. தற்பொழுது அதில் ஒரு மாற்றத்தை கொண்டுவர கபில்சிபல் எடுத்திருக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். தேர்வுக்குப் பதிலாக ‘கிரேடிங்‘ முறையை அறிமுகப்படுத்தலாம் என அவர் கூறியிருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும்கூட மிகப்பெரும் ஆறுதலை கொடுத்திருக்கிறது. ஆனால் பத்தாம் வகுப்புத் தேர்வை எடுத்து விடலாம் என்று சொல்வதுதான் அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில்கூட அவ்வளவாகப் பிரச்சனை வராது. ஏனென்றால் இங்கே ப்ளஸ்டூ என்பது பள்ளிக்கல்வியோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நமது அண்டை மாநிலங்கள் பலவற்றிலும் அது தனியே ஜூனியர் காலேஜ் என்று பிரித்தே வைக்கப்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் இந்த அறிவிப்பால் குழப்பம் ஏற்படும். எனவே பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதற்கு முன்பு இப்போதுள்ள அந்த 10+2+3 என்ற கல்வி முறையிலும் மாற்றம் கொண்டுவரவேண்டிய அவசியம் இருக்கிறது.
கபில்சிபல் கூறியிருப்பதில் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிற இன்னொரு விஷயம் இந்தியா முழுமைக்கும் பள்ளிக்கல்விக்காக ஒரே ‘போர்டு‘ அமைக்கப்படும் என்பதாகும். இந்த அறிவிப்பை செய்வதற்கு முன் மாநிலங்களின் கருத்தை முழுமையாகக் கேட்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்கள். கல்வி என்பது இப்போது பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அது மாநிலங்களின் பட்டியலில் இருந்தது. அவசர நிலைக்காலத்தின்போதுதான் அது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநிலக் கட்சிகள் எல்லாம் இணைந்து மத்தியில் கூட்டணி ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் மாநிலங்களின் அதிகாரத்தை முழுமையாக பறிப்பதுபோல் தன்னிச்சையாக இப்படி ஒரு திட்டத்தைத் தயாரிப்பது சரிதானா? என்ற கேள்வி நியாயமானதுதான். கபில்சிபல் மட்டுமின்றி தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் அணுகுமுறையில் வெளிப்படும் இரண்டு அம்சங்களை நாம் இங்கே நினைவுகூர வேண்டியது அவசியம். ஒன்று அதிகாரத்தை மையப்படுத்துதல். மற்றொன்று எல்லாவற்றையும் வணிகமயமாக்குதல். இந்த இரண்டு கொள்கைகளும் எப்போதுமே காங்கிரஸின் அணுகுமுறையில் அடிநாதமாக இருந்து வந்துள்ளன. தற்போது பாராளுமன்றத் தேர்தலில் இருநூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுவிட்ட தெம்பில் இருக்கும் காங்கிரஸ் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற கதையாக மீண்டும் தன்னுடைய பழைய அணுகுமுறையையே பின்பற்றத் தொடங்கிவிட்டதைப்போல் தெரிகிறது. மாநில அரசுகளிடம் எஞ்சியிருக்கிற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் பறிக்க வேண்டுமென்பதாகவே இந்த முயற்சி புரிந்து கொள்ளப்படும். இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இங்கே அனுமதிக்கலாம் என்பது ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். இங்கிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு ஆரோக்கியமான ஒரு போட்டியை அவை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமல்லாமல் தற்போது ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் போய் படிக்கும் நமது மாணவர்கள் படுகின்ற அவஸ்தைகளைப் பார்க்கும்போது அந்த பல்கலைக்கழகங்கள் இங்கே வந்தால் நம்முடைய மாணவர்கள் அடி உதை படாமலாவது படிக்க முடியுமே!
பள்ளிக் கல்வியில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கப் போவதாக அமைச்சர் கூறியிருப்பது கொஞம் சந்தேகத்தை எழுப்புகிறது. ஏற்கனவே இதில் தனியாரின் கொடிதான் உயரப் பறக்கிறது. இந்த ஆண்டு இந்திய பள்ளிக்கல்வியைப்பற்றி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள ‘ப்ராதம்‘ என்ற அமைப்பும்கூட ‘ஏஸர்‘ என சுருக்கமாக அழைக்கப்படும் தனது அறிக்கையில் இங்கே தனியார் பள்ளிகள் பெருகிவருவதைக் கவலையோடு சுட்டிக்காட்டியிருக்கிறது. அமைச்சர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் அது இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்போல் தெரிகிறது. தொடக்கக் கல்வி அளிக்கும் கடமையிலிருந்து அரசு முழுவதுமாகப் பின்வாங்குகிறதோ என்ற ஐயத்தைத்தான் இது எழுப்புகிறது. இந்தப் போக்கு கல்வியை இன்னும் அதிகமாக வணிக மயமாக்கிவிடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.
