உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் காந்தியைப் பற்றியும் சுபாஷ் சந்த்ர போஸ் குறித்தும் தெரிவித்த கருத்துகளுக்காக அவர்மீது கண்டனத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்ற இரு அவைகளும் நிறைவேற்றியுள்ளன. அந்தத் தீர்மானம் தனது பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது எனவே அதை ரத்துசெய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கட்ஜு மனுசெய்திருந்தார். அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் நாரிமனை உச்சநீதிமன்றம் ஆமிக்கஸ் கூரியாக நியமித்தது.
08.03.2016 அன்று இந்த வழக்கில் வாதிட்ட நாரிமன் " அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 105 நாடாளுமன்றத்தில் பேசும் பேச்சுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. அதில் நீதிமன்றங்கள் தலையிடமுடியாது என ஆறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வும் உறுதிசெய்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு பேச்சு சுதந்திரம், வெறுப்புப் பிரச்சாரம் என்ற இரண்டு முக்கியமான பிரச்சனைகளைக் கவனப்படுத்தியிருக்கிறது:
1. பேச்சு சுதந்திரம்:
சட்டமியற்றும் அவைகளில் மக்கள் பிரதிநிதிகள் பேசும் பேச்சுக்கும் சாதாரண குடிமகன் ஒருவர் பேசும் பேச்சுக்கும் வேறுபாடு உள்ளது. குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 19 வழங்கியிருக்கும் பேச்சுரிமைக்கு reasonable restrictions உள்ளன. அத்தகைய கட்டுப்பாடு சட்டமியற்றும் அவைகளில் இல்லை. இதுதான் இப்போது நீதிமன்றம் சொல்லும் கருத்து.
மக்கள் பிரதிநிதிகூட சுதந்திரமாகப் பேசவேண்டுமென்றால் அவை நடவடிக்கையின்போதுதான் பேசமுடியும். அதாவது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பேச்சு சுதந்திரம் அவரது பதவி சார்ந்ததோ அந்த அவைகளின் புவியியல் இருப்பு சார்ந்ததோ அல்ல, அது அவை நடவடிக்கையை மட்டுமே சார்ந்தது. இதுவும்கூட ஒருவிதத்தில் reasonable restriction என்றுதான் கூறவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரத்துக்கு இரண்டு பிரிவுகளை ஏற்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? சாதாரண குடிமகனுக்கும் அதேவிதமான immunity வழங்கப்படவேண்டும் அல்லது சட்டமியற்றும் அவைகளுக்கு இருக்கும் immunity ஐ ரத்துசெய்யவேண்டும்.
சட்டமியற்றும் அவைகளில் நடக்கும் விவாதங்களின்போது எவ்வித மனத் தடையுமின்றி உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏதுவாகவே இந்த immunity வழங்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் சொல்கிறது. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் நடைபெறும் விவாதங்களைப் பார்ப்போர் இந்த சமாதானத்தை ஏற்கமாட்டார்கள்.
நாடாளுமன்றத்தின் அதிகாரம் பெரிதா அல்லது நீதிமன்றத்தின் அதிகாரம்
பெரிதா என்ற கோணத்தில் இதை அணுகக்கூடாது. குடிமக்களுக்கு இல்லாத சுதந்திரத்தை அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக்கு மட்டும் வழங்குவது எப்படி சமத்துவமாக இருக்கமுடியும் என்ற கோணத்திலிருந்து இதைப் பார்க்கவேண்டும்.
reasonable restrictions என்ற விதத்தில் குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை முடக்குவது சரியல்ல என்பதே எனது கருத்து. இப்படிச் சொல்லும்போது ' வெறுப்புப் பேச்சுகளை' எப்படி அனுமதிப்பது என்ற கேள்வி உடனடியாக எழும்.
2. வெறுப்புப் பிரச்சாரம்:
வெறுப்புப் பிரச்சாரம் என்பது அரசியல் ஆதாயம் தேடுவோரின் முதன்மையான கருவியாக மாறியிருக்கும் சூழலில் பேச்சு சுதந்திரத்தையும் வெறுப்புப் பேச்சுகளையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியது அவசியம். மார்க்கண்டேய கட்ஜுவின் விமர்சனம் கடுமையானது என்று சொல்லலாமே தவிர அதை hate speech என்று கூறமுடியாது. ஆனால் அவரைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய அவைகளில் வெறுப்புப் பேச்சால் புகழ்பெற்ற பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் immunity நாடாளுமன்ற அவைகளால் வந்ததல்ல, அவர்களது அரசியல் சார்பால் வந்தது.
வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றப்படவேண்டும் என ICCPR என்ற ஐநா ஒப்பந்தம் கூறுகிறது. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இப்போது IPC ல் 153 A, 295 & 295 A முதலிய பிரிவுகள் இருக்கின்றனவே புதிதாக சிறப்பு சட்டம் எதற்கு என சிலர் கேட்கலாம்.வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்கு IPC ல் தற்போதிருக்கும் அந்த சட்டப் பிரிவுகள் போதுமானவையல்ல. சிறப்பு சட்டம் இயற்றுவதும் அதை உறுதியோடு நடைமுறைப்படுத்துவதும்தான் இன்றைய தேவை. அதை நோக்கிய விவாதங்களை முன்னெடுக்குமாறு ஊடகங்களை வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment