திரு சசிபெருமாள் அவர்களது இறுதி நிகழ்ச்சியில் அவருக்கு அஞ்சலி செலுத்தி நான் ஆற்றிய இரங்கலுரையின் சுருக்கம் :
==============
மது ஒழிப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை இழந்த அய்யா சசிபெருமாள் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருக்கிறார். பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் தமிழ்நாட்டு முதலமைச்சரை வீட்டில் போய் சந்தித்திருக்கிறார். இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட காலத்திலும் மதுக் கடைகளை அனுமதிக்காத மாநிலம் குஜராத். காந்திக்கு மரியாதை செய்வதற்காக அவர் பிறந்த குஜராத்தில் மதுக்கடைகளைத் திறப்பதில்லை. மது விற்பனையால் வரும் வருவாய் இல்லாமலேயே குஜராத் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லித்தான் மோடி தேர்தலில் வாக்கு கேட்டார் இன்று பிரதமராகவும் வந்துவிட்டார்.
தமிழ்நாட்டின் முதன்மையான சமூக அரசியல் பிரச்சனையாக மதுவிலக்கு மாறியிருக்கிறது என்பதை பிரதமரிடம் இன்று யாராவது கூறியிருக்கலாம். அதைக் கேட்டிருந்தால் மது விற்பனையால் வரும் வருமானம் இல்லாமலேயே குஜராத் மாநிலத்தில் தான் எப்படி ஆட்சி செய்தேன் என்பதை தமிழக முதல்வரிடத்தில் அவர் கூறியிருக்கலாம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி உதவி செய்யும் என்றும் வாக்களித்திருக்கலாம். ஏனென்றால் மதுவிலக்கு என்பது மாநிலப் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தேசியப் பிரச்சனை.
அரசியலமைப்புச் சட்டத்திலேயே மதுவிலக்கை தேசியக் கொள்கையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கினார்கள்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இரண்டு ஆணையங்களும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டவேண்டும் என்றுதான் பரிந்துரை செய்துள்ளன.
இப்போது தமிழ்நாட்டிலிருக்கும் பாஜக மதுக்கடைகளை மூடவேண்டும் எனப் போராடி வருகிறது. அதை வரவேற்கிறோம். அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை அவர்கள் உணர்வுபூர்வமாக அதை வலியுறுத்துகிறார். இங்கே அமர்ந்திருக்கும் அய்யா இலக்கியச்செல்வரின் மகளாக இருப்பதால் மற்றவர்களைவிடக் கூடுதலான அக்கறை அவருக்கு இருக்கும். அய்யா சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த மேடையிலிருந்து ஒரு வேண்டுகோளை அவரிடம் வைக்கிறேன். நீங்கள் உங்கள் தலைமையிடம் எடுத்துச் சொல்லுங்கள், உங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமரிடம் வலியுறுத்துங்கள். 'மது ஒழிப்பை தேசியக் கொள்கையாக அறிவியுங்கள்! மதுவிலக்கால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என அறிவியுங்கள்!' என பிரதமரிடம் வலியுறுத்துங்கள்.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அறிவிக்கவேண்டும். அது ஒன்றுதான் அய்யா சசிபெருமாள் அவர்களுக்குத் தமிழக அரசு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
No comments:
Post a Comment