தமிழ் எழுத்தாளர்கள் எவரும் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர்களில் சிலர் ஒரு கூட்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அந்தப் பெருந்தன்மைக்காக அவர்களைப் பாராட்டுவோம்.
கவிஞர் கே.சச்சிதானந்தனிடம் நான் எடுத்த நேர்காணலில் இடம்பெற்றுள்ள ( மணற்கேணி இதழ் 26 ) இந்தப் பதிலை நம் எழுத்தாளர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
========
* ரவிக்குமார்: நோபெல் பரிசுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.இப்போது பாரத் ரத்னா விருது குறித்து சர்ச்சைகள் நடக்கின்றன. எந்தவொரு விருது வழங்கப்பட்டாலும் அதன்கூடவே சர்ச்சையும் எழுவது இங்கே வழக்கமாகிவிட்டது. இத்தகைய விருதுகளைத் தேர்வு செய்வதில் இன்னும் ஜனநாயகப்பூர்வமான முறைகள் கடைபிடிக்கப்படவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
** கவிஞர் கே. சச்சிதானந்தன்: ஒருநிறுவனம் ஓரளவுக்குத்தான் அந்த தேர்வை கட்டுப்படுத்தமுடியும். சாகித்ய அகாடமியில் எனது அனுபவங்களிலிருந்து சொல்கிறேன்.அங்கே 23 பேர்கள் ஒரு விருதைத் தேர்வு செய்வதில் சம்பந்தப்படுகிறார்கள். உள்ளேயிருந்து 10 உறுப்பினர் கொண்ட ஆலோசனைக்குழு, அடுத்து வெளியேயிருந்து 10 உறுப்பினர் கொண்ட குழு கடைசியில் 3 பேரைக்கொண்ட நடுவர் குழு. இந்த 23 பேரும் ஒரே கருத்தோடு இருப்பார்கள் எனக் கூற முடியாது. பெரும்பாலும் இந்த விருது பொருத்தமானவர்களுக்குத்தான் போகிறது.தகுதியில்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ற புகார் சில மொழிகளில்தான் எழுகிறது, பொருத்தமில்லாதவர்களென்றால் தேர்வுசெய்யப்பட்டவர்களைவிடவும் தகுதி வாய்ந்தவர்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதைக் குறிப்பிடுகிறேன். இப்படிப் புகார் எழும்பும் மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழ், பஞ்சாபி, ராஜஸ்தானி போன்ற மொழிகளில் இந்தப் புகார்கள் எழுகின்றன.
மாநில ஒருங்கிணைப்பாளரைத் தேர்வு செய்த பின்னர் மற்றதை அவர் பொறுப்பில் விட்டுவிடுகிறார்கள். சில நேரங்களில் அவர் ஒரு குழுவின் நலனை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்.அதனால்தான் இந்தப் பிரச்சனை. மலையாளத்தில் இந்த விருது தகுதியில்லாத ஒருத்தருக்குக்கூட வழங்கப்பட்டதில்லை. அதற்கு இங்கு இருக்கும் விழிப்புணர்வு ஒரு காரணம். நடுவர்களும் இங்கே பொறுப்போடு நடந்துகொள்கிறார்கள். சில மொழிகளில் மிகவும் சாதாரணமான ( mediocre) எழுத்தாளர்கள்கூட இந்த விருதைப் பெற்றுவிடுகிறார்கள்.
சில எழுத்தாளர்கள் அடுத்த விருது எப்போது வழங்கப்படுகிறது என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நான், அடுத்த கவிதையை அடுத்த வரியை சிந்திக்கிறேன்.
No comments:
Post a Comment