Sunday, March 13, 2016

தேர்தல் முறையை மாற்றுவோம்- ரவிக்குமார்



(2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை ) 

 இந்தியாவின் ஜனநாயகம் உலகப்புகழ் பெற்றது. இதற்கு’ காரணம் நமது தேர்தல் முறை என்று சொல்லப்படுவதுண்டு. 'மக்களின் தீர்ப்பை மகேசனின் தீர்ப்பாக' மதித்து அமைதியாக ஆட்சி மாற்றத்துக்கு வழிவிடும் பக்குவத்தைப் பெற்றவர்கள் நமது அரசியல் தலைவர்கள். ஆனால் இந்தத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்ற குரல் இப்போது வலுவாக கேட்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் முறையில் மாற்றம் தேவை எனக்குரல் கொடுப்பவர் நமது தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமி. இதற்கு முன் தலைமைத் தேர்தல் ஆணையராயிருந்த கிருஷ்ணமூர்த்தியும் இந்தக் கருத்தை வலியுறுத்தியே வந்தார்.

 ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதுதான் தற்போதிருக்கும் நமது தேர்தல் முறை. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாவரும் சேர்ந்து பெற்ற வாக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், பலசமயம் அது வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளைவிடக கூடுதலாக இருப்பதுண்டு.எனவே அந்த தொகுதியில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகச் செல்லும் நிலை ஏற்படுகிறது. 'பெரும்பான்மைக்கு அதிகாரம்' என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கு இது எதிராக உள்ளது. எனவே இதை மாற்றி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 சிறுபான்மை அளவு வாக்குகளைக் கொண்டு வெற்றி பெறும் நிலை ஒன்றிரண்டு தொகுதிகளில் இருந்தால் அதை நாம் அலட்சியப்படுத்திவிடலாம். பல மாநிலங்களில் சுமார் தொண்ணூறு சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி குறைந்த அளவு வாக்குகளில் வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். பலபேர் இருபது சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று தேர்தல்களில் சராசரியாக பதினோரு சதவீத எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தான் ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர்கள். மீதம் 89 சதவீதம் மைனாரிட்டி அளவு வாக்குகளால் வென்றவர்கள்தான். பீகாரில் 82 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 60 சதவீதமும், கர்னாடகாவில் அறுபத்தொன்பது சதவீதமுமான எம்எல்ஏக்கள் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றே ஜெயித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே இதில் தமிழ்நாடு மட்டும் தான் விதிவிலக்கு. இங்கு 1991ஆம் ஆண்டு தேர்தலில் தொண்ணூறு சதவீதம் சட்டம்ன்ற உறுப்பினர்கள் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.

 பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. சுமார் 67 சதவீத எம்.பி.க்கள் குறைந்த அளவு வாக்குகளில் வென்று வந்தவர்களாக உள்ளனர்.

 வெற்றி பெறுகிறவர் ஐம்பது சதவீதத்துக்குக் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நமது தேர்தல் முறையில் இல்லை. இதனால் தான் இந்த நிலைமை. ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தத் தொகுதி மக்களில் பெரும்பான்மைப் பகுதியினரின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு சிறு தரப்பினரின் பிரதிநிதியாக மட்டுமே இருப்பதற்கு இது வழி வகுக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையை இது தகர்த்து விடுகிறது.

 இப்போதுள்ள தேர்தல் முறை இன்னொரு ஆபத்துக்கும் இட்டுச்செல்கிறது. ''ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சேர்ந்த பிரிவினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் நாம் வெற்றி பெற்று விடலாம்'' என்ற எண்ணத்தை இது வேட்பாளர்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது சாதி, மத அடிப்படையில் செயல்பட இதுவே காரணமாகிறது. 'பரவலான மக்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டிய அவசியமில்லை. குறுகிய சில வாக்குறுதிகளை சென்னாலே போதும்' என அரசியல் கட்சிகள் எண்ணுவதற்கு இதுவே வழிகோலுகிறது.

 இந்த நிலையை மாற்றுவதற்கு இரண்டு விதமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்துவது. வெற்றி பெறுகிறவர்கள் எந்தெந்த தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அங்கெல்லாம் முதலில் வந்துள்ள இரண்டு வேட்பாளர்களை மட்டும் வைத்து மீண்டும் ஒரு வாக்குப்பதிவை நடத்தி அதில் யார் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பது என்பது ஒரு யோசனை.

 பெரும்பாலான தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளில் வெற்றி பெறும் நிலை இருப்பதால் மறுதேர்தல் என்பது ஏறக்குறைய மாநிலம் முழுமைக்கும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே இது சிரமம் என்று சில விமர்சனங்கள் வரலாம். இந்த முறையினால் ஏற்படும் காலம் மற்றும் பொருள் செலவைத் தடுக்க முதலிலேயே ஒவ்வொரு வாக்காளரிடத்திலும் மாற்று வாக்கு ஒன்றை செலுத்தும்படி கோருவது. எந்தெந்த தொகுதிகளில் மெஜாரிட்டி வாக்கு கிடைக்கவில்லையோ அங்கு மட்டும் அந்த மாற்று வாக்குகளை எண்ணுவது. எந்திர வாக்குப்பதிவு வந்து விட்ட இன்றைய சூழலில் இது செலவு பிடிப்பதாகவோ, கால தாமதம் ஆவதாகவோ இருக்காது.

 அடுத்ததாக சொல்லப்படுகிற யோசனைதான் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Reservation ) என்பதாகும். இந்திய சட்ட கமிஷனும் இந்த முறையைத் தான் பரிந்துரை செய்திருக்கிறது. நமது தலைமைத் தேர்தல் ஆணையர் இதைத்தான் வலியுறுத்துகிறார். இந்த முறையை பட்டியல் முறை (List system ) என்று குறிப்பிடுகின்றனர்.

 நபர்களை நிறுத்துவதற்கு பதிலாக அரசியல் கட்சிகளை முன்னிறுத்தித் தேர்தலை நடத்துவது, அரசியல் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் இடங்களை வழங்குவது என்பதே இந்தத் திட்டம். இதில் தனி நபர்களின் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்பதால் கூடுதலாக ஒரு அம்சத்தை சட்டக்கமிஷன் கூறியுள்ளது. வாக்காளர்களிடம் இரண்டு வாக்குகளைத் தந்து ஒன்றை அரசியல் கட்சிக்கும், மற்றதை வேட்பாளருக்கும் அளிக்க கோருவது. கட்சிகள் வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் இடங்களை ஒதுக்கி அதன்பிறகு வேட்பாளர் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் நபர்களைத் தேர்வு செய்வது.

 விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மெஜாரிட்டி அரசாங்கம் உருவாவதற்கு வாய்ப்பு குறைவு. கூட்டணி அரசாங்கமே சாத்தியமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பட்டியல் முறை என்பதும் கூட ஆட்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை ஊக்குவித்து விடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். இன்னும் கல்வியறிவற்றவர்கள் நிரம்பியிருக்கும் நமது நாட்டிற்கு இது சரிப்பட்டு வராது என்பதே அவர்களது கருத்து.

 நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் இந்த விகிதாச்சார பிரதிநித்துவத்தை செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்து விடும். தற்போது 172 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ளன. இவற்றில் பல கட்சிகள் எப்போதாவது ஒருமுறை தான் தேர்தலில் போட்டியிடும். 'பதிவுக்காக சராசரியாக வாரம் மூன்று கட்சிகள் விண்ணப்பிக்கின்றன'' என்று கோபாலஸ்வாமி குறிப்பிடுகிறார். பலபேர் வருமானவரி விலக்கு பெறுவதற்காகத்தான் அரசியல் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார். நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலன்றி விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.

 ஆகவே ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வைக்கும் ஏற்பாடே எளிதானது. ஜனநாயகத்தை பாதுகாப்பது. இது மைனாரிட்டி வாக்கினால் ஒருவர் வெற்றி பெறுவதைத் தடுப்பது மட்டுமின்றி அரசியல் கட்சிகள் பரந்த அளவிலான பிரச்சனைகளில் கவனம் செலுத்தவும் வழி வகுக்கும். சாதி, மத செல்வாக்கை கட்டுப்படுத்தும்.

 இந்த ஆலோசனைகள் சட்ட அறிஞர் சுபாஷ் காஷ்யப்பின் பொறுப்பில் அமைந்த குழுவால் பரிசீலிக்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்ட மறு ஆய்வுக்குழுவின் கீழ் தேர்தல் சீர்த்திருத்தங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட அந்தக்குழுவின் தலைவராக ஆர்.கே.திரிவேதி இருந்தார். பி.ஏ.சங்மா, மோகன் தாரியா, என்.என்.வோரா, பேராசிரியர் ஆர்.பி.ஜெயின் உள்ளிட்டோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தக்குழு ''ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே ஒரு தொகுதியின் பிரதிநிதியாக வரவேண்டும். அதற்கான தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்'' எனப் பரிந்துரை செய்தது. அதுமட்டுமின்றி வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அந்தக்குழு கூறியுள்ளது.

 தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனைகளை 2004ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே மத்திய அரசுக்கு அனுப்பி விட்டது. ஆனால் அரசாங்கம் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எந்த காரியத்தையும் ஆட்சியாளர்கள் அவ்வளவு சுலபமாக செய்து விட மாட்டார்கள். அவர்களைச் செயல்பட வைக்கும் ஆற்றல் மக்களுக்குத்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment