Saturday, March 26, 2011

நான்கு புதிய நூல்கள்

எனது நான்கு புதிய நூல்கள் நேற்று வெளிவந்துள்ளன
 1. எல். இளையபெருமாள் வாழ்வும் பணியும் 
2. உரையாடல் தொடர்கிறது - (செய்த் , பூக்கோ , மார்க்யெஅஸ் , அகஸ்தோ போவால், லெவிஸ்ட்ராஸ், அம்பர்த்தோ எக்கோ ஆகியோரின் படைப்புகள் )- தமிழில் : ரவிக்குமார் 
3. அதிகாரத்திடம் உணமையைப் பேசுதல் - எட்வர்ட் செய்த்- தமிழில் : ரவிக்குமார் 
4. கடல்கொள்ளும் தமிழ்நாடு - சூழலும் சுகாதாரமும் குறித்த கட்டுரைகள் 

Monday, March 21, 2011

காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் - து.ரவிக்குமார் 2006 சட்ட மன்றத் தேர்தலில் கிடைத்த வாய்ப்பில் நிகழ்த்திய சாதனைகள்





குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள்
சட்டமன்றத்தில் ஆற்றிய முதல் உரையிலேயே குடிசை வீடுகள் குறித்த பிரச்சனையை எழுப்பி, இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குடிசைகள் அதிகம் உள்ள மாநிலம் என்பதையும் அதில் விழுப்புரம், கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில்தான் குடிசைகள் அதிகமாக இருக்கின்றன என்பதையும் புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டி  தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தியதாலும்; 2007ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்ணுரிமை மாநாட்டில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூரை வீடுகளை காரை வீடுகளாக மாற்ற வேண்டும் என்று கோரியிருந்த்தாலும், தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு 21 இலட்சம் இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் முயற்சியினால் விளைந்த பயனாகும்.
நலவாரியங்கள்:
v நரிக்குறவர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v புதிரை வண்ணார் நல வாரியம் அமைக்கச்செய்தது.

v அரவாணிகளுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v நாட்டுப்புறக் கலைஞர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கச்செய்தது.

v அரசு பதிவு பெற்ற பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்துத் தந்தது.

v வீட்டுப்பணியாளர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்கச்செய்தது.

தலித் மக்களுக்கான நடவடிக்கைகள்:

v தலித் மக்கள் பெற்ற 85 கோடி ரூபாய்  தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வைத்தது.

v பஞ்சமி நிலங்கள் மீட்புக்கு தனி ஆணையம் அமைக்க வழி வகை செய்தது.

v 10ஆண்டுகளான தொகுப்பு வீடுகளை சரி செய்ய ரூ 15,000 வழங்க வழி வகை செய்தது.

v இந்தியாவிலேயே முதல்முறையாக ஒவ்வொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீத அடிப்படையில்  நிதி ஒதுக்கீடு செய்யும் சிறப்புக்கூறுகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் செய்து ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தலித் மக்களின் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வைத்தது.

v உள்ளாட்சித் தேர்தலில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தலித் மக்களுக்கான தொகுதிகளை உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து ஒரு நகராட்சி உட்பட 1300 க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கு வழி செய்தது.

v தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இப்போது முதல் தலைமுறையாக படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்கிற திட்டம் வருவதற்கு வழி வகுத்தது.

v சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு முறையாக நிதி ஒதுக்க வலியுறுத்தி அதை நிறைவேற்றச் செய்தது. இதனால் ஆண்டுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்

பொது நடவடிக்கைகள்:

v இசுலாமிய மக்கள் அதிக அளவில் ஈடுபட்டிருக்கும் எலும்புத்தூளால் உரம் தயாரிக்கும் தொழிலுக்கு வாட் எனப்படும் சேவை வரியிலிருந்து முழுமுற்றாக வரிவிலக்குப் பெற்றுத் தந்தது.

v ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றச்செய்தது.

v ஈழத்தமிழ் அகதிகளுக்கான பணக்கொடையை இரண்டு மடங்காக உயர்த்தியது.

v நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதம் 300 லிட்டர்  மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வழி வகை செய்தது.

v உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Tank Operators) பணியாளர்களுக்கு ஊதியம் 1500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்த வைத்தது.

v அரசு தொழிற் கொள்கையை  உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உருவாக வழி செய்தது.

v மின்னணுக் கழிவு கொள்கையை  உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தி, அதற்கான கொள்கையை உருவாக்க வழி வகை செய்தது.

v புவி வெப்பமயமாதல் ஆபத்தைக் குறைக்கவும், மின்சார பற்றாக்குறையைப் போக்கவும், அரசு அலுவலகங்களில்; குண்டு பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தற்போது அரசு அலுவலகங்களில் CFL குழல் விளக்குகள் பயன்படுத்த வழி செய்தது.

v பயிர் பாதுகாப்பில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களை ஒப்பிட்டுப் பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கச் செய்தது. அதுமட்டுமின்றி அந்த பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் வட்டம் பிளாக் என்பது அடிப்படை அலகாக வைக்கப்பட்டிருந்தது. அதை மாற்றி கிராமம் என்பதை ஒரே அலகாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அதையும் இன்று நடைமுறைப்படுத்த வழி செய்தது.

v இளைஞர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதன் காரணமாக இன்றைய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ஆண்டு தோறும் 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

v நூலகங்களுக்கு வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரி தற்போது 1,000 படிகள் வாங்குவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளோம்.

v சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் வழிபட உரிமை கோரிய ஆறுமுக சாமி அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுத் தந்தது.

