Saturday, December 31, 2016

விடிவெள்ளி - ஃபுயாத் ரிஃப்கா

தமிழில்: ரவிக்குமார் 

இரவின் முடிவில்
பார்வையை விடிவெள்ளியை நோக்கி உயர்த்தினான்
அது இரவைக் கழித்துக்கொண்டிருந்தது தனிமையில் 
ஜன்னல்களுக்கு வெளிச்சமூட்டியபடி 
அவன் இரவைக் கழித்துக்கொண்டிருந்தான் 
தனிமையில் 
ஜன்னல்களைத் திறந்தபடி 

இரண்டு நண்பர்கள்
       இடையில் 
முழுமையாக ஒரு வானம்

Friday, December 30, 2016

தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு 2013 - திலிப்குமாரின் தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு - ரவிக்குமார்

 வ.வே.சு.அய்யர் 1917ல் எழுதிய குளத்தங்கரை அரசமரம் கதையைத் துவக்கமாக வைத்து 2016 தான் தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு என ஆங்காங்கே விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் திலிப்குமார் தொகுத்து சுபஶ்ரீ கிருஷ்ணசாமி  மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் Tamil Story - Through the times through the tides என்ற நூலில் தமிழில் வெளியான  முதல் சிறுகதையை அம்மணி அம்மாள் என்பவர் 1913 ஆம் ஆண்டு விவேக போதினி இதழில் எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தொகுப்பின் முதல் கதையாக அதை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டை 2013 ல் கொண்டாடியிருக்கவேண்டும்.

அம்மணி அம்மாளின் கதை மரம் ஒன்று பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மரம் வெட்டப்பட்டு காகிதமாக மாற்றப்பட்டு நாளேடு அச்சிடுவதற்காகப் போகிறது. அதில் பரபரப்புச் செய்திகளை அச்சிடுகிறார்கள். அந்த நாளேட்டை படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடுகிறார்கள். மீன் வாங்கி அந்த பேப்பரில் சுருட்டி எடுத்துப் போகிறார் ஒருவர். அப்புறம் அது அடுப்பில்போட்டு எரியூட்டப்படுகிறது. இத்துடன் கதை முடியவில்லை. 
இந்தக் கதை சொல்லும் நீதி என்ன? என்று ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து கேட்கிறார். இந்தமாதிரி பத்திரிகைகளை தடைசெய்ய வேண்டும் என்கிறான் ஒரு சிறுவன். 

1913 ல் இப்படியொரு டெக்னிக்கைப் பயன்படுத்தி இந்தமாதிரி ஒரு சிறுகதையைப் பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருப்பது மிகவும் முக்கியமானது. 

அம்மணி அம்மாளின் கதை மட்டுமின்றி  விசாலாக்ஷி அம்மாள் (1884-1926) என்பவர் எழுதிய கதை ஒன்றும் மொழிபெயர்த்துத் தரப்பட்டிருக்கிறது. அது ஆங்கில மருத்துவத்தைக் கேலிசெய்வதாக அமைந்திருக்கிறது. குழந்தைக்கு கையில் சிராய்ப்பு ஏற்பட்டு காய்ச்சல் வருகிறது. கையும் வீங்கிவிடுகிறது. அயல்நாட்டில் மருத்துவம் படித்துத் திரும்பியிருக்கும் டாக்டரை அழைத்துவந்து காட்டுகிறார்கள். அவர் குழந்தையின் கையை வெட்டிவிடவேண்டும் என்கிறார். ஒரு பரதேசி கொடுத்த விபூதியையும் பச்சிலையையும் கையில் தடவுகிறாள் தாய். மறுநாள் வீக்கம் வடிந்துவிடுகிறது. தாயின் கண்ணீர் அந்தக் குழந்தையின் கையை நனைத்தது. அது கிருமி நாசினியாக செயல்பட்டு குணமாக்கிவிட்டது என்று சொல்கிறான் அந்தத் தாய்க்குப் பிறந்த சிறுவன் . அதற்கு ஆதாரமாக ஏதோ ஒரு புத்தகத்தில் போட்டிருப்பதை டாக்டரிடம் வாசித்துக் காட்டுகிறான். அவர் நம்பமுடியாமல் திகைத்து நிற்கிறார். இந்தக் கதையைப் படித்தபோது புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்தது. ஆங்கில மருத்துவ அறிவின்மீது ஐயத்தைக் கிளப்பும் அந்தக் கதையைப்பற்றி முன்பே நான் எழுதியிருக்கிறேன். 

