Saturday, May 30, 2015

அப்பரும் மாணிக்கவாசகரும் புலையர்களா? - நாக.இளங்கோவன்

( முனைவர் இராசம் அம்மையாரின் நூல் குறித்த ஒரு எதிர்வினை) 

சாதி ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் ஆயுநருக்கு
அரிய நூலை வழங்கியிருக்கிறார் முனைவர் இராசம் அவர்கள்.

சங்க இலக்கியங்களை, நுனிப்புல் மேய்வது போலப் படித்துவிட்டு
சாதி, தீண்டாமை பற்றியெல்லாம் பொருந்தாதக் கருத்துரைப்போரை
வெட்கிப்போகச்செய்யும், அரிய நூல் இது என்றால் 
மிகையல்ல. 

சாதி, தீண்டாமை பற்றி, வெறும் சொல்லடைவுகளை வைத்துக்
கட்டுரைகளை மேலோட்டமாக எழுதி, அதையே சாதிக்க முயல்வர்களிடம்
இருந்து முழுக்க மாறுபட்டு, ஆழ்ந்த, செறிவான கருத்தியலை அடித்தளமாகக்
கொண்ட இந் நூல் மிகச்சிறந்தது.

"அகராதிகளெல்லாம் தமிழ் தெரியாதவர்களுக்கு என்று இருந்த காலம் அது" - 
என்ற, ஒரு வரி சொல்லும் செய்திகள் மிக விரிவானவை;
தற்காலத் தமிழ்க்கல்வியை எண்ணுகையில் வலிக்கவும் வைக்கிறது.

புலை என்ற சொல்லை வின்சுலோவின் அகராதி உள்ளிட்ட பல அகராதிகளில்
இருந்து மட்டும் பொருள் கண்டு ஆய்வு செய்தால் புலையின் கதியும், கட்டுரைகளின் கதியும் எப்படி ஆகும் என்று எண்ணிப்பார்க்கவே அச்சம் வருகிறது. 

புலையன் என்ற சொல்லுக்கு எத்தனைத் தவறான பொருள்கள் சொல்லப்படுகின்றன என்று மிக அழுத்தமாக, பசுமரத்தாணியாகக் கருத்துகளையும் ஆதாரங்களையும் எடுத்துவைக்கிறார் ஆசிரியர்.

"ஆவுரித்துத் தின்றுழலும் புலையனேனும்" எனும் அப்பரடிகளின் வரியை
மட்டும் மேற்கோள் காட்டி, புலையன் என்பவனுக்குப் பொருத்தப்படும்
பொருள்கள்/பண்புகளின் பொருந்தாமையை மிகத் தெளிவாக எடுத்துவைக்கிறார்.

இந்த நூல் பலவாறாக சிந்திக்க வைக்கிறது. 

இதைப்படித்தவுடன் எனக்கு எழுந்த கேள்வி,

ஆ உரிக்கிறான் - சரி
தின்கிறான் - சரி
உழல்கிறான் - அது ஏன் என்பதுதான்.

ஊன் உண்பவர், அல்லது ஆ உண்பவர் எல்லாம் உழல்பவர்
என்று பொருள் கொள்ள முடியுமா? அவர்கள் எல்லாம் புலையர்கள்
என்றால், மேனாட்டினர் தொடங்கி சீனர்கள் வரை எல்லாருமே புலையர்கள்தான்.

அப்பரடிகளின் வரியை மேற்கோள் காட்டுபவர்கள், 
ஆவுரித்துத் தின்பவன் புலையனா? ஆவுரித்துத் தின்று உழல்பவன் புலையனா?
என்றும் சிந்தித்துப் பார்த்து எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அப்பரடிகளின் இவ்வரியை மேற்கோள் காட்டுநர்,

"வஞ்சகப்  புலைய  னேனை  வழியறத்  தொண்டிற்  பூட்டி    
அஞ்சலென்  றாண்டு  கொண்டாய்  அதுவுநின்  பெருமை  யன்றே..." 
என்று அப்பர் சொல்கிறாரே - அப்படியென்றால் அப்பர் புலையரா?
என்ற கேள்வி எழுகிறது. அது என்ன வஞ்சகப் புலையன்?
புலையன் வேறு - வஞ்சகப் புலையன் வேறா? இங்கே வஞ்சகம் எதற்கு
வரவேண்டும்?

ஆட்டுக்கறியும் கள்ளும் சுவைத்த அந்தணரான கபிலர் புலையரா
என்ற கேள்வியை இராசம் அம்மையார் எழுப்புகிறார். அதைப்போன்றே
மாணிக்கவாசகரையும் புலையர் என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி
எனக்கு எழுகிறது.

"புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள் 
    புரிந்தனை - புரிதலும் களித்து 
தலையால் நடந்தேன் விடைப்பாகா" என்பார் மாணிக்கவாசகர். (செத்திலாப்பத்து).
தன்னைப் புலையனாக அப்பரடிகள் சொல்வதுபோலவே, 
மாணிக்கவாசகப்பெருமானும் தன்னைப் புலையன் என்று சொல்கிறார்.

"பொய்ம்மையே பெருக்கி பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப்
 புலையனேன் தனக்கும் 
செம்மையே ஆன சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே..."
என்று பிடித்தபத்தில் கூறுவார் மாணிக்கவாசகர்.
(அது என்ன புழுத்தலைப் புலையன்)

"புலையாயின  களைவானிடம் (சிவபெருமானிடம்)...."
என்பார் ஞானசம்பந்தர்.  "புலைகள் தீரத் தொழுமின்..." என்பார் சுந்தரமூர்த்திகள்.
இவையும் காணத்தக்கன.

அப்படியென்றால் புலை என்பது என்ன - புலையன் என்பவன் யார்
புலையின் பண்புகள் யாவை? என்று தேடுவோமாயின் - அதற்கு
நல்ல அடிப்படையையும் கருத்தாழமிக்க பார்வைகளையும்
தருகின்ற நூலாக முனைவர் இராசம் அம்மையாரின் இந்த நூல் அமைகிறது.
பல நுனிப்புல் கட்டுரைகளும் பிட்டு மடல்களும் அடிபட்டுப் போகின்றன.
நேரிய சிந்தனையாளர்களுக்கு இந்த நூல் விருந்தாகும்.



Friday, May 29, 2015

உயர்கல்வி நிறுவனங்களில் கருத்துரிமைக்குத் தடையா?

சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்குத் தடை

உயர்கல்வி நிறுவனங்களில் கருத்துரிமைக்குத் தடையா?

தொல்.திருமாவளவன் கண்டனம்

=======


சென்னை ஐஐடியில் செயல்பட்டுவந்த ‘அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்’ என்ற மாணவர் அமைப்பைத் தடைசெய்து ஐஐடி நிர்வாகம் ஆணை பிறப்பித்திருக்கிறது. மாட்டு இறைச்சி உண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து அந்த அமைப்பின் மாணவர்கள் விமர்சித்தாக யாரோ எழுதிய புகாரின் அடிப்படையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட மாணவர்களிடம் விளக்கம்கூட கேட்காமல் இப்படித் தடை விதிக்கப்பட்டிருப்பது மாணவர்களின் கருத்துரிமைக்கு எதிரானதாகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்துகிறோம். 

சென்னை ஐஐடி சமூகநீதிக்கு எதிரான ஒரு நிறுவனமாகவேநீணடகாலமாக செயல்பட்டுவருகிறது. அங்கே மாணவர் சேர்க்கையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை.தப்பித் தவறி சேர்கிற மாணவர்களும் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கிருக்கும் ஆசிரியர்களில் எஸ்சி/எஸ்டி பிரிவினர் ஒரு சதவீதம்கூட இல்லை.இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனாலும்கூட அதன் போக்கு மாறவில்லை.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலவாறாக கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதனால் கடந்த பத்து ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் இந்த நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தாம் வாழும் சமூகம் குறித்து விமர்சனபூர்வமான அறிவைப் பெறவேண்டியது அவசியம். அதற்கு இத்தகைய மாணவர் அமைப்புகளே களங்களாக உள்ளன. இவற்றைத் தடை செய்வது மாணவர்களின் சுதந்திர சிந்தனையைத் தடுப்பதாகவே பொருள்படும். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ஐஐடி நிறுவனங்கள் இந்துத்துவ மையங்களாகத்தான் செயல்பட்டுவந்தன. இப்போது அந்தச் சூழல் மேலும் மோசமாகிவிட்டது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆராய்ச்சி அமைப்புகளும் உயர்கல்வி நிறுவனங்களும் திட்டமிட்ட முறையில் காவிமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது சென்னை ஐஐடியில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு அதன் ஒரு வெளிப்பாடாகும். மதச்சார்பின்மையில் அக்கறைகொண்ட அனைவரும் இதைக் கண்டிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

இவண் 

தொல்.திருமாவளவன்

 

