Saturday, November 28, 2015

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: தமிழக அரசியல் கட்சிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா? -ரவிக்குமார்



காங்கிரஸ் கட்சியில் நடந்துவரும் உட்கட்சி சண்டை மோசமான நிலையைத் தொட்டிருக்கிறது. மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் விஜயதாரணி எம்.எல்.ஏ வைத் தரக்குறைவாகப் பேசியதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. விஜயதாரணி தன்னை சாதிப்பெயரைச் சொல்லி அவமதித்ததாக அவர்மீது மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

உட்கட்சி சண்டை கட்சி அரசியலின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்ட நிலையில் காங்கிரஸில் நடந்துவரும் சண்டைகள் வியப்பளிப்பவை அல்ல. ஆனால் இந்தச் சண்டையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவதுதான் நமக்குக் கவலையளிக்கிறது. 

காங்கிரஸில் மட்டுமின்றி திமுகவின் உட்கட்சி சண்டையிலும் இதேபோல் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் திமுகவினரின் ஒரு பிரிவினர் எதிர்த் தரப்புமீது இப்படித்தான் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் புகார் அளித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இந்தப் புகாரும் ஒரு காரணமாக சுட்டப்பட்டதை இங்கே நினைவுகூரலாம். 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உட்கட்சி சண்டையில் ஆயுதமாகப் பயன்படுத்துவது அந்த சட்டம் குறித்து செய்யப்பட்டுவரும் அவதூறுப் பிரச்சாரத்துக்கு வலுசேர்த்துவிடும். 

வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இப்போது மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. அதற்காகத் தமிழ்நாட்டில் திமுகவோ காங்கிரஸோ ஒரு அறிக்கைகூட வெளியிட்டதில்லை. ஆனால் உட்கட்சி சண்டைக்கு மட்டும் அதைப் பயன்படுத்த இக்கட்சியினர் தயங்குவதில்லை. 

கட்சிப் பொறுப்புகளுக்கும் , MLA, MP, உள்ளாட்சி அமைப்புகள் என மக்கள் பிரதிநிதிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படும் தலித் சமூகத்தினர் அரசியல் கட்சிகளின் தலைமைகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் உணர்வார்கள். திமுகவில் சத்தியவாணிமுத்துவும், காங்கிரஸில் எல்.இளையபெருமாளும் அதற்குச் சான்றுகள். 

அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கும் தலித் சமூகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இடம்பெற்றிருக்கும் கட்சிகளில் தலித்  சமூகத்துக்கு உரிய மதிப்பும், பிரதிநிதித்துவமும் கிடைக்கப் பாடுபடுங்கள். அதைச் செய்யமுடியாவிட்டால்கூட பரவாயில்லை இப்படி உட்கட்சி சண்டையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்ய துணைபோகாதீர்கள். அது தலித் சமூகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்பதை உணருங்கள். 

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களே! 

தலித் மக்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உங்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்துவதைத் தயவுசெய்து நிறுத்துங்கள்!

No comments:

Post a Comment