Tuesday, September 25, 2012

‘சமஸ்கிருதம் திராவிட மொழியா?' - இந்திராபார்த்தசாரதி




                           

சில ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி,தட்சிணபிராகிருத்த்தோடு அதிக தொடர்பு கொண்ட மொழி மராத்தி. இந்தியவில் இருப்பவர்களில் பெரும்பான்மையோர் திராவிடர்கள்' என்று. அண்மையில் மாக்டொனால்ட் எழுதிய ‘சமஸ்கிருத மொழியின் வரலாற்றை'ப் படிக்கும்போது, நிமாடே கூறியது என் நினைவுக்கு வந்தது.

மாக்டொனால்ட் கூறுகிறார்:'  சமஸ்கிருதம், வேத காலத்தில் மொழி அறிஞர்களால் உருவாக்கப்பாட்டது. சமூக மரபுச் சட்டங்களை மக்கள் பின்பற்றுவதற்காகப் பாட்டுருவத்தில் உருவான செயற்கை மொழி சமஸ்கிருதம். ‘

அப்படியானால், அக்காலத்து மக்கள் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

சமஸ்கிருதம், இந்தோ-ஜெர்மானியக் குழுவைச் சார்ந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் ரிக் வேத காலத்திலேயே, சமஸ்கிருதத்துக்கும், ஜெர்மானிய மொழிகளுக்கும் அடிப்படை
வேறுபாடுகள் தோன்றிவிட்டன.'வேத காலத்திய மொழி(சம்ஸ்கிருதம்) இந்தியாவில் அப்பொழுது பேசப்பட்டிருக்கக் கூடிய மொழிகளோடு( ‘திராவிட மொழிகள்'?) இரண்டறக்
கலந்து பல புதிய வடிவங்களைப் பெற்று, இப்பண்பாட்டுக் கலப்பின் ஒரு குறியீட்டு மொழியாகி விட்டது' என்று பி.டி.சீனுவாச அய்யங்கார் ‘புராதன இந்தியாவில் வாழ்க்கை' என்ற ஆய்வு நூலில் கூறியுள்ளார். இந்தோ-ஜெர்மானிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்குமிடையே வாக்கிய அமைப்பு (Syntax) வேறுபாடுகளை ஊன்றிக் கவனிக்கும்போது இது தெளிவாக விளங்கும். வாக்கிய அமைப்பில் பெரும் பான்மையான இந்திய மொழிகள் அனைத்தும் ஒத்துக் காணப்படுகின்றன. மொழிபெயர்ப்பின் போது இது தெளிவாகப் புலப்படும்.

வளர்ச்சியுறாத குழு மொழிகளைப் பேசிய, இந்தியாவில் குடியேறிய சில ‘ஆரிய' இனங்கள்( ‘ஆரிய' என்ற  இனத்தைக் குறிக்கும் சொல்லாட்சியே பொருத்தமா என்று தெரியவில்லை. மொழி வேற்றுமைகளைக் குறிப்பதற்காக, ‘ஆரிய', ‘திராவிட' என்று சொற்களை குறிப்புச் சௌகரியத்துக்காக  உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார் மாக்ஸ்முல்லர்) இந்தியாவுக்கு வந்து, நாகரிகத்தில் முதிர்ச்சியுற்ற ‘திராவிட' இனங்களோடு (மறுபடியும் சொல்லாட்சிப் பொருத்தம் பற்றிய வினா எழுகின்றது!) கலந்துவிட்ட நிலையில் ஒரு புதிய பண்பாடு தோன்றியது. இதுதான் இந்தியக் கலாசாரம். இதில் எது ‘ஆரியம்', ‘எது திராவிடம்' என்று அறுதியிட்டுக் கூறுவது இயலாத காரியம்.

ஹிந்து மதம் என்று அறியப்படும் வைதிக நெறியில் காணப்படும் கடவுளர் அனைவரும் திராவிட வழிப்பாட்டு தெய்வங்களின் வெவ்வேறு வடிவங்கள் என்ற ஒரு கருத்தும் காணப்படுகின்றது.'சவிதா', ‘பூஷா', ‘வாயு', ‘சூரியன்', ‘உஷா', ‘சோமா', ‘எமன்', ‘வருணன்', ‘ருத்ரன்', ‘அதிதி', பிரஹஸ்பதி', பிராஜபதி' போன்ற பல வேதகாலத்திய, தெய்வங்களுக்கும், இந்தோ- ஜெர்மானிய இனங்களில் காணப்படும் பழைய கடவுளர்க்கும் எந்த விதமான ஒற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மண்ணில் இந்த தெய்வங்கள் உருவானதற்குப் பண்பாட்டுக் கலப்புதான் காரணம் என்று சொல்லலாம்.

