சிதைவுகளிலிருந்து பாடுகிறோம்
( மஹ்மூத் தர்வீஷுக்கு)
- கே. சச்சிதானந்தன்
தமிழில்: ரவிக்குமார்
நாடாக இருந்தாய்
புகையாகிப் போனாய்
- மஹ்மூத் தர்வீஷ்
சிதைவுகளுக்கிடையிலிருந்து பாடுகிறேன்
வாழ்வின் பாடலை
பாலையில் பாடுகிறேன்
மழையின் பாடலை
ரொட்டிக்காகக் கைகளை நீட்டினோம்
துப்பாக்கிக் குண்டுகளைக் கொடுத்தார்கள்
மலர்களுக்காக நீட்டிய கைகளில் கத்திகளைத் தந்தார்கள்
எங்கள் நாட்டைக் கேட்டு கைகளை ஏந்தினோம்
எங்களைக் குருதியில் தள்ளினார்கள்
நாங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கிறோம்
புலப்படாததையும் பார்க்கிறோம்
அலிபாபா மந்திரத்தை மறந்தான்
குகை மூடியே கிடக்கிறது
அலாவுதின் விளக்கில் பூதம் எதுவுமில்லை
ஷெராஸட் கதைகள் தீர்ந்துபோன தன் தலையை
சுல்தானின் வெறிகொண்ட வாளுக்கு சமர்ப்பிக்கின்றாள்
அடிமைகளின் விலங்குகளால் வானையும் பூமியையும் அளக்கிறோம்
சிலுவையால் நிலத்தை உழுகிறோம்
ஆலிவ் மரங்கள் கூறுகின்றன
கொடுமையான யுத்தங்களின் கதைகளை
கோதுமை வயல்களில் விளைகின்றன கண்ணிவெடிகள்
செடார் மரங்கள் பகையோடு பார்க்கின்றன
திராட்சைகளைப் பிழிந்தால்
ரத்தம் சொட்டுகிறது
புராணங்களின் நாட்டுப்புறக் கதைகளின் மௌனம்
நாம் மூர்ச்சையாகும்வரை நமது நெஞ்சில் அடர்கின்றன
வறண்ட நதிகளின்
மண்ணும் சேறும் நமது நரம்புகளில் நிறைக்கின்றன
காணாமல் போய்விட்ட நமது வீடுகளின் முற்றங்களும் சுவர்களும் நமது எலும்பு மஜ்ஜையில் மிதக்கின்றன
குழந்தைகளைக் கேளுங்கள்
எங்கே அவர்களது வீடுகளென்று
மழையாகப் பொழிந்துவிடாத
இடி திருடப்பட்டுஊமையாகிப்போன
மின்னல்வெட்டும்
மேகங்களுக்கிடையில் இருப்பதாக வானத்தைக் காட்டுவார்கள்
கள்ளிச் செடியிடம் சூரியனைப் பற்றிக் கேட்டோம்
அவை கிசு கிசுத்தன ' அஸ்ஸிரியா பாபிலோனியா சுமேரியா '
சோளச் செடியிடம் சொர்க்கத்தைப்பற்றிக் கேட்டோம் அவை பனியில் புதைந்த வானம்பாடிகளின் பாடலைப் பற்றிப் பேசின
மரங்கள் எங்களைப் பித்துப்பிடிக்கச் செய்தன
நாம் எடுத்துக்கொண்டோம்
ஒரு கிளையை வரவேற்பறைக்கு ஒரு கிளையை கட்டிலுக்கு
பாலை மணலில்
காற்று எழுதிய ஆரூடத்தை நாம் படிக்க முயன்றோம்
சூரியக் கடவுளே
நாங்கள் எப்போது உனது ஆலயத்தை எழுப்புவது?
எங்கள் பிள்ளைகள் தமது களிமண்ணால் தண்ணீரால் எப்போது உன்னை வனைவது?
தினந்தோறும் பிரசவ வலியில் துடிக்கும் எமது பெண்கள்
சவுக்குகளின் சங்கிலிகளின் அடையாளங்களில்லாத குழந்தைகளை எப்போது பிரசவிப்பார்கள்?
No comments:
Post a Comment