’ஆன்லைன் பெட்டிஷனும்’ அறம் குறித்த ஒரு கேள்வியும்
-ரவிக்குமார்
’ ஆன்லைன் பெட்டிஷன்’ எனப்படும் இணையவழி மனு செய்யும் போராட்டம் சர்வதேச அளவில் இப்போது பிரபலமாகிவிட்டது. ஒரு பிரச்சனை குறித்து உடனடியாகக் கருத்து திரட்டுவதற்கு உகந்த வழியாக அது கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு உதவும் விதமாக ஏராளமான இணைய தளங்கள் இப்போது உருவாகிவிட்டன. Change.org என்பது அவற்றுள் புகழ்பெற்ற ஒரு தளமாகும்.
இந்தத் தளங்கள்மூலம் அனுப்பப்படும் ஏதேனும் ஒரு மனுவில் உங்கள் பெயரை நீங்கள் இணைத்திருந்தால் அதன்பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு எல்லாவிதமான மனுக்களையும் அந்தத் தளம் அனுப்பிக்கொண்டிருக்கும். அப்படித்தான் இன்று Change.org தளத்திலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இரண்டு மனுக்கள் இணைக்கப்பட்டிருந்தன. மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு மனு , மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யக்கூடாது என இன்னொரு மனு. எது உங்களுக்கு உடன்பாடோ அதில் கையெழுத்திடுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தடை செய்யவேண்டும் என்ற மனுவை ஷிவானி ஷர்மா என்பவரும், தடை செய்யக்கூடாது என்ற மனுவை சன்கேட் சாப்ராவும் துவக்கியிருந்தனர். முதல் மனு ஏழு மாதங்களுக்கு முன்னர் துவக்கப்பட்டது. இரண்டாவது மனு ஒரு மாதத்துக்கு முன்னர் துவக்கப்பட்டது. இரண்டு மனுக்களையும் ஒன்றாக ஏன் சுற்றுக்கு அனுப்புகிறார்கள் என்ற ஐயத்தைவிடவும் இத்தகைய தளங்களுக்கான அறம் குறித்த கேள்வியை என்னுள் எழுப்பியது.
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற அமைப்புகள்தான் முதலில் இத்தகைய இணையவழிப் போராட்டங்களை ஆரம்பித்தன. அதிகாரத்துவ அரசாங்கங்களால் எவரேனும் கைது செய்யப்பட்டால், அல்லது ஒரு அத்துமீறல் நடந்தால் அதை உலகின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ஐநா முதலான சர்வதேச அமைப்புகளையும், அரசாங்கங்களையும் வலியுறுத்தும் விதமான மனுக்களை அனுப்புமாறு இந்த மனித உரிமை அமைப்புகள் கோருவது வழக்கம்.அந்த மனுக்கள் ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிராகவே இருக்கும்.
இணையப் பெருக்கத்துக்குப் பின்னர் ‘ஆன்லைன் பெட்டிஷன் ‘ என்பது பிரபலமானதொரு எதிர்ப்பு வடிவமாக மாறிவிட்டதால் அதற்கான இணையதளங்கள் பெருகியபின்னர் எவரும் எளிதாகஇப்படி ஆன்லைன் பெட்டிஷனை உருவாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தளங்கள் போராட்டங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததால்தான் பிரபலமடைந்தன, அந்தப் பிரபலத்தை இப்போதுஆதிக்கக் கருத்தியலைப் பரப்புவதற்காகவும் அவை பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. இதுவொரு அறம் பிறழ்ந்த ஆபத்தான போக்கு எனத் தோன்றுகிறது. மாட்டிறைச்சி என்பதன் பெயரால் இப்போது இந்தியாவெங்கும் வன்முறை ஏவப்படுகிரது. கொலைகள் நடக்கின்றன.மாநில அரசுகளின் உணவகங்கள்கூட சோதனை என்ற பெயரால் அச்சுறுத்தப்படுகின்றன. இது சர்வதேச ஊடக கவனத்தைப் பெற்றிருக்கிறது.இந்தச் சூழலில் மாட்டிறைச்சி உண்பதைத் தடைசெய்யவேண்டும் என வலியுறுத்தும் ஒரு மனுவை Change.org தளம் ஊக்குவித்து சுற்றுக்கு விடுவதன்மூலம் சகிப்புத் தன்மையற்ற பாசிச செயலுக்கு அது துணைபோயிருக்கிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பறியுங்கள் என ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கேட்டால் அது எத்தகைய அநீதியோ அத்தகைய அநீதிதான் Change.org செய்திருப்பதும்.
மனித உரிமைகளுக்கு எதிரான, பாசிசத்துக்குத் துணைபோகிற , அறம் பிறழ்ந்த Change.org தளத்தின் இந்தச் செயலைக் கண்டிப்போம். எதிர்காலத்தில் ஆன்லைன் பெட்டிஷன் தளங்கள் இத்தகைய மனுக்களை சுற்றுக்கு அனுப்புவதில்லை என்ற உறுதிமொழியை அவற்றிடம் பெறுவோம். இத்தகைய தளங்களுக்கென அறம்சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கச் செய்வோம். நமது எதிர்ப்பை mail@change.orgஎன்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிப்போம்.
No comments:
Post a Comment