தொகுதி நடவடிக்கைகள்:

v 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதி மக்களின் கோரிக்கையான முட்டம், மணல்மேடு பாலத்தை அமைக்க வேண்டும் என்று வலியறுத்தி, அந்த பாலம் 65 கோடி ரூபாயில் அமைக்க ஏற்பாடு செய்தது. அதுமட்டுமல்லாமல் நாஞ்சலூர், கடவாச்சேரி ஆகிய இடங்களில் தலா 1 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

v தொகுதியில் இருக்கும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சாலை சிதம்பரம், புத்தூர் சாலை ஆகியவற்றை மாநில நெடுஞ்சாலையாக மேம்படுத்தியுள்ளது.

v தொகுதியில் இருக்கும் அனைத்து நடுநிலைப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியது.

v அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு எமது சொந்த செலவிலே 40 மாணவர்களுக்கு கணினி வாங்கித் தரப்பட்டுள்ளது.

v ஏழ்மையான நிலையில் உள்ள 10  மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஐ.டி.ஐ. தொழிற்நுட்ப பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தது.

v தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் தொகுதி மக்களுக்கு நிரந்தரமாக நிவாரணம் ஏற்படுத்த கொள்ளிடம் பகுதியில் 115 கோடி ரூபாய் செலவில் கரையை உயர்த்துவதற்கும், வீராணம் ஏரியை ஆழப்படுத்தித் தூர்வாரச் செய்வதற்கும் பெரிய திட்டங்களை வகுக்கச் செய்து, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

v வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால் உள்ளிட்ட ஓடைகளையும் அகலப்படுத்தவும், கரைகளை உயர்த்தி, ஆழப்படுத்துவதற்கும் மிகப்பெரிய திட்டம் வகுக்க நடவடிக்கை எடுத்தது.

v திருக்கோயில்களை இணைத்து ஆன்மீகச் சுற்றுலா என்று மேம்படுத்துவதற்கு கோரிக்கை விடுத்து திருநாரையூர், திருமுட்டம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை மேம்படுத்தியது.

v தொகுதி மேம்பாட்டு நிதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் திருநாரையூர், நந்திமங்கலம் ஆகிய இடங்களில் தலா 26 லட்சம் ரூபாயில் வெள்ளப் பாதுகாப்பு மையங்களை உருவாக்கி இருக்கிறோம்.

v ரெட்டியூர், நாஞ்சலூர், கடவாச்சேரி உள்ளிட்ட இடங்களில் சமுதாய நலக் கூடங்களை அமைத்தது. குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை உருவாக்கியது.

v நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 லட்ச ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வுக் கூடம் அமைத்தது. 5 லட்ச ரூபாயில் மாணவர்கள் உட்காருவதற்கு பலகைகள், பெஞ்ச், நாற்காலிகள் அமைத்தது.

v குமராட்சி அரசு மருத்துமனையை தரம் உயர்த்த வழிவகை செய்தது.

v மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அரசு ஆதரவோடு சிறப்புப் பள்ளியை ஏற்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து தமிழகத்தில் அத்தகைய முதல் பள்ளி காட்டுமன்னார்கோயிலில் உருவாகச் செய்தது.

மேற்கண்ட சாதனைகள்  காட்டுமன்னார் கோயில் தொகுதி  மக்கள் எமது கட்சிக்கு அளித்த அங்கீகாரத்தினாலும் ஊக்கத்தினாலும் நிகழ்த்தப்பட்டவை. மீண்டும் தொகுதி மக்கள் வாய்ப்பளித்தால் இன்னும் பல வளர்ச்சிப் பணிகளை தொகுதிக்காகவும் கடலூர் மாவட்டத்துக்காகவும் தமிழக மக்களுக்காகவும் ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.

Thursday, March 17, 2011

மண்டேலாவின் தீவு - மரியோ வர்கஸ் ஜ்யோஸா




1964ஆம் ஆண்டு குளிர் காலத்தில் ஆயுள் தண்டனை மற்றும் கட்டாய உழைப்பு ஆகியவற்றுக்காக ரௌபன் தீவில் மண்டேலா வந்து இரங்குவதற்கு முன்பே முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக கொடுஞ் செயல்களுக்காக அந்த தீவு புகழ்பெற்று விளங்கியது.  காலனிய ஆட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட கறுப்பின மக்களின் போராட்டங்கள் முதலில் டச்சுக்காரர்களும் பிறகு பிரிட்டிஷ் காரர்களும் கடுமையாக ஒடுக்கினர்.  அத்துடன் கூடவே அந்த தீவை தொழு நோயாளிகளின் குடியிருப்பாகவும், பைத்தியக்காரர்களின் விடுதியாகவும், குற்றவாளிகளின் திறந்தவெளி சிறையாகவும் அவர்கள் மாற்றினார்கள்.  அந்த தீவை ஒட்டிய கடல் பகுதியில் காணப்பட்ட பயங்கரமான நீர் சுழல்களும் அங்கு இருந்த சுறாமீன்களும் அந்த தீவிலிருந்து தப்பிப்போக முயன்றவர்களை பார்த்துக்கொண்டன.  தென்ஆப்பிரிக்க குடியரசு உருவாக்கப்பட்டபோது அது தொழுநோயாளியும் மற்றும் பயித்தியக்காரர்களையும் அந்த தீவுக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.  அதன் பிறகு அது சமூக விரோதிகள் மற்றும் அரசியல் புரட்சியாளர்கள் ஆகியோருக்கான சிறையாக மாற்றப்பட்டது.
மண்டேலா இந்த தீவுக்கு அனுப்பப்படுவதற்கு சில ஆண்டுகள் முன்புவரை 1948ம் ஆண்டு ஆரம்பமான நிறவெறி அரசாங்கம் அரசியல் கைதிகளை பிறகைதிகளோடு சேர்த்துத்தான் வைத்திருந்தது.  அதன்மூலம் மற்ற கைதிக்கு அரசியல் கைதிகளை சின்னாபின்னாமாக்கிவிடுவார்கள் என்று அது நம்பியது.  ஆனால் இப்படி சேர்த்த வைப்பதால் சாதாரணமான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருடர்கள் நாடோடிகள், கொலை காரர்களில் பலர் விரைவிலேயே அரசியல் கைதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஆப்பிரிக்காவில் இருந்த ஏ.என்.சி. மற்றும் பி.ஏ.சி. ஆகிய இரண்டு புரட்சிகர குழுக்களில் சேர்வது அதிகரித்துவிட்டது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டனர்.  எனவே, அந்த முறையை கைவிட்டுவிட்டனர்.  சாதாரண குற்றவாளிகளும் அரசியல் கைதிகளும் தனித்தனியே பிரிக்கப்பட்ட பிறகும்கூட மண்டேலா வந்தபிறகு அரசியல் கைதிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.  மண்டேலாவைப்போல ஆபத்தான அரசியல் தலைவர்கள் என்று கருதப்பட்டவர்கள் செக்ஷன் பி என்ற பிரிவுக்கு  அனுப்பப்பட்டனர்.  அவர்களுக்கு இழைக்கப்பட்ட ஏனைய கொடுமைகளோடு தனிமை என்ற கொடுமையும் கூடுதலாக சேர்க்கப்பட்டது.
தனது இருபத்தெழு ஆண்டுகால சிறை வாழ்க்கையில் அந்த தீவில் இருந்த பதினெட்டு ஆண்டுகாலமும் ஆறரை அடி அகலமும் ஏழரை அடி நீளமும் பத்து அடி உயரமும் கொண்ட ஒரு சிறை கொட்டடியில்தான் மண்டேலா அடைக்கப்பட்டிருந்தார்.  அது விலங்கு ஒன்று அடைந்துகொள்ளும் பொந்தைப்போலவும் ஒரு பெட்டியைப்போலவும் இருந்தது.  மனிதர்கள் இருப்பதற்கு அது தகுதியற்றது.  அந்த அறையை சுற்றி கட்டப்பட்டிருந்த சிமெண்ட் சுவர் கோடைக்காலத்தில் அதை ஒரு சூளைப்போலவும் குளிர்காலத்தில் அதை ஒரு ஐஸ்பெட்டிபோலவும் ஆக்கிக்கொண்டிருந்தது.  அந்த அறையில் இருந்த கம்பிகள் பொறுத்தப்பட்ட சின்னஞ்சிறு ஜன்னல் வழியாக சுவரால் சூழப்பட்ட முற்றத்தை மட்டுமே ஒருவர் பார்க்கமுடியும்.  அங்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் காவல் காத்துக்கொண்டிருப்பார்கள்.   இந்த காவலர்கள் பெரும்பாலோர் வெள்ளையர்கள்.  ஆனால் அந்த தீவில் இருந்த சிறைவாசிகளில் பெரும்பாலோர் கறுப்பர்கள்.  வெள்ளை இனத்தைச் சேர்ந்த கைதிகளுக்கென்று தனியே சிறைகள் இருந்தன.  அதுபோலவே வெள்ளையும் இல்லாமல் கறுப்பும் இல்லாமல் ஆசிய வம்சாவலியைச் சேர்ந்த பழுப்பு நிற மனிதர்களுக்கென்று தனியே சிறை இருந்தது.
