வரலாற்றறிஞர் திரு நொபோரு கரஷிமா அவர்கள் இன்று காலமானார். சற்றுமுன் பேராசிரியர் திரு ஒய்.சுப்பராயலு அவர்களிடம் பேசி இதை உறுதிப்படுத்திக்கொண்டேன். " சிலநாட்களாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதாகக் கூறியிருந்தார்.அதற்குள் இப்படியொரு துயரம் நேர்ந்துவிட்டது" என திரு ஒய்.எஸ் கூறினார்.
சோழர்கால வரலாற்றைக் கல்வெட்டுகளின் துணையோடு துல்லியமாக முன்வைத்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானது. திரு நொபோரு கரஷிமா அவர்களும் பேராசிரியர் ஒய்.எஸ் அவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றை எழுதுவதில் மிகப்பெரிய தாக்கத்தை நிகழ்த்தியிருப்பதை எவரும் மறுக்கமுடியாது.
' இந்திய கிராமங்கள் தன்னிறைவுபெற்ற குடியரசுகளாகத் திகழ்கின்றன' என்று மெட்கால்ஃப் கூறியதை வழிமொழிந்துதான் கார்ல் மார்க்ஸ் வரை பல்வேறு அறிஞர்களும் இந்தியாவைப்பற்றிப் பேசினார்கள். அதை சோழர்கால கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு நொபோரு கரஷிமா மறுத்தார்.
தமிழ்நாட்டில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் ராஜேந்திர சோழன் காலத்திலிருந்துதான் கிடைக்கின்றன என்று அவர் நிறுவினார். தமிழ்நாட்டில் சாதிகளின் வரிசை மாற்றியமைக்கப்பட்டு அதிகாரப் படிநிலை உருவாக்கப்பட்டது அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதிருந்த 13 ஆம் நூற்றாண்டைச் சுற்றிதான் தான் நடந்தது என்று திருக்கச்சூர் கல்வெட்டுகளை ஆதாரமாகக்கொண்டு அவர் விளக்கினார்.
தமிழக வரலாறு இன்னும் பொய்களாலும் புராணங்களாலும் மூடுண்டே கிடக்கிறது. அறிவியல் அணுகுமுறையோடு தமிழக வரலாற்றை எழுதிய ஒருசிலருள் திரு நொபோரு கரஷிமா முக்கியமானவர். அவரது இழப்பு ஏற்படுத்தும் வெற்றிடத்தை ஈடுசெய்யக்கூடியவர்கள் இங்கே எவருமில்லை என்ற உண்மை அவரது மரணத்தைத் தாங்கமுடியாததாக்குகிறது. திரு கராஷிமா அவர்களுக்கு என் அஞ்சலி!
No comments:
Post a Comment