Wednesday, May 27, 2015

ஆர் கே நகர் தொகுதியில் தலித் வாக்குகள் - ரவிக்குமார்


2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி ஆர் கே நகர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 277037 அதில் தலித் வாக்காளர்களின் எண்ணிக்கை 38266. அதாவது 13.81%. கடந்த பதினான்கு ஆண்டுகளில் தலித் வாக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து இப்போது சுமார் ஐம்பதாயிரத்தை எட்டியிருக்கும். தற்போது இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் இந்தத் தொகுதியில் அந்த ஐம்பதாயிரம் தலித் வாக்குகளுக்கு சமூக ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ ஏதேனும் மதிப்பு இருக்கிறதா? அப்படி மதிப்பிருந்தால் அந்தத் தொகுதி தலித் மக்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதிலும் இருக்கிற தலித்துகள் பயன்பெறக்கூடிய திட்டங்களை வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கும். ஆனால் அப்படி எதுவும் இப்போது நடக்கவில்லை.

சென்னை மாவட்டத்துக்குள் எழும்பூர், திருவிக நகர் என இரண்டு தனித் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 25% தலித் வாக்குகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக சென்னை மாவட்டத்தில் சுமார் 14% தலித் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளின் அரசியல் மதிப்பு என்ன?

பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் தலித் அரசியலுக்கு சென்னைதான் களமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆவணங்களில் அந்த வரலாற்றைப் பார்க்கலாம். சின்னத்தம்பி என்ற தலித் தலைவரின் பின்னால் திரண்ட தலித்துகள் எப்படி பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தார்கள் என்பதை, 'பறையர் கலகம்' என பிரிட்டிஷ் ஆவணங்களில் பதிவாகியிருக்கும் அவற்றின் வரலாற்றை யூஜின் இர்ஷிக் எழுதிய நூலில் காணலாம் ( Dialogue and History - Constructing South India, 1795-1895, Eugene F. Irschick, University of California Press, 1994). அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், முனுசாமிப் பிள்ளை என உலகறிந்த தலித் தலைவர்கள் சென்னையை மையமாக வைத்தே களப்பணி ஆற்றினார்கள். அதன்பின்னர் சத்தியவாணிமுத்து, டாக்டர் சேப்பன், சக்திதாசன், சுந்தரராசனார், வை.பாலசுந்தரம், கருப்பன் அய்ஏஎஸ் எனப் பல்வேறு தலைவர்களின் அரசியல் பணிகள் சென்னையில்தான் சுற்றிச் சுழன்றன. ஆனால் அந்தப் புகழ்மிக்க தலித் அரசியல் வரலாறு இந்த 21 ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியற்றுப் போய்விட்டது.

தலித் வாக்குகள் அரசியல் ரீதியாக திரட்டப்பட்டால் எந்தவொரு தொகுதியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடியவையாக அந்த வாக்குகளே இருக்கும். ஆனால் அவற்றை அரசியல்ரீதியாகத் திரட்டுவதில் தலித் கட்சிகள் போதிய வெற்றியை சாதிக்க முடியவில்லை. கிராமப்புறங்களில் இருக்கும் தனித் தொகுதிகளில் செல்வாக்கு பெற்றிருக்கும் தலித் கட்சிகள் ஏன் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள தனித் தொகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தமுடியவில்லை என்பது சிந்தனைக்குரிய வினாவாகும். கிராமப் புறங்களைப்போல வன்கொடுமைகளை மட்டுமே மையப்படுத்தி பெருநகரங்களில் தலித் அரசியல் செயல்பட முடியாது. பெருநகரங்களில் தலித்துகள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான பிரச்சனைகளைக் கையிலெடுத்தால்தான் அவர்களை அரசியல் ரீதியாகத் திரட்டமுடியும்.

சென்னையில் வசிக்கும் தலித்துகளின் முதன்மையான பிரச்சனை குடியிருப்புதான். 2013 ஆம் ஆண்டு சென்சஸ் கமிஷனர் வெளியிட்ட விவரங்களின்படி தமிழ்நாட்டில் 58 லட்சம் பேர் குடிசைகளில் வசிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 19 லட்சம் (32% ) பேர் தலித்துகள். சென்னையில் மட்டும் 13.5 லட்சம் குடிசைவாசிகள் உள்ளனர். அதில் பாதிக்கு மேற்பட்டோர் தலித்துகள்தான். ஏற்கனவே குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளின் கதியைப் பார்த்தால் குடிசைகளே பரவாயில்லை என்றுதான் தோன்றும். இந்த அவலநிலையை மாற்றுவதற்கு தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வேலைதேடி குடிபெயரும் தலித்துகள் சாக்கடை ஓரங்களில், நடைபாதை மேடைகளில் விலங்குகளைவிடக் கேவலமாக இன்னும் எத்தனைகாலம் கிடப்பது?

சென்னை தலித்துகளின் பிரச்சனைகள் தீரவேண்டுமானால் அவர்களின் வாக்குகள் அரசியல் மதிப்பைப் பெறவேண்டும். அவை காசுக்கு வாங்கப்படும் பண்டம் என்ற நிலை மாறவேண்டும். தலித் வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றுவது முதன்மையாக தலித் மக்களின் பொறுப்பு. தம்மிடம் இருக்கும் வாக்குரிமையை அதன் அரசியல் மதிப்பறிந்து பயன்படுத்தும் அளவுக்குத் தலித்துகள் தன்னுணர்வு பெறாதவரை அவர்களுக்கான அரசியல் உரிமைகளை வெல்லுவது எளிதாக இருக்காது.

தன்மதிப்பும் தற்சார்பும்தான் சமத்துவத்தைக் கொண்டுவரும். இதை சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாழும் தலித்துகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் வாக்குகளை அரசியல் மதிப்பு கொண்டவையாக மாற்றுவதற்கு இந்த இடைத்தேர்தலை தலித் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தத் தொகுதியில் உள்ள குடிசைவாசிகள் அனைவருக்கும் தரமான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவோம் , அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.

Tuesday, May 26, 2015

சங்க இலக்கியத்தில் தீண்டாமைக்கு சான்று உள்ளதா?


” சாதி குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் வெறும் விவரணைகளை விளக்கங்களாக எடுத்துக்கொண்டு அவற்றை சாதியின் தோற்றம் குறித்த கோட்பாடுகளாகக் கருதி வாதிட்டனர்” என அம்பேத்கர் ‘ இந்தியாவில் சாதிகள்’ என்ற தனது ஆய்வுரையில் குறிப்பிட்டார். தான் மாணவராக இருந்த காலத்தில் சாதி குறித்த ஆய்வுகளில் செல்வாக்கு செலுத்திவந்த செனார்ட் ( Emile Charles Marie Senart ), நெஸ்ஃபீல்டு(J.C.Nesfield), சர்.எச்.ரிஸ்லி (Sir Herbert Risley) டாக்டர் கெட்கர் (Dr S.V.Ketkar) ஆகியோரது கருத்துகளை தனது ஆய்வுரையில் பரிசீலித்த அம்பேத்கர் அவற்றின் குறைபாடுகள் எவை என்பதை எடுத்துக் காட்டினார். சாதிகளின் உருவாக்கத்தில் ’அகமணமுறையின்’ முக்கியத்துவத்தை உணர்த்தினார். வகுப்புகள் சாதிகளாக உருமாறியதில் ‘போலச் செய்தல்’ ‘ சாதி விலக்கம்’ ஆகியவற்றுக்கு உள்ள பங்கினை விளக்கினார்.  

1916 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கூட்டப்பட்ட மானுடவியல் ஆய்வரங்கில் அவர் சமர்ப்பித்த அந்த ஆய்வுரைக்கு இது நூற்றாண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் சாதி குறித்து எத்தனையோ ஆய்வுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாலும் அயல்நாடுகளைச் சேர்ந்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால்,அம்பேத்கர் தனது ஆய்வுரையில் குறிப்பிட்டதுபோல ” சாதி என்பது வெகுகாலம் நீடித்திருக்க முடியாது, ஏனெனில் அதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம்” என எந்தவொரு ஆய்வாளரும் கூறவில்லை. சாதி ஒழிப்புக்காக அவரைப்போல தம் வாழ்க்கையை எவரும் அர்ப்பணிக்கவுமில்லை. ஏனெனில் மற்றவர்களுக்கெல்லாம் சாதி ஒரு ஆய்வுப் பொருள், அம்பேத்கருக்கோ அது ‘உயிரின் வாதை’.

இந்திய சாதியமைப்பு முறை குறித்து நிலைபெற்றுவிட்டகற்பிதங்களில் ஒன்று அது இந்த நாட்டில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நிலவி வருகிறது என்பதாகும். சாதியமைப்பின் தொன்மையை ஏற்றுக்கொள்கிற மனம் அதை அத்தனை எளிதாக மாற்றிவிடமுடியாது என்று நம்பிவிடுகிறது. அதனால் பேச்சுவழக்கில் ‘பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இங்கு நிலவிவரும் சாதி” என யாரேனும் குறிப்பிட்டால் அதை எந்தவித உறுத்தலுமில்லாமல் ஏற்றுக்கொள்கிறது.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களைவிட சாதியின் கொடுமை அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில் ’ சங்க காலத்திலேயே சாதி இருந்தது, தீண்டாமை இருந்தது’ என்று வாதிடுகிற அறிவாளிகள் இருப்பது வியப்புக்குரியதல்ல. அவர்களுக்குச் செவ்வியல் இலக்கியமும் தெரிவதில்லை, சமூகவியல் உண்மைகளும் புரிவதில்லை. தமது வெறுப்பு அரசியலுக்கு, உள்நாட்டு உதாரணங்கள் வழக்கிழந்து போய்விட்ட நிலையில் அவர்கள் மேலைநாட்டாரின் ‘ஆராய்ச்சிகளை’ துணைக்கழைத்து வருகின்றனர். 

’சங்ககாலத் தமிழ்ச் சமூகம் இன்றிருப்பதுபோலவே ஒரு சாதிய சமூகமாகத்தான் இருந்தது’ என வாதிடுகிற ஒருவர்தான், ‘தமிழுக்குச் செம்மொழித் தகுதி உள்ளது’ என்று சான்றிதழ் வழங்குபவராகவும் இருக்கிறார் என்பது தமிழ் மொழியின், தமிழ்ச் சமூகத்தின் அவல நிலைக்கு அடையாளம். அதை மாற்றுகிற ஒரு சிறு முயற்சிதான் இந்த நூல். 

அரசாங்கத்தார் அங்கீகரிக்காவிட்டாலும் ’தமிழறிஞர்’ என அழைக்கப்படுவதற்குத் தகுதிபெற்ற முனைவர் வீ.எஸ்.ராஜம் அவர்கள் இந்த நூலை கட்டுரைத் தொடராக எழுதியபோது அதை மணற்கேணி ஆய்விதழில் வெளியிட்டேன். இன்னும் பரவலான கவனத்தைப் பெற்று விவாதங்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் இதை இப்போது நூலாக வெளியிடுகிறேன். 

தமிழர்கள் தற்சார்பை இழந்து நிற்பதால் தற்போதைய செவ்வியல் தமிழ் ஆய்வுச்சூழல் பெரிதும் மேலைநாட்டு ஆய்வாளர்களின், நிறுவனங்களின்  கருணையை எதிர்நோக்கியிருக்கிறது. சமூகவியல் ஆய்வுகளும் அதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அது தடுக்கப்படவேண்டும். தமிழ் ஆய்வுகளின் தற்சார்பு மீட்கப்படவேண்டும். அதற்கு ‘அறிவுலகத் தீண்டாமை’ அகற்றப்படவேண்டும். இந்த நூல் அதற்கான தூண்டுதலைத் தருமென நம்புகிறேன். 

( முனைவர் வீ. எஸ். ராஜம் எழுதி மணற்கேணி வெளியீடாக வந்துள்ள ' சங்க இலக்கியத்தில் சாதி, தீண்டாமை இன்ன பிற .... என்ற நூலுக்கு ரவிக்குமார் எழுதிய பதிப்புரை) 



Wednesday, May 20, 2015

அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெறும் விதத்தில் தேர்வுமுறையை மாற்றவேண்டும் - ரவிக்குமார்



பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவைப் போலவே பத்தாம் வகுப்புத் தேர்விலும் தொண்ணூற்றியிரண்டு விழுக்காட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மீதமிருக்கும் அந்த எட்டு விழுக்காடு மாணவர்களும்கூடத் தேர்ச்சியடையவேண்டியவர்கள்தாம். பத்து ஆண்டு பள்ளிக் கல்வியைப் படித்து ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ச்சிபெற்று இறுதித் தேர்வில் தோற்றுவிட்டார்கள் எனச் சொல்வது அந்த மாணவர்களின் தோல்வி என்பதைவிட நமது பள்ளிக்கல்வி முறையின் தோல்வியென்றுதான் கூறவேண்டும். 

பத்தாம் வகுப்பில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் எட்டு விழுக்காடு தோல்வியென்றால் சுமார் எண்பதாயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்று பொருள். அவர்களெல்லாம் முட்டாள்களென்றோ திறமையற்றவர்களென்றோ அர்த்தமல்ல. அவர்கள் தோல்வியடைந்ததாய்ச் சொல்வதற்கு நமது தேர்வுமுறைதான் காரணம். 

பள்ளிகளில் இடை நிறுத்தத்தைத் தடுப்பதற்கான காரணங்களை ஆய்வுசெய்பவர்கள் அதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால் முக்கியமான காரணம் நமது தேர்வுமுறைதான். தரம் தகுதி என்ற தவறான கருத்தாக்கங்களின் அடிப்படையில் நமது தேர்வுமுறை அமைக்கப்பட்டுள்ளது. 

தங்கள் மூளைகளில் ஆசிரியரால் டெபாசிட் செய்யப்படும் விடைகளை அப்படியே பாதுகாத்து வைத்திருந்து தேர்வின்போது அச்சுப்பிசகாமல் திருப்பி ஒப்படைக்கும் இப்போதைய தேர்வுமுறை மாணவர்களின் சிந்திக்கும் திறனையே பாழாக்கிவிடுகிறது. இந்த முறையில் கல்விபயிலும் மாணவர்கள் வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியாதவர்களாக எல்லாவற்றுக்கும் ரெடிமேடான தீர்வுகளைத் தேடுகிறவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்த சார்பு மனோநிலைதான் நாயக வழிபாட்டுக்கு இட்டுச்செல்கிறது. 

இந்த நிலையில் மாற்றம் கொண்டுவர பள்ளியில் சேர்கிற அனைவருமே பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயர்கல்வியைப் பெறுகிற முறையில் தேர்வு முறையை மாற்றியமைப்பதோடு பள்ளிக்கல்வி முடிப்பவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் நமது உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

ஒரு நாட்டின் வளங்களிலேயே மிகவும் சிறந்தது மனித வளம் தான். அதைப் புரிந்துகொண்ட நாடுதான் முன்னேறும்.

Thursday, May 14, 2015

மனிதனுக்கு முன்னால்


 - கே.சச்சிதானந்தன்
தமிழில்: ரவிக்குமார்
=======
மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னால் 
மிருகங்கள் பேசின
மிருகங்களுக்கு முன்னால் மரங்கள் பேசின, மரங்களுக்கு முன்னால் மலைகள் பேசின, மலைகளுக்கு முன்னால் சமுத்திரங்கள் பேசின, சமுத்திரங்களுக்கு முன்னால் ஆகாயம் பேசியது

பிறகு, பேசத் தொடங்கினான் மனிதன், 
அந்த கணத்தில் அற்றுப்போனது அனைத்தின் பேச்சுகளும் 
அவற்றின் மௌனத்தின் மீது உருண்டது மனிதனின் எஃகு போன்ற குரல்

விடியலின்போது நீங்கள் பார்ப்பதில்லையா எல்லாவற்றின்மீதும் படிந்திருக்கும் ரத்தத்தை?

Wednesday, May 13, 2015

லோட்டஸ் கட்சியும் லோட்டஸ் டவரும் - ரவிக்குமார்



பிரதமர் மோடியின் சீனப் பயணம் குறித்து பல்வேறு 'ப்ரமோஷனல்' கட்டுரைகள் இந்திய ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. ஆனால் கொழும்பில் சீன நிறுவனங்களால் கட்டப்படும் 'லோட்டஸ் டவர்' குறித்து தற்போது சீனப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் சீன அதிபரிடம் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பாரா? என்ற கேள்வியை ஏனோ நமது ஊடகங்கள் சரியாக எழுப்பவில்லை. 

ஃப்ரான்ஸ் நாட்டிலுள்ள ஈஃபில் டவரைவிட உயரமாகக் ( 350 மீட்டர் )கட்டப்படும் லோட்டஸ் டவர் தென் ஆசியக் கடல் பிராந்தியத்தைக் கண்காணிக்கும் ராணுவ நோக்கம் கொண்டது எனவும் அதனால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது எனவும் பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ( http://www.southasiaanalysis.org/node/1753) அதை இந்தியப் பிரதமர் கவனத்தில் எடுத்துக்கொண்டாரா என்பது தெரியவில்லை. 

இந்திய சமூகத்தில் உள்ள குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் பிரிட்டிஷார் காரணம், இந்திய அரசியலில் காணப்படும் குறைகளுக்கு காங்கிரஸ் காரணம் எனப் பழிசுமத்தும் அரசியலில் பதுங்கிக்கொண்டிருக்கும் பாஜக உண்மையிலேயே இந்திய நாட்டின் இறையாண்மைமீது அக்கறைகொண்டிருந்தால் கொழும்பு நகரில் கட்டப்படும் லோட்டஸ் டவரைத் தடுத்து நிறுத்தவேண்டும். 

இலங்கையில் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலி அமைப்பதையே தடுத்து நிறுத்திய பிரதமர் ஒருவர் இருந்தார், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்! 

Tuesday, May 12, 2015

அறிவுலகத் தீண்டாமையை அகற்றுவோம்


 

இந்தியாவில் சாதிகள்: ஒரு மீள்வாசிப்பு

 

1916 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் அமெரிக்காவில் நடைபெற்ற மானுடவியல் ஆய்வரங்கில் ; இந்தியாவில் சாதிகள்’ என்ற தலைப்பிலான தனது ஆய்வுரையை அம்பேத்கர் முன்வைத்தார். அதில் தனது ஆய்வு முடிவுகளாக பின்வரும் கருத்துகளைத் தெரிவித்தார்:  

“1)  இந்துக்களுக்குள்ளே பல்வேறுவித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடையே ஆழ்ந்தபண்பாட்டு ஒருமை உள்ளது.  

