கோகுல்ராஜ் படுகொலையில் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியின் பேட்டியை Exclusive என முக்கியத்துவம் தந்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சி இன்று முழுதும் ஒளிபரப்பி வருகிறது. இந்தப் பேட்டியைப் பார்க்கும் எவருக்கும் முதலில் எழும் கேள்வி ' டிவி நிருபர்களால் சந்திக்க முடிகிற அந்தக் குற்றவாளியை போலீஸால் பிடிக்க முடியாதா? ' ஒரு ஊடகவியலாளருக்கு இருக்கும் வாய்ப்பு காவல்துறைக்கு இருக்காது. பூலான்தேவி, வீரப்பன், என போலீஸால் தேடப்பட்டுவந்த குற்றவாளிகளை பத்திரிகையாளர்கள் சநித்துப் பேட்டிகண்ட சம்பவங்கள் ஏற்கனவே நடந்ததுண்டு. எனவே இதில் வியப்படைய ஏதுமில்லை.
லெஸ்லீ உட்வின் என்பவர் இயக்கிய india's daughter ' என்ற ஆவணப்படத்தில் டெல்லி நிர்பயா வழக்கின் முதன்மைக் குற்றவாளியை சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்று சந்தித்து எடுத்த பேட்டி இடம்பெற்றிருந்தது. அதனால், அந்தப் படத்தை இந்தியாவில் திரையிட மத்திய அரசு தடை விதித்தது. தன்னை நியாயப்படுத்திகொள்ள இந்தப் படம் குற்றவாளிக்கு உதவுகிறது. அது அந்த வழக்கை பாதிக்கும் என மத்திய அரசு விமர்சித்தது. தண்டனை பெற்று சிறையிலிருக்கும் குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்புவதே வழக்கை பாதிக்கும் என்றால் இதுவரை கைதுசெய்யப்படாமல் தலைமறைவாக இருக்கும் கொலைக் குற்றவாளியின் பேட்டி நிச்சயம் ஒப்பீட்டளவில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இந்த சட்ட ரீதியான பிரச்சனை ஒருபுறமிருக்க, ஊடக அறம் தொடர்பான கேள்வி ஒன்று இதில் எழுகிறது. குற்றத்தின் தீவிரத்தைப் பார்க்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பாமல் குற்றவாளியின் பிரச்சாரத்துக்கு ஊடகம் ஒத்துழைக்கலாமா? என்பதே அந்தக் கேள்வி.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஓயாது ஒளிபரப்பப்பட்ட பேட்டி குற்றவாளியைப்பற்றிய நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவே முயற்சித்தது. கொலை வழக்கை திசைத் திருப்பும் விதமாகவும், கொல்லப்பட்ட கோகுல்ராஜை அவதூறு செய்வதாகவும் குற்றவாளி பேசியவற்றை எவ்விதத் தணிக்கையும் இல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். இது ஊடக அறம் சார்ந்ததுதானா ? என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
கோகுல்ராஜ் ஒரு கலவரத்தில் கொல்லப்படவில்லை, ஆத்திரத்தில் ஒரு கணநேர ஆவேசத்தில் அந்தக் கொலை நடக்கவில்லை. ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் செய்வதைப்போல நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட பயங்கரவாதப் படுகொலை அது. அந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்தாலும் வெறுப்புப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ஒருத்தரின் பேட்டியை எந்த விமர்சனமும் இல்லாமல் ஒளிபரப்புவது சட்ட விரோதம் என்பதைவிட அறம் தவறிய செயல் என்றே சொல்லத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment