1.
உன்னைப்போலவே
நானும் நேசிக்கிறேன் வாழ்க்கையை, பொருட்களின் வசீகரத்தை, சொர்க்கமாய்த் தெரியும் ஜனவரி மாதத்து நிலக்காட்சியை
எனது ரத்தமும் கொதிக்கிறது
நானும் கண்ணீர் மொக்குகளையறிந்த விழிகளால் சிரிக்கிறேன்
நானும் நம்புகிறேன்
இந்த உலகம் அழகானது,
ரொட்டியைப்போல கவிதையும் எல்லோருக்கும் உரியது
எனது நரம்புகள் முடிவதில்லை என்னில்,
அவை கலந்திருக்கின்றன
வாழ்க்கைக்காக,
அன்புக்காக,
சின்னச்சின்ன விஷயங்களுக்காக,
நிலக்காட்சிக்காக, ரொட்டிக்காக
அனைவருக்குமான கவிதைக்காக
போராடுவோரின் குருதியில்
2.
நான் இறந்துவிட்டேன் என அறிந்தால் என் பெயரை உச்சரிக்காதே
அது மரணத்தை அமைதியைத் தாமதப்படுத்தும்
உனது குரல் எனது பனிமூட்டத்தில் புலன்களைத் தேடும் கலங்கரைவிளக்கு
நான் இறந்துவிட்டேன் என அறிந்தால்
வினோதமான வார்த்தைகளைக் கூறு : பூ, தேனீ, கண்ணீர், ரொட்டி, புயல்
உனது உதடுகள் கண்டுபிடிக்காதிருக்கட்டும் எனது பெயரிலிருக்கும் எழுத்துகளை
எனக்குத் தூக்கம் வருகிறது, நான் விரும்புகிறேன் அமைதியை
எனது பெயரைச் சொல்லாதே நான் இறந்த செய்தியை அறியும்போது
அந்த இருண்ட உலகத்திலிருந்து நான் வருவேன் உன் குரலைக் கேட்பதற்காக
சொல்லாதே என் பெயரை சொல்லாதே என் பெயரை
நான் இறந்துவிட்டேன் என அறிந்தால்
உச்சரிக்காதே என் பெயரை
3.
ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பது மகத்தானது அது உங்களுக்கு நிறைய தலைவலிகளைத் தரும் என்றபோதிலும்
ஏனென்றால் கம்யூனிஸ்ட்டுகளின் தலைவலிகள் வரலாற்றுரீதியானவை, அதாவது அவற்றை நீங்கள் வலி நிவாரணிகளால் போக்கமுடியாது
பூமியில் சொர்க்கத்தை உருவாக்கினாலன்றி.
அது அப்படித்தான்
முதலாளித்துவத்தின்கீழ் நம் தலைகள் வலிக்கும், நம் தலைகள் சிதறடிக்கப்படும்.
புரட்சிக்கான போராட்டத்தில் தலை என்பது ஒரு 'டைம் பாம்'
தலைவலியைத் தீர்க்குமென நாம் கட்டியமைக்கும் சோஷலிசம் அதைப் போக்குவதில்லை
அதிகப்படுத்துகிறது
கம்யூனிசம் என்பது
சூரியன் அளவுகொண்ட
ஒரு ஆஸ்பிரின் மாத்திரை
ரோக் டால்டன் (Roque Dalton (El Salvador, 1933 - 1975) எல் சல்வடார் நாட்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் டால்டன் ஒரு புரட்சியாளரும்கூட. அவர் முன்வைத்த அரசியல் கருத்துகளில் முரண்பட்ட அவரது சக போராளிகள் அவருடைய நாற்பதாவது பிறந்த நாளுக்கு நான்குநாட்கள் முன்னதாக அவரை சுட்டுக்கொன்றனர். அந்தக் கொலை தவறுதலாக நடந்துவிட்டது என முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
No comments:
Post a Comment