2) பெரியதாக உள்ள பண்பாட்டுப்பகுதிகளின் சிறுசிறு தொகுதிகளேசாதிகள்.  

3)  தொடக்கத்தில் ஒரு சாதியேஇருந்தது.  

4) பிறரைப் பார்த்துப் "போலச்செய்தல்" மூலமும், ’சாதி விலக்கு’செய்யப்பட்டதன் மூலமும் வர்க்கங்கள்அல்லது வகுப்புகள் சாதிகளாயின.

 

புரட்சியாளர் அம்பேத்கர் பல்வேறு அறிவுத் துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார் என்றாலும் இந்த ஆய்வுரையின் மையக் கருத்தான ‘சாதி ஒழிப்பு’ என்பதே அவரது சிந்தனை செயல் அனைத்தையும் அவரது வாழ்நாள் முழுதும் ஆக்கிரமித்திருந்தது. 

 

அம்பேத்கர் தனது ஆயுட்காலத்தில் இந்தியாவின் முக்கியமானதொரு பிரச்சனையாக சாதிப் பிரச்சனையை உணரச் செய்தார். அவரது இடையறாத போராட்டங்களின் காரணமாகவே காந்தி உட்பட அன்ரைய அரசியல் தலைவர்கள் அனைவரும் சாதிச் சிக்கல் குறித்து கருத்து தெரிவித்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இந்திய வரலாற்றிலேயே தீண்டாதார் ஒரு தரப்பாகவும் இந்துக்கள் இன்னொரு தரப்பாகவும் இருந்து தமக்குள் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டிய சூழல் அம்பேத்கரின் போராட்டத்தால்தான் உருவானது. ‘பூனா ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் அந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அரசியலமைப்புச் சட்ட அவையில் நடைபெற்ற விவாதங்களின்போது பல இடங்களில் அம்பேத்கர் வலியுறுத்தியிருக்கிறார்.

 

புரட்சியாளர் அம்பேத்கரது காலத்திலும் அவரது மறைவுக்குப் பின்னரும் எத்தனையோ சிந்தனையாளர்கள் சாதியின் தோற்றம் குறித்தும் அதன் இயக்கம் குறித்தும் எண்ணற்ற ஆய்வுகளைச் செய்துள்ளனர். ஆனால் அந்த ஆய்வுகள் பெரும்பாலும் அம்பேத்கரைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இது அறிவுலகத் தீண்டாமையின் அடையாளம்.

 

சாதியின் தோற்றத்துக்கும் நிறவெறிக்கும்தொடர்பிருக்கிறதா? சாதிக்கும் சுத்தம்அசுத்தம் என்ற கோட்பாட்டுக்கும் உள்ள உறவுஎன்ன? மேலைநாட்டு ஆய்வாளர்கள்சாதியைப்பற்றி எழுதியிருக்கும் கருத்துகளைநாம் வழிமொழிந்துகொண்டிருப்பது சரியா? அவர்களில் பெரும்பாலோர் அம்பேத்கரையோஅயோத்திதாசரையோ கவனத்தில்எடுத்துக்கொள்ளாதது ஏன்?  

 

சாதிகுறித்த தற்கால ஆய்வுகளின்மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஃப்ரெஞ்ச் மானுடவியல் சிந்தனையாளர்  லுய் துய்மோனின் புகழ்பெற்ற நூலான Homo hierarchicus ( OUP, Second Edition 1999) ல் இரண்டாம்தர தரவுகளின் அடிப்படையில் அம்பேதகரின் பெயர் போகிறபோக்கில் ஒரு இடத்தில் (பக்கம் 223) உதிர்க்கப்படுகிறது. ஆனால் அவரது நூலோ கட்டுரையோ ஒரு இடத்தில்கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அறிவுலகத் தீண்டாமை நாடுகடந்து பரவியிருப்பதற்கு சான்று இது.

 

புரட்சியாளர் அம்பேத்கரின் ‘ இந்தியாவில் சாதிகள் ‘ ஆய்வு முன்வைக்கப்பட்டதன்நூற்றாண்டு இன்று துவங்குகிறது.  அவரதுஆய்வுரை குறித்த மீள்வாசிப்பின்மூலம்’அறிவுலகத்  தீண்டாமையை’ அகற்றுவோம்; சாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்வோம். 

