Thursday, April 27, 2017

பஞ்சமி நிலம்


2006 ஆம் ஆண்டு நான் சட்டப்பேரவையில் ஆற்றிய கன்னி உரையில் பஞ்சமி நிலம் குறித்து பேசிய பகுதி:

Tuesday, April 25, 2017

இந்தித் திணிப்பும் சிபிஎஸ்இ பள்ளிகளும் - ரவிக்குமார்*  சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட விதி 3.3(1) chapter II ன் படி ஒரு பள்ளி சிபிஎஸ்இ இணைப்புப்பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம்


* இந்தி கட்டாயமாக்கப்பட்டால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கிய NOCக்களை திரும்பப்பெறவேண்டும்

*  பத்தாம் வகுப்புவரை இந்தி கட்டாயம் என்பதைப்பற்றி  மத்திய அரசு உரிய விளக்கம் தந்து குடியரசுத் தலைவர் தந்த அனுமதியை ரத்துசெய்யும் வரை புதிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசு NOC தரக்கூடாது

*  மாநில அரசின் தடையில்லா சான்றிதழோ,சிபிஎஸ்இ வாரியத்தின் இணைப்போ பெறாமல் நூற்றுக்கணக்கான சிபிஎஸ்இபள்ளிகள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன

* மாநில அரசு/ சிபிஎஸ்இ  வாரியம் ஆகியவற்றின் அனுமதியின்றி இயங்கும் சட்டவிரோத சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலைத் தமிழக  பள்ளிக்கல்வித்துறை வெளியிடவேண்டும்

Monday, April 10, 2017

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்1. 

சுதந்திரம், இனிமை, அற்புதம்

சொல்வதற்கு இப்படி பல வார்த்தைகள் உள்ளன 

எனது இதயத்தின் நரம்புகளில் எல்லா நாட்களும் எல்லா நேரமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது

சுதந்திரம் 

விடுதலை என்பது போன்ற சில வார்த்தைகள் உள்ளன 

என்னை அழ வைக்கும் வார்த்தைகள்

எனக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரிந்தால் 

உணர்வீர்கள்

நான் சொல்வது ஏன் என்பதை 


2.

நான் அறிவேன் நதிகளை: 

நான் அறிவேன் உலகத்தைப்போல தொன்மையான மனித நாளங்களின் குருதி ஓட்டத்தைவிடப் பழமையான நதிகளை

எனது ஆன்மா ஆழ்ந்து செல்கிறது நதிகளைப்போல

 

விடியல்கள் இளமையாய் இருந்தபோது நான் யூப்ரடிஸ் நதியில் குளித்தேன் 

காங்கோவுக்கு அருகில் கட்டினேன் என் குடிலை

அது என்னைத் தாலாட்டித் தூங்கவைத்தது

நான் நைல் நதியைப் பார்த்தேன் அதன்மேல் கட்டினேன் பிரமிடுகளை 


ஆப்ரகாம் லிங்கன் நியூ ஓர்லயன்சுக்குப் போனபோது நான் கேட்டேன் மிசிசிப்பியின் பாடல்களை

பார்த்தேன் அதன் அடிமடியிலிருக்கும் சேறெல்லாம் அஸ்தமனத்தின்போது தங்கமாக மாறியதை 


நான் அறிவேன் நதிகளை: 

தொன்மையான கறுத்த நதிகளை 

எனது ஆன்மா செல்கிறது ஆழமாக நதிகளைப்போல யேஸெக் குதரூஃப் (Jacek Gutorow) கவிதைகள் தமிழில்:ரவிக்குமார்1. 
பனி வயலில் நான்  ஓடும்போது
மகிழ்ச்சி நான் அதன் பக்கம் 
இருப்பதாக  எண்ணிக்கொண்டிருக்கிறது 
மரணமோ 
அகலத் திறந்த கண்களால் 
பார்த்துக்கொண்டிருக்கிறது 
எனது வலது பையை 
அதில் 
ஒரு பிளாஸ்டிக் விமானம் 
பறக்கிறது பறக்கிறது 
இறுக்கி மூடிய  கைக்குள்

2.

முதல் மழை. பாதையோர கற்பலகை.
ரொட்டித் துண்டுகளுக்காக சண்டையிடும் குருவிகள்
வேறெதுவும் நிகழவில்லை.
காணாமல்போன வார்த்தை மூட்டுவதில்லை கலகத்தை 

3.
ஏராளமாகக் கவிதைகள்
ஏராளமாக நல்ல கவிதைகள்
இன்னும் இன்னும்
வலிமை கூடிக்கொண்டே இருக்கிறது. 
ஏராளமான கவிதைத் தொகுதிகள். 
ஏராளமான பரிசுபெறும் 
முன்மாதிரியாகத் திகழும் கவிதைத் தொகுதிகள்
எங்குபார்த்தாலும் நல்ல கவிஞர்கள்
ஏராளமான கவிதைகள்
கடைசியில் ஒருவர் வேண்டுவது
அழகாக இல்லாதபோதும்
உறக்கத்தைக் கலைக்கிற 
ஒரேயொரு நல்ல கவிதையை எழுதிவிடவேண்டும் என்பதுதான்


யேஸெக் குதரூஃப் (Jacek Gutorow) : போலிஷ் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர் 
Sunday, April 9, 2017

படிநிலையாய் உறையும் பாகுபாடு - ரவிக்குமார்

https://www.minnambalam.com/k/2017/04/10/1491762614

பாகுபாடுகள் படிநிலைகளாக உறைகின்றன. படிநிலைகள் சமத்துவத்தை அழித்து வன்முறைக்கு வழிகோலுகின்றன. நாம் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் நமது அரசியல் வழிமுறையாக ஏற்றுக்கொண்டு விட்டோம். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அதைத்தான் அறிவித்திருக்கிறது. ஆனால் அது கொள்கை அளவில் மட்டும்தான் இருக்கிறது. நடைமுறையில் நாம் பாகுபாடுகளைக் கடைபிடிக்கவே செய்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்; பசு காவலர்கள் என்ற பெயரில் உலவும் பயங்கரவாதிகள், அப்பாவி ஏழை முஸ்லிம்களை அடித்துக் கொலை செய்கிறார்கள்; ஆணும் பெண்ணும் சேர்ந்து தெருவில் போனாலே பண்பாட்டுக் காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு உருவாக்கியிருக்கும் ‘ரோமியோ படை’ இந்தப் பண்பாட்டுக் காவலுக்கு சட்டப் பாதுகாப்பை அளித்திருக்கிறது.

மதத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில், பாலியல் சார்பின் அடிப்படையில், உடுத்தும் ஆடைகளின் அடிப்படையில், பேசும் மொழியின் அடிப்படையில், உண்ணும் உணவின் அடிப்படையில் ஒவ்வொருநாளும் வன்முறை ஏவப்படுகிறது. அக்லக், ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் என பாகுபாட்டின் பலிகளது பட்டியல் நீள்கிறது. இதுவரை பூனை போல இருந்ததாக நம்பப்பட்டுவந்த பாகுபாடு இப்போது ஓநாயைப்போல உருவெடுத்திருக்கிறது. அது ரத்தவெறி கொண்டு தெருவெங்கும் அலைகிறது.


Saturday, April 8, 2017

“நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”- தொல். திருமாவளவன்

ஏப்ரல்: தலித் வரலாற்று மாதம்

“நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திரு தொல். திருமாவளவன் அவர்களிடம் 1998 செப்டம்பர் மாதத்தில் நான் பதிவுசெய்த நேர்காணலின் ஒரு பகுதி 
=======

* தலித் அரசியலுக்குள் நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி?  இளமைக்கால அனுபவங்கள் இதற்குக் காரணமா?

மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது அம்பேத்கர் இயக்கங்களின் அறிமுகம் கிடைத்தது.  சட்டக் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அய்யனார் என்று ஒரு நண்பர் இருந்தார்.  வீடூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.  காலனி வீடுகள் கட்டுவதற்கு நிலத்திற்காக ஆதிக்க சாதியினரோடு ஏற்பட்ட பிரச்சனையால் அவரை ஆதிக்கசாதியினர் விஷம் வைத்துக் கொன்று விட்டார்கள்.  அந்த சாவுக்குச் சென்றிருந்தேன்.  அவரது அண்ணன் என்னைத் தனியே அழைத்துச் சென்று “எனக்கு பயமாக இருக்கிறது.  என்னையும் கொன்று விடுவார்கள்” என்று அழுதார்.  அப்போது அதை, ஏதோ பயத்தில் சொல்கிறார் என்று நான் நினைத்துவிட்டேன்.  ஆனால் மூன்றாவது நாள் அவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டார்களென்ற செய்தி வந்தது.  அந்தச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது.

அப்போது அம்பேத்கர் இயக்கம் எதிலும் இணைந்து வேலை செய்ததில்லை.  அரசுப் பணிக்காக மதுரைக்குப் போனேன்.  அம்பேத்கர் நூற்றாண்டு சமயத்தில் DPI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசினேன்.  அப்போது மலைச்சாமி அதன் பொறுப்பாளராக இருந்தார்.  மலைச்சாமி இறந்ததற்குப் பிறகு அந்தத் தோழர்கள் என்னைப் பொறுப்பாளராக அறிவித்துத் தீர்மானம் போட்டார்கள்.  நான் மதுரைக்குப் போய் எட்டு மாதங்கள் தான் அப்போது ஆகியிருந்தது.  இது 1990 ஜனவரியில் நடந்தது.  அப்போது பாரதீய தலித் பேந்தர்ஸ் என்ற பெயரில் அமைப்பு செயல்பட்டு வந்தது.  மகாராஷ்டிராவில் தொடர்பிலிருந்த அத்வாலேவைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் சரியானபடி எதுவும் கூறவில்லை.  அமைப்பை பாரதீய குடியரசு கட்சி என மாற்றும்படி அவர் சொன்னார்.  எனக்கு அதில் உடன்பாடில்லாததால் அன்று இரவே அமைப்பைக் கூட்டி கொடி, முழக்கம் ஆகியவற்றை முடிவு செய்தோம்.  இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் ஒரு ஆண்டு செயல்பட்டோம்.  “இந்திய” என்ற சொல் பலருக்கும் நெருடலாயிருந்தது.  பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு நானும் பேசினேன்.  அப்போது பேசிய சுப. வீரபாண்டியன் “இந்திய” என்று வைத்திருப்பதை விமர்சித்துப் பேசினார்.  அதன்பிறகு 1992 முதல் விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறோம். மலைச்சாமி இறந்தபோது ஒரு இரங்கல் செய்தியைக்கூட மகாராஷ்டிராவிலிருந்து கட்சி சார்பில் அனுப்பவில்லை.

நான் நேரடியாக அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான்.  தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது ஒருநாள் எங்கள் ஊரிலுள்ள செல்லியம்மன் கோயிலில் கதவைத் திறந்து மூடி விளையாடிக் கொண்டிருந்தேன்.  அதைப் பார்த்துவிட்டு சாதி இந்துக்கள் கோபமாகத் திட்டினார்கள்.  என் அப்பாவும் என்னைக் கண்டித்தார்.  எங்கள் ஊரில் சேரியைச் சேர்ந்த ஒருத்தரை மோட்டார் திருடினார் என்று பழி சுமத்தி பத்து விரல்களிலும் துணியைப் பந்தம்போல் சுற்றி சாதி இந்துக்கள் நெருப்பு வைத்தார்கள்.   அது என் மனதை மிகவும் பாதித்தது.  1990க்குப்பிறகு தென் மாவட்டங்களில் நடந்துவரும் சாதிக் கொடுமைகள் தான் தலித் அரசியலின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தின.

சிவனடியார் ஆறுமுகசாமிக்கு சிதம்பரத்தில் சிலை அமைக்கவேண்டும் - ரவிக்குமார்சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடுவதற்குப் போராடி வெற்றிகண்ட சிவனடியார் ஆறுமுகசாமி இன்று காலமானார். அவருக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

2008 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தினகரன் நாளேட்டில் வெளியான அவரது புகைப்படத்தைக் காண்பித்து அவருக்குத் தமிழக அரசு நிதி உதவி அளிக்கவேண்டும் எனக் கோரினேன். அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் உடனடியாக எனது கோரிக்கையை ஏற்று மாதம் மூன்றாயிரம் ரூபாய் உதவித் தொகையும், மருத்துவப் படியும் வழங்கிட ஆணை பிறப்பித்தார். அந்த ஆணை எனது முன்னிலையில் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு ராஜேந்திர ரத்னூ அவர்களால் திரு ஆறுமுகசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது. 

சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடவேண்டும் எனப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் சமூகநீதிப் போராட்டத்தின் ஒரு குறியீடு. அவரது போராட்டத்தை எதிர்வரும் தலைமுறையினர் உணரும் விதமாக சிதம்பரம் நகரில் பொருத்தமானதொரு இடத்தில் அவருக்கு சிலை எழுப்பவேண்டும் எனத் தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
Friday, April 7, 2017

சென்னையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்களா?

சன் டிவியில் நான் பங்கேற்ற விவாதம் 

நான் விவாதத்தில் வலியுறுத்திய சில கருத்துகள்: 

1. வாடகைக்கு விற்பனைக்கு முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காததை முன்னாள் யுஜிசி தலைவர் S. K . தோரட்டும் வேறுசில ஆய்வாளர்களும் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர், twocircles.net என்ற இணைய தளமும் டெல்லியில் ஆய்வுசெய்து பெரும்பாலான ஹவுசிங் சொசைட்டிகளில் ஒரு முஸ்லிம்கூட உறுப்பினர் இல்லை என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

2. பாகுபாடுகளை அடிப்படையாகக்கொண்டது நம் சமூகம், காற்றைப்போல பரவியிருக்கிறது பாகுபாடு.  
தமிழ்நாடு சமயப் பொறைக்கு சான்று அல்ல, சமயக் கொலைக்கு சான்று. அதைத்தான் ரொமிலா தாப்பர், வித்யா தெஹேஜியா முதலான வரலாற்றறிஞர்களின் ஆய்வுகளும், திருப்புடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் காணப்படும் ஓவியங்கள் சிற்பங்களும் உறுதிப்படுத்துகின்றன. 

3. திராவிட இயக்கம் பாகுபாடுகளைக் களைந்து விடவில்லை. ஏற்கனவே இங்கு பாகுபாடுகள் தழைத்துக்கொண்டுள்ளன. 

4. இப்போது மத்தியில் அமைந்திருக்கும் ஆட்சியின் கொடூரத்தை நிகழ்வுகளின் அடிப்படையில் எதிர்த்தால் போதாது, கருத்தியல் ரீதியில் எதிர்க்கவேண்டும். 

5. அரசியல் சட்டத்தை திருத்தாமலேயே பெரும்பான்மை ஆட்சியை பெரும்பான்மைவாத ஆட்சியாக மாற்றமுடியும் என காட்டிவிட்டார்கள். இந்த ஆபத்தை உணரவேண்டும்; 

6. சாதி பெரும்பான்மைவாதமும் மதப்பெரும்பான்மைவாதமும் எதிர் எதிரானவை அல்ல, ஒன்று மற்றதாக மாறிவிடக்கூடியவை . 

7. தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சாதிப் பெரும்பான்மைவாதம் மதப்பெரும்பான்மைவாதத்துக்கு உவப்பானதே

8. முன்னாள் அமைச்சர் சசி தரூர் தற்போது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் தனிநபர் மசோதா 17 வகையான பாகுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. அவை எல்லாவற்றையும் எதிர்க்கவேண்டும்.

Sunday, April 2, 2017

வார்ஸான் ஷைர் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்

1. 

எமது ஆண்கள் எங்களுக்குச் சொந்தமில்லை
ஒருநாள் பிற்பகலில் வீட்டைவிட்டுச் சென்றார் என் அப்பா, அவர் எனக்குச் சொந்தமில்லை

சிறையிலிருக்கிறான் என் சகோதரன், அவன் எனக்குச் சொந்தமில்லை.எனது மாமன்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள், தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள், அவர்கள் எனக்குச் சொந்தமில்லை

எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் மிகையாக நடந்துகொண்டதற்காக அல்லது எதிர்பார்த்த அளவு இல்லாமல்போனதற்காக தெருவில்வைத்து குத்திக்கொல்லப்பட்டார்கள், அவர்கள் எனக்குச் சொந்தமில்லை. நாங்கள் காதலிக்க முயன்ற ஆண்கள் சொன்னார்கள்: ' நாங்கள் ஏராளமான இழப்புகளை சுமந்துகொண்டிருக்கிறோம், மிகவும் கறுப்புத்தனத்தை அணிந்துகொண்டிருக்கிறோம், இங்கே மிகவும் சுமையாக இருக்கிறோம், நேசிப்பதற்குப் பொருத்தமின்றி மிக மிக துயரத்திலிருக்கிறோம்'. பிறகு அவர்களும் போய்விட்டார்கள், நாங்கள் அவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கிறோம். 

இதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமா? 
செத்துப்போனவர்களை
பிரிந்துபோனவர்களை
போலீஸால் பிடித்துச்செல்லப்பட்டவர்களை
போதை மருந்துக்கு,
நோய்களுக்கு,
வேறு பெண்களுக்குப்
பலியானவர்களை 
சமையலறையில் அமர்ந்தபடி, விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பதற்கா இருக்கிறோம்? 

இதில் எந்த அர்த்தமும் இல்லை
பாருங்கள் உங்கள் சருமத்தை, அவளது வாயை, இந்த உதடுகளை, அந்த கண்களை, அடக் கடவுளே, அந்த சிரிப்பைப் பாருங்கள்.

நம் வாழ்வில் அனுமதிக்கத்தக்க ஒரே இருள் இரவில் வருவதுமட்டும்தான் 
அப்போதும்கூட நம்மிடம்
நிலவு இருக்கும் 

2.

உங்களோடு கொண்டுவந்தீர்கள் யுத்தத்தை 
நீங்கள் அறியாமலேயே, அது இருக்கிறது
உங்கள் சருமத்தில், அவசரமாகத் திணிக்கப்பட்ட சூட்கேஸ்களில், புகைப்படங்களில், அதன் வாசனை கலந்திருக்கிறது உங்கள் கேசத்தில், நகங்களில், 
இருக்கக்கூடும் அது உங்கள் ரத்தத்தில் 

சிலநேரம் நீங்கள் வந்தீர்கள் குடும்பத்தோடு
சிலநேரம் ஒன்றுமே இல்லாமல், உங்களின் நிழல்கூட இல்லாமல்
புதிய மண்ணில் கால் பதித்தீர்கள் கரகரப்பாய் பேசும் ஒரு பேயைப்போல
மொடமொடத்த ஜீன்ஸும் பரிதவிக்கும் புன்னகையும் அணிந்து, 
அந்த மண்ணோடு பொருந்திக்கொள்ளத் தயாராக, 
கடுமையாக உழைக்கத் தயாராக, 
யுத்தத்தை
ரத்தத்தை மறப்பதற்குத் தயாராக 

யுத்தம் அமர்ந்திருக்கிறது
உங்கள் வரவேற்பறையின் மூலையில், 
உங்களோடு சேர்ந்து சிரிக்கிறது
டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, 
நிரப்புகிறது உங்கள் உரையாடலின் இடைவெளிகளை, தொலைபேசியில் பேசும்போது எழும் மௌனத்தை, 
காரணங்களைத் தருகிறது
ஒரு சூழலிலிருந்து,
கூட்டங்களிலிருந்து, மனிதர்களிடமிருந்து, நாடுகளிலிருந்து, காதலிலிருந்து வெளியேறுவதற்கு; 
யுத்தம் படுத்திருக்கிறது
உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் நடுவில், நிற்கிறது குளிக்கும்போது உங்களுக்குப் பின்னால், உங்கள் வாயைத் திறந்துபார்த்துவிட்டு பதறிப் பின்வாங்குகிறார் பல் மருத்துவர் 
அவர் யுத்தத்தை அங்கே பார்த்திருக்கக்கூடும், எவ்வளவு ரத்தம். 

நீங்கள் அறிவீர்கள் சமாதானத்தை, நீண்ட யுத்தத்தில் பிழைத்த எவரொருவரும் அறிவதுபோல, 
புரிந்துகொள்கிறீர்கள் அதை 
ஏனெனில் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது நிகழக்கூடிய யுத்தத்தின் நறுமணம், எத்தனை எளிதாக ஒரு யுத்தம் வெடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், அமைதியாக ஒரு தருணம், அடுத்தது ரத்தம். 

யுத்தம் வண்ணமயமாக்குகிறது உங்கள் குரலை, கதகதப்பூட்டுகிறது. நீங்கள் கொன்றவரா அல்லது இழந்தவரா என்பதைத்தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இல்லை. எவரும் கேட்கப்போவதில்லை, சிலவேளை நீங்கள் இரண்டுமாகவும் இருக்கலாம். 
சமீபகாலத்தில் நீங்கள் எவரையும் முத்தமிட்டதில்லை. 
உங்களுக்கு எதை ருசித்தாலும் 
ரத்தத்தின் சுவையே தெரிகிறது. 

* வார்ஸான் ஷைர் ( Warsan Shire) கென்ய நாட்டில் பிறந்த சோமாலிய கவிஞர். தற்போது லண்டனில் வாழ்கிறார்.நிறவெறி, யுத்தம், புலம்பெயர் வாழ்வின் ரணங்கள் முதலானவற்றை பெண்ணிய பார்வையில் பேசுகின்றன இவரது கவிதைகள்

வகுப்புவாத எதிர்ப்பு : conscious ம் unconscious ம் - ரவிக்குமார்காட்சி ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகளில் பிரச்சனைகள் சார்ந்து பங்கேற்பாளர்களை அழைப்பதுதான் ஜனநாயகமாகவும்  சரியானதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதில் ஒரு சமநிலையை ஊடகங்கள்  பின்பற்றமுடிவதில்லை. அதற்குக் காரணமாக பங்கேற்பாளர்களின் availability தொடர்பான பிரச்சனை சொல்லப்பட்டாலும் சேனல்களின் அரசியல் சார்புக்கேற்ப ஆட்களை அழைக்கவேண்டிய நெருக்கடி ஒருங்கிணைப்பாளர்களுக்கு இருக்கிறது என்பதையும் நாம் மனதில்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில்  பெரும்பாலான காட்சி ஊடகங்களை நடத்துவது அரசியல் கட்சிகள் என்பதால் பிரச்சார சாதனங்களாக அவை இருப்பது வியப்புக்குரியதல்ல. 

மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளை, நடவடிக்கைகளை விவாதப்பொருளாக எடுக்கும்போது அரசுகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நபர்களை அழைப்பது தவிர்க்கமுடியாதது. இப்போது தமிழக அமைச்சர்களே  விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். தமது துறை சார்ந்த விஷயங்களில் அவர்களுக்கிருக்கும் புரிதலை மக்கள் அறிந்துகொள்ள இது உதவுகிறது. எனவே இது வரவேற்கத்தக்க மாற்றம். 

முரளி எழுப்பியிருக்கும் கேள்வி பாஜக எதிர்ப்பு என்ற மனநிலையிலிருந்து பார்க்கும்போது முற்போக்கானது. ஆனால் இது பொதுப்புத்தியில் ( common sense ) படிந்திருக்கும் பெரும்பான்மைவாத நம்பிக்கை சார்ந்த கருத்தாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது. 

வாக்கு வங்கியின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்றால் அரசை , அதிகாரத்தை எதிர்த்து எழும் குரல்கள் எப்போதுமே சிறுபான்மையாகத்தான் இருக்கும் அவை இந்த விவாதங்களில் இடம்பெறவே முடியாமல் போய்விடலாம். இடதுசாரிகளும் disproportionate ஆன பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என முரளி சொல்லும்போது அவர் பொதுப்புத்தியின் பெரும்பான்மைவாத நம்பிக்கையை வழிமொழிகிறார் என்பது தெளிவாகிறது. எந்த பாஜகவை அவர் எதிர்க்கிறாரோ அதே பாஜகவின் கருத்தியலை முரளியின் நிலைபாட்டிலும் நாம் பார்க்கிறோம். 

வகுப்புவாத எதிர்ப்பு நிலைபாட்டில் நாம் conscious ஆக செயல்பட்டால் மட்டும் போதாது நமது unconscious ஆகவும் அது மாறவேண்டும். அதன் முக்கியத்துவத்தையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

( BBC தமிழோசையில் பணியாற்றும் முரளிதரனின் முகநூல் பதிவு குறித்து எனது குறிப்புகள் ) 

Friday, March 24, 2017

இனிமேல் மிளகாய் பஜ்ஜியை வாங்கிக்கொண்டு போக முடியாது..- அழகியசிங்கர் நான் கிட்டத்தட்ட வாரம் ஒருமுறையாவது அசோகமித்திரனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  அவருக்கு தேவையான உதவிகளைச் செய்வேன்.  "உங்களை தொந்தரவு செய்கிறேன்," என்பார்.  "பரவாயில்லை. நான் ஓய்வுப் பெற்று சும்மாதான் இருக்கிறேன்..உங்களுக்கு நான் உதவுகிறேன்," என்பேன்.  ஒவ்வொரு முறையும் மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்கு டூ வீலரில் போய் அவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.  விருட்சம் ஆரம்பித்தபோது என் பத்திரிகையில் அவர் தொடர்ந்து கட்டுரை எழுதித் தருவார்.  அவருடைய நகைச்சுவை உணர்வை சாதாரணமாக நினைத்து விட முடியாது.  

 நான் ஒவ்வொரு முறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது, ஆர்யகவுடர் ரோடில் உள்ள வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு போவேன்.  அசோகமித்திரன் ஒன்றே ஒன்று போதும் என்பார்.  எனக்கு இந்த மிளகாய் பஜ்ஜி மட்டும் பிடிக்காது.  ஆனால் அசோகமித்திரன் ரசித்து சாப்பிடுவார்.  அவர் சாப்பிட்டுக்கொண்டே, இந்த பஜ்ஜி விலை என்ன என்று கேட்பார்.  ஐந்து ரூபாய் என்பேன்.  அவரால் நம்ப முடியாது.  ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு சுவையான பஜ்ஜியா என்று வியப்பார்.  

