Friday, August 8, 2014

உடுமலை நாட்கள்: ஜம் ஜம் ஸ்டுடியோ ஹக்கிம்



இன்று காலையிலிருந்து ஏனோ உடுமலைப்பேட்டையில் நான் தங்கியிருந்த நாட்கள் நினைவில் நிழலாடிக்கொண்டே இருக்கின்றன. 1983 இன் பிற்பகுதியிலிருந்து 1985 ஏப்ரல் வரை நான் உடுமலைப்பேட்டையில் தங்கியிருந்தேன். அங்கிருந்து பெதப்பம்பட்டி வழியாக ஆனைக்கடவு என்றும் ராமச்சந்திராபுரம் என்றும் அழைக்கப்படும் ஒரு சிறு கிராமத்தில் இருந்த நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் எனக்கு வேலை. தினமும் பேருந்துப் பயணம். ஒரு டவுன் பஸ்ஸும் அஜீஸ் என்ற தனியார் பஸ் ஒன்றும் தான் அந்த ஊருக்குப் போகும். அந்தப் பேருந்துகளின் ஓட்டுனர்கள் பொறுமைசாலிகள். 23 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். 


வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கென்று உடுமலையில் ஒரு லாட்ஜ் இருந்தது. முதலில் ஒரு மாதம் அங்குதான் தங்கியிருந்தேன். அப்போது இரவில் சாப்பிடுவதற்காக செட்டிநாடு மெஸ் ஒன்றுக்குப் போவேன். கூட்டம் நெரியும் அந்த மெஸ்ஸில் இடம் கிடைப்பது அத்தனை எளிதாக இருக்காது. அப்போதெல்லாம் அந்த மெஸ்ஸை ஒட்டி இருக்கும் ஸ்டுடியோ ஒன்றின் வாசலில் காத்திருப்பேன். அப்படிக் காத்துக்கொண்டிருந்த ஒரு இரவில் ஸ்டுடியோவுக்குள்ளிருந்து இலக்கியம் குறித்த உரையாடல் அதில் ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்' குறித்த விவாதம். பசி மறந்து ஸ்டுடியோவுக்குள் போனேன். மூன்று நான்குபேர் நான் நுழைந்ததைக்கூடப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். சற்று நேரம் கழிந்த பின்னர் ஒரு அந்நியனின் இருப்பு உறுத்திய பாவனையில் ஒருத்தர் என்னை நோக்கிக் கேட்டார் " என்னங்க போட்டோ எடுக்கணுமா?" நான் இல்லை என்பதுபோல தலையாட்டினேன். " மெஸ்ல சாப்ட வந்தேன். நீங்க பேசிக்கிட்டிருந்தது சுவாரஸ்யமா இருந்தது" என்றேன். 'உட்காருங்க'என்று சொல்லிவிட்டு அவர்கள் மீண்டும் தங்கள் பேச்சைத் தொடர ஆரம்பித்துவிட்டார்கள். ஆதவன் காட்டும் உலகம் எனக்கு அன்னியப்பட்டதாகத் தோன்றினாலும் அவரது பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் எனக்கு நெருக்கமாய் இருப்பதாக உணர்ந்திருக்கிறேன். அதை அவர்களிடம் பகிர்ந்துகொண்டதும்   அவர்களது உரையாடலுக்குள் நானும் மூழ்கிப்போனதும் எப்படி நடந்ததென்று தெரியவில்லை. மெஸ்ஸை மூடப்போகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதுதான் மீண்டும் பசியெடுத்தது. நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் ஸ்டுடியோவை மூடிவிட்டு அவர்கள் காத்திருந்தார்கள். அதன்பின்னர் ஒவ்வொருவராக என்னுடன் அறிமுகம் செய்துகொண்டார்கள். மோகன், செல்லமுத்து, அலிப், பார்த்தசாரதி, ஹக்கிம். அந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் தான் ஹக்கிம். 


சிதம்பரத்தைப்பற்றியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப்பற்றியும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்.ஆனால்,  பிஏபிஎல் படித்துவிட்டு வங்கியில் குமாஸ்தாவாக இருக்கும் ஒரு நபர் " வக்கீல் தொழில் உனக்கு சரியா வராது. வேலைக்குப் போயிடுன்னுன்னு என் ப்ரொஃபசர் சொன்னார்" என்று அதற்குக் காரணம் சொன்னால் கேட்பவர்களுக்கு வினோதமாகத்தானே இருக்கும். அந்த வினோதம்தான் என்னை நோக்கி அவர்களை ஈர்த்திருக்கவேண்டும். நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அதன்பிறகு, ஒரு நாளென்றால் நண்பர்களோடு கழியும் அந்த மாலை நேரம் மட்டும்தான் என்று எனக்கு ஆகிப்போனது. 


ஹக்கிம் ஒரு ஸ்டுடியோ உரிமையாளர் மட்டுமல்ல, நல்ல புகைப்படக் கலைஞர். கலர் போட்டோ அவ்வளவாகப் பிரபலம் ஆகாத காலம் அது. அவர் எடுக்கும் கறுப்பு வெள்ளைப் படங்கள் அற்புதமாக இருக்கும். ஒருமுறை திருமூர்த்தி மலைக்குச் சென்று போட்டோ எடுத்துக்கொண்டோம். அவற்றைப் பிரிண்ட் போடும்போது நானும் டார்க் ரூமில் அவரோடு இருந்து அலச அலச படம் உருப்பெறும் அதிசய கணத்தை அனுபவித்தேன். 


ஹக்கிம் ஒரு எழுத்தாளரைப் பற்றிப் பேசினால் அவர்மீது நமக்கு பக்தி வந்துவிடும். அவர் ஒரு புத்தகத்தைப் பற்றி சொன்னால் அதைப் படிக்காமல் இருப்பதைப்பற்றிய குற்ற உணர்வு உண்டாகிவிடும். 


உடுமலைப் பேட்டையிலிருந்த எங்கள் நண்பர்கள் குழுவில் ஹக்கிம் தான் மூத்தவர். ஒடிசலான உயரமான உருவம். பெரிய ஃப்ரேம் கண்ணாடி. எப்போதும் புகையும் சிகரெட். கண்ணியமான சிரிப்பு தவழும் முகம். அவர் நடத்திவந்த ஸ்டுடியோவின் வருமானத்தின்மூலம் வறுமையைத் துரத்தமுடியாத அளவுக்குப் பெரிய குடும்பம்.


உடுமலை நண்பர்களோடு கழித்த மாலைப் பொழுதுகள் மறக்க முடியாதவை. தாஜ் ஹோட்டலின் சிக்கன் சூப், தளி ரோட்டில் விற்கும் மசால் பொறி- எதுவும் மறக்கவில்லை. கல்பனா தியேட்டருக்கு முன்னாலிருக்கும் கிரவுண்டில்  அடித்த காற்றை இந்த கணத்தில் என் முகத்தில் உணர்கிறேன். 


1985 இல் உடுமலையைவிட்டு வரும்போது அவ்வப்போது அங்கே போகவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஒரு சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை. ஹக்கிமையும் மோகனையும் பார்ப்பதற்காகவே உடுமலைக்குப் போகவேண்டும். திஜாவையும் ஆதவனையும் பற்றிப்பேச என்னைப்போலவே அவர்களிடமும் விஷயங்கள் மிச்சமிருக்கும். 

No comments:

Post a Comment