Tuesday, September 25, 2012

தமிழும் வடமொழியும் தமிழர் வடமொழியைச் சமயச் சமுதாயச் சார்பற்றதாக்கிக் கற்றலின் தேவை - கி.நாச்சிமுத்து


தமிழும் வடமொழியும்
தமிழர் வடமொழியைச் சமயச் சமுதாயச் சார்பற்றதாக்கிக் கற்றலின் தேவை

கி.நாச்சிமுத்து

                        அரசியல் பண்பாடு முதலிய சமயச் சார்பற்ற துறைகளில் பல்லவர் முதலிய தமிழரல்லாத அரச வம்சங்கள் தமிழ் நாட்டை ஆண்ட போது இந்தியா முழுமையும் ஏற்பட்ட இந்திய மயமாதலின் கருவியாக வடமொழி பொதுமொழியாக உருப்பெற்றது,அப்போது  சங்க காலத்தில் பிராகிருதத்திற்கு இணையாகத் தனியாகத் தமிழகத்தில் அரசியல் முதலியவற்றில் கோலோச்சிய தமிழ் மொழி தன்னுடைய தனி அதிகாரக் களன்களை இழக்கத்தொடங்கியது.அன்று தொடங்கியது வடமொழிபால் அரசியல் பகைமை .

                  அரசியல் சமயம் கல்வித்துறை போன்றவற்றின் உயர் நிலையில் வடமொழி தன்னுடைய இடத்தை உறுதிப் படுத்திக் கொண்டபோது தமிழ் தீண்டத்தகாததாக இறைவன் சந்நிதிக்கும்  கோபுரத்திற்கும் வெளியே நிற்க வேண்டியதாயிற்று.இதனால் புண்பட்ட தமிழ் நெஞ்சம் கொஞ்சம் புராணக் கதைகளிலும் புராணக் கதைகளிலும்  தமிழைத் தக்க வைத்துக் கொண்டு ஆறுதல் கொண்டது.

       தமிழர் இலக்கியமும் கலையும் ஓரளவு தமிழில் வெளிப்படப் பெரும்பாலான அறிவுப் படைப்புகள் வடமொழியில் வெளிப்போந்தன.எனவே வடமொழி வல்லாண்மையை எதிர்க்கும் போது நாமே வடமொழியில் தேடிவைத்த அறிவுச் செல்வங்களை நாம் வடமொழியிலிருந்து பெற்றதுதானே என்று எள்ளி நகையாடுவதும் அவை எமதல்ல என்று அவற்றைப் புறக்கணிப்பதும் அறிவார்ந்த செயல்கள் அல்ல.இது ஒநாயும் ஆட்டுக் குட்டியும் என்ற ஈசாப்புக் கதையை நினைவூட்டுகிறது.அங்கே ஆற்றின் மேல் பக்கம் நிற்கிற ஓநாய் கீழே நிற்கிற ஆட்டுக் குட்டிதான் நீரைக் கலக்கியது என்று குற்றம் சாட்டிக் கபளீகரம் செய்த ஒநாய்த்தந்திரம்தான் வடமொழிப் பற்றாளர் செயல்கள்.