இந்த ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் செல்வ கேசவராயர் (1864-1921) என்பவர் எழுதிய சிறுகதை மிகவும் நுட்பமாக பிராமண எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது. 

அவசர வேலையாக வெளியூர் செல்ல நேரிட்ட ஒருவர் அந்தச் செய்தியைத் தனது நண்பர் மூலமாகத் தனது வீட்டில் கூறுமாறு சொல்லிவிட்டுப்போகிறார். அந்த நண்பரோ தீ விபத்தில் இறந்துபோகிறார். வெளியூர் போனவரும் விபத்தில் இறந்துவிட்டாரெனக் கருதி அவரது வீட்டில் காரியமெல்லாம் செய்துவிடுகிறார்கள். இருபது நாட்கள் கழித்து அவர் ஒரு இரவில் திரும்ப வீட்டுக்கு வருகிறார். அவரைப் பேய் என நினைத்து அவரது மனைவியும் பெற்றோரும் நடுங்கும் காட்சியைக் கதாசிரியர் சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார். அந்த காலத்து சென்னை குறித்து இந்தக் கதையில் வரும் வர்ணனை வியப்பளிக்கிறது. 

எந்தவொரு தொகுப்பையும்போலவே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளின் தேர்வும்  தொகுப்பாசிரியரின் அகவிருப்பத்தைப் பொருத்ததாகவே அமைந்திருக்கிறது. ஆனாலும் திலிப்குமார் தன்னால் முடிந்த வரைக்கும் நடுநிலையை கடைபிடித்திருக்கிறார். 

தமிழில் பரிசோதனை முயற்சியாக எழுதிப்பார்க்கப்பட்ட பின் நவீனத்துவ வகைப்பட்ட கதைகளை திலிப்குமார் இந்தத் தொகுப்பில் சேர்க்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் கடைசியில் தமிழில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய தலித் இலக்கியத்தில் வெளிப்பட்ட வாழ்க்கை அனுபவம்  இத்தகைய பின் நவீனத்துவ பரிசோதனைகளை அர்த்தமற்றவையாக்கிவிட்டன என திலிப் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இது விவாதத்துக்குரியது. 

நான் படித்தவரை சுபஶ்ரீயின் மொழிபெயர்ப்பு சரளமாக இருக்கிறது. அடர்த்தியான மொழியில் சொல்லப்பட்ட கதையை எப்படி மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அப்படி எழுதப்பட்ட மூலக் கதை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டுதான் பார்க்கவேண்டும். 

குஜராத்தியைத் தாய்மொழியாகக்கொண்ட திலிப்குமார் தனது கூர்மையான படைப்புகள்மூலம் தமிழ் மொழிக்குப் பங்களிப்புச் செய்துவருகிறார். இது அவர் தமிழுக்கு செய்திருக்கும் மற்றுமொரு பங்களிப்பு

.

Wednesday, December 28, 2016

எல்லா ஆண்டுகளுக்குமான கவிதை - ரவிக்குமார்

ஆசையாகத்தான் இருக்கிறது

இன்னொரு வீடு எரிக்கப்படாது

இன்னொரு கழுத்து அறுக்கப்படாது

இன்னொரு மானம் பறிக்கப்படாது 

இன்னொரு பாதை மறுக்கப்படாது

இன்னொரு கதவு மூடப்படாது

இன்னொரு வாய்ப்பு பறிக்கப்படாது

எனச் சொல்ல 

ஆசையாகத்தான் இருக்கிறது

எல்லோரது குரலும் கேட்கப்படும்

எல்லோரது குறையும் தீர்க்கப்படும்

எல்லோரது காயமும் ஆற்றப்படும் 

எல்லோரது கண்ணீரும் துடைக்கப்படும்

எல்லோரது பேச்சும் மதிக்கப்படும் 

எனச் சொல்ல 

ஆசையாகத்தான் இருக்கிறது 

நிரபராதிகள் இனம் காணப்படுவார்கள்

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்

அயோக்கியர்கள் அகற்றப்படுவார்கள்

நல்லவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்

எனச் சொல்ல 

எனக்கும்

ஆசையாகத்தான் இருக்கிறது 

இந்த ஆண்டைப்போல

இருக்காது அடுத்த ஆண்டு 

எனச் சொல்ல 

.....

