Tuesday, November 6, 2018

96: நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் - ரவிக்குமார்


சன் டிவியில் இன்று ஒளிபரப்பப்பட்ட 96 திரைப்படத்தை முழுமையாகப் பார்த்தேன். காதல்
நிறைவேறாமல் போவதற்கு சாதி, மதம், வர்க்கம் என்பவைதான் காரணம் என்பதாக ஏராளமான திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எந்த தர்க்கமும் இல்லாமல்கூட அது நடக்கலாம் எனச் சொல்கிறது இந்தப் படம்.

எந்தக் காரணமும் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேர்கிற காதலர்கள்
22 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், போராட்டங்களும் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. விரும்பியிருந்தால் கடந்திருக்கக்கூடிய எல்லைகள், நினைத்திருந்தால் விலக்கியிருக்கக்கூடிய மனத்திரைகள்- ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கதாநாயகனின் உறுதி கதாநாயகிக்கு மீள முடியா குற்ற உணர்வை உண்டாக்குகிறது. அவள் அதை கற்பனையில் கடக்க முயற்சிக்கிறாள். யதார்த்தத்தில் தவறிய நிகழ்வை கற்பனைக்குள் நேர்செய்து தன்னை அவனது காதல் மனைவியாக சொல்லிக்கொள்கிறாள். ஆனால் எல்லாம் ஒரு கணம்தான். அவனுக்கு கடந்தகால நினைவுகள் ஒரு பெட்டிக்குள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவளோ எஞ்சிய காலத்தை கிளறப்பட்ட புண் போன்ற நினைவுகளோடு வாழ சபிக்கப்படுகிறாள். இது தோற்றுப்போன காதலில் மட்டும்தான் நடக்கும் என்பதில்லை. மனித மனம் அளக்கவே முடியாத ஆழங்களைக்கொண்டது. அதற்குள் எத்தனையோ நிலவறைகள், ஒவ்வொன்றிலும் இந்தக் கதாநாயகன் வைத்திருப்பதைப்போல எத்தனையோ பெட்டிகள்.

கதைக்கு நடுவில் தனது கணவர் இறந்துவிட்டதாகவோ, விவாகரத்து ஆகிவிட்டதாகவோ நாயகி சொல்லிவிடமாட்டாரா என எதிர்பார்க்கிறோம். அந்த அளவுக்கு களங்கமற்றதாக தீவிரமானதாக நாயகனின் காதல் இருக்கிறது.
படத்தின் இறுதியில் த்ரிஷா ஊருக்குப் போகாமல் தங்கிவிடுவாரோ என்று பார்வையாளர்களை அலைபாயச் செய்திருக்கிறார் இயக்குனர். எதிர்பார்க்கும் இத்தகைய நிகழ்வு எதுவும் இல்லாமல் முடித்திருப்பது மனதை கனக்கச் செய்கிறது.

நாயகி சாப்பிட்டு எஞ்சிய உணவை நாயகன் உண்பது; அவனது சட்டையின் வாசனையை நாயகி
ஆழ முகர்ந்து தேக்கிகொள்வது போன்றவை அவர்களுக்குள் ததும்பிக்கொண்டிருக்கும் பாலியல் விழைவுகளை சுட்டுவதாக இருந்தாலும் ஒரு இடத்திலும் ‘பிசகாமல்’ கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். பள்ளிப் பருவக் காதலைக்கூட பாலியல் மீறல்கள் இல்லாமல் காட்டமுடியாது என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் அதையும்கூட நெருடல் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.

த்ரிஷா மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிந்த திறமையான நடிகை என்பதை இந்தப் படத்திலும் மெய்ப்பித்திருக்கிறார். அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் நினைவில் வந்துபோவதைத் தவிர்க்க முடியவில்லை.

