தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்று வருகிறது. ஆளும் கட்சியைத் தவிர பிற கட்சிகள் யாவும் இதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டின் அண்டையிலிருக்கும் புதுச்சேரியில் இந்தக் கோரிக்கை இன்னும் வலுவாக எழவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம், ஐக்கிய ஜனதா தளம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதலான ஒரு சில கட்சிகள் மட்டும் தான் இதைப்பற்றிப் பேசிவருகின்றன.
கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பலமுறை மதுவிலக்கு நடைமுறையில் இருந்திருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் மதுவிலக்கு குறித்த பேச்சுகூட எழுவதில்லை. புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு காலனிய அரசாங்கத்தினர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் சாராய ஆலையைத் திறந்து சாராயம் உற்பத்தி செய்துள்ளனர்.
" புதுச்சேரியில் தற்போது 654 மதுக்கடைகள் இருக்கின்றன. 130 சாராயக் கடைகளும் 129 கள்ளுக்கடைகளும் 395 IMFL மதுக்கடைகளும் உள்ளன. 1700 பேருக்கு ஒரு மதுக்கடை என்ற விகிதத்தில் மதுக்கடைகள் செயல்படுகின்றன" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்திய அளவில் அதிக அளவில் மது அருந்தப்படும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகப் புதுச்சேரி உள்ளது.
மதுப் பழக்கத்துக்கும் தற்கொலைக்கும் உள்ள தொடர்பைப் பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவிலேயே மிக அதிகமாகத் தற்கொலைகள் நிகழும் பகுதியாக புதுச்சேரி இருக்கிறது. தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமாக புதுச்சேரியில் தற்கொலைகள் நடக்கின்றன என NCRB புள்ளிவிவரம் கூறுகிறது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் 644 தற்கொலைகள் நடந்துள்ளன. இதற்கும் புதுச்சேரியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான மதுக்கடைகளுக்கும் நேரடியான தொடர்பிருப்பதை எவரும் மறுக்க முடியாது.
புதுச்சேரி மக்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதற்காக மட்டுமின்றி தமிழ்நாட்டில் மதுவிலக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும்கூட புதுச்சேரியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment