Sunday, August 16, 2015

தொல்.திருமாவளவன்: தலித் மக்களின் ஒரு நூற்றாண்டுக் கனவு - ரவிக்குமார்





படிப்பறிவில்லாத மக்களுக்குக் கல்வியைத் தருவதைவிடவும் துணிவற்ற மக்களுக்குத் துணிவைத் தருவதே முக்கியமானது. ’எழுச்சித் தமிழர்’ என நம்மால் போற்றப்படும் தலைவர் திருமா அவர்களது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவரது சாதனைகளில்முதன்மையானது எது? என்று கேட்டால் தாழ்த்தப்பட்டு ‘சேரிக்காரர்கள்’ என்று இளக்காரமாகப் பேசப்பட்டிருந்த மக்களை கிளர்ந்தெழச் செய்து அவர்களை ‘சிறுத்தைகள்’ என்று மற்றவர்கள் இன்று அழைக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறாரே அதுதான் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை என்பேன்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை சொல்ல முற்படுகிற எல்லோருமே கல்வியின் மேன்மையை அவர்களுக்கு எடுத்துக்கூறத் தவறுவதில்லை. கல்வி இன்றியமையாததுதான். அதிலும் பொருளாதார வலிமை அற்ற தலித் மக்களுக்கு அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம். ஆனால் கல்வி அவர்களது சமூக இழிவைப் போக்கிவிடுமா என்று கேட்டால் அதற்கு எதிர்மறையாகவே நாம் பதிலளிக்கவேண்டியிருக்கிறது. கல்வியால் உயர்ந்த ஒருவருக்கான உதாரணமாக இருக்கும் அம்பேத்கர், அந்தக் கல்வி ஒருவர்மீது படிந்த சாதி என்னும் கறையைத் துடைக்கப் பயன்படாது என்பதற்கும் சான்றாக இருக்கிறார்.

இன்று தாழ்த்தப்பட்ட மக்களிடையே கல்வி கற்றவர்களின் விழுக்காடு எவ்வளவோ கூடியிருக்கிறது. அவர்கள் தமது முன்னோர்களைக்காட்டிலும் கூடுதலாக இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அந்தப் புரிதல் அவர்களின் போராட்ட குணத்தை அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் யதார்த்தமோ நேர்மாறாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து வந்தவர்கள் தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதிய இழிநிலையை அறிந்தும் அதை எதிர்த்துப் போராட முன்வராமல் தமது வாழ்க்கைப் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுப்பதைப் பார்க்கிறோம்.

அறிவு இந்த நாட்டில் சமூகநீதியைக்கொண்டுவருமா என்று ஆராய்ந்த அம்பேத்கர் அறிவும் சுயநலமும் முரண்படும்போது சுயநலம்தான் வெற்றிபெறுகிறது என்றார். ” அறிவின் ஆற்றலை நம்புகிற பகுத்தறிவாளர் அறிவின் மேம்பட்ட சக்தியால் அநீதி ஒழிக்கப்படும் என நம்புகிறார். மத்திய காலத்தில் சமூகத்தில் அநீதியும் மூடநம்பிக்கையும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டதாயிருந்தன.எனவே மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் அநீதியும் அழிந்துவிடும் என பகுத்தறிவாளர்கள் நம்பினார்கள்’ எனக் குறிப்பிட்ட அம்பேத்கர் ” இந்திய வரலாறும் சரி ஐரோப்பிய வரலாறும் சரி இந்தக் கரடுதட்டிப்போன கருத்தை ஆதரிப்பதாக இல்லை” என்றார். ஐரோப்பிய நாடுகளில் அநீதிக்கு அடிப்படையாக இருந்த மரபுகளும் மூடநம்பிக்கைகளும் ஒழிக்கப்பட்டுவிட்டபோதிலும் சமூகத்தில் அநீதி இருந்துகொண்டுதான் இருக்கிறது என எடுத்துக்காட்டிய அம்பேதகர் “ இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கே பார்ப்பனர்கள் எல்லோரும் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.ஆன்,பெண் குழந்தைகள் என அந்த சாதி முழுவதுமே கல்வியறிவு பெற்றுள்ளது.ஆனால் எததனை பார்ப்பனர்கள் தீண்டாமையை மறந்திருக்கிறார்கள்? எத்தனைபேர் தீண்டாமைக்கு எதிராகப் போராடுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்? எத்தனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக்கு எதிராகப் போராடும்போது அவர்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள்? சுருக்கமாகச் சொன்னால் எததனை பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களைத் தங்களுடையதாக நினைத்திருக்கிறார்கள்?” என்று கேட்டார். கல்வியும் அறிவு வளர்ச்சியும் ஏன் சமூக நீதியைக் கொண்டுவரவில்லை? ”அதற்கான விடை இதுதான்: ஒருவருடைய சுயநலத்தோடு முரண்படாதவரை அறிவு வேலை செய்யும். எப்போது சுயநலத்தோடு அது முரண்படுகிறதோ அப்போதே அறிவு தோற்றுவிடுகிறது” என்று விளக்கினார் அம்பேத்கர்.

