Friday, November 28, 2014

'மது அறியா தமிழகத்தை உருவாக்குவோம்'

 'மது அறியா தமிழகத்தை உருவாக்குவோம்'

- ஜி.கே.வாசன் அறிவிப்பு! 

இன்று (28.11.2014) திருச்சியில்கூடிய  ஆதரவாளர்களிடையே ஜி.கே.வாசன் உரையாற்றியபோது 'மது அறியா தமிழகத்தை உருவாக்குவோம்' என அறிவித்தார். வரவேற்கத்தக்க அறிவிப்பு. 

2016 தேர்தலில் தமிழகத்தில் தமாகா தலைமையில் கூட்டணி ஒன்று உருவானால் இந்த அறிவிப்புத் தேர்தல் வாக்குறுதியாக மாறும் என நினைக்கிறேன். 

தனக்கு சால்வைகள் அணிவிக்கக் கூடாது என்றும் வாசன் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். இதுவும் நல்ல அறிவிப்புதான். 

Thursday, November 27, 2014

திரு ஏ.ஆர்.ரஹ்மானும் திரு கமலஹாசனும் அரசியலுக்கு வரவேண்டும்! - ரவிக்குமார்




இது திரைப்பட நட்சத்திரங்கள் கட்சிகளில் சேர்கிற, சேரவேண்டும் என அழைக்கப்படுகிற காலம். திரைத்துறையைச் சேர்ந்த சிலரை அரசியலுக்கு வருமாறு சீரியஸாகவே அழைக்கலாமெனத் தோன்றியது. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் அரசியல் கட்சிகளில் சேரவேண்டும் என்று பொருளல்ல. கட்சி சாராத அரசியல் தளத்தில் அவர்கள் செயல்படவேண்டும். 

ஏ.ஆர்.ரஹ்மான்:

திரை இசை உலகில் தேச எல்லைகளைக் கடந்து சாதனை புரிந்துவருபவர். சமய நல்லிணக்கத்துக்கு அவர் தன் இசையின்மூலம் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்யமுடியும். திரைப்படங்களுக்குப் பின்னணி இசை அமைப்பதிலும், பாடல்களுக்கு மெட்டுப் போடுவதிலும் தன் ஆற்றலை அவர் முடக்கிவிடக்கூடாது. இந்தியாவில் தற்போது மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சமயச் சார்பின்மை என்ற வாழ்க்கை முறையை மீட்டெடுக்க அவர் தனது இசையைப் பயன்படுத்தினால் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். 

கமலஹாசன்:

தனித்துவமான நடிப்பின்மூலம் இந்தியா முழுவதும் அறியப்படுபவர். திரைத்துறையில் இவர் தொடாத பிரிவே இல்லையென்கிற அளவுக்குத் திறமைகொண்டவர். இலக்கியத்திலும் பொதுப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். முற்போக்கான கருத்துகளைச் சொல்லத் தயக்கம் காட்டாதவர். பிரதமருடைய அழைப்பை ஏற்று இப்போது 'தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்திருக்கிறார். தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் 'ஆணவக் கொலைகளுக்கு ( Honour Killings) எதிராகப் பொது மனசாட்சியைத் திருப்புவதில் கமல் உதவமுடியும். வாக்குகளை மட்டுமே குறிவைத்து செயல்படும் அரசியல் கட்சிகள் செய்ய முடியாததை தனி மனிதராக அவர் சாதிக்க முடியும். 

இந்த இருவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற என் கருத்தை ஆதரிப்பவர்கள் இந்தப் பதிவை வழிமொழிந்து பகிருமாறு (share) வேண்டுகிறேன். 

பதான் 'தற்கொலைகள்' - ரவிக்குமார்



பதான் 'தற்கொலைகள்'

- ரவிக்குமார்

எங்களுடையது புனித பூமி
பெண்களைத் தெய்வமாய் வணங்கும்தேசம்
பெண்கள் இங்கு இயற்கையாய் மரிப்பர்
அல்லது தங்களைத் தாங்களே மாய்ப்பர்

வரதட்சணை போதாதென்றால்
இயற்கையாக ஸ்டவ்கள் வெடித்து
இயற்கையாக மரணம் நிகழும்.
இயற்கையாகக் கணவன் அடிக்க
இயற்கை மரணம் நிகழ்வதுமுண்டு.

ஆண்டுதோறும் கோடிப் பெண்கள்
கருவிலேயே தற்கொலை செய்வதை 

இரண்டுமூன்று வயதுக் குழந்தைகள்
ஆண்கள்மீது வீண்பழிபோட
பலவந்தமாக உறவுகொண்டு 
பாதியிலேயே உயிர் துறப்பதை

உயரமான மரத்தில் ஏறித் 
தூக்குபோட்டுத் தொங்குகின்ற 
சிறுமிகளுடைய செல்ல விளையாட்டை

வேறெந்த நாட்டிலும் பார்க்கமுடியாது

எங்களுடையது புனித பூமி
பெண்களைத் தெய்வமாய் வணங்கும்தேசம்
பெண்கள் இங்கு இயற்கையாய் மரிப்பர்
அல்லது தங்களைத் தாங்களே மாய்ப்பர்

தலைநகரில், ஓடும் பேருந்தில் நிர்பயாவுக்கு நேர்ந்ததுகூட
இயற்கை மரணம் என்றே கூறுக.
கயர்லாஞ்சியில் நடந்தது 'தற்கொலை'
என்று சொன்னாலும் மறுப்பதற்கில்லை 

எங்களுடையது புனிதபூமி
பெண்களைத் தெய்வமாய் வணங்கும்தேசம்



Wednesday, November 26, 2014

ரவிக்குமார் கவிதை



நீண்டகாலம் வாழ்ந்துவிட்டதுபோல் தோன்றுகிறது 
இது எனக்கு மட்டும்தானா? அஞ்சலட்டைகளின் காலத்திலிருந்து 
மின்னஞ்சலின் காலத்துக்கு வந்துசேர்ந்த 
எல்லோருக்குள்ளும் எழும் உணர்வா? 

ஒரு நாளிலிருந்து இன்னொரு நாளுக்குப் போகலாம்
ஒரு வருடத்திலிருந்து இன்னொரு வருடத்துக்கும்கூட வந்துசேரலாம்
ஒரு நூற்றாண்டிலிருந்து இன்னொரு நூற்றாண்டுக்கு வந்தவர்களும் உண்டு
நானோ
ஒரு ஆயிரத்திலிருந்து இன்னொரு ஆயிரத்துக்கு வந்தவன்

உட்கார மண்ணோ
ஊன்றிக்கொள்ள நம்பிக்கையோ
தஞ்சம்புக தத்துவமோ இல்லை

களைப்பாயிருக்கிறது
கல்லறையேதும் காலியாக இருக்கிறதா?

Sunday, November 23, 2014

செல்வா கனகநாயகம்( 1952-2014) மறைந்தார்





கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஈழத் தமிழ்க் கவிதைகளை தனது நம்பகமான மொழிபெயர்ப்பின்மூலம் உலக அரங்குக்குக் கொண்டு சென்றவருமான திரு செல்வா கனகநாயகம் நான்கு மணி நேரத்துக்கு முன்னர் மாரடைப்பில் காலமானார் என்ற செய்தியை கவிஞர் சேரன் குறுஞ்செய்தி மூலம் சற்று முன்னர் தெரிவித்தார். 

திரு செல்வா கனகநாயகம் அவர்களை சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை சந்தித்தேன். சேரனுக்கு சில புத்தகங்களைக் கொடுத்தனுப்புவற்காகத்தான் அவரை சந்தித்தேன். மிகவும் மென்மையான குரலில் ஆனால் உறுதியாகப் பேசினார். சேரனும் அவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 

தமிழ்க் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலொன்று (In Our Translated World: Contemporary Global Tamil Poetry ) அண்மையில் அவரால் தொகுத்து வெளியிடப்பட்டிருந்தது. அதைப்பற்றி நான் முகநூலில் எழுதியிருந்தேன். 

 ஈழத் தமிழ்மக்களுக்கு தமது நியாயங்களை உலக அரங்குக்கு எடுத்துச்செல்ல திரு செல்வா கனகநாயகம் போன்றவர்கள் மிகவும் அவசியம். அவரது மரணம் ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பு. எனது ஆழ்ந்த அஞ்சலி. 

Saturday, November 22, 2014

ஆணவக் கொலைகளின் காலத்தில் தலித்துகளும் தேர்தலும்- ரவிக்குமார்


தனித் தொகுதியில் இருக்கும் தலித் வாக்குகள் அவற்றில் போட்டியிடும் தலித் வேட்பாளர்களுக்கு இடையே பிரிகின்றன. அதனால் அங்கே தலித் அல்லாதவர்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. எனவே தலித் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர் அங்கே தேர்ந்தெடுக்கப்படுவது சிரமம். 

பொதுத் தொகுதியில் தலித் ஒருவர் நிறுத்தப்பட்டால் அங்கு தலித் வாக்குகள் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டால் அவருக்கு தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் கொஞ்சம் ஆதரவு தந்தால்கூட அவர் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது. 

தற்போதிருக்கும் தேர்தல் முறையில் தனித் தொகுதியில் தலித்துகளுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய உண்மையானதொரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படவேண்டுமெனில் தலித் மக்களின் நியாயத்தை உணர்ந்த தலித் அல்லாத ஜனநாயக சக்திகளின் ஆதரவு முக்கியம். அந்த ஆதரவைப் பெறுவதற்கு இப்போதிருக்கும் கூட்டணி அரசியல் முழுமையாகக் கைகொடுக்கும் எனச் சொல்லமுடியவில்லை. 

திமுகவும் அதிமுகவும் பெரும்பான்மையாக பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளையே சார்ந்திருக்கின்றன. பொதுத் தொகுதிகளில் நிறுத்தப்படும் தமது வேட்பாளர்களுக்கு தலித் வாக்குகளைக் கொண்டுவந்து சேர்க்கும் முகவர்களாகவே தலித் கட்சிகளை அவை பார்க்கின்றன. பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தினால் அந்தத் தொகுதியில் மட்டுமின்றி மற்ற தொகுதிகளிலும்கூட அது தலித் அல்லாத வாக்காளர்களை ஆத்திரமடையச் செய்துவிடும் என அஞ்சுகின்றன. இந்த நிலை மாறவேண்டுமெனில் சாதி உணர்வைக் கண்டு அஞ்சாத, தான் நிறுத்துகிற வேட்பாளருக்குத் தனது கட்சியின் வாக்குகளைத் திருப்பக்கூடிய ஆற்றல்கொண்ட தலைமை அந்தக் கட்சிக்கு இருக்கவேண்டும். அல்லது தலித் அல்லாத வாக்காளர்களிடையே ஜனநாயக சக்திகள் கணிசமாக இருக்கவேண்டும். 

தற்போது கூட்டணியில் இடம்பெற்று தலித் கட்சிகளின் வேட்பாளர்கள் ஓரிரு இடங்களில் வெற்றிபெறுவது பெருமளவு பரஸ்பர வெற்றிக்கான உடன்பாடாக இருக்கிறதேயன்றி தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்படுவதாலோ ஜனநாயக முதிர்ச்சியினாலோ அல்ல என்றுதான் தோன்றுகிறது. இந்தப் பரஸ்பர வெற்றிக்கான உடன்பாடு தலித் கட்சிகள் தலித் வாக்குகளை தமக்குப் பின்னால் திரட்டக்கூடியவரை மட்டும்தான் செல்லுபடியாகும். 

இந்த கூட்டணி நடைமுறையில் தலித் கட்சிகளுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. தாம் இடம்பெறும் கூட்டணிக் கட்சியிலுள்ள தலித் அல்லாதவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவை தலித் பிரச்சனைக்கு அழுத்தம் தராமல் சாத்வீகமாக நடந்துகொள்ளவேண்டும். அப்படி நடந்துகொண்டால் காலப்போக்கில் அவை தலித் வாக்குகளைத் தமக்குப் பின்னால் திரட்டமுடியாத நிலை ஏற்படும். அந்த நிலையில் தலித் வாக்குகளை காசு கொடுத்தோ கவர்ச்சியின்மூலமோ வாங்கிக்கொள்ளலாம் என பெரிய கட்சிகள் எண்ணக்கூடும். அதனால் தலித் கட்சிகளுக்குக் கூட்டணி வாய்ப்பும் பேர சக்தியும் குறைந்துபோகும். 