விஜய் சேதுபதியின் பாத்திரம் பார்வையாளர்களின் இரக்கத்தைக் கோருவதாக அமைக்கப்பட்டிருப்பதால் அவர் சிரமப்படாமலே நன்றாக நடித்திருக்கிறார் என்ற பாராட்டு கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர் இதில் அவ்வளவு திறமையாக நடிக்கவில்லை என்பது என் கருத்து. இதே மாதிரி சிச்சுவேஷனில்  ஜானி திரைப்படத்தில் ரஜினி பின்னி எடுத்திருப்பார். அவரது உருவமும் முகத்தோற்றமும் அதற்கு பிரமாதமாக ஒத்துழைத்திருக்கும்.

இம்மாதிரி படங்களுக்கு இசை ஒரு பலம். அது ஜானி, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய இரண்டு படங்களுக்கும் வாய்த்திருந்தது.

அவதாரம் படத்தின் பாடல் வரிகள் பொருத்தமான முறையில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இளையராஜா  இசையின் மயக்கத்திலிருந்து தமிழ் இளைஞர்கள் விடுபடாதிருந்த காலம்தான் அது. இன்னும்கூட அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

கதாநாயகியைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கும் நாயகன் அவளது காதலை அறிந்துகொள்ளவில்லை என்பதும், கல்லூரிக்குப் போய் கேட்டதோடு  அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையென முடிவெடுத்து விலகிக்கொண்டு தூர இருந்தே ஆராதித்துக்கொண்டிருந்தான் என்பதும் கதையின் பலவீனமான அம்சங்கள். ஆனால் அதைக் கவனிக்கமுடியாதபடி காட்சிகள் நகர்கின்றன. ஒரே இரவில் நடக்கும் கதை என்பது படத்தின் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவுகிறது.

யதார்த்தம் என்கிற பெயரில் பாதி நேரம் மதுக் கடைகளிலேயே எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் , தமிழ்நாட்டில் ரௌடிகள் மட்டும்தான் வாழ்கிறார்களோ என்று எண்ணதோன்றுகிற படங்களுக்கு நடுவில்
நாம் நாகரீகமான உலகில்தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இந்தப் படம். அதற்காக இந்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

Tuesday, October 30, 2018

மொழி - நிலம் - புலப்பெயர்வு - ரவிக்குமார்



மொழிவாரி மாநிலம் உருவான நாள் - நவம்பர் 1.  அம்பேத்கர் மொழிவாரிமாநிலம் குறித்து பேசியவற்றை இந்த நாளில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கும் நிலையான ஆட்சி நடப்பதற்கும் ஒரு மொழி ஒரு மாநிலம் என இருப்பது நல்லது என அம்பேத்கர் தெரிவித்தார். பல மொழிகள் பேசப்படும் நாடுகள் உள்ளனவே என சிலர் கூறக்கூடும் அத்தகைய நாடுகளின் அடிப்படைக்கருத்தாக்கம் இணைப்பு என்பதாக இருக்கும்போது இந்தியாவின் அடிப்படை கருத்தாக்கம் பிளவு படுத்துதல் என்பதாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். அவர் இந்தியாவிலிருக்கும் சாதி அமைப்பைத்தான் அர்த்தப்படுத்தினார் என்பது வெளிப்படை. மொழியின் அடிப்படையில் மாநிலம் உருவாக்கப்படும்போது அதன் ஆட்சிமொழியாக அந்த மாநிலத்தின் மொழி இருக்கக்கூடாது. இந்தியா முழுமைக்கும் ஒரு பொது மொழி தேவை. அது இந்தியாக இருக்கலாம். அதை மக்கள் ஏற்கும்வரை ஆங்கிலம் இருக்கவேண்டும் என்றார்.

மாநில மொழியே ஆட்சி மொழியாக இருந்தால் பிரிவினை உணர்வு மேலோங்கும் என்பதே அவரது அச்சம். ஒரு மாநிலத்துக்குள் பல மொழிகளைப் பேசுவோர் இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகிற இன அடிப்படைவாதிகள் ஒரு நாட்டுக்குள் தம் மாநில மொழிக்கான உரிமையை வலியுறுத்தும் உரிமையை வலியுறுத்தமுடியாது என்பதே இதன் உட்கிடை.

மொழியின் அடிப்படையில் மாநிலம் என்பதைப்பற்றி விவாதிக்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மனதில் மொழி, நிலம் என்ற படிமங்கள் என்ன பொருளில் தொழிற்படுகின்றன என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும். அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் கலை வெளிப்பாடுகள் குறித்து பேசும் கலை வரலாற்றறிஞர் வித்யா தெஹேஜியா அமெரிக்க கோயில்கள் பெரும்பாலும் தென்னிந்திய கலைமரபையொட்டி கோபுர அமைப்போடு கட்டப்பட்டிருப்பதையும் கணபதி ஸ்தபதி முத்தையா ஸ்தபதி ஆகியோர் அவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருப்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மக்கள் மொழி என்பதைக் கடந்து தமது பண்பாட்டு அடையாளத்தை மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கிறார்களா? ஈழத் தமிழரிடையே புத்தியிர்ப்பு பெற்றுள்ள இந்து மத அடையாளத்துக்கான நியாயம் புலப்பெயர்வில் இருக்கிறதா?

Sunday, October 28, 2018

குருபூஜை அரசியல் ! - ரவிக்குமார்



குரு பூஜை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன். அரசியல் தலைவர்களும்,தமிழக அரசும் அவற்றை ஏற்று நடைமுறைப் படுத்த முன்வரவேண்டும்.

’குரு பூஜை அரசியல்’ ஆபத்தான பரிமாணங்களை எடுத்துவருகிறது. அதை தமிழக அரசு கட்டுப்படுத்தவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே நான் வலியுறுத்திவந்தேன். இப்போது அந்தக் கருத்து நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் அலட்சியம் செய்யாது என நம்புகிறேன்.

மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டவுடன் கலவரம் மூண்டு அனைத்துப் பெயர்களும் நீக்கப்பட்டதும் வரலாறு. அதுபோலத்தான் இப்போதும் நடக்கிறது என்றாலும் குருபூஜைகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியம் என்றே கருதுகிறேன்.

இந்தியாவெங்கும் மதக் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாடு அமைதிகாத்தது. ஆனால், அண்மைக்காலமாக இங்கே சாதி வெறிப் பிரச்சாரம் அதிகரித்து பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மதவெறியின் பின்னால் போலியான தேசியவாதமாவது முன்வைக்கப்படுகிறது. ஆனால் சாதிவெறியோ மக்களைத் துண்டு துண்டாக்கிச் சிதறடிக்கிறது. அந்தவிதத்தில் மதவெறியைவிடவும் சாதிவெறி ஆபத்தானதாகக் கருதப்படவேண்டும்.

’நமது சட்டங்கள் தீண்டாமையைத் தான் குற்றமாக அறிவித்துள்ளன. சாதி நம்பிக்கையைத் தவறு என்று சொல்லவில்லை’ என்பது உண்மைதான். ஆனால், சாதி நம்பிக்கை என்பது சாதிப் பெருமிதமாக மாறி, சாதி வெறியாக வெளிப்படும்போது அது சமூக சமத்துவத்தை அச்சுறுத்துகிறது,  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. குருபூஜை விழாக்கள் சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்துவனவாக இருந்தாலும் அவை கலவரங்களுக்கு வழிவகுப்பது இதனால்தான். எனவே ஒருபுறம் சாதிப் பெருமிதத்தை ஊக்குவித்துக்கொண்டு இன்னொருபுறம் சாதிக் கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்..

குருபூஜைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுக்கு அரசு சார்பில் விழா எடுப்பதும் தேவையா என தமிழக அரசு சிந்திக்கவேண்டும்.”இந்திய சுதந்திரத்துக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள், தமிழ் மொழிக்காகத் தொண்டாற்றியவர்கள் – அவர்களது வாழ்க்கையையும், சாதனைகளையும் தற்காலத் தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு” இந்த விழாக்கள் நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. சுமார் ஐம்பது விழாக்கள் இப்படி தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. அந்தப் பட்டியலை சமூகரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதில் பொதிந்திருக்கும் பாரபட்சம் வெளிப்படுமென்பது ஒருபுறமிருக்க, அரசே இப்படி விழாக்களைக் கொண்டாடுவதுதான் சாதி அமைப்புகள் குருபூஜைகளை நடத்துவதற்கு தூண்டுதலாக அமைகிறது. எனவே அவற்றையும் தமிழக அரசு கைவிடவேண்டும்.
( செப்டம்பர் 20 , 2013 புதிய தலைமுறை இதழில் வெளியான எனது கட்டுரை)

Friday, October 26, 2018

மீண்டும் ராஜபக்ச- இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பின்னடைவு? - ரவிக்குமார்



இலங்கையில் ராஜபக்ச திடீரெனப் பிரதமராகப் பதவியேற்றிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் நண்பராகக் கருதப்படும் ரணில் தூக்கியெறியப்பட்டிருப்பதன் பின்னணியில் சீனாவின் கை இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

இலங்கை அரசியலில் அண்மையில் வேகமான மாற்றங்கள் நிகழ்ந்துவந்தன. இலங்கை அதிபர் மைத்ரி பாலாவையும் ராஜபக்சவின் சகோதரர் கொத்தப்பாயவையும் கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ரா திட்டமிடுகிறது என்ற ஒரு தகவலை மைத்ரியே தெரிவித்து அது தி இந்து ஆங்கில நாளேட்டால் அம்பலமானது. அந்தச் செய்தி தவறு என இலங்கை அரசு ஒருபுறம் மறுத்துக்கொண்டே மறுபுறம் அந்த சதிக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு போலிஸ் அதிகாரியையும் இந்தியர் ஒருவரையும் கைது செய்தது.

சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு சொந்தமான Eastern Container Terminal ஐ இந்தியாவுக்கு விற்றுவிடலாம் என ரணிலுக்கு வேண்டிய அமைச்சரான மாலிக் சமரவிக்கிரம ஒரு திட்டத்தை முன்வைத்ததாக செய்தி வெளியானது அதை மைத்ரிபாலா நிராகரித்துவிட்டதாகவும் ஶ்ரீலங்கா கார்டியன் என்ற பத்திரிகையில் வந்த  செய்தி குறிப்பிட்டிருந்தது. ரணில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இந்தியாவை மகிழ்விக்க அவர் விரும்பினாரெனவும் அதை வைத்து 2020 ல் நடக்கவுள்ள தேர்தலில் இந்தியாவின் ஆதரவைத் தனக்கு உறுதிசெய்துகொள்ள முயன்றார் எனவும் அந்தச் செய்தி கூறியது. ரணிலுக்கும் மைத்ரிக்குமான உறவு நசிந்து ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதையும் அதில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவோடு அவர் வெற்றிபெற்றதையும் நாம் இத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும். .

இந்தச் சூழலில்தான் ராஜபக்ச பிரதமர் ஆக்கப்பட்டிருக்கிறார். இது இந்தியாவின் இலங்கைக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் பாஜக அரசு சொதப்புகிறது என்பதற்கு இதுவொரு உதாரணம். இது தமிழ் மக்கள் பிரச்சனையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை இனிவரும் நாட்களில் நாம் அறியலாம்

Tuesday, October 23, 2018

சபரிமலை: சனாதன பயங்கரவாதிகள் பொய்ப்பிரச்சாரம் - ரவிக்குமார்



சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய அனைத்து மனுக்களும் நவம்பர் 13க்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழிபடுவதற்கு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் பெண்கள் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர். 

தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள பெண்கள்’ சபரிமலை கோயிலில் 1950 க்கு முன்பு அனைத்து வயது பெண்களும் வழிபட்டதாகக் கூறியுள்ளனர். அதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்களது மனுவில் கூறப்பட்டுள்ளது. கேரள அரசு கேரள - கொச்சி இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1950ஐ இயற்றுவதற்கு முன்பு சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடவே செய்துள்ளனர். நெரிசல் அதிகமாக இருக்கும் மண்டலம், மகரவிளக்கு, விஷு ஆகிய காலங்களைத்தவிர பெண்கள் அக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளனர். 

திருவாங்கூர் மகாராஜாவும் மகாராணியும் திவானுடன் சென்று அங்கு வழிபட்டதற்கு ஆதாரம் உள்ளது என கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட எஸ்.மகேந்திரன் எதிர் திருவாங்கூர் தேவசம் போர்டு (1991) என்ற வழக்கில் கேரள அரசே பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. அது மட்டுமின்றி, ‘குழந்தைகளுக்கு முதன் முதலில் சோறூட்டும் நிகழ்ச்சியை சபரிமலை கோயிலில் செய்வது வழக்கம். அப்போது எல்லா வயதுப் பெண்களும் வருவார்கள். அந்த சடங்கு செய்ய கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிப்பது வழக்கம்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. புதிதாக
கொடிமரம் நடப்பட்டதையும், 18 படிகளில் தேங்காய் உடைத்து 
பூஜை செய்வதில் மாற்றம் செய்யப்பட்டு தேங்காய் உடைக்க தனி இடம் அமைக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ள கேரள அரசு, சபரிமலை கோயில் நடைமுறைகளில் எப்படி தந்திரியின் ஆலோசனையின்படி மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதையும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது. 

கால காலமாக அங்கு 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் அங்கு வழிபட்டதே இல்லை எனக் கூறும் சனாதன பயங்கரவாதிகள் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஆதாரத்தோடு மறுக்க முன்வருவார்களா?

சனாதன பயங்கரவாதமும் கல்வித்துறையில் அதன் வெளிப்பாடுகளும் - ரவிக்குமார்


தோழர்களே! 

கல்விப்பிரச்சனையை பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதில் தமிழ்நாட்டில் திண்டிவனத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. அதற்குக் காரணம் பேராசிரியர் கல்யாணி திண்டிவனத்தில் இருப்பதுதான். இன்று நேற்றல்ல 1980 களில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கையை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்கள் பேராசிரியர் கல்யாணி, பேராசிரியர் கோச்சடை போன்றவர்கள். புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வீதி நாடகங்களைப் போட்டோம். என் திருமணத்திலேயேகூட அந்த நாடகத்தை நடத்தினோம். பேராசிரியர் கோ. கேசவன் அருமையான விமர்சன நூலை எழுதினார். கல்வி தனியார் மயமாவதால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என அப்போது நாங்கள் என்னவெல்லாம் சொல்லி எச்சரித்தோமோ  அதெல்லாம் இப்போது நடக்கின்றன. 

 ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் சொன்னவரே கல்யாணிதான். அப்படி வைத்தால்தான் ப்ளஸ் டூ படிப்பில் இரண்டு ஆண்டுகளிலும் ஒரே பாடத்தை நடத்தும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மோசடியைத் தடுக்கமுடியும் என அவர்தான் எங்களுக்கு எடுத்துக்கூறினார். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்த கோரிக்கையை சட்டமன்றத்திலும் எழுப்பினேன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த திரு தங்கம் தென்னரசு அவர்களிடமும் வலியுறுத்தினேன். திரு செங்கோட்டையன் கல்வி அமைச்சராக வந்தபிறகு நல்வாய்ப்பாக திரு உதயசந்திரன் ஐஏஎஸ் அங்கு செயலாளராக இருந்தார். பள்ளிக் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை அவர்கள் மேற்கொண்டனர். அந்த நேரத்தில் கல்யாணியை, என்னை இன்னும் பல கல்வியாளர்களை அழைத்து அவர் கருத்துகளைக் கேட்டார். நான் என் கருத்துகளை எழுத்து வடிவில் கொடுத்தேன். அப்போது ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்பதை கல்யாணி வலியுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் ப்ளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வு எனத் தமிழக அரசு அறிவித்தது. அதற்கான காரணங்களை விரிவாக விளக்கி அரசாணையும் வெளியிடப்பட்டது. 
ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்குள்ளாக இப்போது அதை நீர்த்துப்போகச்செய்யும்விதமாக இன்னொரு அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. அதை எதிர்த்துதான் இங்கு கூடியிருக்கிறோம். 