நிற வெறி என்பது இன ரீதியாக பிரித்து வைப்பதை விடவும் ஆழமாக ஊடுருவிச் சென்றிருந்தது.  அது மனிதர்களை பல அடுக்குகளாக பிரித்து வைத்தது.  வெள்ளையர்கள் அந்த அடிக்கின் உச்சியில் இருந்தனர்.  கறுப்பர்கள் அடியில் இருந்தனர்.  மற்றவர்கள் அவர்களது நிறத்தில் எத்தனை சதவீதம் வெள்ளை நிறம் இருக்கிறதோ அதற்கேற்ப வகைப்படுத்தப்பட்டார்கள்.  1964ல் தென்னாப்பிரிக்க சிறை அமைப்பு இந்த தத்துவத்தை தீவிரமாக கடைப்பிடித்து வந்தது.  அப்போது ஸ்டெல்லன் பாஷ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை தலைவராக இருந்த வெர்வோர்டு என்ற அறிவு ஜீவி இந்த தத்துவத்தை ஆதரித்து வந்தார்.  சிறைவாசிகளின் தோல் நிறத்தை வைத்து அவர்களுக்கான உணவு, உடை, வேலை மற்றும் தண்டனை ஆகியவற்றை முடிவுசெய்தார்கள்.  அதன்படி பழுப்புநிறம் கொண்டவர்களுக்கு டி பிரிவு உணவு வழங்கப்பட்டது.  அதில் ரொட்டி, காய்கறிகள், காப்பி முதலானவை இருக்கும்.  ஆனால் கறுப்பர்களுக்கோ எஃப் பிரிவு உணவு வழங்கப்பட்டது.  அது சோளக் கஞ்சியை மட்டும் கொண்டதாகும்.  பழுப்பு நிறம் கொண்டவர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டரை அவுன்ஸ் சர்க்கரை கொடுக்கப்பட்டது.  கறுப்பர்களுக்கோ இரண்டு அவுன்ஸ் மட்டும்தான் தரப்பட்டது.  பழுப்பு நிறத்தவருக்கு மெத்தைகள் கொடுக்கப்பட்டன.  கறுப்பினவர்க்கோ பாய்கள் மட்டும்தான் வழங்கப்பட்டன.  பழுப்பினத்தவர்க்கு மூன்று போர்வைகள் ஆனால் கறுப்பர்களுக்கோ இரண்டு போர்வைகள் மட்டும்தான்.
இந்த பேதங்களை எல்லாம் மண்டேலா சகித்துக்கொண்டார்.  உணவை பற்றியோ, படுக்கையை பற்றியோ புகார் எதுவும் சொல்லவில்லை.  சிறை நிர்வாகத்தினர் கறுப்பின கைதிகளை அவமானப்படுத்துவதற்கென்று வழங்கிய சீருடையை அவர் அணிய மறுத்தார்.  சிறை நிர்வாகத்தின் கடுமையான தண்டனைகள் மிரட்டல்கள் இன்னும்மோசமான தனிமைச் சிறைகள் எதுவும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.  கடைசியில் ராபன் தீவில் இருந்த கறுப்பின கைதிகள் அனைவருக்கும் வெள்ளை இன கைதிகளுக்கு வழங்கப்படுவதுபோலவே முழு நீள பேட்டுகள் வழங்கப்பட்டன.
காலையில் ஐந்தரை மணிக்கு சிறையின் வேலை நாள் ஆரம்பமாகிவிடும்.   கைதிகளுக்கு ஒருசில நிமிடங்கள் மட்டுமே தரப்படும்.  அதற்குள் அவர்கள் தமது அறையில் இருக்கம் மல வாளிகளை எடுத்துச் சென்று கொட்டிவிட்டு சுத்தம் செய்துகொண்டு வந்துவிடவேண்டும்.  இடையில் சக கைதிகளோடு பேசுவது தடைசெய்யப்பட்டிருந்தது.  காலையில் வழங்கப்படும் இந்த ஒருசில நிமிட அவகாசத்தில்தான் கைதிகள் தமக்குள் பேசிக்கொள்ள முடியும்.  அல்லது சைகை செய்துகொள்ள முடியும்.  பிறகு சோளக்கஞ்சி கொடுக்கப்படும்.  கைதிகள் யாவரும் முற்றத்துக்குள் ஓட்டிவரப்படுவார்கள்.  தனித்தனியாக தரையில் அமைதியாக அமர்த்தப்படுவார்கள்.  அங்கு கொட்டப்பட்டிருக்கும் சுண்ணாம்புக்கற்களை அவர்கள் உடைக்கவேண்டும்.  முற்பகலிலும் மாலையிலும் அரை மணிநேர அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்.  அப்போது அவர்கள் எழுந்து நடந்து தம் கால்களை நீட்டி மடக்கிக் கொள்ளலாம்.  பகலில் ஒருமுறை மாலையில் ஒருமுறை அவர்களுக்கு கஞ்சி ஊற்றப்படும்.  பிறகு அவர்கள் மீண்டும் கொட்டடிகளில் வைத்து பூட்டப்படுவார்கள்.  அந்த அறைகளுக்குள் 24 மணிநேரமும் பல்பு எறிந்துகொண்டிருக்கும்.
அரசியல் கைதிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பார்வையாளர்களை சந்திக்கலாம்.  அதற்கு அரை மணி நேரம் அனுமதி வழங்கப்படும்.  கண்ணாடி சுவரால் பிரிக்கப்பட்டு சிறிய ஓட்டைகள் மட்டுமே கொண்ட அறையில் இந்தபுறம் கைதிகளும், அந்தப்புறம் அவர்களைப் பார்க்க வந்த பார்வையாளர்களும் நிறுத்தப்படுவார்கள்.  ஆயுதம் ஏந்திய காவலர்களுக்கு முன்புதான் பேசிக்கொள்ளவேண்டும்.  அவர்களது உரையாடல் குடும்ப விஷயங்களைத் தாண்டி வேறு பிரச்சனைகளுக்கு, அரசியல் பிரச்சனைகளுக்கு போகுமேயானால் அந்த காவலர்கள் இடைமறித்து உரையாடலை நிறுத்தி விடுவார்கள்.  ஆண்டுக்கு இரண்டு முறை கைதிகள் கடிதம் அனுப்பவோ, பெறவோ அனுமதிக்கப்படும்.  அந்த கடிதங்கள் சிறை அதிகாரிகளால் படிக்கப்பட்ட பிறகுதான் கைதிகளுக்கு தரப்படும்.  அரசியல் தொடர்பான வாக்கியங்கள் ஏதேனும் அந்த கடிதங்களில் இருந்தால் அவற்றை அந்த அதிகாரிகள் அடித்துவிடுவார்கள்.
சிறைவாசியின் மனிதத்துவத்தை நிர்மூலமாக்கி அவரை உணர்வற்ற ஜடமாக்க செய்து அவரிடம் இருக்கும் நம்பிக்கையை அழித்து அவரை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இத்தகைய ஒடுக்குமுறை நுட்பங்கள் யாவும் மண்டேலாவிடம் தோற்றுப்போயின.  அவரது நண்பர்களின் கூற்றுப்படி மண்டேலா சிறையிலிருந்தபடியே லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து சட்டத்தில் பட்டம் வாங்கினார்.  சிறைக்குள் சிறியதொரு தோட்டத்தை அமைத்தார்.  சக கைதிகளோடு உரையாடினார்.  சிறைக்குள் அவர் பலவற்றைக் கற்றுக்கொண்டார்.  அங்கு அவர் பயின்ற அரசியல் தெளிவு தான் அங்கிருந்த சிறைவாசிகள் மீதும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதும் இறுதியில் ஆப்பிரிக்கா முழுவதன் மீதும்  தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு உதவியாக இருந்தது.  ராபன் தீவில் அவர் இருந்த முதல் பத்தாண்டுகளின் முக்கியத்துவம் அவர் தன்னை இழந்துவிடவில்லை என்பதில் தங்கியிருக்கவில்லை.  அவர் தனது லட்சியங்களை விட்டுக்கொடுக்காமல் மன உறுதியோடு வாழ்ந்தார் என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது.  கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அந்த காலத்திலும் மண்டேலா தனது இதயத்தை அதிர்ப்தியால், வெறுப்பால் நிறப்பிக்கொள்ளவில்லை.  மாறாக தென்ஆப்பிரிக்காவில் நிற வேற்றுமை பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்றால் அங்கிருக்கும் நிற வெறி அரசாங்கத்தோடு அமைதியான பேச்சுவார்த்தையை நடத்தித்தான் ஆகவேண்டும்  என்று அவர் நினைத்தார்.  இந்த யுக்தி அங்கிருந்த மக்கள் தொகையில் பன்னிரென்டு சதவீதத்தினராக மட்டுமே இருக்கும்.  ஆனால் பிற பெரும்பான்மை மக்களான கறுப்பினத்தவரை ஒடுக்கி சுரண்டி ஆண்டுகொண்டிருக்கும் வெள்ளை இனத்தவர் மத்தியில் ஒரு மனமாற்றத்தை  ஏற்படுத்த உதவியது.  நிற பேதங்களுக்கு முடிவுகட்டப்படவேண்டும். அரசியல் ஜனநாயகம் அனுமதிக்கப்படவேண்டும்.  அவ்வாறு செய்தால் அது குழப்பத்துக்கோ, பழி வாங்குவதற்கோ வழிவகுத்துவிடாது.  மாறாக இனக்கமான கூட்டுறவான ஒரு சகாப்தத்தை தென்ஆப்பிரிக்காவில் துவக்கி வைக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
இந்த கருணை நிரம்பிய அணுகுமுறைதான் துவக்கத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர்களை வழிநடத்தியது.  வெள்ளையர்கள் நம்பிக்கொண்டிருப்பதுபோல கறுப்பின மக்கள் காட்டுமிராண்டிகள் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்ல அதுவே உதவியாக இருந்தது.  ஆனால் 1960களின் துவக்கத்தில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை உச்சத்தில் இருந்தபோது வன்முறை நடவடிக்கைகள்தான் வெற்றியைத்தரும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் சாத்வீகமான தலைவர்களாக கருதப்பட்ட நெல்சன்மண்டேலா வால்டர் சிசுலு, ஆலிவர் டாம்போ ஆகியோர்கூட நம்பினார்கள்.  "ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கர்களுக்கே", "வெள்ளையர்களை கடலில் வீசுவோம்" என்பனபோன் முழங்கங்களை முன்வைத்தார்.  பி.ஏ.சி. கட்சியின் திட்டங்களை இவர்கள் எப்போதுமே நிராகரித்துத்தான் வந்தார்கள்.  என்றாலும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்குள் ஒரு ஆயுதக்குழுவை ஏற்படுத்தி சதிச் செயல்களிலும் ஆயுதபிரயோகங்களிலும் ஈடுபட்டார்கள்.  க்யூபா மக்கள் சீனம், வடகொரியா, கிழக்கு ஜெர்மனி முதலிய நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பி கொரில்லா யுத்தத்தில் பயிற்சி பெற வைத்தார்கள்.  நெல்சன் மண்டேலா  வாபன் தீவுக்கு கைதியாக வந்தபோது நிறவெறி அரசாங்கத்தை ஆயுதப்போராட்டத்தின் மூலம்தான் தூக்கியெறிய முடியும் என்ற நம்பிக்கை ஆப்பிரிக்காவெங்கும் ஆழமாக வேறூன்றி இருந்தது.  அன்றிருந்த நிறவெறி அரசாங்கம் ஒடுக்குமுறையின் உச்சத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது அந்த கருத்தை எவரால்தான் மறுக்கமுடியும்.
நெல்சன் மண்டேலாதான் இந்த கருத்தாக்கத்தை துணிவோடு எதிர்த்தார்.  அதுவும் குகைபோன்ற ஒரு சிறைக் கொட்டடியில் ஆயுல் சிறைவாசியாக அடைக்கப்பட்ட நிலையில், தனிமையில் இதைச் செய்தார்.  அவரது சிறை வாசத்தின் இரண்டாவது தசாப்தத்தில் அற்புதமான அரசியல் யுத்திகளை அவர் உறுவாக்கினார்.  அவற்றைக் கொண்டு முதலில் தனது கட்சிக்காரர்களை,  கம்யூனிஸ்டுகளை, தாராளவாதிகளை அவர் சமாதானப்படுத்தினார்.  தனது சிறைவாசத்தில் மூன்றாவது தசாப்தத்தில் நாட்டின் நிலைமை சற்றே மேம்பட்டபோது சிறைக்குள் இருந்தபடியே அவரால் வெளி உலகத்தோடும் ஆட்சியாளர்களோடும் தொடர்பு கொள்ள முடிந்தது.  சுதந்திரமான, பல இனங்களும் இனக்கமான வாழக்கூடிய தென்ஆப்பிரிக்கா ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுடிந்தது.  ஒப்பந்தந்தத்துக்கு வரமுடிந்தது.  இதற்கு அவருக்கு 20 ஆண்டுகால போராட்டம் தேவைப்பட்டது.  இறுதியில் அவர்தான் வென்றார்.  சிறைவாசியாக இருந்தபோதே தென்ஆப்பிரிக்காவின் அதிபர்களான போத்தா, டி கிளர்க் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு கௌரவமாக அமர்ந்து தேனீர் அருந்த முடிந்தது.  தென்ஆப்பிரிக்காவில் இருக்கும் வெள்ளையர்கள், கறுப்பர்கள் இந்தியர்கள், பழுப்பு நிறத்தவர்கள் என எல்லோராலும் மதிக்கப்படுகிற ஒரு ஜனாதிபதியாக அவர் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மிக நீண்ட, துயரம் தொய்ந்த ஆப்பிரிக்க கண்டத்தின் வரலாற்றில் இப்படி ஒரு முன்னுதாரணம் இருந்ததில்லை.
  நீங்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு செல்வீர்களேயானால் அதன் நகரங்களை அவற்றில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய பலபலப்புகளை அந்நாட்டின் எழிலார்ந்த கடற்கரைகளை, தரம் வாய்ந்த திராட்சை தோட்டங்களை, சிங்கங்களும், யானைகளும், சிறுத்தைகளும், ஒட்டகச்சிவிங்கிகளும் சுதந்திரமாக நடமாடும் மிகப்பெரும் காடுகளை பார்ப்பதோடு நின்றுவிடாதீர்கள்.  அல்லது ஒடுக்குமுறையின் சின்னங்கள் என்று கூறப்படும் கறுப்பினத்தவர் நிறைந்து வாழும் நகர பகுதிகளான சொவேட்டோ போன்ற இடங்களை மட்டும் பார்த்து வறுமையிலும் அங்கு பீரிட்டெழும் ஆற்றலை படைப்பூக்கத்தை ரசிப்பதோடு நின்றுவிடாதீர்கள்.  முதலில் ராபன் தீவுக்கு செல்லுங்கள்.  கடலின் நடுவே கைவிடப்பட்ட ஒரு பாழ்நிலமாக கிடக்கும் அங்கே செல்லுங்கள்.  அங்குதான் மனிதர்கள் வாழமுடியாத சிறைக் கொட்டடியில் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றையே உத்வேகம் கொள்ளவைத்த சிந்தனைகள் உருவெடுத்தன.  இன்று உயிரோடிருக்கும் அரசியல் தலைவர்களிலேயே மதி நுட்பமும், பெருந்தன்மையும் கொண்ட ஒரு ஆளுமை அங்குதான் பல ஆண்டுகளை செலவிட்டது.

