Tuesday, November 24, 2015

வரலாறு சொல்லும் 'வரலாறு'

இந்தியாவின் வரலாற்றை எழுதுவதற்கு முதன்மைத் தரவாக விளங்கும் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில்தான் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் படியெடுத்துத் தொகுத்து ஆவணப்படுத்தும் பணி அரசாங்கத்துக்கு முக்கியமானதாகப் படவில்லை. அரசாங்கத்தின் தொல்லியல் துறையைவிட இதில் ஆர்வமுள்ள தனி நபர்களின் பங்களிப்பே அதிகம். அதற்கு சாட்சியாக இருப்பது 'வரலாறு' என்னும் இதழ். 

1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அந்த இதழ் இப்போது வெள்ளிவிழா கண்டு 25 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் ஆவணம் இதழ் துவக்கப்பட்டு இரண்டு இதழ்கள் வெளிவந்த பிறகு அதன் ஆசிரியர் குழுவினரிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக இந்த வரலாறு இதழ் துவக்கப்பட்டதென திரு கலைக்கோவன் குறிப்பிட்டிருக்கிறார். அவர்தான் இதன் பொறுப்பாசிரியர். திருமதி நளினி, திருமதி அகிலா ஆகியோர் இணையாசிரியராகவும், துணையாசிரியராகவும் இருக்கின்றனர். இந்த மூவர் குழுவின் பணி மலைக்க வைக்கிறது. 

வரலாறு 25 ஆவது இதழில் 13 புதிய கல்வெட்டுகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. முத்தரையர் காவல் உரிமைச் செப்பேட்டில் இருக்கும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது நீண்டதொரு வரலாற்றை சிறு கதையின் சுவாரசியத்தோடு கூறுகிறது. 

திருச்சிராப்பள்ளி மாவட்ட கோயில் கட்டடக் கலை என்ற தலைப்பில் மு.நளினி ஆற்றிய சொற்பொழிவு நிறைய தகவல்களைக் கூறுகிறது.  குடைவரை, கற்றளி,மாடக்கோயில் என மூன்றாக வகைப்படுத்திக்கொண்டு அம்மாவட்டத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து அவர் விவரித்திருக்கிறார். திருச்சிராப்பள்ளியில் இரண்டு, வெள்ளாறையில் இரண்டு, பைஞ்ஞீலியில் ஒன்று என இந்த மாவட்டத்தில் ஐந்து குடைவரைகள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். கிபி ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்தக் குடைவரைகளை நாமும் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது இந்தச் சொற்பொழிவு. 

இந்த இதழில் திரு கலைக்கோவனின் நாட்குறிப்புகளின் தொகுப்பு போன்ற ஒரு கட்டுரை உள்ளது. அது அதிகமான பக்கங்களை ஆக்கிரமித்திருப்பது இதழின் நோக்கத்தை நீர்த்துப்போகச்செய்து திசைதிருப்புவதாக உள்ளது. 

கல்வெட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த இதழை அறிவார்கள். மற்றவர்களும்கூட இதைப் படித்துப் பயனுறவேண்டும். 

No comments:

Post a Comment