1. பாவப்பட்டவள்
உனக்குக் கிடைத்திருக்கிறாள் இன்னொரு காதலி
எனக்குத் தெரியும்
என்னைப்போலவே உன்னை வணங்குபவள்
உனது சொற்களைத் தங்கமாக நினைத்துத் தாங்குபவள்
உனது ஆன்மாவைப் புரிந்துகொண்டதாய் நினைத்திருப்பவள்
என்னைப்போலவே
ஒரு பாவப்பட்ட பெண்
நீ இன்னொரு இதயத்தை நொறுக்குகிறாய்
எனக்குத் தெரியும்
நான் செய்வதற்கு ஏதுமில்லை
அவளிடம் சொன்னால் தவறாக நினைப்பாள்
என்னைத்தான் விரட்டுவாள்
என்னைப்போலவே
ஒரு பாவப்பட்ட பெண்
நீ அவளையும் கைவிடுவாய்
எனக்குத் தெரியும்
எது உன்னைப் பிரித்ததென்று
அவளுக்குத் தெரியாது
அழுவாள் திகைப்பாள்
என்ன நேர்ந்ததென்று
அப்புறம்
அவளும் பாடத் தொடங்குவாள்
இந்தப் பாடலை
என்னைப்போலவே
பாவப்பட்ட பெண்
2. வெளிறிப்போன நாள்
வெளிறிக் கனத்துத் தொங்குகிறது
நீ இல்லாத நாள்
முள்முடியை கேசத்தால் நெய்த சட்டையை
அணிந்திருக்கிறேன்
எவரும் அறியார்
உன்னைப் பிரிந்திருக்கும்போது
தனித்திருக்கும் என் இதயத்தை
3. கடக்கும் காலம்
உன்னுடைய தோல் விடியலைப் போன்றது
என்னுடையது அந்தியைப் போன்றது
ஒன்று நிச்சயமான முடிவின் துவக்கம்
மற்றது உறுதியான துவக்கத்தின் முடிவு
No comments:
Post a Comment