=========
நகரங்களில் வாழ்வோரிடையே உடல் ஆரோக்கியம், உணவுமீதான அக்கறை, அதுகுறித்த விழிப்புணர்வு பெருகிவரும் காலம் இது. இதனால் நடைப்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை கூடிவருவது மட்டுமல்லாது ரசாயன உரம் பூச்சி மருந்து பயன்படுத்தாத ஆர்கானிக் காய்கறிகள்; இயற்கை வேளாண்மை செய்வோரின் எண்ணிக்கை; பழமுதிர் நிலையங்கள்; அருகம் புல் சாறு, சோற்றுக்கற்றாழை ஜூஸ், கேழ்வரகு கூழ் எனப் பல்வேறு விஷயங்களும் நகரங்களில் பெருகிவிட்டன.
திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியில் இருக்கும் செல்லம்மாள் மண்பாண்ட சமையல் உணவகம் இந்த 'ஆரோக்கிய விழிப்புணர்வுப் போக்கின்' தொடர்ச்சிதான் என்றாலும் புதுமையானது. டாமின் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திரு மோகன் என்பவர் தனது மனைவியின் பெயரில் அந்த சைவ உணவகத்தை நடத்துக்கிறார். எம்.எஸ்.சி ஜியாலஜி படித்தவர். எந்திரங்களைக் கையாண்டு அனுபவம் பெற்றவர். எண்ணெய் வாணிபம் செய்த குடும்பத்தின் பட்டறிவும் சேர்ந்து சிறப்பான முறையில் அந்த உணவகம் நடக்கிறது. 16 விதமான அரிசிகளை வெவ்வேறு இடங்களிலிருந்து தருவித்து சமைத்துத் தருகிறார்கள். சமைப்பது, பரிமாறுவது எல்லாமே மண் பாண்டங்கள்தான். விறகு அடுப்புகள், அம்மி, உரல் எல்லாவற்றையும் அவற்றின் தன்மை கெடாமல் எந்திரமயமாக்கியிருக்கிறார் மோகன்.
ஐந்தாறு வகை கீரைகள், ஏழெட்டுவிதமான பொறியல், வாழைப்பூ வடை சுட்ட அப்பளம், அவல் பாயாசம்- என வியக்க வைக்கும் உணவு வகைகள். ஆரோக்கியமென்றாலே அந்த உணவு ருசி இல்லாமல் பத்திய சாப்பாடுபோலத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை அந்த உணவகம் மாற்றுகிறது.
கீரை, பொறியல் ஒவ்வொன்றும் ஐந்து ரூபாய், குழம்பு பத்து ரூபாய், சாதம் இருபது ரூபாய். அறுபது ரூபாயில் அங்கே சாப்பிடக்கூடிய உணவு வகைகளை ஐநூறு கொடுத்தாலும் பிற ஓட்டல்களில் வாங்க முடியாது.
மதியம் 12.15 க்கு ஆரம்பித்து மூன்று மணியோடு விற்பனை முடிந்துவிடும், ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனை இல்லை. மோகனைத் தவிர மற்ற எல்லோருமே அங்கு பெண்கள்தான்.
திருச்சிக்குப் போக நேர்ந்தால் செல்லம்மாள் மண்பாண்ட சமையலை சாப்பிட மறக்காதீர்கள்.
No comments:
Post a Comment