இதற்கான தீர்வுதான் என்ன? 

1. தலித் கட்சிகள் தலித் மக்களின் உரிமைகளுக்காக சமரசமின்றிப் போராடவேண்டும்.  

2.  பொதுப் பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடவேண்டும். அரசியல் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். ஆனால், அதற்காகக் கருத்தியல் சமரசங்களை செய்துகொள்ளக்கூடாது. 

3. தலித் மக்களின் நியாயத்தை உணர்ந்த தலித் அல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளம் கண்டு அவர்களோடு தோழமை கொள்ளவேண்டும். 

கோட்பாட்டளவில் சுலபமாகத் தெரியும் இந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துவது ஆணவக் கொலைகளின் காலத்தில் அவ்வளவு எளிதானதா ?

Friday, November 21, 2014

புதிய வகை தீண்டாமையை எதிர்க்க புதிய போராட்ட களங்களை உருவாக்குவோம்!



( மராட்டிய மாநிலத்தில் கடந்த அக்டோபர் 20 ஆம் நாள் மூன்று தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று (21.11.2014) காலை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ரவிக்குமார் ஆற்றிய சிறப்புரையின் சுருக்கம்) 
============ 

தோழர்களே! 
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மண்ணில், தலித் பேந்தர்கள் உருவெடுத்த மாநிலத்தில் இப்போது தலித்துகள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. அம்டோபர் மாதம் இருபதாம் தேதி ஒரே குடிம்பத்தைச் சேர்ந்த மூன்றுபேரைப் படுகொலை செய்திருக்கிறார்கள். அதுவும் மிகக் குரூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி ஊரெங்கும் வீசியிருக்கிறார்கள். கடந்த ஆண்டிலும் இதேபோல மூன்று இளைஞர்கள் வெட்டி வீடசப்பட்டனர். இந்தப் படுகொலையைச் செய்த வெறியர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பி அங்கே தண்ணீர் இருக்கிறதா இல்லையா எமன்று கண்டுபிடிப்பவர்களுக்கு இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களைக் கண்டுபிசடிக்க முடியவில்லை. இயுதான் இந்தியாவிலிருக்கும் சாதிவெறியின் சாதனை. 

பொருளாதாரத்தில் ஒரு சதவீதம் இரண்டு சதவீதம் வளர்வதற்கே இந்தியா திணறிக்கொண்டிருக்கிறது. ஆனால் தலித்துகளின் மீதான வன்கொடுமைகள் மட்டும் பதினொரு சதவீதம் வளர்ந்திருக்கிறது. 
தமிழ்நாட்டிலிருக்கும் சில கட்சிகளைப்போல விடுதலைச் சிறுத்தைகள் சாதி சங்கமாக இருந்து கட்சியாக மாற்றப்பட்ட இயக்கமல்ல. இது எல்லோருடைய உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிற கட்சி. தமிழ் இனத்துக்காக மொழிக்காக தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஈழத் தமிழர்களுக்காக விசிக வைப்போல குரல் கொடுத்த போராசடிய ஒரு கட்சி இங்கே வேறு எதுவும் கிடையாது. நாம் எல்லோரையும் ஒன்றாகக் கருதுகிறோம். எல்லா பிரச்சனைகளையும் நம் பிரச்சனைகளாகப் பார்க்கின்றோம். ஆனால் மற்ற கட்சிகள் அப்படிப் பார்க்கிறார்களா? இப்போது தர்மபுரியில் பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் இறந்துபோனதற்காக முந்திக்கொண்டு அறிக்கை விடுபவர்கள் இளவரசன் கொல்லப்பட்டபோது தலித் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டபோது ஏன் மௌனமாக இருந்தார்கள்? ஈழத் தமிழர் பிரச்சனையில் போராட வருகிறவர்கள் இங்குள்ள தலித்துகள் தாக்கப்படும்போது ஏன் காணாமல் போய்விடுகிறார்கள்? 

தலித் மக்களுடைய பிரச்சனை மற்ற பிரச்சனைகளைப் போன்றதல்ல. ஒருவன் டீ குடிக்க வேண்டுமென்றால் டீயின் விலையான எட்டு ரூபாயையோ பத்து ரூபாயையோ கொடுத்தால் போதும் ஆனால் தாழ்த்தப்பட்ட சமுஇகத்தைச் சேர்ந்த ஒருவன் அந்த ரூபாயோடு தனது சுயமரியாதையையும் விலையாகக் கொடுக்கவேண்டும். ஒரு மாணவன் பள்ளியிலோ கல்லூரியிலோ பாடங்களை படித்தாலே போதும் சணறிதழ் கிடைத்துவிடும் ஆனால் ஒரு தலித் மாணவனோ அவமானங்களை சகித்துக்கொள்ளவும் படித்துக்கொண்டால்தான் அவன் படிப்பை முடிக்க முடியும். ஒரு அலுவலகத்தில் வேலை மட்டும் செய்தால் ஒருத்தனுக்கு ஊதியம் கிடைத்துவிடும். ஆனால் ஒரு தலித் ஊழியரோ வேலையோடு சேர்த்து அநீதிகளை புறக்கணிப்புகளை சகித்துக்கொண்டால்தான் அவர் வேலையிலேயே இருக்க முடியும். இதை மற்ற அரசியல் கட்சிகளால் புரிந்துகொள்ள முடியுமா? 

காங்கிரஸ் அரசுக்கும் தற்போதுள்ள பாஜக அரசுக்கும் என்ன வித்தியாசம்? அது செக்யூலர் அரசு இது மதவாத அரசு என்பார்கள். சிறுபான்மையினர் விஷயத்தில் அவற்றுக்கிடையே வித்தியாசம் இருக்கலாம். தலித் விஷயத்தில் ஒன்றும் இல்லை. கடந்த ஆட்சியில்தான் வன்கொடுமைத் தடுப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. அதை சட்டமாக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டு மக்களவையில் அறிமுகப்படுத்தாமல் வைத்துக்கொண்டார்கள். சாதி இந்துக்கள் கோபித்துகொள்வார்கள் என்ற பயம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலித்துகளின் வாக்குகளை வாங்குவதற்காக அதை அவசர சட்டமாகப் பிறப்பித்தார்கள். தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பாஜக அரசு வந்தது. அந்த அவசரசட்டத்தைக் காலாவதியாகும்படி பாஜக அரசு விட்டுவிட்டது. மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவிட்டார்கள். அது டசட்ட வடிவம் பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. இதையெல்லாம் கேட்பதற்குக்கூட இன்று நாதியில்லை. நமது தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தபோது இதற்காகக் குரல் கொடுத்தார். இப்போது நாம் ஒவ்வொரு மாவட்டத் தலை நகரத்திலும் குரல் கொடுக்கிறோம். 

இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் ஆஸ்திரேலியாவில் வீர உரை ஆற்றிக்கொண்டிருந்தபோதுதான் அடிமைத்தனம் ஐநா அறிக்கை வெளியானது .உலகத்திலேயே அதிக அளவு அடிமைகளை வைத்திருக்கும் நாடு இந்தியாதான் என்று அது சொன்னது. சகுழந்தைத் தொழிலாளிகள், திருப்பூர் ப ன்ற நகரங்களல் கொத்தடிமைகளாக இருக்கும் பெண்கள், கட்டுமானத் துறையில் வெளிமாநில கூலிகள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு கிராமத்திலும் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருக்கும் தலித்துகள். இப்படியொரு கேவலமான நிலையில் நாட்டை வைத்திருப்பதற்கு வெட்கப்படவேண்டாமா? இப்போதும் தனிக் குடியிருப்பு, தனிக் கிணறு, தனி சுடுகாடு என வைத்துக்கொண்டு நாங்கள் முன்னேறிவிட்டோம் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா? 

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார். சுத்தமாக இருக்கும் இடத்தில் குப்பையைக்கொண்டுவந்து கொட்டி கூட்டுவதுபோல போஸ் கொடுக்கிறார்கள். இப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இழிதொழில்களில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என விளக்கம் கேட்டிருக்கிறது. பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறது. சாக்கடைகளை சுத்தம் செய்ய எந்திரங்கள் இருக்கின்றன. நம்முடைய நகரத் தந்தைகளும் மாநகர மேயர்களும் சொகுசுக் கார்கள் வாங்க நிதியை செலவழிக்கிறார்கள். ஆனால் சாக்கடை அடைப்பை சரிசெய்யும் அந்த எந்திரத்தை வாங்குவதில்லை. யார் படத்தை மாட்டுவது யார் படத்தை அகற்றுவது என்று சண்டை போட்டுக்கொள்ளவே மாமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் போதவில்லை அவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகவே தெரியாது. இந்த ஊரை ஆன்மீக மையம் என்பார்கள், நான்கு நாட்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை செய்தாமல் விட்டால் இந்த ஊரே நாறிப்போய்விடும். அவர்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டின் சுத்தம் என்ன ஆகும்? ஆனால் அவர்களுடைய உயிர்களை துச்சமாக நினைக்கிறார்கள். ஒரு எந்திரத்தின் விலையைவிட அவர்களின் உயிர் மலிவாகப்போய்விட்டது. இந்த கேவலமான நிலைமை தொடர விடலாமா? நாம்தான் அதைக் கேட்கவேண்டும். இந்த மாவட்டத்தில் இருக்கும் நகராட்சிகள் பேரூராட்சிகளுக்குச் சென்று அவற்றின் தலைவர்களிடத்தில் நமது கட்சியின் சார்பில் மனு ஒன்றை அளியுங்கள் மத்திய அரசு இயற்றியிருக்கும் 'கைகளால் துப்புரவு செய்வதைத் தடை செய்யும் சட்டம் ' அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதா எனக் கேளுங்கள். பாதாள சாக்கடைகள் இருந்தால் அங்கே அடைப்புகளை சரிசெய்வதற்கான எந்திரங்ளை வாங்கச் சொல்லுங்கள். 

கொலை செய்ய்யப்படுவது மட்டும்தான் அடக்குமுறை அல்ல, வாயில் மலத்தைத் திணிப்பதும், சிறுநீர் கழிப்பதும் மட்டும்தான் வன்கொடுமை என்பதல்ல. தீண்டாமையும் சாதி வெறியும் இப்போது நுட்பமான விதங்களில் வெளிப்படுகின்றன. அவற்றையெல்லாம் கண்டறிந்து அவற்றை எதிர்ப்பதற்கான புதிய போராட்ட களங்களை உருவாக்குவோம்! நன்றி வணக்கம்! 

Thursday, November 20, 2014

நாடற்றவர்கள்



நாடற்ற நிலை என்பது குடியுரிமை ( citizenship) என்பதிலிருந்து பிறக்கிறது. ஒரு காலத்தில் பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்பட்ட குடியுரிமை இப்போது ஒருவரின் விருப்பத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இதை நவீன கால வாழ்க்கையில் நேர்ந்த முன்னேற்றம் என்றே சொல்லவேண்டும். 

இன்று எந்தவொரு நாடும் தமது குடிமக்களைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானவர்களை சேர்த்தே பராமரிக்கவேண்டியுள்ளது. அலுவல் காரணமாக நாடி வந்தவர்களும் அரசியல் காரணங்களால் தப்பி வந்தவர்களும் இதில் அடக்கம். உலகில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் நாடற்ற ஒரு குழந்தை பிறக்கிறது என UNHCR கூறுகிறது. 

நாடு என்பது ஒரு அரசியல் கட்டுமானமே தவிர புவியியல் யதார்த்தம் அல்ல. நாடற்ற நிலையைப் போக்கவேண்டுமெனில் ஒரு நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் குடிமகனுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். சட்டபூர்வனமான ஆவணங்கள் அனைத்திலும் Citizen என்பதற்குப் பதிலாக Resident என்ற சொல் பயன்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் இனம் தேசம் என்ற குறுகிய எண்ணங்கள் மறைந்து மானுடம் என மனது விரியும்! 

Tuesday, November 18, 2014

ரவிக்குமார் நூல்கள்



1       அதிகாரத்தின் மூலக்கூறுகள்- எலியா கனெட்டி 
 தமிழில்:ரவிக்குமார் பக்கங்கள்    40      விலை 25/-

2       எல். இளையபெருமாள்- வாழ்வும் பணியும்  - ரவிக்குமார் பக்கங்கள் 108     விலை 50/-

3       பள்ளிப்பருவம்- ஞானக்கூத்தன் ,இந்திரா பார்த்தசாரதி ,இமையம் உள்ளிட்ட ஆறு எழுத்தாளர்களின் பள்ளிப்பருவ அனுபவங்கள் தொகுப்பு:ரவிக்குமார் பக்கங்கள்    96   விலை 80/-

4      மழைமரம்- ரவிக்குமார்  கவிதைகள் ,க்ரியா வெளியீடு  பக்கங்கள்    72     விலை 65/-

5       சுவாமி சகஜானந்தா  -சட்டபேரவையிலும் மேலவையிலும் ஆற்றிய உரைகள் - ரவிக்குமார்  பக்கங்கள்  143     விலை 90/-

6       வரலாறு என்னும் கதை- எடுவர்டோ கலியானோ தமிழில் :ரவிக்குமார் பக்கங்கள்    109     விலை 70/-

7       கடல் கொள்ளும் தமிழ்நாடு- சூழலியல் கட்டுரைகள் -ரவிக்குமார் பக்கங்கள்    141  விலை    75/-

8       மாமிசம்-  உலகச்  சிறுகதைகள்  தமிழில் :ரவிக்குமார் பக்கங்கள்     63     விலை  40

9      காற்றின் பதியம்- இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்   -ரவிக்குமார் பக்கங்கள்   190   விலை   100/-

10      உரையாடல் தொடர்கிறது- எட்வர்ட் செய்த்  ,மிஷெல் ஃ பூக்கோ,மார்க்யெஸ் ,அகஸ்தோ போவால் உள்ளிட்டோரின்,கட்டுரைகளும் நேர்காணல்களும் தமிழில் :ரவிக்குமார் பக்கங்கள்  152  விலை   100/-

11      கடல் கிணறு- ரவிக்குமார் சிறுகதைகள் பக்கங்கள்     79   விலை    60/-

12      சொல்லும் செயல் - ரவிக்குமாரின்  சட்ட மன்ற உரைகள்      பக்கங்கள் 350    விலை  200/-

13      நூர்ந்தும் அவியா ஒளி-  கா.சிவத்தம்பி  குறித்த கட்டுரைகள்    பக்கங்கள் 128    விலை  100/-

14      வலசைப் பறவை- உலகக்  கவிதைகள்   தமிழில் : ரவிக்குமார் பக்கங்கள் 96   விலை    60/-

15      நூல் ஏணி- தமது ஆசிரியர்களைப்பற்றிய தலித் எழுத்தாளர்களின் பார்வைகள் பக்கங்கள்   96   விலை   80/-

16      எங்களுடைய காலத்தில் தான் ஊழி நிகழ்ந்தது- முள்ளிவாய்க்கால் படுகொலை  குறித்த கவிதைகள் -சேரன் ,லதா ,ரவிக்குமார்  பக்கங்கள்   68   விலை    50/-

17      வெள்ளை நிழல் படியாத வீடு- கறுப்புக் கவிதைகள்  தமிழில் :ரவிக்குமார் பக்கங்கள் 64     விலை  40/-

Mao and Ambedkar



Is there any parallel between Ambedkar and Mao Tse Tung? Yes both were inspired and influenced by the great American thinker John Dewy. Ambedkar have mentioned about Dewy in his writings. But Mao did not. During the time of Cultural Revolution Mao have initiated many reforms in Education. He was against exams and testing. " Testing treats students as enemies and is often launched against them in an ambush" he wrote in 1964. " Opposing direct instruction was advocated by capitalist educationist as early as the May Fourth Movement" said Mao. "The capitalist educator Mao referred to was John Dewy, who lectured at Peking University in 1919 when Mao was an assistant librarian there " said Yong Zhao who has written an important book ' Who's Afraid of the Big Bad Dragon?'

Sunday, November 16, 2014

அம்பை 70



எழுத்தாளர் அம்பை இன்று ( 17.11.2014) தனது 70 ஆவது  பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சற்றுமுன் அவரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்.  தனது பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்தினரோடு கோவா வந்திருப்பதாகச் சொன்னார். 

தமிழ் இலக்கிய உலகில் பெண் ஒருவர் எழுத்தாளராக அங்கீகாரம் பெறுவது அத்தனை சுலபமல்ல. அண்மையில் ஒரு எழுத்தாளர் (திரைப்பட வசனகர்த்தா ?) விளம்பரத்துக்காகக் கிளப்பிய சர்ச்சையில் எப்படியெல்லாம் பெண் எழுத்தாளர்கள் அவதூறு செய்யப்பட்டனர் என்பதை நாம்
பார்த்தோம். அந்த நேரத்தில் அறச்சீற்றத்தோடு அவர் எதிர்வினை புரிந்ததையும் பார்த்தோம். 

அம்பை எழுத்துலகில் நுழைந்த காலமும்கூட பொற்காலம் இல்லை. ஆனால் அவரது உழைப்பும் படைப்புத் திறனும் அவருக்கென ஒரு இடத்தைத் தமிழ் இலக்கிய உலகில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் உருவாக்கித் தந்திருக்கிறது. 

அம்பை படைப்பிலக்கியங்களை உருவாக்கியவர் மட்டுமல்ல. ஆழமான ஆய்வுக் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள், அளுமைகளை அடையாளம்
கண்டு அவர்களின் நேர்காணல்களை ஒலி ஒளி ஆவணங்களாகத் தொகுத்து அவற்றுக்கென மும்பையில் ஒரு ஆவணக் காப்பகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். தமிழில் எழுதும் இளம் பெண் படைப்பாளிகளை அவரைப்போல் ஊக்குவிப்பவர்கள் எவரும் இருக்க முடியாது. 

மணற்கேணி 26 ஆவது இதழ் ஈழத் தமிழ் அறிஞர் எம்.ஏ.நுஃமான் சிறப்பிதழாக டிசம்பரில் வெளிவருகிறது. அதற்கு அடுத்த இதழை அம்பை 70 என்ற தலைப்பில் சிறப்பிதழாகக் கொண்டுவர மணற்கேணி விரும்புகிறது. அதற்குப் பங்களிப்புச் செய்யுமாறு படைப்பாளிகளையும் ஆய்வாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கட்டுரைகளை manarkeni@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். 
- ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி

Monday, November 10, 2014

அறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனுக்கு அஞ்சலி - ரவிக்குமார்


தமிழ்நாட்டில் அறிஞர் என மதிக்கத்தக்க ஒருசிலருள் முக்கியமானவரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இன்று (10.11.2014) மாலை 4 மணிக்கு டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அங்கு பேராசிரியராக இருக்கும் திரு. சந்திரசேகர் மூலம் அறிந்தேன். நேற்று இரவு ரத்த வாந்தி எடுத்த அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் அங்கு அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என பேரா.சந்திரசேகர் தெரிவித்தார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பாண்டியன் திராவிடக் கருத்தியலை ஏற்றுக்கொண்டு குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தவர். எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லியில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது Image Trap என்ற ஆங்கில நூல் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை முன்வைத்து தமிழக அரசியலில் சினிமாவின் செல்வாக்கை ஆராய்ந்த முக்கியமானதொரு நூலாகும். 

பாண்டியனுக்கும் எனக்குமான உறவு நட்பும் பிணக்கும் கொண்டது. திராவிட அரசியல் குறித்த எனது கருத்துகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. அதுபோலவே எனக்கும் அவரது அணுகுமுறைமீது விமர்சனங்கள் இருந்ததுண்டு. திமுகவைப் பற்றி உயர்ந்த மதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதிய பாண்டியன், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஈழப் பிரச்சனை தொடர்பான எனது கட்டுரைகளின் தொகுப்பான ' தமிழராய் உணரும் தருணம்' என்ற நூலுக்கு அவர் முன்னுரை எழுதித் தந்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒரு இலக்கிய மாநாட்டில் பேச என்னை அழைத்திருந்தார்கள். நான் போகமுடியவில்லை. எழுத்தாளர் அம்பைதான் அந்த அமர்வை ஒருங்கிணைத்தார். மாற்று ஏற்பாடாக யாரைக் கூப்பிடலாம் என அம்பை என்னிடம் கேட்டபோது நான் பாண்டியன் அல்லது ராஜன்குறையைக் கூப்பிடுங்கள் என்றேன். 

உடல்நலம் குறித்து கொஞ்சமும் அவர் அக்கறை காட்டியதில்லை. JNU இல் வாய்த்த  தனிமையை விரட்ட அவர் கையாண்ட வழிமுறை அவரது உடல் நலத்துக்குக் கேடாகிவிட்டது. அவர் எழுதத் திட்டமிட்டிருந்த பல நூல்களை அவர் எழுதாமலே போய்விட்டார். பாண்டியனின் இடத்தை நிரப்பக்கூடிய இன்னொருவர் இல்லை என்பதை நினைக்கும்போது அவரால் உண்டான வெற்றிடம் பெருகுகிறது. அறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கு எனது அஞ்சலி. 

Saturday, November 8, 2014

விபச்சாரத்தை சட்டபூர்வமானதாக்கலாமா?

விபச்சாரத்தை சட்டபூர்வமாதாக்குவது குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவி லலிதா குமாரமங்கலம் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அது பெண்களின் சம உரிமையை உறுதி செய்திருக்கும் ஐநா சபையின் மனித உரிமை பிரகடனத்துக்கு எதிரானது. பாலின சமத்துவம் இல்லாத இந்தியா போன்றதொரு நாட்டில் விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்களை பாதிக்கப்பட்டவர்கள்( victims) என்றே பார்க்கவேண்டும். பாலியல் தொழிலில் உள்ளவர்களில்
99% பேர் அதில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள்தான். ஒருபுறம் பொது இடங்களில் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதைக்கூட குற்றம் எனச்சொல்லி வன்முறையை ஏவுவது இன்னொருபுறம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பது- இவை இரண்டுமே பெண்களுக்கு எதிரானவைதான். பெண் என்பவள் ஒன்று குடும்பம் என்ற அமைப்புக்குள் ஆணின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் அல்லது விபச்சார விடுதியில் அதைச் செய்யவேண்டும் என்பது கீழ்த்தரமான நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சிந்தனை தவிர வேறில்லை. 

