Sunday, August 16, 2015

சமூக நீதியும் நீதித்துறையும்

நீதிபதி கே.சந்துருவின் முக்கியமான நூல்
- ரவிக்குமார் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~

Legal Profession and Appointment of Judges என்ற தலைப்பில் தனது நூல் ஒன்று வெளியாகியிருப்பதை நீதிபதி கே. சந்துரு சில நாட்களுக்கு முன் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். அமேஸான் இணையதளம் மூலம் வாங்குவதற்கு நினைத்திருந்தேன்.  நேற்று (15.08.2015) விழுப்புரம் கூட்டத்தில் சந்தித்தபோது அவரே ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார். 

நீதிபதி கே.சந்துருவின் ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்த நூல். நீதிபதிகள் நியமனத்தில் தற்போதிருக்கும் சிக்கல்களை, நீதித்துறையில் சமூகநீதி நிலைநாட்டப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தும் முக்கியமான கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. 

காலஞ்சென்ற நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். " சந்துருவை சிறுவனாக இருந்தபோதிலிருந்தே நான் அறிவேன். அடிப்படையில் அவர் ஒரு ஜனநாயகவாதி. வழக்கறிஞராக பாட்டாளிகளுக்கான சட்டங்களில் தேர்ந்து விளங்கியவர்; நீதிபதியாக சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு பொறுப்போடு நடந்துகொண்டவர்" என அவர் அந்த முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்றபின் உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராக தொழில் செய்திருக்கலாம். தீர்ப்பாயங்களில் பதவி வகித்திருக்கலாம். ஆனால் அவற்றை சந்துரு விரும்பவில்லை. தனது கருத்துகளின் மூலமாக சமூகத்தில் விவாதங்களை எழுப்பவேண்டும் என்பதையே அவர் விரும்பினார். அதை அவர் சிறப்புற செய்துகொண்டிருக்கிறார். 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் குறிப்பிட்ட சில சாதிகளை முன்னிறுத்திப் போராடியவர்களின் வாதம் பிழையானது என்பது குறித்து புள்ளிவிவரங்களோடு அவர் எழுதிய கட்டுரை பலரது கண்டனத்துக்கு உள்ளானது. எனினும் நடுநிலையோடு பார்ப்பவர்களுக்கு அதன் நியாயம் புரியும். 

வி.ஆர்.கிருஷ்ணய்யர், நீதிபதி அசோக்குமார் ஆகியோரைப்பற்றியும்; சென்னை உயர்நீதிமன்றம் குறித்தும் சந்துரு எழுதியிருக்கும் கட்டுரைகள் அரிய தகவல்களைத் தருகின்றன. Diversity and Judicial Appointments என்ற கட்டுரை தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய ஒன்று. 1950 முதல் 1989 வரையிலான காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்களில் 42.9% பிராமணர்கள்; 49.4% பிராமணரல்லாத உயர்சாதியினர்; பிற்படுத்தப்பட்டோர் 5.2% தாழ்த்தப்பட்டோர் 2.6% என்ற புள்ளிவிவரத்தை அதில் எடுத்துக்காட்டுகிறார். 

அதற்குப் பிறகும்கூட நிலைமை மாறிவிடவில்லை. அதனால்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும் collegium முறையை சரியென்று தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வும் , அதைக் கடுமையாக விமர்சித்த வி.ஆர்.கிருஷ்ணய்யரும் நீதித்துறையின் உயர்பதவிகளில் தாழ்த்தப்பட்டோரும் பழங்குடியினரும், பெண்களும் உரிய அளவில் இடம்பெறுவது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்கள். அதை சந்துரு தனது கட்டுரையில் மேற்கோள்காட்டி வழிமொழிகிறார். 

நீதித்துறை குறித்து ஆர்வமுள்ளவர்கள் மட்டுமின்றி சமூக மாற்றத்தை விரும்பும் அனைவருமே படிக்கவேண்டிய நூல் இது. 


பக்கங்கள்: 144
விலை: 225/- 
வெளியீடு : Lexlab, Thiruvananthapuram
தொலைபேசி: 0471-6888830

No comments:

Post a Comment