 "இந்த மிளகாய் பஜ்ஜி செய்யறவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்,"  என்பார்.  அதைக் கேட்டு தாங்க முடியாத சிரிப்பு வரும் எனக்கு.

 ஒரு முறை அவருக்குப் போன் செய்து, 'உங்களுக்கு ஞானப்பீட பரிசு கிடைக்கப் போகிறது,' என்பேன்.  
'அதெல்லாம் எனக்குக் கிடைக்காது,' என்று சாதாரணமாக சொல்வார்.  ஹிந்து பத்திரிகையில் அவர் கட்டுரை வந்தால், நான்தான் ஹிந்து பத்திரிகையைக் கொண்டு போய் கொடுப்பேன். 

 "கதைகளை எழுதினால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்," என்றார் ஒருநாள்.  "யாரும் போட மாட்டார்கள்," என்பேன்.  "பத்திரிகைகளில் பிரசுரமாகிற மாதிரிதான் நீங்கள் எழுதுகிறீர்கள், நிச்சயம் வரும்," என்பார்.

 அந்த சமயத்தில் பத்திரிகைகளில் அவர் கதைகளை அனுப்பி பட்ட அனுபவத்தை சொல்வார்.  சுதேசமித்திரன் என்ற பத்திரிகையில் அவர் அனுப்பிய கதைகள் எதுவும் பிரசுரம் ஆகவில்லையாம்.  அவர் அனுப்பிய காலத்தில் ஒரே பிரதி மட்டும் எழுதி அப்படியே அனுப்பி விடுவார்.  திரும்பவும் அக் கதைகளைப் பெற சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகத்திற்குப் போய் அக் கதைகளை தேடியிருக்கிறார்.  தியாகராஜன் என்ற பெயரில்.  அவருடைய பெயரைப் போல வேற ஒரு தியாகராஜன் கதைகள் கிடைக்குமாம்.இப்படி அவர் தொலைத்த கதைகள் பலவாம்.  

 அசோகமித்திரன் ஆசிரியராக இருந்த சமயத்தில் கணையாழியில் என் குறுநாவல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன.  என் கதைகள் மட்டுமல்ல. ஜெயமோகன்., பாவண்ணன், கோபிகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், இரா முருகன் போன்ற பலருடைய குறுநாவல்கள் வந்திருக்கின்றன. கணையாழியல் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விபத்து என்ற என் கதையில் சில மாற்றம் செய்ய அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.  அப்போது அவருக்கு சுரம்.  அவர் அக் கதையை அப்படியே சொல்வார்.  ஒன்றும் மாற்ற வேண்டாம்.  அப்படியே இருக்கட்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி விட்டார். 

 பல எழுத்தாள நண்பர்களை அசோகமித்திரன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன்.  பல இடங்களுக்கு துணையாக அவருடன் சென்றிருக்கிறேன்.  அவர் நடக்கும்போது கீழே மட்டும் விழக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் அவரைப் பிடித்துக்கொண்டு அழைத்து வருவது அவருக்குப் பிடிக்காது.  

 நேற்றுதான் நானும் நண்பரும் வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டோம்.  எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும், அசோகமித்திரனை நினைத்துக்கொண்டுதான் சாப்பிட்டேன்.  அந்த நேரத்தில்தான் அசோகமித்திரன் இறந்து விட்டார் என்ற செய்தி டிவி மூலம் பின்னால் தெரிய வந்தபோது ரொம்பவும் சோகமாகிவிட்டேன்.  என் அப்பா ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறந்து விட்டார்.  அசோகமித்திரன் நேற்று 23ஆம் தேதி இறந்து விட்டார்.  இனிமேல் மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு தி நகர் பக்கம் போக முடியாது.

PHOTOS TAKEN BY CLIK  RAVI

Thursday, March 23, 2017

ஆர்.கே.நகர் : வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் திட்டமா?


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்றுவரை 127 ஆக உள்ளது. திரும்பப்பெறுதல், தள்ளுபடி செய்தல் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட 100 க்குக் குறையாது எனத் தோன்றுகிறது.  இதைப் பார்க்கும்போது அங்கு வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தச் செய்வதற்கு திட்டமிட்ட முயற்சி நடக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. 

ஒரு தொகுதியில் 64 வேட்பாளர்களுக்குமேல் களத்தில் இருந்தால் அங்கே வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுமென தேர்தல் ஆணையத்தின் விதிகள் கூறுகின்றன. 

வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார்கள் இருந்தாலும் அது அறிமுகம் செய்யப்பட்டதற்குப்பிறகு வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியதாக புகார்கள் ஏதும் எழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததற்குப் பிறகு வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.


Wednesday, March 22, 2017

”மையை வீசுபவர்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களாகி விட்டனர். மையைப் பயன்படுத்துபவர்கள் பிரச்சாரகர்களாகி விட்டனர்.”- ரவிஷ் குமார்(என்டிடிவி இந்தியா (இந்தி) தொலைக்காட்சியின் பிரபல நெறியாளர் ரவிஷ் குமார். நிகழ்ச்சிகளில் அமைதியாக, ஆணித்தரமாக, சமரசமின்றி பேசும் இவருக்கு ஏராளமன ரசிகர்கள் சமீபத்தில் 

பத்தான்கோட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த இவருடைய நிகழ்ச்சியில் ரகசியமாகப் பாதுகாக்கப் பட வேண்டிய விஷயங்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி என்டிடிவி இந்தியா 24 மணி நேரம் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது மோடி அரசு. அந்த ஆணையையும் எதிர்த்து கேலி செய்து அதே சானலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ரவிஷ் குமார்.

இவருக்கு எமெர்ஜென்சி காலத்தில் சிறையிலடைக்கப்பட்ட பிரபல பத்திரிக்கையாளர் குல்திப் நய்யார் நினைவு விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில், அவர் நன்றி தெரிவித்து ஆற்றிய இந்தி உரையில் ஆங்கில மொழியாக்கத்தைதி வயர்

இணைய இதழ் வெளியிட்டது. அதன் தமிழ் மொழியாக்கம் இங்கே: )


தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்


இது வெறுப்பின் காலம் என்று உலகம் முழுவதும் உணரப்படும் நேரத்தில் கவுரவிக்கப்படுவது சிறிது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. டிக் டிக் என்று சப்தமிடும் கடிகாரங்கள் அமைதியாய் அடங்கிப்போய் பல பத்தாண்டுகள் ஆன பின்னும் அந்த சப்தத்தை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு அது. மென்மையான சப்தங்களின் மூலம் காலத்தை உணரும் திறமையை நாம் இழந்து விட்டோம். ஆகவேதான், நாம் வாழும் காலத்தினைக் குறித்து சரியான நிர்ணயம் செய்யத் தவறிக் கொண்டிருக்கிறோம். கண்காணிப்புக் குழுக்களும், பறக்கும் படைகளும் தொடர்ந்து ரெய்டு நடத்தும் ஒரு தேர்வு மன்றத்தில் அமர்ந்திருக்கும் உணர்வுடன் நாம் வாழ்கிறோம் _ நமக்குள் இருக்கும் ஒரு குற்றவாளி எந்த நேரமும் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுவான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுவது போல். நாம் தொடர்ந்து பரிசோதனைக்குள்ளாகிறோம். சுதந்திரமாகப் பேசுபவர்கள் மீது ட்ரோல்கள் (வம்பர்கள்) ஏவி விடப்படுகின்றனர்.

இந்ததேர்வு மன்றத்தில்அமர்ந்திருக்கும்போது ஒவ்வொரு முறை ரெய்டு வரும்போதும் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. தவறு செய்யாதபோதிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளோவோமோ என்கிற பயம் தொற்றிக் கொள்கிறது. இந்த கண்காணிப்புக் குழுக்கள் தவறிழைத்தோரைப் பிடித்ததை விட அப்பாவி மக்களை பயமுறுத்தியதுதான் அதிகம். உண்மையான டிகிரிகள், போலியான டிகிரிகள் குறித்து விவாதம் நடக்கும் இந்தக் காலத்தில், மூன்றாம் டிகிரி (அடி உதையுடன் கூடிய போலீஸ் விசாரணை) முறைதான் பல்வேறு வடிவங்களில் திரும்பி வந்துள்ளது. நம் காலத்தில் தொலைகாட்சி நெறியாளர்தான் அதிகார மையாமாகி இருக்கிறார். அவர் கருத்திற்கு மாறாகப் பேசுபவர்களை விளாசித்தள்ளுகிறார். மாற்றுக் கருத்து வைத்திருப்பது குற்றம். மாற்றுக் கருத்தை முன்வைப்பது மோசமான குற்றம்; உண்மைகளை எடுத்துரைப்பது நிந்தனை; உண்மையாக இருப்பது பாவம். முன்பெல்லாம் மாலைப் பொழுதுகளில் மட்டுமே தொலைக் காட்சி நம்மைக் கட்டிப்போட்டது. இப்போது இந்தக்காவல் நிலையங்கள்நாள் முழுவதும் செயல்படுகின்றன. உங்களின் முதல் விருதுக்கு ஒரு தொலைக்காட்சி நெறியாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் _ ஆபத்து நிறைந்த வேலையில் ஈடுபடுபவர்கள் இன்னும் பிழைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் ஆதாரம். மேலும் ஒரு தோல்வியைச் சந்திக்க இன்னும் சிலர் தயாராக உள்ளனர். அவர்கள் உயிரோடிருப்பது ஒரு மாயை போலிருந்தாலும் கூட நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருதை வழங்கிய காந்தி அமைதி அறக்கட்டளைக்கு நன்றி.


நம்மில் எத்தனை பேர் அன்பைப் பற்றிப் பேசவாவது செய்கிறோம்? அன்பைப் பற்றி மக்கள் சிந்திக்கிறார்களா என்பதில் கூட எனக்கு சந்தேகம். இப்போதெல்லாம் சூரியனைப் பார்த்து நம் நாளைத் தொடங்குவதில்லை. வாட்சாப்பில் வரும் குட் மார்னிங் செய்தியைப் பார்த்துத்தான் தொடங்குகிறோம்வாட்சாப்பில்தான் சூரியன் உதிக்கிறது என்று உலகம் நம்பத் தொடங்கும் நாள் தொலைவில் இல்லை. விரைவில் நாம் கலிலியோவை மீண்டும் தண்டிக்கப்போகிறோம். அதை தொலைக்காட்சியில் நேரலையாகக் கூட காணலாம்.


வாய்ப்புகளைக் கண்டறியும் காலகட்டம் இது. புதிய வாய்ப்புகளையும், மீதமிருக்கும் வாய்ப்புகளையும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் போற்றும் மனிதர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆயினும் இந்த நம்பிக்கைகளும், வாய்ப்புகளும் தற்போது மங்கி வருகின்றன. இதற்கு நடுவில்

நம் நம்பிக்கைகளும் தனிமைப்பட்டு வருகின்றன. எவ்வளவு நாள் நாம் தாக்குப்பிடிப்போம் என்ற கேள்வி நம்மை வாட்டிக்கொண்டிருக்கிறது. நாம் வாழப்போகும் காலத்தில் கூட அர்த்தமுடன் வாழ்வது எப்படி என்பதை நாம் மறந்துவிட்டோம். இந்த சூழலில் நம் சக்திகளையும் உணர்வுகளையும் மீண்டும் தூண்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. கேள்விகளுக்கு பட்டை தீட்டுங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களுக்கான கேள்விகளுக்கு. இந்த இயக்கங்கள் நம் நம்பிக்கையை உடைத்துவிட்டன. உங்களுக்கு நம்பிக்கை இல்லாதவர்களையும் கேள்வி கேளுங்கள். நம் சமுதாயத்தில் வாழும் பிற மக்களோடு நம் தகவல் தொடர்பு முழுவடும் உடைந்து விட்டது. இன்றைய மாற்றம் குறித்தான எல்லா நம்பிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மீது இந்த சமுதாயம் குவித்து வைத்துள்ளது. அரசியல்ரீதியாக பலம் பொருந்தியவர்கள்தான் சுகமான அல்லது அபாயகரமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று சமுதாயத்திற்கு இப்போது தெரிந்திருக்கிறது. இதனால்தான் அரசியல் கட்சியின் மீது அனைத்து நம்பிக்கைகளையும் குவித்துவைப்பதிலிருந்து மக்கள் இன்னும் பின்வாங்கவில்லை. மக்கள் இந்த ரிஸ்க்கை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். அரசியல் கட்சிகள் ஒவ்வொரு முறையும் தவறுகின்றன. ஆனால் அடுத்த முறையும் கட்சிகள் மீதுதான் நம்பிக்கை வைக்கிறார்கள்

உறுப்பினர்கள் வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான கருவியாக அரசியலை இனிமேலும் பார்க்க முடியாது என்று நினைத்து வெளியேறுபவர்கள்தாம் இவர்கள். அரசியல் கட்சிகளில் அவர்கள் இல்லாததால் கட்சிகளின் தார்மீக பலம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது

அரசியல் கட்சிகளைப் புனர்நிர்மாணம் செய்து மறுவடிவம் கொடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் உள் முரண்பாடுகளை ஒதுக்கி வையுங்கள்

கடந்த 30-40 ஆண்டுகளாகவே இந்தப் போக்கைக் கண்டு வருகிறோம். இடதுசாரிகள், காந்தியவாதிகள், அம்பேத்காரிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் _ இவர்கள் அனைவரும் அவர்களுடைய மைய நீரோட்ட அரசியல் அமைப்புகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வெளியேற்றத்திற்குப் பிறகு ஒரு மாற்று அரசியலுக்கான் உணர்வை மையநீரோட்ட அரசியல் இழந்து விட்டது. இந்த கட்சிகளுக்கு நீங்கள் திரும்பி அமைப்புகளை உங்கள் கையிலெடுங்கள். இறந்தகாலத்தை மறந்து விடுங்கள். புதிய அரசியலுக்காக கடுமையாக வேலை செய்யுங்கள். நம்முடைய கையாலாகாத்தனதையும், கோழைத் தனத்தையும் உணர வேண்டிய நேரமிது. தயவுதாட்சண்யமற்ற நேர்மையுடன் நம்மை நாமே மதிப்பீடு செய்துகொள்வதற்கு இந்த இருண்ட காலம்தான் சரியான நேரம்.