Friday, November 7, 2014

சாதிப் பெரும்பான்மைவாதம் என்ற ஆபத்து - ரவிக்குமார்



‘‘சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் செய்ய வேண்டும்’’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு
 உள்ளது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளும் அந்தக் கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்து விட்டன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பாலான கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள காரணத்தால் மத்திய அரசும் இதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இதை ஏற்காவிட்டால் ‘ பிற்படுத்தப்பட்டோரின் எதிரி‘ என்று வர்ணிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக காங்கிரஸ் அரசு இதற்கு ஒப்புக்கொண்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சனையை இப்போது அமைச்சர்களின் குழு ஒன்றின் ஆய்வுக்காக மத்திய அரசு அனுப்பியிருக்கிறது.
       சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதுகுறித்து மத்திய அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லை. எம்.எஸ்.கில், கபில் சிபல், ஆனந்த் சர்மா அகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆனால் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ தற்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இதைச் சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக்கூறியதாகத் தெரிகிறது.  
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகையைக் கணக்கெடுத்து அறிவிப்பதென்பது ஏறத்தாழ 1871லிருந்து நடந்து வருகிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மத்திய அரசு இதைச் செய்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1931ஆம் ஆண்டுவரை சாதி வாரியாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் உலக யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தும்போது இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது. அப்போது சாதி வாரியாகக் கணக்கெடுப்பு செய்வதா? இல்லையா? என்று மத்திய அரசு ஆலோசித்தது. அப்படி சாதி வாரியாகக் கணக்கெடுப்பதால் மக்களிடையே பிரிவினை உணர்வுதான் அதிகரிக்கும். எனவே, அது தேவையில்லை என்று அப்போது முடிவு செய்த மத்திய அரசு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை மட்டும் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்றும் மற்றவர்களை அவ்வாறு கணக்கெடுப்பதில்லை என்றும் முடிவு செய்தது. அந்த நடைமுறைதான் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதை மாற்ற வேண்டும். மீண்டும் சாதிவாரியாக மக்கள் தொகையைக் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்ற குரல்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. 
       அண்மையில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘ சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்படாத நிலையில் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள்தொகை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?‘ எனக் கேட்டிருந்தது. அப்போதிலிருந்தே இக்கோரிக்கையைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் முன்வைக்கத் தொடங்கிவிட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அது மேலும் தீவிரமடைந்துவிட்டது. தூங்கிக் கிடந்த பூதம் ஒன்றை உசுப்பிவிட்ட கதையாக இப்போது இந்தக் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 
       1955 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியிருந்தது. 2399 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகப் பட்டியலிட்டிருந்த அந்த அறிக்கை அவற்றுள் 837 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனக் குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமோ எஸ் சி / எஸ் டி பிரிவினரின் மக்கள்தொகை அல்லாது இந்தியாவில் 54 சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வதாகவும் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனவும் கூறியிருந்தது.
      மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன்னால் பிற்படுத்தப்பட்டவரின் மக்கள் தொகையை சரியாகக் கணக்கிடுவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் இருக்கும் எண்ணிக்கை பலம் கொண்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இந்தக் கோரிக்கையை அதிகமாக வலியுறுத்துகின்றனர். லாலுபிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், நிதிஷ்குமார் போன்றவர்கள் இதை வலியுறுத்துவது அதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.
சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்பது இடஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதற்காக மட்டும் அல்ல. அது சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுவதோடும் தொடர்பு கொண்டுள்ளது. இப்போது பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கான நிதியை அந்த சமூகத்தினரின் மக்கள் தொகைக்கு ஏற்பவே ஒதுக்க வேண்டியுள்ளது. 1931ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் யூகமாக ஒரு விழுக்காட்டை கற்பனைசெய்து அதற்கேற்பத்தான் இப்போது  நிதி ஒதுக்குகிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உண்மையான மக்கள் தொகை சரியாகத் தெரிந்தால் அதனடிப்படையில் தமக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அந்த சமூகத்தினர் எதிர்பார்க்கிறார்கள். 
பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையே இருக்கின்ற எண்ணிக்கை பலம் குறைந்த சில சாதிகளும் தமக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்பதற்காக சாதிவாரி இடஒதுக்கீட்டை வலியுறுத்துகின்றன. பெரிய சாதியினரோடு இடஒதுக்கீட்டு உரிமைக்காக போராடித் தமது பங்கை அவர்கள் பெறுவது சாத்தியம் இல்லை. எனவே எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு தொகுப்பை ஏற்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நரிக்குறவர், நாவிதர் முதலானோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தமக்கு உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கேட்டுவருகின்றனர். அதற்காக சாதிவாரி இடஒதுக்கீடு அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களிலேயும் இதுதான் நிலை. அவர்களிலும் எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதால் தம்மை சாதிவாரியாக கணக்கெடுப்பு செய்து உள்ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கின்றனர். அண்மையில் அருந்ததியினருக்கு அளிக்கப்பட்ட உள்ஒதுக்கீடு இதற்கு ஒரு சான்றாகும்.
சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதால் சில நன்மைகள் இருந்தபோதிலும், சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவ உரிமையாகக் கருதப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப இருந்தாலும் அது பிரதிநிதித்துவம் ஆகாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும், தீண்டாமை என்னும் கொடுமைக்கு அவர்கள் தொடர்ந்து ஆளாக்கப்படுவதை உணர்ந்து அதற்கான இழப்பீடாகவும்தான் அவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வழங்கப்படுகிறது. கல்வி, பொருளாதாரம் ஆகிய தளங்களில் பிற்படுத்தப்பட்டோரும் இதேவிதமான புறக்கணிப்புகளுக்கு ஆளான போதிலும் சமூக தளத்தில் அவர்கள் அத்தகைய இழிநிலையை அனுபவிப்பதில்லை. எனவே இந்த இரண்டு பிரிவினருக்குமான இடஒதுக்கீட்டை ஒரேவிதமாகப் பார்ப்பதில் பிரச்சனை இருக்கிறது.
இடஒதுக்கீட்டைச் சர்வரோக நிவாரணியாக கருதுகிற ஒரு போக்கு நம்மிடையே அதிகரித்து வருகிறது. இடஒதுக்கீட்டைக்கொண்டு இந்தியாவிலிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி இப்போது அளிக்கப்படும் இடஒதுக்கீடானது ஒரு சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை. அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால் ஒரு சமூகத்தின் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே அதை அனுபவிக்கக்கூடிய சூழல் இருக்கிறது. மண்டல் குழு பரிந்துரைகளையட்டி உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட புகழ் பெற்ற தீர்ப்பு இடஒதுக்கீட்டின் அளவை ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது என்று வரையறுத்ததை நாம் அறிவோம். அதுமட்டுமிறி இந்த இட ஒதுக்கீடு என்பது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இன்று எல்லாமே தனியார்மயம் ஆகிவரும் சூழலில் இதற்கு எந்த அளவுக்கு மதிப்பிருக்கும் என்பதும் ஒரு கேள்வியாகும். 
சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் அத்துடன் இன்னொரு கருத்தையும் சொல்லியிருக்கிறது. சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். ஒருவேளை சாதிவாரி கணக்கெடுப்பு செய்யப்பட்டால் அந்த விவரங்கள் வெளியானவுடன் நிச்சயமாக அடுத்த கோரிக்கை முன்வைக்கப்படும். இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என்ற அந்த கோரிக்கை முன்னிலும் வலுவாக முன்வைக்கப்படும்.
       சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்பவர்கள் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்: இது மக்களிடையே பிரிவினை உணர்வை அதிகமாக்கிவிடும், இது சிறிய சாதிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.இரண்டாவது காரணத்தை அமைச்சர் எம்.எஸ்.கில்லும் கூறியிருக்கிறார். மக்களிடையே இப்போது சாதி உணர்வே இல்லை என்று கூறிவிடமுடியாது. ஏற்கனவே இந்திய சமூகம் சாதியாகத்தான் பிரிந்துகிடக்கிறது. அதனால்தான் அம்பேத்கர், ’ இந்தியாவில் சமூகம் என்பதே இல்லை. இங்கு இருப்பது சாதிகளின் தொகுப்பு மட்டும்தான்’ என்று சாடினார். ஆனால் வரவர சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மையாகும். இந்தியாவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்த அளவுக்கு சாதிகள் இல்லை என்றே தெரிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் மெக்கன்ஸி என்ற வெள்ளைக்கார அதிகாரியால் தொகுக்கப்பட்ட வலங்கை, இடங்கை சாதிகளின் சரித்திரம் என்ற நூலில் இருநூறு சாதிகளுக்கும் குறைவாகவே தமிழ்நாட்டு சாதிகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாதி உணர்வு அதிகரிப்பதே அதற்குக் காரணம் எனச் சொல்லலாம். சாதிவாரிக் கணக்கெடுப்பு அந்த சாதி உணர்வை அதிகரிக்கச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
சிறிய சாதிகள் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நியாயமானதே. ஏற்கனவே எண்ணிக்கை பலம் கொண்ட சாதிகள் இந்த நாட்டை ஆள்வதற்குத் தங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று கூறி வருகின்றன. நமது தேர்தல் அமைப்பு முறை எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகும். அதிக எண்ணிக்கையிலான ஆதரவைப் பெறுகிறவர்கள்தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். எனவே, பெரும்பான்மை வாதம் என்பது இங்கு எளிதில் தலைதூக்கக்கூடிய சூழல் உள்ளது. அப்படித்தான் மதப்பெரும்பான்மை வாதம் இந்திய அரசியலில் தீவிரம் பெற்றது. அதனால் ஏற்பட்ட சீரழிவுகளைக் கடந்த இருபது ஆண்டுகளாகப் பார்த்துவிட்டோம். இப்போது சாதிப்பெரும்பான்மை வாதம் அதேபோல தலைதூக்கக் கூடிய ஆபத்து இந்த சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பினால் ஏற்படக்கூடும். மதப்பெரும்பான்மை வாதத்தைவிட சாதிப்பெரும்பான்மை வாதம் ஆபத்தானதாகும்.இதை நாம் மறந்துவிடக்கூடாது.
       அப்படியானால் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமா? வேண்டாமா? அதற்கு என்னதான் பதில் என்ற கேள்வி எழலாம். 1881 மற்றும் 1891 ஆம் ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்தபோது தமிழ்மக்களை ‘சாதியற்ற திராவிடர்கள்‘ எனப் பதிவுசெய்துகொள்ளுமாறு அயோத்திதாசப் பண்டிதர் வற்புறுத்தினார். ’ஆயிரம் உண்டிங்கு சாதி’ என்றபோதிலும் ’அன்னியர் வந்து புகல் என்ன நீதி?’ எனக்கேட்டார் பாரதி. அவர்களைப்போன்ற சீர்திருத்தவாதிகள் இன்று இல்லை. மேலும் மேலும் சாதிவெறி கொண்டவர்களாகவே மக்கள் மாற்றப்படுகிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமா என்பதைவிட சாதி வேண்டுமா என்ற கேள்வியே முக்கியமானது. அந்தக் கேள்வியை முன்வைத்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும்

