இந்தியாவின் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலால் வெளியிடப்பட்டிருக்கும் பள்ளிப்பாடப் புத்தகங் களில் கேலிச்சித்திர சர்ச்சை பற்றி ஆராய நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு,பாடப்புத்தகங்களில் தலித் என்ற சொல்லுக்கு பதிலாக, “அட்டவணை இனத்தவர்” என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்திருப்பதாக வரும் செய்திகள் சர்ச்சையை எழுப்பியிருக்கின்றன.
இந்த பரிந்துரையை அரசு அமல்படுத்தினால், அதற்கு எதிராக தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறினார்.
தோரட் தலைமையிலான வல்லுநர் குழு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட விசாரணை வரம்புகளுக்கு அப்பால் சென்று, புத்தகத்தில் ஓரிட்த்தில் தலித் என்ற வார்த்தையை நீக்கி “ அட்டவணை இனத்தவர்” என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றார் ரவிக்குமார்.
அட்டவணை இனத்தவர் என்ற வார்த்தைப்பிரயோகம், சமீபத்தில் வந்த ஒன்று. இந்தியா குடியரசான பின்னர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அட்டவணை இனத்தவர் என்ற பட்டியல் உருவாக்கப்பட்ட்தன் விளைவு அது என்றார் ரவிக்குமார். ஆனால், அதுவே ஒரு ஒட்டுமொத்த சமூகத்தினரையும் குறிக்கும் ஒரு சொல்லாக இருக்க முடியாது என்றார் அவர். ஆனால் தலித் என்ற சொல் சாதியை மறுக்கிற ஒரு கருத்தின் அடையாளம் என்றார்.
ஏற்கனவே,இந்தப் புத்தகத்தில் இருந்த சில கேலிச்சித்திரங்களுக்கு எதிராக தலித் அமைப்புக்களும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.
இது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட குழுவினர் தங்களின் பரிந்துரைகளை நடுவணரசுக்கு அளித்திருக்கிறார்கள். இந்தக் குழுவின் பரிந்துரைகள் குறித்து என்.சி.ஈ.ஆர்.டி நிறுவனமோ அல்லது அரசோ தங்களது முடிவை இதுவரை தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment