Sunday, August 31, 2014

பள்ளிப் பருவம்



பள்ளிப் பருவம் நூலுக்கு ரவிக்குமார் எழுதிய பதிப்புரை:



பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பெற்றோர்கூடத் தம் பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறவேண்டும் என விரும்புகிற காலம் இது. அதனால்தான் ஆட்சியாளர்கள் ‘சமச்சீர் கல்வி’யைப் பற்றி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக, பொருளாதார பாகுபாடுகளைப் பள்ளிகளுக்குள் அனுமதித்துக்கொண்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல்,  பாடத் திட்டங்களை மட்டும்  ஒரேமாதிரியாக அமைத்துவிட்டால் கல்வியில் சமத்துவம் வந்துவிடும் எனக் கூறுவது கல்வியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மறைப்பதற்கானதொரு தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும்.தமிழ்நாட்டில், ‘சமச்சீர் கல்வி’ குறித்த கல்வியாளர்களின் பேச்சுகள்கூட பாடத் திட்டங்களைத் தாண்டிச் செல்லாதது நமது துரதிர்ஷ்டம்.  

குடும்பம் என்கிற நுண்அமைப்புக்கும் அரசு என்ற பேரமைப்புக்கும் உள்ள தொடர்புகளைப் பல்வேறு சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதுபோலவே கல்விக்கும் அதிகாரத்துக்குமான உள்ளிணைப்புகளும் அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  

” ஏற்றத்தாழ்வுகளை  நியாயப்படுத்தும் இடமாகப் பள்ளி இருக்கிறது” என ஃப்ரான்சு நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர் பியர் பூர்தியூ குறிப்பிட்டது இந்தியச் சூழலுக்கு மிகவும் பொருந்தும். “ நிஜத்தின் ஏற்றத்தாழ்வுகளை தரத்தின் ஏற்றத்தாழ்வுகளாகப் பள்ளி உருமாற்றுகிறது ” என அவர் குறிப்பிட்டார். “ அதை நாம் நமது கல்விச் சூழலில் வைத்து ஆராயமுடியும். 

கவிஞர் ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, .ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, . பஞ்சாங்கம் -ஆகிய ஆறு ஆளுமைகள் தமது பள்ளிப் பருவம் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள்  கொண்ட இந்த நூலின் மூலமாகத் தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளில் பள்ளிக் கல்வி எப்படியெல்லாம் உருமாறி வந்திருக்கிறது  என்பதையும்; அக்காலத்தில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, ராஜபாளையம், விருத்தாசலம் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வாழ்க்கை நிலைகளையும் அறியலாம். பள்ளியில்/கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள்/ பணியாற்றிவருபவர்கள் தமது பள்ளிப் பருவத்தை நினைவுகூர்ந்து எழுதிய இந்தக் கட்டுரைகள் மணற்கேணி இதழில் அவ்வப்போது வெளியிடப்பட்டவையாகும்.

 நுண்ணுணர்வுகொண்ட வாசகர் எவரும், தன்வரலாறுகளாகத் தோற்றம் தரும் இக்கட்டுரைகளைத்  தமிழக வரலாற்றின் பகுதிகளாகவும்,  அரசு, சமூக ஆதிக்கம் குறித்த ஆய்வுகளின் அங்கமாகவும் விரிவுபடுத்திப் பார்க்கமுடியும். 

சமத்துவக் கல்வியை வலியுறுத்தும் நோக்கில் ‘நிகரி – சமத்துவ ஆசிரியர்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவரும் மணற்கேணி, கல்வி குறித்த நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. அதன் துவக்கமே இந்தத் தொகுப்பு.
- ரவிக்குமார்
31.08.2014

No comments:

Post a Comment