ஏழை மாணவர்கள் பெறும் கல்விக் கடனுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வது, ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பது போன்ற திட்டங்கள் எல்லாம் வரவேற்கப்படக்கூடியவைதான். ஆனால் கல்விக் கொள்ளையை மட்டுப்படுத்தாமல் வட்டித் தள்ளுபடி மட்டும் செய்தால் அது தனியார் கல்லூரிகளுக்கே சாதகமாக அமையும். எஸ்.சி;எஸ்.டி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி என்பது தற்போது ஐ.ஐ.டி களில் நடைமுறையில் உள்ள திட்டத்தைப்போல அவர்களை வடிகட்டுகிற ஒரு சதித் திட்டமாக இருந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம்.
       ஆறு வயதிலிருந்து பதினான்கு வயது வரையிலான பிள்ளைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வியை வழங்குகிற சட்டத்துக்கான மசோதா கடந்த ஆட்சியின்போதே கொண்டுவரப்பட்டு இவ்வளவுகாலமாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதற்கு செலவாகும் நிதியை மத்திய அரசு கொடுப்பதா அல்லது மாநில அரசு கொடுப்பதா என்ற தகராறே அது தாமதமாகக் காரணம். இப்போது அந்த சட்டத்தை நிறைவேற்றப்போவதாகக் கூறியிருக்கிறார்கள். தாமதமாகச் செய்தாலும்கூட இது வரவேற்கப்படவேண்டிய ஒரு சட்டம்தான்.
உயர் கல்வியைப் பொறுத்தவரை யஷ்பால் கமிட்டி பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளப்போவதாக அமைச்சர் கூறியிருக்கின்றார். அந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் கடந்த வாரம்தான் அரசிடம் சமர்பிக்கப்பட்டன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை முறைப்படுத்துவது குறித்து அந்தக் கமிட்டி கூறியிருக்கின்ற கருத்துகள் மிகவும் முக்கியமானவை. இனிமேல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கூறியுள்ள அந்தக்கமிட்டி தற்போது இருக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றிவிட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. உயர் கல்வியை சீரமைக்க சுயேச்சையான அதிகாரம் கொண்ட உயர் அதிகார அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்குள்ள அதிகாரம் தேர்தல் கமிஷன் அதிகாரத்தைப் போன்றதாக இருக்க வேண்டும் என்றும் யஷ்பால் கமிட்டி கூறியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்ற வசதிகளை ஏற்படுத்தித்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் யஷ்பால் கமிட்டி கூறியிருக்கிறது. அதுவும் நல்லதொரு ஆலோசனைதான். இந்த ஆலோசனைகளையெல்லாம் ஏற்று நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் நம்முடைய கல்வித்தரம் பலமடங்கு உயரவே செய்யும். எனவே கபில்சிபல் அவர்கள் கூறியுள்ள நூறு நாள் திட்டத்தை நன்றாக ஆராய்ந்து ஏற்கத்தக்க அம்சங்களை ஏற்பதும், மாற்றம் செய்ய வேண்டிய அம்சங்களில் மாற்றங்களைப் பரிந்துரைப்பதும்தான் மாநில அரசுகள் செய்ய வேண்டிய உடனடி காரியமாகும்.அதைவிட்டுவிட்டு இதில் அரசியல் பன்ண முயற்சித்தால் அதனால் நட்டமடையப் போகிறவர்கள் மக்கள்தான்.
      யஷ்பால் கமிட்டி அறிக்கை குறித்து தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு அந்தக் கருத்துகளைத் தொகுத்து தனது விமர்சனத்தோடு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்கு நமது உயர்கல்வித் துறை அனுப்பி வைக்கவேண்டும்.கல்வியில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முனைந்துள்ள இவ்வேளையில் மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கு நாம் அழுத்தம் தரவேண்டும். மாநில உரிமைகளைக் காப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் முதல்வர் கலைஞர் இப்போதும் அந்த வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்க முன்வரவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

நன்றி : ஜூனியர் விகடன் 28.06.2009 

No comments:

Post a Comment