கல்வி, அறிவு ஆகியவை குறித்த அம்பேத்கரின் இந்த விளக்கம் பார்ப்பனர்களுக்கு மட்டுமானதல்ல. அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பொருந்தக்கூடியதே. கல்வியும், அறிவும் படித்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னிலும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அந்த விழிப்புணர்வு அவர்களிடம் சமூக அநீதிகளுக்கு எதிரான போர்க்குணத்தை உருவாக்கவில்லை. மாறாக அவர்களை சுயநலமிகளாக மாற்றியிருக்கிறது. தமது நலன்களுக்காகக்கூடப் போராடமுன்வராத கோழைகளாக்கியிருக்கிறது. அவர்கள் தமது சுயநலத்தை மறைத்துக்கொள்ள தமது சமூகத்தையே கேவலமாகப் பேசவும், தமக்காகப் போராட முன்வரும் அரசியல் இயக்கங்களைக் கொச்சைப்படுத்தவும் அதன் தலைவர்களை இழிவுபடுத்தவும் முனைகின்றனர். இப்படி அந்நியப்பட்டுக் கிடக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் படிப்பாளி வர்க்கத்தைத் தாண்டித்தான் இன்று எந்தவொரு தலித் அரசியல் இயக்கமும் செயல்பட்டாகவேண்டிய நிலை உள்ளது. இந்தச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அவர்களை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்குவது எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதைப் புரிந்துகொள்ளும்போதுதான் தலைவர் திருமாவளவன் அவர்களின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.

இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் உணர்வோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டைமலை சீனிவாசனும்,பெரியசாமிப் புலவரும் முனைப்போடு பணியாற்றிய காலம் அது. திராவிட மகாஜனசபை (1891) ஆதி திராவிட மகாஜனசபை (1892) என இயக்கங்களை உருவாக்கி மாநாடுகள் பலவற்றை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அன்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் வைத்து அவற்றில் பலவற்றை வென்றெடுத்திருக்கிறார்கள். பறையன்,தமிழன் என பத்திரிகைகளை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறார்கள். அவர்களது பணிகள் பின்னர் எம்.சி.ராஜா, சிவஷண்முகம் பிள்ளை,சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி,சுவாமி சகஜாநந்தா எனப் பல்வேறு தலைவர்களால் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லப்பட்டன. நமது முன்னோடிகளான இந்தத் தலைவர்கள் பன்முக ஆற்றல் பெற்று விளங்கியபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி அவர்களை ஒரு அரசியல் சக்தியாக உருப்பெறச் செய்யவில்லை.

இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காக உழைத்த அம்பேத்கர் அரசியல் கட்சி ஒன்றின் தேவையை சரியாகவே உணர்ந்திருந்தார். இந்திய அரசு சட்டம் 1935 என புதிதாக ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி வழங்கிட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தபோது 1936 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ‘இண்டிபெண்டண்ட் லேபர் பார்ட்டி’ என்ற கட்சியை  அம்பேத்கர் துவக்கினார். 1937 ஆம் ஆண்டுநடைபெற்ற தேர்தலில் 17 வேட்பாளர்கள் அந்தக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டனர். அம்பேத்கரும் போட்டியிட்டார். அம்பேத்கரைத் தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மிகவும் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அம்பேத்கர் மாபெரும் வெற்றியைப் பெற்றார். இண்டிபெண்டன்ட் லேபர் பார்ட்டி சார்பில் நிறுத்தப்பட்ட 17 பேரில் 15பேர் வெற்றி பெற்றனர்.

அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒரு அரசியல் கட்சி வேண்டும் என்பதை உணர்ந்து  அம்பேத்கர் 1942 இல் துவக்கியதுதான் ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃ பெடரேஷன். அது 1946 இல் மாகாணங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டது. 51 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் 34 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களைக் கைப்பற்றியது. அது அகில இந்திய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அவர் பௌத்தத்தைத் தழுவியதற்குப் பின் உருவாக்கியதுதான் இந்தியக் குடியரசுக் கட்சி. அந்தக் கட்சியைத் துவக்கியதற்குப் பிறகு அவர் அதிக காலம் உயிர்வாழவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த தலித் தலைவர்களான ரெட்டைமலை சீனிவாசனும், என்.சிவராஜ் அவர்களும் அம்பேத்கரோடு இணைந்து பணியாற்றினார்களே தவிர அவர்கள் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசியல் கட்சி எதையும் துவக்கவில்லை. அம்பேதகரோடு முரண்பட்ட எம்.சி.ராஜாவும்கூட தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் சக்தியாக உருவாக்குவதில் வெற்றிபெறவில்லை. இந்தியாவிலேயே அரசியல் விழிப்புணர்வு பெற்றதாகவும், தனக்கென்று தனித்துவமான தலைவர்களைக் கொண்டதாகவும் இருந்த தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட சமூகம் தனக்கான அரசியல் அடையாளத்தை வலுவாக உருவாக்கிகொள்ளத் தவறிவிட்டது என்றே சொல்லவேண்டும். இந்தப் பின்னணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உருவாக்கத்தை மதிப்பிடவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தேர்தல் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் தனி சின்னத்தில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு இரண்டு உறுப்பினர்களை அனுப்பிவைத்தது. பாராளுமன்றத்திலும் 2009 இல் இடம்பிடித்தது. இது சுதந்திரத்துக்குப் பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் அதற்குமுன் நடைபெறாத ஒரு சாதனையாகும். அந்த சாதனையை நிகழ்த்திக்காட்டியவர் தலைவர் திருமாவளவன் ஆவார்.

அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும் சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல்மிக்கவர் என்றார் அம்பேத்கர். தலித் மக்களுக்காக அரசியல் கட்சியைத் தலைமையேற்று நடத்துவதென்பது ஒரு அரசியல்வாதியாக இருப்பவரால்மட்டுமே சாத்தியமானதல்ல. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தால்மட்டுமே அது சாத்தியம். ஏனென்றால் , தலித் மக்களுக்கான ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டிருக்க முடியாது. அது தலித் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யவும் அவர்களை அணிதிரட்டவும் அவர்களைப் போராட்ட களத்தில் ஈடுபடுத்தவும் வேண்டும். அதைத் தலைமையேற்று வழி நடத்துவதற்கு தலைமைப் பண்பு மட்டும் இருந்தால் போதாது. அவர் அறிவுத் தேர்ச்சியும் தொலைநோக்குப் பார்வையும் துறவு மனப்பான்மையும் கொண்டதொரு ஆளுமையாக இருக்கவேண்டும்.

வரலாற்றில் தனி மனிதனின் பாத்திரத்தை மார்க்சியம் அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. அது வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே பார்த்தது. ஆனால் வரலாற்றை முன்னோக்கிச் செலுத்துவதில் தனி மனிதர்களின் பங்கை அங்கீகரித்தவர் அம்பேத்கர். அப்படியான தனி மனிதர்கள் எத்தகைய பண்புகளைப் பெற்றிருக்கவேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டிவிட்டுப் போயிருக்கிறார். ” அறிவாற்றலும் பொறுப்புணர்வும் ஒருவரை மற்றவர்களிலிருந்து உயர்வானவராகக் கருதச் செய்யலாம். ஆனால் அவை மட்டுமே ஒரு மாமனிதருக்குப் போதுமான தகுதிகள் அல்ல. அவற்றுக்கும் மேலே அவருக்கு சில தன்மைகள் இருக்க வேண்டும். அவர் சமூக நோக்கம் ஒன்றினால் உந்தப்படவேண்டும். அவர் சமூகத்தில் சவுக்காகவும் துப்புரவாளனாகவும் இருக்கவேண்டும்” என்று அதற்கான இலக்கணத்தை வரையறுத்திருக்கிறார் அம்பேத்கர். அந்த இலக்கணத்துக்குப் பொருத்தமானதொரு தலைவராக எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கும் எழுச்சித் தமிழர், பொன்விழாவின்போது  மட்டுமல்ல தனது நூற்றாண்டுவிழாவின்போதும் தலைவராயிருந்து இந்த சமூகத்தை வழிநடத்த வாழ்த்துகிறேன். 

( எழுச்சித் தமிழரின் பிறந்தநாள் பொன்விழாவின்போது எழுதப்பட்ட கட்டுரை) 


No comments:

Post a Comment