( 2016 புத்தாண்டின்போது எழுதப்பட்டது )

Thursday, December 15, 2016

பிராமணர் / அல்லாதார் என்ற இருதுருவ அரசியல் முடிவுக்கு வருகிறதா? - ரவிக்குமார்

செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழக அரசியலில் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு வழி திறந்திருக்கிறது. அவர் சாதி கடந்த மக்கள் ஆதரவைப் பெற்றவராக இருந்தபோதிலும் தமிழக பிராமணர்கள் பெரும்பாலோர் அவரைத் தமது பிரதிநிதியாகவே பார்த்தனர். சட்டமன்றத்திலேயே தனது சாதியைப் பற்றிப்பேசி அவரும் அதற்கு அங்கீகாரம் தந்தார். அவரது மறைவு இனி பிராமணர் ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக வருவது சாத்தியமா என்ற வினாவை எழுப்பியுள்ளது. இது பிராமணர்களுக்கு மட்டுமல்ல பிராமண எதிர்ப்பு அரசியல் செய்தவர்களுக்கும் ஒரு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. 

எதிரெதிராக இருந்தாலும் பிராமண/அல்லாதார் அரசியலுக்கிடையே ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே  பாதிக்கப்பட்டவர்களின் குரல்களாகத் ( voices of victims ) தம்மை முன்வைத்துக்கொண்டன. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இவர்களின் கூக்குரலுக்கிடையே இந்த இரு தரப்பினராலும் பாதிக்கப்பட்ட தலித்துகள், மத சிறுபான்மையினர்களின் குரல்கள் மூழ்கிப்போயின.  

சுதந்திரத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அதிகாரத்திலிருந்து ( நிர்வாக, நீதித்துறை அதிகாரங்களிலிருந்து அல்ல) ஒதுக்கப்பட்ட காரணத்தால் அதற்குக் காரணமான இட ஒதுக்கீடு, தமிழ்ப் பற்று முதலானவற்றை விரோதமாகப் பார்த்த தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமது வெறுப்பு அணுகுமுறையைக் கைவிட்டு ஜனநாயகவாதிகளாக மாறுவதற்கு இதுவே உகந்த தருணம். இதுவரை அதிமுகவை ஆதரித்தோம் இனி நேரடியாக பாஜகவை ஆதரித்துவிட்டுப் போவோம் என்ற முடிவுக்கு அவர்கள் வருவார்களேயானால் அது பெரும் பிழையாகவே முடியும். தமிழுக்காகப் பாடாற்றியதிலும், மார்க்சியம் உட்பட முற்போக்குக் கருத்துகளை இம்மண்ணில் விதைத்ததிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  பலரை நாம் குறிப்பிட முடியும். அந்த மரபை மீட்டெடுக்கவும் பின் தொடரவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த படிப்பாளிகள் முன்வரவேண்டும். 

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் மேலாதிக்கம் செய்துவந்த பிராமண எதிர்ப்பு அரசியல் இனி யாரைத் தனது எதிரியாக சுட்டுவது என்று திகைத்து நிற்கிறது.இந்துத்துவ எதிர்ப்பை பிராமண எதிர்ப்பாக மட்டுமே சுருக்கி இந்துத்துவத்தின் பயனாளிகளாக இருக்கும் பிராமணரல்லாதாரைக் காப்பாற்றிவந்த அதன் யுக்தி இனி செல்லுபடியாகுமென்று சொல்ல முடியாது. எனவே அவர்களும் தமது அணுகுமுறையை மாற்றியாகவேண்டும். 

சுருக்கமாகச் சொன்னால்,  பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் சாதி என்ற கண்ணாடி மூலமாகவே சமூகத்தைப் பார்த்துவந்த நிலையிலிருந்து விடுபடவேண்டும். இதுகாறும் அதிகாரத்திலிருந்து புறமொதுக்கப்பட்ட சமூகப் பிரிவினரும் அதிகாரத்தில் பங்கேற்க வழிவிடவேண்டும். அப்போதுதான்  ' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ நிலை தமிழ்நாட்டில் உருவாகும்.