Sunday, November 2, 2014

ரவிக்குமார் கவிதை


வானத்தை நோக்கி விட்டெறியும் கனவு
சிலநேரம்
இன்மையிலிருந்து இன்மையைநோக்கிப் பாயும் 
எரிகல்லாய் தடயமற்றுப் போகிறது
சிலநேரம்
மின்மினிப் பூச்சியாய் தலையைச் சுற்றி வருகிறது
சிலநேரம் பனியாக மாறி இலைகளில் படிகிறது


வானை நோக்கி விட்டெறியும் கனவு
நட்சத்திரமாக மாறுவது 
எப்போதோதான் நடக்கும்.
என்றபோதிலும் மனந்தளராதே 
உன் முன்னோர் எறிந்த கனவுதான் நிலவு
சூரியனும்கூட அப்படியென்றுதான் சொல்கிறார்கள்

முத்தம் - கே.சச்சிதானந்தன் தமிழில் :ரவிக்குமார்



நீங்கள் நம்பவில்லை
இரண்டுபேர் முத்தமிட்டுக்கொண்டால்
உலகமே மாறிவிடும்
எனக் கவி ஒருவன்  சொன்னபோது

பாருங்கள் ; ஒரு ஆண் ஒரு பெண்
அவர்கள் முத்தமிட்டுக்கொள்கிறார்கள்
ஒரு ஆண் ஒரு பெண் அல்ல
பல ஆண்கள் பல பெண்கள்

கைகோர்த்து நடந்து சென்றாலே 
சட்டத்தின்,  ஒழுக்கத்தின் காவலர்கள்
எங்கு புருவங்களை நெரித்தார்களோ
அதே சதுக்கத்தில்

ஒரு ஆண்  ஒரு பெண்
பல ஆண்கள் பல பெண்கள்

முன்பு முத்தங்களின்
சிறைச்சாலையாக இருந்த
சதுக்கத்தில்

அவர்கள் உடைக்கிறார்கள் :
இப்போதிருக்கும் சாவின் சட்டத்தை
அவர்கள் படைக்கிறார்கள்
வாழ்வுக்கான எதிர்கால சட்டத்தை  

ஆத்திரமூட்டும் விதத்தில்
பொது இடத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் முத்தம்தான் கவிதை

( 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரபு வசந்தம் என அழைக்கப்பட்ட ஜனநாயகத்துக்கான போராட்டத்தின்போது துருக்கியில் இருக்கும் தக்ஸின் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் முத்தமிட்டு அடக்குமுறைக்கான தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதேபோன்று இன்று கேரளாவில் நூற்றுக் கணக்கானோர் முத்தமிட்டு மத அடிப்படைவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தக் கவிதை துருக்கிப் போராட்டம் குறித்து 2013 இல் எழுதப்பட்டது. மலையாளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் :கே .சச்சிதானந்தன் . மணற்கேணி இதழுக்கென அவரால் அனுப்பப்பட்டது. )