இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நடுப்பகல் நேரம். வெளிச்சம் இருந்ததே தவிர வெயில் உறுத்தவில்லை. பாண்டிச்சேரி கடற்கரையில் கொட்டப்பட்டிருந்த பாறைகளில் உட்காருவதற்கு வாகாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டேன். கடல் குமுறிக்கொண்டிருந்தது. மனம் அதைவிடவும் கூடுதலாக அலைபாய்ந்தது. கடல் நீரில் நீட்டிக்கொண்டிருந்த மரங்களைப் பார்த்தேன். ஐ ஃபோனை எடுத்து அதில் சில வரிகளை டைப் செய்தேன்.
”கடல் நீரில்
தலைநீட்டிக்கொண்டிருக்கும் மரங்கள்
அலைகளில் அழித்தழித்து
எழுதுகின்றன
பாலத்தைச் சுமந்திருந்த பழங்கதையை
கடற்கரை
பாறையில் அமர்ந்திருக்கிறது
பறக்கத் துணிவில்லா ஒரு
நீர்ப் பறவை”
இந்தக் கவிதையை என்ன செய்வதெனத் தெரியாமல் சேமித்துவிட்டு கூகிளைத் திறந்தேன். வண்ணதாசனின் ‘தனுமை’ சிறுகதையைப் படிக்கவேண்டும் எனத் தோன்றியது.வண்ணதாசனின் மிகையான எழுத்துகள் எனக்குப் பிடிப்பதில்லை. எதிராளியை ஒரு நிலைக்கண்ணாடியாக மாற்றி தன்னையே பார்த்துக்கொள்வதாக இருக்கும் அவரது கடிதங்கள் எனக்கு ஆத்திரமூட்டுபவை. ஆனால் தனுமை என்ற ஒரு சிறுகதையை எழுதியதற்காக அவரை நான் நேசிக்கிறேன். அந்தக் கதையை வாசித்து முடித்ததும். வெயில் இன்னும் தழைந்து இருட்டிக்கொண்டு வருவதுபோல் ஆகிவிட்டது. எனது கண்கள் கலங்கியிருக்கவேண்டும்.வண்ணநிலவனின் நினைவு வந்தது. நல்ல கதைகளை எழுதியிருப்பவர் அவர். என் மதிப்புக்குரிய படைப்பாளி. அவரது கதைகள் இரண்டை வாசித்தேன். மனக் குமுறல் அடங்கியிருந்தது. ஆனால் தாங்க முடியாமல் கனத்தது.
தனுமை கதையை மீண்டும் மனசில் ஓடவிட்டேன். ’டெய்ஸி வாத்திச்சியை’ மையமாக வைத்து இன்னொரு கதையை யாரேனும் எழுதலாம்.
இப்போது எனக்கு இன்னொரு சந்தேகம். ஆசிரியை என்பதை வாத்திச்சி என்று விளிப்பது தென்மாவட்டங்களில் மரியாதையான ஒன்றா? வட தமிழ்நாட்டில் வாத்தி வாத்திச்சி என்பவை கேவலமான சொற்கள். அங்கு அப்படி இல்லையா?