Sunday, December 9, 2012

வாத்திச்சி என்றால் கேவலப்படுத்துவது ஆகாதா?
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நடுப்பகல் நேரம். வெளிச்சம் இருந்ததே தவிர வெயில் உறுத்தவில்லை. பாண்டிச்சேரி கடற்கரையில் கொட்டப்பட்டிருந்த பாறைகளில் உட்காருவதற்கு வாகாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டேன். கடல் குமுறிக்கொண்டிருந்தது. மனம் அதைவிடவும் கூடுதலாக அலைபாய்ந்தது. கடல் நீரில் நீட்டிக்கொண்டிருந்த மரங்களைப் பார்த்தேன். ஐ ஃபோனை எடுத்து அதில் சில வரிகளை டைப் செய்தேன்.

”கடல் நீரில்
தலைநீட்டிக்கொண்டிருக்கும் மரங்கள்
அலைகளில் அழித்தழித்து
எழுதுகின்றன
பாலத்தைச் சுமந்திருந்த பழங்கதையை

கடற்கரை
பாறையில் அமர்ந்திருக்கிறது
பறக்கத் துணிவில்லா ஒரு
நீர்ப் பறவை”

இந்தக் கவிதையை என்ன செய்வதெனத் தெரியாமல் சேமித்துவிட்டு கூகிளைத் திறந்தேன். வண்ணதாசனின் ‘தனுமை’ சிறுகதையைப் படிக்கவேண்டும் எனத் தோன்றியது.வண்ணதாசனின் மிகையான எழுத்துகள் எனக்குப் பிடிப்பதில்லை. எதிராளியை ஒரு நிலைக்கண்ணாடியாக மாற்றி தன்னையே பார்த்துக்கொள்வதாக இருக்கும் அவரது கடிதங்கள் எனக்கு ஆத்திரமூட்டுபவை. ஆனால் தனுமை என்ற ஒரு சிறுகதையை எழுதியதற்காக அவரை நான் நேசிக்கிறேன். அந்தக் கதையை வாசித்து முடித்ததும். வெயில் இன்னும் தழைந்து இருட்டிக்கொண்டு வருவதுபோல் ஆகிவிட்டது. எனது கண்கள் கலங்கியிருக்கவேண்டும்.வண்ணநிலவனின் நினைவு வந்தது. நல்ல கதைகளை எழுதியிருப்பவர் அவர். என் மதிப்புக்குரிய படைப்பாளி. அவரது கதைகள் இரண்டை வாசித்தேன். மனக் குமுறல் அடங்கியிருந்தது. ஆனால் தாங்க முடியாமல் கனத்தது.

தனுமை கதையை மீண்டும் மனசில் ஓடவிட்டேன். ’டெய்ஸி வாத்திச்சியை’ மையமாக வைத்து இன்னொரு கதையை யாரேனும் எழுதலாம்.

இப்போது எனக்கு இன்னொரு சந்தேகம். ஆசிரியை என்பதை வாத்திச்சி என்று விளிப்பது தென்மாவட்டங்களில் மரியாதையான ஒன்றா? வட தமிழ்நாட்டில் வாத்தி வாத்திச்சி என்பவை கேவலமான சொற்கள். அங்கு அப்படி இல்லையா?

3 comments:

 1. எனக்குத் தெரிந்தவரை "வாத்திச்சி" என்ற சொல் கேவலப்படுத்துவது இல்லை. நான் நெல்லை மாவட்டத்தில் பிறந்தவள். அங்கே என் முந்தைய தலைமுறை உறவினர் இந்தச் சொல்லை "ஆசிரியை" என்ற பொருளில் பயன்படுத்தியது உண்டு. அதனால் நானும் என்னைத் 'தமிழ் வாத்திச்சி' என்று சொல்லியிருக்கிறேன். அது கேவலம் என்றால் எனக்கு விளக்கத் தெரியாது! :-)
  இன்னும் சில பயன்பாட்டையும் நினைத்துப் பார்க்கலாம். "வடமா, வாத்திமா" "வடமாக் கட்டு, வாத்திமைச் செட்டு" என்று. இதெல்லாம் என் பெரியம்மாப் பாட்டி (அம்மாவின் பெரியம்மா) சொல்லிக் கேள்வி. அந்தச் சிறு வயதில் எனக்கு அதைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்கத் தெரியவில்லை! :-)
  வீ .எஸ்.ராஜம்

  ReplyDelete
 2. அன்புள்ள ரவி,

  சேமித்த கவிதை நன்றாக இருக்கிறது. சில சமயம் நாம் எல்லோருமே பறக்கத் துணிவில்லா நீர்ப்பறவையாகத் தான் இருக்கிறோம். வண்ணதாசன் கடிதங்கள் உங்களிடம் மூட்டிய ஆத்திரத்தை என்னுள்ளும் மூட்டியுள்ளன அவை புத்தக வடிவில் வெளிவந்தபோது. ஆனால் அவர் மிக நல்ல கதைகள் பல எழுதியிருக்கிறார். ’தனுமை’ அதில் ஒன்று. வண்ண நிலவனும் மிகச் சிறந்த எழுத்தாளர்தான். சு.ராவுடன் ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன?

  பல ஆசிரியர்கள் ஆரம்ப கால கல்வி இயக்கத்தில் கிறித்துவர்களாகவே இருந்ததால்தான் வாத்திச்சி என்ற சொல் வந்தது என்று நினைக்கிறேன். டீச்சர் என்ற சொல் வந்தது அப்புறம்தான் என்று தோன்றுகிறது.

  அன்புடன்,

  அம்பை

  ReplyDelete
 3. நாஞ்சில் நாட்டில் பொதுவாக வாத்தியார், வாத்திச்சி என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. இவைகள் மரியாதையான சொற்களாகதான் பாவிக்கப்பட்டு வந்தது. இப்பொதைய நிலமைத் தெரியாது.

  ReplyDelete