‘விஷ்ணு' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இதற்குத் திருப்திகரமான வேர்ச் சொல் சமஸ்கிருதத்தில் இல்லை.' விண்' என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது ‘விட்டுணு'(‘பரிபாடல்') ‘விண்' என்றால் வானம். வானத்தின் நிறம் நீலம். விஷ்ணுவின் நிறம்
நீலம்' அல்லது'கறுப்பு'. வானம் எனும்போது அது வெளியை (‘Space')க் குறிக்கும். விஷ்ணுவின் அவதாரம் ஒன்று அகிலத்தை அளந்து எல்லையற்ற வெளியைப் போல் விரிகின்றது.( வாமனாவதாரம்> திருவிக்ரமாவதாரம். அணு>அகண்டப் பெருவெளி).
‘சிவம்' என்றால் ‘செம்மை' அதாவது ‘ருத்ரன்'(‘செம்மை'). இமயந்தொட்டுக் குமரிமட்டும்
இவ்வின கலப்பில் உருவான கடவுளரைத் தாம் நான் காண்கின்றோம்.

வரலாற்றுக் காலத்துக்கு முன்பே இந்தியாவுக்குச் சில இந்தோ-ஜெர்மானிய இனங்கள் வந்திருக்கக்கூடும். அவர்களுக்கும், அப்பொழுது இந்தியாவிலிருந்த பூர்வக் குடிமக்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல்களினாலும் உடன்பாடுகளினாலும் உருவானதுதான் இந்தியக் கலாசாரம். இக்கலாசாரத்தில் பூர்வ இந்தியக் கலாசாரத்தின்
கூறுகள்தாம் அதிகம் தெரிகின்றன. இதை ஹிந்து மதம் என்று அழைப்பதே சொல்லாட்சிப் பிழை. இது ஒரு வகையான வாழ்க்கை நெறி.

‘ஆரியம்' என்று அழைக்கப்படுகின்ற ‘இந்தோ-ஜெர்மானியப் பண்பாடு அதிகம் இல்லை என்பதற்குக் காரணங்கள்:(1) பூர்வகுடி தெய்வங்களின்(திருமால், சிவன், முருகன், கிருஷ்ணன் போன்றோர்) மேலாண்மை. ரிக் வேத காலத்து இந்திரனை ஏன் வழிபடவேண்டும் என்று ஆயர்களைக் கிருஷ்ணன் கேட்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும்.(2)இயற்கைப் பொருள்கள் (மரம், கல், மிருகங்கள், பறவைகள், நதிகள், மலைகள் ஆகியவை) வழிபடும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாக்டொனால்ட் கூறுகிறார்:' இந்தியாவில் மட்டும் நயாக்ரா நீர்வீழ்ச்சி இருந்திருந்தால், அது ஒரு சுற்றுலா இடமாக அல்லாமல் ஒரு மாபெரும் வழிபாட்டு ஸ்தலமாக ஆகியிருக்கும்!

இந்தக் கலாசாரப் பின்னணியில் பார்க்கும் போது, சமஸ்கிருதம், இந்தோ-ஜெர்மானிய மொழிகளின் பிரிவில் அடங்கிய ஒரு மொழியா என்பது ஒரு நியாயமானக் கேள்வியாகப் படுகிறது.



1 comment:

  1. I am afraid the entire discussion has been constructed in a half-baked manner. Sanskrit? Which Sanskrit? Vedic Sanskrit or the so called Classical Sanskrit? What do you mean by Sanskrit is a Dravidian Language? Do you mean Linguistically or culturally? Speaking of similarities there are a few elephants in the bedroom which you seem to have missed. What about similarities between Persian mythology and Indian one? What about Greek myths? The Indo-European group of languages comprises close to 450 languages and the Germanic languages are but a few of them.
    Sanskrit (both varieties) is not a stand-alone language. It must have borrowed from every spoken language of India, but to proceed from here to the conclusion that Sanskrit is a Dravidian Language is a bit far fetched.
    P A Krishnan

    ReplyDelete