(நன்றி : The Languge of Passion, Selected Commentry, Picator, 2004)

வெளியாட்களால் சீரழியும் விடுதிகள்




     அழகான கிராமம் ஒன்றில் வறுமையின் குறியீடாகத் திகழும் ஒரு பகுதியை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புக்குச் செல்லவேண்டும்.  கண்கவரும் நகரம் ஒன்றில் சேறும் சகதியுமாக ஒரு இடத்தைப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் அங்குள்ள சேரிப்பகுதிக்குச் செல்ல வேண்டும்.  பிரமிக்கவைக்கும் கட்டிடங்களைக் கொண்ட கல்விக்கூடங்கள், உலகத் தரம் வாய்ந்த ஹாஸ்டல்கள் இவற்றுக்கிடையே மனிதர்கள் வசிக்கவே முடியாத மாணவர் விடுதி ஒன்றைப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு அறைகளில் ஜன்னல் இருந்தால் அதற்குக் கதவிருக்காது.  கதவிருந்தால் அதை மூடமுடியாது.  தரை பெயர்ந்துபோய் கிடக்கும்.  மின் விளக்குகள் உடைந்துபோய் இருக்கும்.  கதவுகளே இல்லாத கழிவறைகள்,தண்ணீரே வராத குளியலறைகள்.  
ஆதிதிராவிட நலத்துறையால் 1229 மாணவர் விடுதிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் 84886 மாணவர்கள் தங்கிப்படிக்கின்றனர். இவைதவிர பழங்குடியினருக்கென நடத்தப்படும் 40 விடுதிகள் மற்றும் 296 உண்டி உறைவிடப் பள்ளிகளில் 42648 மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். ஆதிதிராவிட நலத்துறையின் பட்ஜெட்டில் இந்த ஆண்டு 81 விழுக்காடு தொகை அதாவது 721 கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் விடுதிகளுக்கென்று செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பதை அரசாங்கம் குறிப்பிடவில்லை.
      இந்த விடுதிகளின் நிலை மோசமாக இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது நிதிப் பற்றாக்குறை.மாணவர்களுக்கென்று ஒதுக்கப்படுகிற நிதி தற்போதைய விலைவாசியை ஒப்பிடும்போது யானைபசிக்கு சோளப்பொரியாகவே இருக்கிறது.  ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ்டூ வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 450 ரூபாய் உணவுக்கென்று ஒதுக்கப்படுகிறது.அதாவது ஒரு மாணவனுக்கு நாள் ஒன்றுக்கு 15 ரூபாய். இந்தத் தொகையைக் கொண்டுதான் அரிசி, பருப்பு, எண்ணெய், எரிபொருள் எல்லாவற்றையும் வாங்க வேண்டும்.  மாதத்துக்கு இரண்டு முறை ஆட்டு இறைச்சியும், இரண்டு முறை கோழி இறைச்சியும் போட வேண்டும்.கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 550 ரூபாய்தான் உணவுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இந்தத் தொகையில் மாணவர்கள் விரும்புகிற அளவுக்கோ, தரத்துக்கோ உணவை வழங்குவதென்பது எவருக்குமே சாத்தியமில்லை.இன்னொரு குறைபாடும் மாணவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.  வீட்டில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குத் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வாரம் ஐந்து முட்டைகள் வழங்கப்படுகின்றன.  ஆனால் ஆதிதிராவிடர் நல விடுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கோ வாரம் மூன்று முட்டைகள்தான் கொடுக்கப்படுகின்றன.    
       விடுதிகளுக்கென்று ஒதுக்கீடு செய்யப்படும் தொகையும்கூட ஒழுங்காக மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. சமையலர்கள், விடுதிக்காப்பாளர்கள் என பல ஓட்டைகளிலும் ஒழுகியதுபோக மிச்சம்தான் மாணவர்களின் தட்டுகளுக்கு வரும்.அந்த உணவாவது மாணவர்களால் சாப்பிடப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. காரணம், இந்த விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர் அல்லாத வெளி ஆட்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் விடுதிகளில் மாணவர்களைவிட இப்படி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளியாட்களின் எண்ணிக்கையே அதிகம்.இவ்வாறு தங்கியிருப்பவர்களும் விடுதிகளிலேயேதான் சாப்பிடுகிறார்கள். அவர்களுக்குத் தமது அறைகளில் அங்கிருக்கும் மாணவர்களே அடைக்கலம் அளித்துவருகின்றனர்.இதனால், 100 மாணவர்களுக்குத் தயாரிக்கப்படும் சாப்பாட்டை  200 பேர் சாப்பிடவேண்டிய நெருக்கடி. பலசாலிகள் உணவைக் கபளீகரம் செய்துகொண்டு போவதும், பலவீனமான மாணவர்கள் பட்டினியாகக் கிடப்பதும் இந்த விடுதிகளின் நடைமுறை.
      ஆதிதிராவிட நலத்துறை போலவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் விடுதிகளை நடத்துகிறது. 1207 விடுதிகள் அந்தத் துறையால் நடத்தப்படுகின்றன. அந்த மாணவர்களுக்கும் இதே தொகைதான் உணவுக்காக வழங்கப்படுகிறது. ஆனால் அங்கே இப்படியான பிரச்சனைகள் எழுவதில்லை. காரணம் அங்கே வெளி ஆட்கள் விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் வெளியாட்கள் தங்குவதைத் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை, அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டியது மாணவர்களின் பொறுப்பு.மாணவர்கள் ஒத்துழைக்கமாட்டேன் என்கிறார்கள் என்று சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருந்தால் அரசாங்கத்துக்குத்தான் கெட்டபெயர் உண்டாகும். 
       இந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் பெரும்பாலோர் கிராமப்புறங்களிலிருந்து வருகிறவர்கள்தான்.  விடுதி வாழ்க்கை குறித்த அனுபவமோ, புரிதலோ அவர்களில் பலருக்கு இருப்பதில்லை.  ஒரு மாணவனை நற்பண்பு உள்ளவனாக வளர்த்தெடுக்கக்கூடிய தன்மை நமது கல்வி முறையில் இல்லை. அதை எடுத்துச் சொல்லும் நிலையில் இக்கால ஆசிரியர்களும் இல்லை. நீதிநெறிப் பாடங்களைப் போதிப்பதற்கென ஒதுக்கப்பட்டிருந்த பாடநேரம் இப்போது வேறு பாடங்களுக்கென ஒதுக்கப்பட்டாயிற்று.  நீதிநெறி என்றாலே அது மதம்சார்ந்த கருத்தியலோடு தொடர்புகொண்டதுதான் என்று நினைத்ததாலும், பாடங்கள் யாவும் மதிப்பெண்களைப் பெறுகின்ற ஒற்றை நோக்கத்தோடே வடிவமைக்கப்பட்டதாலும் வந்த வினை இது. இந்த அணுகுமுறையால் எல்லா மாணவர்களுமே பாதிக்கப்படுகிறார்கள் என்றபோதிலும் ஆதிதிராவிட மாணவர்கள்தான் அதிகமான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.நல்ல விழுமியங்களும், மதிப்பீடுகளும் தெரியாமல் ஆன்மீக வறுமைக்கு ஆளாகும் இந்த மாணவர்கள் ஒருவிதமான கும்பல் கலாச்சாரத்துக்குப் பலியாகிறார்கள். அதனால் விடுதிகளைப் பராமரிப்பதிலோ, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதிலோ அக்கறையற்றவர்களாக அவர்கள்  உள்ளனர்.  கதவுகளையும், மின் விளக்குகளையும், தண்ணீர்க் குழாய்களையும் உடைத்துவிடுவது, ஜன்னல் கம்பிகளை அறுத்துவிடுவது போன்ற குறும்புகளில் சில மாணவர்கள் ஈடுபடுவதால் மற்றவர்கள் பாதிப்படைகிறார்கள்.  
ஆதிதிராவிட மாணவ விடுதிகளை சரிசெய்ய வேண்டும் என்றால் அரசாங்கம் இரண்டு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.  மாணவர்களுக்கு நற்பண்புகளை, யோகா போன்ற பயிற்சிகளை அளிப்பதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும்.  உணவுக்கான நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாயும் நிர்ணயிக்கப்படவேண்டும்.  இவையெல்லாவற்றையும்விட மிக முக்கியமானது ஆசிரியர்களை விடுதிக் காப்பாளர்களாக நியமிக்காமல் அதற்காகத் தனியே பணியமர்த்தம் செய்திடவேண்டும்.ஆசிரியர்களை விடுதிக் காப்பாளர்களாய் நியமிப்பதால் பள்ளியும் பாழாகிறது, விடுதியும் வீணாகிறது.
     ஆதிதிராவிட மக்களுக்காக இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கும் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆதிதிராவிட மாணவர்களின் அவல நிலையைக் களைவதற்கு எதிர்வரும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வழிசெய்வார் என நம்புகிறேன்.  
.