என்னுடைய இதழியல் பணிக்காக விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதழியல் நெருக்கடியிலிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அப்படி இல்லை என்று பெரு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். தலைநகரிலிருந்து சிறு மாவட்டங்கள் வரையிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிற பத்திரிக்கை ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தத்துவார்த்தப் புயலினால் அடித்து செல்லப்படுவதற்கு மகிழ்ச்சியுடன் தயாராயிருக்கிறார்கள். நான் அவர்களை எவ்வளவுதான் விமர்சித்தாலும், அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதழியலாளர்களாக இப்போதுதான் சாதித்திருக்கிறோம் என்று அவர்கள் உணர்கிறார்கள். கடந்த 50-60 வருடங்களாகவே ஊடகங்கள் அரசியல் அமைப்புகளுடன் ஒன்றிவிட இடையறாது முயன்று வருகின்றனர். ஹோட்டல்கள், மால்கள், சுரங்கங்கள் போன்றவற்றுக்காக உரிமங்கள் பெற்ற பிறகும் கூட ஊடகங்களின் பசி தீரவில்லை.

அவர்களின் ஆன்மாக்கள் நிறைவில்லாமல் இருந்தன. இப்போது அவர்கள் அமைதி நிலையை அடைந்துவிட்டன. இறுதியாக, அதிகார அரசியலின் அங்கமாக வேண்டும் என்கிற அவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டு விட்டது

இந்திய ஊடகங்கள் இன்று பரவச நிலையில் இருக்கின்றன. ஒரு காலத்தில் சொர்க்கத்தின் படிக்கட்டுகளைக் கண்டறிய வேண்டும் என்று மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று பூமியிலேயே சொர்க்கத்தைக் கண்டுவிட்டனர். இனி படிக்கட்டுகள் தேவையில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பவில்லையெனில், ஏதாவது ஒரு பத்திரிக்கையைப் படியுங்கள்; அல்லது ஒரு தொலைக்காட்சியைப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அரசியல் திட்டத்தின் மீது அவர்களுக்கு

இருக்கும் பாசத்தையும் விசுவாசத்தையும் கண்டு பிரமித்து விடுவீர்கள். பல பத்தாண்டுகள் விரக்தியில் வாழ்ந்த பிறகு அவர்கள் இன்று அடைந்திருக்கும் மகிழ்ச்சியை நீங்கள் புரிந்து கொள்ளும்போதுதான் உங்கள் வலியை இன்னும் எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். அலங்கரிக்கப்பட்ட நெறியாளர்கள் முன்னேப்போதும் இவ்வளவு அழகாகத் தெரிந்ததில்லை. அரசாங்கத்தைப் புகழும் பெண் நெறியாளர்கள் முன்பு இவ்வளவு அழகாக இருந்ததில்லை. இன்று பத்திரிக்கையாளர்கள் அரசாங்கமாகவும் இருக்கின்றனர்.

உங்களுக்குப் போராடும் நோக்கம் இருந்தால் செய்தித்தாளையும், தொலைக்காட்சியையும் எதிர்த்துப் போராடுங்கள். இதழியலைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உங்கள் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளுங்கள். தாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களே நினைக்கவில்லை. மீதமிருப்பவர்களை எளிதாக வெளியேற்றி விடலாம். ஒரு தனிப்பட்ட பத்திரிக்கையாளர் பிழைத்திருப்பது எந்த விதத்தில் நிலைமையைச் சீராக்கும்? ஊடக நிறுவனங்கள் முழுமையாக வகுப்புவாதமயமாகி விட்டன. இதழியல் இந்தியாவில் வகுப்புவாதத்தைப் பரப்புகின்றது. ரத்த தாகம் எடுத்து அலைகிறது. அது ஒரு நாள் தேசத்தை ரத்தக்

களரியாக்கும். அதன் திட்டத்தை அது இன்று நிறைவேற்ற முடியாத நிலையிலிருக்கலாம். ஆனால் அதன் முயற்சிகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. அதனால்தான் இவற்றையெல்லாம் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் அரசியல் கட்சிகளின் கிளைகளாகி விட்டன. கட்சிகளில் பொதுச்செயலாளர்களை விட தொலைக் காட்சி நெறியாளர்கள் 

அதிக செல்வாக்குடன் இருக்கின்றனர். இந்தப் புதிய அரசியல் அமைப்புகளை எதிர்த்துப் போராடாமல், மாற்று அரசியல் சிந்தனைகள் வடிவம் பெறாது. பலரும் நீ ஏன் கேள்விகள் கேட்கிறாய் என்று என்னை கேட்கும் அளவுக்கு மக்களின் சிந்தனைகளை இவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். மையை வீசுபவர்கள் பத்திரிக்கை தொடர்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்; மையை வைத்து எழுதுபவர்கள் பிரச்சாரகர்களாகி விட்டனர்

ஆனால், வாய்ப்புகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை செய்து வரும் பத்திரிக்கையாளர்களை நாம் எப்படி கவனிக்காமல் போக முடியும்? இந்த வாய்ப்புகள் நாளை மங்கிப் போகலாம்; ஆனால் இந்தப் பத்திரிக்கையாளர்கள் காட்டும் வழி நமக்கு எதிர்காலத்தில் பலம் தரும். முகஸ்துதியைக் கண்டு சலிப்புற்றும், துரோகதைக் கண்டு அடங்கிபோயும் இருக்கும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழும்போது, போற்றி வளர்த்த நம்பிக்கைகளும், வாய்ப்புகளும்தான் அவர்களைக் காப்பாற்றும். அதனால்தான் நான் நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் பேணிக் காக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகிறேன். நிகழ்காலத்தை, நம்பிக்கை அல்லது தோல்வி என்கிற முப்பட்டைக் கண்ணாடியின் ஊடாகப் பார்க்காதீர்கள். ஒரு ரயில் பாதையில் பூதாகரமான எஞ்சினுக்கு மிக அருகில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். ஓடவோ தப்பிக்கவோ முடியாது. நம்பிக்கை, தோல்வி என்று தேர்வு செய்யும் நிலையில் நாம் இல்லை. உங்களைக்  கடமைக்குள் ஆழ்த்திக்கொள்ள வேண்டிய நேரம். நமக்கு நேரம் குறைவாகத்தான் இருக்கிறது.. அது வெகு வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது


Monday, March 20, 2017

வேண்டுதல் - ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் அலர்கோன்

வேண்டுதல்
- ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் அலர்கோன் ( Francisco X. Alarcón ) 
தமிழில்: ரவிக்குமார் 

எனக்குக் கூட்டாளியாக ஒரு கடவுள்வேண்டும்
பழிக்கப்படும் வீடுகளில்
இரவுகளைக் கழித்து
சனிக்கிழமைகளில் 
தாமதமாய் விழித்தெழும் கடவுள்

வீதிகளில் விசிலடித்தபடி 
நடந்துசெல்லும் கடவுள்
காதலியின் அதரங்களின் முன்னால்
நடுங்கும் கடவுள்

தியேட்டர்களின் முன்னால் கியூவில் நிற்கிற
தேனீர்க் கடைகளில் 
டீ குடிக்கிற கடவுள்

காசநோய்ப் பிடித்து
ரத்தமாய்த் துப்புகிற
பஸ் டிக்கெட்டுக்கும் காசு இல்லாத
கடவுள்

ஆர்ப்பாட்டம் ஒன்றில்
போலீஸ்காரனின் தடியடியில்
மயங்கிவிழுகிற 
கடவுள்

சித்திரவதைக்குப் பயந்து
சிறுநீர் கழிக்கிற
கடவுள்

எலும்பின் கடைசிவரை 
காயம்பட்டு
வலிதாங்காமல் 
காற்றைக் கடிக்கிற
கடவுள்

வேலையில்லாத கடவுள்
வேலைநிறுத்தம் செய்கிற கடவுள்
பசித்த கடவுள்
தலைமறைவாக இருக்கும் கடவுள்
நாடுகடத்தப்பட்ட கடவுள்
கோபங்கொண்ட கடவுள்

சிறையில் வாடும் கடவுள்
மாற்றத்தை விரும்பும் கடவுள்

எனக்கு வேண்டும்
கடவுள்மாதிரியே இருக்கும்
ஒரு கடவுள் 

ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் அலர்கோன் ( Francisco X. Alarcón ) (1954-2016) : ஸ்பானிஷ் மொழியில் எழுதிய மெக்ஸிக-அமெரிக்க கவிஞர்

Thursday, March 9, 2017

பாகுபாட்டை நியாயப்படுத்தும் யுக்திஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான தனது பாகுபாட்டை நியாயப்படுத்த ஆதிக்க சமூகம் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட பிரிவினரில் திறமையற்றவர்களை அங்கீகரித்து அவர்களை அப்பிரிவினரின் குறியீடாகக் காட்டுவது. பின்னர் அவர்கள் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்துவதன்மூலம் 'இவர்கள் எல்லோருமே இப்படித்தான் ' என ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான தனது பாகுபாட்டை நியாயப்படுத்துவது. இது ஆதிக்க சமூகம் கையாளும் நுட்பமான தந்திரம் 

ஆதிக்க சமூகம் அங்கீகரிக்கும் தவறானவர்களைத் தமது குறியீடாக ஏற்க மறுப்பதும், அவர்கள் செய்யும் தவறுகளை தயக்கமின்றி விமர்சிப்பதும்தான் இதை எதிர்கொள்வதற்கு ஒடுக்கப்பட்ட பிரிவினர் கையாளவேண்டிய செயல்தந்திரம்.இது இன, மொழி, மத, சாதி, பாலின ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அனைவருக்கும் பொருந்தும். 

Tuesday, March 7, 2017

மகளிர் தினத்தில் அம்பேத்கர்

 

மகளிர் உரிமைக்காக சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் அம்பேத்கர். நான்கு ஆண்டுகாலம் போராடியும் இந்து சட்ட மசோதாவை சட்டமாக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் அவர் தனது பதவியைத் துறந்தார். 

தான் பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்: 

" To leave inequality between class and class, between sex and sex, which is the soul of Hindu Society untouched and to go on passing legislation relating to economic problems is to make a farce of our Constitution and to build a palace on a dung heap." 

என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். அது இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. 

இந்திய அரசியல் வரலாற்றில் மகளிரின் உரிமைகளுக்காகப் பதவி விலகிய அம்பேத்கரை சர்வதேச மகளிர் தினத்தில் நினைவுகூர்வோம்.


Monday, March 6, 2017

ரவிக்குமார் கவிதைகள்

ரவிக்குமார் கவிதைகள்

மொழி தோற்றுப்போகும் என ஒப்புக்கொள்கிறவர்களால் மட்டுமே 
கேட்கமுடியும் 
மௌனத்தின் உரையாடலை

2
நேசம் என்பதொரு சொல்
நேசம் என்பதொரு உணர்வு
நேசம் என்பதொரு மாயை
நேசம் என்பதொரு வர்த்தகப் பெயர்

3
அடைத்துக் கிடக்கும்
வீட்டுக்குள்ளும்
வருகிறது
போகிறது
காற்று

4

கூடடையும் பறவை 
துயரம்
பழக்கப்பட்ட மரம்
இதயம்

Saturday, January 14, 2017

தமிழர் திருநாள் : சிந்திக்க ஒரு குறிப்பு - ரவிக்குமார்அரசாங்கம் ஆண்டுதோறும் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை அரிசி கரும்பு வழங்குவதன்மூலம் வெளிப்படுவது  ஆள்வோரின் கருணையா? தமிழ் மக்களின் இழி நிலையா?

தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 3.24 கோடி வேட்டி சேலைகள் வழங்க 487 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது உண்மையிலேயே பயனுள்ள செலவுதானா?

1983 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்காக கடந்த 34 ஆண்டுகளில் செலவான தொகை எத்தனை ஆயிரம் கோடி?

இலவச வேட்டி சேலைக்கென செலவிடப்பட்ட சுமார் 10000 கோடியில் வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் தமிழ்நாடு இப்படியிருக்குமா?

இலவச வேட்டி சேலை திட்டம் இடைத்தரகர்களின் பாக்கெட்டுகளை நிரப்பவே பயன்படுகிறது. சுயமரியாதை உள்ள தமிழர்கள் இந்தத் திட்டத்தை ஏற்கலாமா?