                  வடமொழி தமிழ் உறவில் கவனம் பெறவேண்டிய ஒரு செய்தியை இங்கே குறிப்பிடலாம்.வடமொழி பொது இணைப்புமொழியாக  அறிவுத்துறை அரசியல் துறை முதலியவற்றில் வளர்ச்சி பெற்றபோது ஏற்பட்ட இருமொழியச் சூழலில் வட மொழியின் பாதிப்பிற்கு உள்ளாகாத மொழிகளே இல்லை ,தமிழ்தான் அதை எல்லாம் எதிர்த்து நின்று தாக்குப்பிடித்துத் தன் தனித்தன்மையை இயன்ற மட்டிலும் காத்துக் கொண்டது.தமிழின் இந்த அரிய பண்பாட்டுத் வீறை ஆராய்கிற வெளிநாட்டு அறிஞர்களும் நம் நாட்டுப் பிறமொழி அறிஞர்களும்  தமிழின் இந்த வீறார்ந்த தனித் தன்மையை இனங்கண்டு பாராட்டாமல் இருப்பதில்லை.இதுவே தமிழின் பெருமை பேசும் நமக்குச் சிலவேளை நல்ல டானிக்கு போல அமைந்துவிடுவது உண்டு.
                  வடமொழி எல்லா நாட்டினருக்கும் எல்லாச் சமயதினர்க்கும் எல்லா மக்களுக்கும் உரிய மொழியாக இருப்பினும்அந்தண இனம் அதில் ஆதிக்கம் செலுத்தியதால் வடமொழிக்கு அவர்கள் தான் தொண்டு செய்தார்கள் என்பது சரியன்று.பிற்காலப் பௌத்தரும் சமணரும் வடமொழியை வளர்த்த வரலாறு எல்லாருக்கும் தெரியும்.சிற்ப நூல்கள் மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதியவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லர்.தமிழில் வடமொழி இலக்கணத்தையும் சேர்த்துச் சொன்ன புத்தமித்திரர் அந்தணர் அல்லர்.அந்நூல் ஒருவகையில் வடமொழியைப் பேணிய வைதிகர் அல்லாத வழியினரின் முயற்சி என்பதைப் பார்க்கும் போது வடமொழி வழியினராக  தமிழில்  அந்தணர் அல்லாதாரும் முன்னின்றனர் என்பதை உணரமுடியும்.பிற்கால வைதிகரான சுப்பிரமணிய தீக்கிதர் வீரசோழியத்தைப் புறக்கணத்திருப்பது கூட இக்காரணத்தால் இருக்கலாம்.கம்பன் வடமொழி வழியான  இராம காவியத்தை எழுதும்போது அது கூட அந்தணர் அல்லாதவர் முயற்சி அல்லவா? பௌராணிகக் குப்பையும் அறிவுக்குப் பொருந்தாத சமுதாயச் சிந்தனைகளும் மட்டுமின்றி அவற்றை எல்லாம் எதிர்க்கிற வச்சிர சூசி போன்ற நூல்களும் அரிய அறிவியல் கணக்கு நூல்களும் உலகாயதம் முதலிய பகுத்தறிவுச் சிந்தனைகளும் வடமொழியில் உள்ளன என்பதை நாம் மறக்கக் கூடாது.
                  எனவே தமிழர்கள் வடமொழியைப் புறக்கணித்து நாமே அம்மொழியில் எழுதிவைத்த அறிவுச் செல்வங்களை இழக்க வேண்டாம்.கேரளத்தில் நாராயணகுரு தாழ்த்தப்பட்ட மக்கள் வடமொழி கற்றுத் தம் நிலையை உயர்த்த வேண்டும் என்று கூறி அவரே அதற்கு முன்மாதிரியாக இருந்தார்.தமிழ் நாட்டில் அக்காலச் சூழலில் அத்தகைய நிலைப்பாடு செல்லுபடியாகாமற் போய்விட்டது.ஆனால் இப்போது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வடமொழியை நாம் அதன் சமய சமுகச் சுரண்டல் நிலையிருந்துவிடுவித்து அதை ஒரு  சமயச் சமுதாயச்  சார்பற்ற மொழியாக்கிக் கற்க வேண்டும்.ஆங்கிலேயர் முதலிய பன்னாட்டவர் அதை இந்திய அறிவுச் செல்வத்தின் பெட்டகமாகக் கருதிக் கற்பதைப் போல பிராமணர் அல்லாத  தமிழர்களும் கற்றுத் தேர்ந்து அம்மொழியிலுள்ள அளவற்ற அறிவுச் செல்வங்களை மீண்டும் திட்டமிட்டுத் தமிழுக்குக் கொண்டு வரவேண்டும். அக்காலத்தில்  நம் சிற்பிகளும் மருத்துவர்களும் பிறரும் வடமொழியைக் கற்றதைப் போலக் கற்க வேண்டும்.அக்காலத் தமிழர் தமிழ் மொழிப் பற்றின்றிச் செய்த பிழைகளை ஈடுகட்ட இதுவே சரியான தருணம்.வடமொழியை ஒரு சாதியார் சொத்து என்பதிலிருந்து மீட்டு அதைப் பொதுவாக்குவதே வடமொழி வல்லாண்மை எதிர்கொள்ள நல்ல வழி என்று தோன்றுகிறது. அப்போது நடுநிலையாக நடக்கப் போகும் ஆய்வுகள் வழி ரிக்வேதத்தில் சொற்களைக் கண்டுபிடித்ததைப்போலப் பல வடமொழிச் சொற்கள் சொற்பொருள் போன்றவை வடமொழி தமிழிலிருந்து பெற்ற கடனாட்சியால் விளைந்தவை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். தமிழ்ப் பெரிய புராணம் திருவிளையாடல் போன்றவற்றைத் தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் வடமொழி மூலம் என்று தலை கீழாக வடமொழி வாணர்கள் பேசுவது வேடிக்கையானது என்று முனைவர் நாகசாமி போன்றவர்களே சுட்டிக் காட்டுவது போல இன்னும் பலவற்றைக் கண்டுபிடிக்க முடியும்.குறிப்பாகத் தமிழறிஞர்களும் வடமொழி அறிவு பெற்று இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் தமிழாய்வும் வளம் பெறும்.இது தொடர்பாக வேறொரு சூழலில் உரைத்த கருத்தை இங்கு நினைவூட்டி இவ்வுரையை நிறைவு செய்யலாம்.

இன்றைய தமிழ் இலக்கியக் கல்வியில் பழந்தமிழ் இலக்கியக் கோட்பாடு திறனாய்வு போன்றவற்றை உணரத் தொல்காப்பியம் முதலிய நூல்களின் பொருளிலக்கணம் காரிகை தண்டி முதலியன பாடமாக உள்ளன.தற்கால மேலை இலக்கியத் திறனாய்வு முறைகளைக் கற்கத் தனி இலக்கியத் திறனாய்வுப் பாடம் உள்ளது.ஆனால் தமிழ் இலக்கியத்திறனாய்வு முறைகளுக்கு இணையாகவும் விஞ்சியும் வளர்ந்திருந்த வடமொழித்திறனாய்வு முறைகள் பற்றிய பாடம் தமிழ் மாணவர்களுக்கு இல்லை.ஏனைய இந்திய மொழி மாணவர்கள் தமிழ் மாணவர்கள் கற்கும் தமிழ் இலக்கியத் திறனாய்வுக்கு இணையாக வடமொழி இலக்கியத்திறனாய்பு முறைகளையும் பின் மேலை இலக்கியத்திறனாய்வு முறைகளையும் கற்கிறார்கள்.தமிழ் மாணவர்கள் தமிழ் மேலை இலக்கியத்திறனாய்வு முறைகளுடன் வடமொழி இலக்கியத்திறனாய்வு முறைகள் பற்றிய பாடத்தையும் தனித் தாளாகவோ இலக்கியத்திறனாய்வின் பகுதியாகவோ கற்க வேண்டும்.இதை இளங்கலை முதுகலை முதுமுனைவர் என்ற நிலையில் தக்கபடி பிரித்து வைக்கலாம்.இப்படிக் கற்றாலேயே தமிழ் மாணவர்கள் பிற இந்திய இலக்கியத்திறனாய்வாளர்களுடன் தொனி ரசம் அலங்காரம்,ரீதி ஔசித்தியம்(பொருத்தம்)போன்றவற்றைத் தமிழ் உள்ளுறை இறைச்சி போன்றவற்றுடன் ஒப்பிட்டு  ஆராயவும் உரையாடல்கள் நிகழ்த்தவும் இயலும்.இதுபோன்றே பிற இந்திய இலக்கிய மாணவர்களும் இந்திய  இலக்கியத்திறனாய்வு முறை பற்றிய பாடத்திலோ  மேலை இலக்கியத்திறனாய்வு  பற்றிய பாடத்திலோ  வடமொழிக்கு இணையாக வேறுபட விளங்கிய தமிழ்த் திறனாய்வு முறைகளையும் கற்கும்படி பாடத்திட்டம் அமைக்கவேண்டும்.‘

( மணற்கேணி ஆய்வரங்கில் விவாதிப்பதற்காக பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்கள் அனுப்பியுள்ள குறிப்பு


No comments:

Post a Comment