Friday, September 28, 2012

காவிரி என்று ஒரு நதி இருந்தது - ரவிக்குமார்



வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி இன்று வறண்டு கிடக்கிறது. தமிழகத்தின் நெற் களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாகிவிட்டன. குறுவை சாகுபடி இல்லை, இப்போது சம்பாவும் காய்கிறது.

அண்மையில் பிரதமர் தலைமையில் கூடிய காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் செப்டம்பர் 20ம் தேதியிலிருந்து அக்டோபர் 15ம் தேதி வரை நாளொன்றுக்கு தமிழ்நாட்டுக்கு இரண்டு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டார். அதை கர்னாடகம் ஏற்கவில்லை. தினம் ஒன்பதாயிரம்  கன அடி தண்ணீரை  கர்னாடகம் திறந்துவிட வேண்டுமென்று பிரதமர் உத்தரவிட்டார். அதை கர்னாடக அரசு நிராகரித்தது. எனவே தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. பிரதமர் உத்தரவிட்டதுபோல் ஒன்பதாயிரம் கன அடி நீரைத் திறந்துவிடவேண்டும் என இப்போது உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதை கர்னாடகம் நிறைவேற்றுமா என்பது இனிமேல்தான் தெரியும்.

பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல. ஆனால், காவிரி நடுவர் மன்றம் நீதிமன்ற அதிகாரம் கொண்டது.  அது தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டுமென்று கூறியிருந்தது. 419 டி எம் சி எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் கர்னாடகா தரவேண்டியது 192 டி எம் சி மட்டுமே.மீதமுள்ள 227 டி எம் சி தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்பிடிப்புப் பகுதியிலிருந்து கிடைக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளதுகர்னாடகம், தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தரவேண்டிய நீரின் அளவையும் நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டில்  50, செப்டம்பரில் 40., அக்டோபரில் 22, நவம்பரில் 15., டிசம்பரில் 8, ஜனவரியில் 3, பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாடுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியது. ஆனால் இந்த அட்டவணைப்படி இதுவரை ஒரு ஆண்டுகூட கர்னாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை.

 காவிரிப் பிரச்சனை என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1807ல் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892ல் முதன் முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்படடது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அதுகுறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்

1910ல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்து மத்திய அரசிடம் மைசூர் அரசு பிரச்சனையைக் கொண்டு சென்றது. மைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த சிக்கலை விசாரிக்க கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தது.’’ மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என கிரிஃபின் தனது உத்தரவில் தெரிவித்தார்

கிரிஃபின் கூறியதை சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. மீண்டும் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டன. இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அது ஐம்பது ஆண்டுகள் மட்டும் நடைமுறையில் இருக்குமென்று தீர்மானித்தார்கள்மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபிறகு காவிரி சிக்கல் மேலும் தீவிரமடைந்தது

1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்கு சற்று முன்பு மத்திய அரசு ''காவிரி உண்மை அறியும் குழு'' ஒன்றை அமைத்தது. 1972ல் அக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் பின் வாங்கிக்கொண்டன. அதன் பிறகு 1990ல் மத்திய அரசு அமைத்தது தான் 'காவிரி நடுவர் மன்றம்' ஆகும்அது வழங்கிய இறுதித் தீர்ப்பையும்கூட கர்னாடகம் ஏற்கவில்லை. அதனால்தான் காவிரி சிக்கல் இன்றும் தொடர்கிறது.

தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று கர்னாடகத்தில் இருக்கும் இனவெறி

 அமைப்புகள் ஏற்கனவே போராட்டத்தில் குதித்திருக்கின்றன. அதற்குப் போட்டியாக

 தமிழகத்தில் உள்ள அமைப்புகளும் களமிறங்கலாம். தமிழகத்தின் நதிநீர் உரிமைக்கான

 போராட்டம் ஒருபோதும் அண்டை மாநில மக்களுக்கு எதிரான இனவெறியாக

 மாறிவிடக்கூடாது. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

 ( மணற்கேணி 14 ஆவது இதழில் இடம்பெற்றிருக்கும் தலையங்கம் )

1 comment:

  1. /// தினம் ஒன்பதாயிரம் கன அடி தண்ணீரை கர்னாடகம் திறந்துவிட வேண்டுமென்று பிரதமர் உத்தரவிட்டார். ///

    தினம் 9000 கன அடி என்பது தவறு. விநாடிக்கு 9000 கன அடி என்பதே சரி. நாம் (கடைசியாக) கேட்டது நாளுக்கு 1 டி.எம்.சி. இது விநாடிக்கு 11,574 கன அடி. பிரதமர் சமரசம் இதற்குச் சற்றே குறைவு.

    இது இருக்கட்டும். கர்நாடகா தண்ணீர் தராததுடன், அவ்வாறு விளைவித்த அரிசியை நம்மிடமே விற்கிறது. தமிழ்நாட்டில் நாம் கர்நாடகா பொன்னி அரிசி விற்பதையும், வாங்குவதையும் நிறுத்தவேண்டும். வன்முறை இல்லாமல், முதல்வர் வேண்டுகோள் விடுத்து வாலண்டரி முறையில் இதைச் செய்யவேண்டும்.

    சரவணன்

    ReplyDelete