தமிழக சட்டசபை தேர்தலில் சில முக்கிய விதிமுறைகள்


தமிழக சட்டசபை தேர்தலில், இம்முறை ஏராளமான புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சிகள், வாக்காளர்கள், அதிகாரிகளுக்கே குழப்பம் உள்ளது.

சில முக்கிய விதிமுறைகள்:

* ஆண், பெண் ஓட்டு சாவடிகளை மாற்றி பொது ஓட்டு சாவடி அமைப்பு
* வாக்காளரின் போட்டோவுடன் "பூத் சிலிப்புகளை' வீடு வீடாக சென்று, தேர்தல் கமிஷனே வழங்கும்.
* வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மகன், மகள், மனைவி சொத்து பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்.
* வேட்பாளர் செலவு கணக்கிற்காக, வங்கியில் தனி கணக்கு துவங்க வேண்டும். அதிகபட்சமாக 16 லட்சம் ரூபாய் செலவிடலாம்.
* வேட்பாளர்களின் டெபாசிட் தொகை உயர்வு. (தனி தொகுதிகளில் 2, 500ல் இருந்து 5000 ரூபாயாகவும், பிற தொகுதிகளில் 5000ல் இருந்து 10 ஆயிரமாகவும் அதிகரிப்பு)
* விளம்பரங்கள் வெளியிடுவதை கண்காணிக்க குழு. சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகளில் இடம்பெறும் வாசகங்களையும், தேர்தல் பிரிவின் அனுமதி பெற்று வைக்க வேண்டும்.
* காரில் கட்சி கொடி கட்டினால், அதற்கான அனுமதியை வாங்கி காரிலேயே வைத்திருக்க வேண்டும்.
* ஓட்டு சாவடி அலுவலர்கள் ஓட்டுப்பதிவு நிலவரம் குறித்து தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். அங்கிருந்து தான் மாவட்ட நிர்வாகங் களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
* பொது இடங்களில்,கொடிக்கம்பங்களில் கட்சிக்கொடிகள் அகற்றப்பட வேண்டும். கம்பங்களில் வண்ணங்களை அழிக்க வேண்டும். 
* கிராமப்புறங்களில் மட்டுமே தனியார் சுவர்களில், அனுமதியுடன் கட்சிகள் விளம்பரங்கள் எழுதலாம். பிற பகுதிகளில் தனியார் சுவர்களிலும் போஸ்டர், பேனர், படம் இருக்கக் கூடாது.
* மக்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக பணம் எடுத்துச் செல்ல தடை. மூன்று மது பாட்டில்களுக்கு மேல் எடுத்துச்செல்ல தடை.
* கிராமப்புறமாக இருந்தாலும், இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும்.
* ஓட்டுப்பதிவு நேரம் காலை 8 மணி முதல் 5 மணி வரை.