 

பனுவல்புத்தக மையம், திருவான்மியூர், சென்னை

09.05.2015 சனி மாலை 6 மணி

 

கருத்துரை:

ரவிக்குமார்

பேராசிரியர் ராமசாமி

முனைவர் பக்தவத்சல பாரதி

 

ஆர்வமுள்ளோர் வாருங்கள் 

அறிவுலகத் தீண்டாமையை அகற்றக் குரல்கொடுங்கள்

**************

 

மணற்கேணி 

 


Friday, May 8, 2015

இந்தியாவில் சாதிகள்: ஒரு மீள் வாசிப்பு

சாதியின் தோற்றத்துக்கும் நிறவெறிக்கும் தொடர்பிருக்கிறதா? சாதிக்கும் சுத்தம் அசுத்தம் என்ற கோட்பாட்டுக்கும் உள்ள உறவு என்ன? மேலைநாட்டு ஆய்வாளர்கள் சாதியைப்பற்றி எழுதியிருக்கும் கருத்துகளை நாம் வழிமொழிந்துகொண்டிருப்பது சரியா? அவர்களில் பெரும்பாலோர் அம்பேத்கரையோ அயோத்திதாசரையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது ஏன்?  

இந்தியாவில் சாதிகள் குறித்து அம்பேத்கர் தனது ஆய்வுரையை நிகழ்த்தியதன் நூற்றாண்டு இன்று துவங்குகிறது.  அவரது ஆய்வுரை குறித்த மீள்வாசிப்பின்மூலம் அறிவுத் தளத்தில் நிலவும் தீண்டாமையை அகற்றுவோம்; சாதி ஒழிப்புப் போராட்டத்தை
முன்னெடுத்துச் செல்வோம். 

பனுவல்
புத்தக மையம் 
09.05.2015 சனி மாலை 6 மணி

ரவிக்குமார்
பேராசிரியர் அ. ராமசாமி
முனைவர் பக்தவத்சல பாரதி 

நீங்களும் உங்கள் கருத்தைக் கூறுங்கள்

Saturday, May 2, 2015

காஸாவில் உறங்குதல் - நஜ்வான் தர்விஷ்


நானும் மக்கள் உறங்குவதைப்போல உறங்குவேன் 
குண்டுகள் பொழியும்போது 
தசை பிளந்ததுபோல் வானம் கிழிபடும்போது
நானும் மக்களைப்போல் கனவுகாண்பேன் 
குண்டுகள் பொழியும்போது:
துரோகங்களைப்பற்றிய கனவுகள் 

நான் நண்பகலில் விழித்தெழுந்து ரேடியோவில் கேட்பேன் 
மக்கள் கேட்கும் கேள்வியை  
குண்டுபோடுவது நின்றுவிட்டதா ?
எத்தனைபேர் செத்தார்கள் ?
  
ஆனால், துயரம் என்னவென்றால் 
மக்களில் இரண்டுவகை இருக்கிறார்கள் :
துயரங்களையும் பாவங்களையும் வீதியில் கொட்டிவிட்டு
தூங்கச் செல்பவர்கள்,
வீதியில் கொட்டப்பட்ட துயரங்களையும், பாவங்களையும்   சேகரித்து 
அவற்றைக்கொண்டு சிலுவையைச் செய்பவர்கள் 
பாபிலோன், காஸா, பெய்ரூட்டின் வீதிகளில்
இன்னும் யாராவது வர இருக்கிறீர்களா ?
இன்னும் யாராவது வர இருக்கிறீர்களா ? 
என்று வழிநெடுகக் கதறியபடி 
அதை இழுத்துச் செல்பவர்கள் 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 
தெற்கு பெய்ரூட்டில் டஹீயாவின் வீதிகளில் 
நான் இழுத்துச் சென்றேன் 
சிதைந்து கிடக்கும் ஒரு கட்டிடத்தின் அளவுகொண்ட 
சிலுவையை
ஆனால்,இன்று 
ஜெருசலத்தில் சோர்ந்து கிடக்கும் 
மனிதனின் முதுகிலிருக்கும் சிலுவையைத் தூக்கிவிடப்போவது யார் ?  

பூமி என்பது மூன்று ஆணிகள் 
கருணை என்பதொரு சுத்தியல் 
அடியுங்கள், எஜமான்! 
விமானங்களைக்கொண்டு அடியுங்கள் 

வருவதற்கு இன்னும் யாராவது இருக்கிறீர்களா? 

அரபியிலிருந்து ஆங்கிலத்தில் : கரீம் ஜேம்ஸ் அபு ஸெய்த் 
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : ரவிக்குமார்