ப்ளஸ் டூ படிப்பில் 
இரண்டாம் ஆண்டுக்கான பாடத்தையே இரண்டு ஆண்டுகளும் நடத்தி நூறு சதவீத வெற்றி , அதிக மதிப்பெண் என்று தனியார் பள்ளிகள் காட்டிக்கொள்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல அப்படி வெற்றிபெறும் தனியார் பள்ளி மாணவர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள். ப்ளஸ் ஒன் பாடங்கள் சரியாக போதிக்கப்படாததால் தொழிற்கல்வியில் சேரும் மாணவர்கள் முதல் ஆண்டில் தோல்வி அடைய நேரிடுகிறது. இது தனியார் பள்ளிகளை நடத்தும் கல்விக் கொள்ளையர்களுக்கு லாபம் சேர்ப்பது மட்டுமல்ல உயர்கல்வியின் தரத்தையும் சீரழிக்கிறது. 

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலைபாட்டை அரசு மாற்றக்கூடாது. அதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. இப்படியான மாநாடுகளை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாம் நடத்தவேண்டும். தொடர்ந்து போராடினால் நிச்சயம் நமது கோரிக்கையில் நாம் வெற்றிபெறுவோம். அரசு தனது நிலைபாட்டை சரிசெய்துகொள்ளவில்கையென்றால் நாம் நீதிமன்றத்தை நாடி வெற்றிபெற முடியும். அரசு வெளியிட்ட அரசாணையே அதற்கு உதவியாக இருக்கும். 

மேனிலைக் கல்வியென்பது பள்ளிக் கல்வியையும் உயர் கல்வியையும் இணைக்கும் பாலம். அது சரியாக இல்லாவிட்டால் உயர்கல்வி பாதிக்கப்படும். இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் விகிதம் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அந்த வளர்ச்சி தரத்தில் இல்லை. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25 ஆயிரம் பேர் பிஎச்டி பட்டம் பெறுகிறார்கள். அதிலும்கூட தமிழ்நாட்டுக்குத்தான் முதலிடம். ஆனால் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்களின் தரம் மிக மோசமாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த அவலநிலைக்குக் காரணங்களில் ஒன்று ப்ளஸ் டூ படிப்பை நாம் பள்ளிக் கல்வியின் அங்கமாக வைத்திருப்பது ஆகும். புதிய கல்விக்கொள்கை அறிமுகமானபோது ப்ளஸ் டூ படிப்பை கல்லூரியின் அங்கமாக வைப்பதா அல்லது பள்ளியின் அங்கமாக வைப்பதா என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு கூறிவிட்டது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்றவை ப்ளஸ் டூவை கல்லூரிப் படிப்பின் அங்கமாக மாற்றி ஜூனியர் காலேஜ்களை உருவாக்கின. ஆனால் இங்கிருந்த ஆசிரியர்களின் வற்புறுத்தலால் தமிழ்நாட்டில் மட்டும் பள்ளிக் கல்வியின் அங்கமாக அது வைக்கப்பட்டது. கல்லூரிக் கல்வியின் அங்கமாகத்தான் பியுசி இருந்தது. ஆனால் ப்ளஸ் டூ படிப்பு பள்ளிக்கல்வியின் பகுதியாக  ஆக்கப்பட்டது. கல்லூரிக் கல்வியின் அங்கமாக இருந்திருந்தால் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்களின் தரமும் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பு 
இங்கே பாழடிக்கப்பட்டது. மேனிலைக் கல்வியில் சரியான அடித்தளம் இடப்படாததால் உயர்கல்வியும் தரமற்றதாக உள்ளது. எனவே பள்ளிக்கல்வி குறித்து நாம் காட்டுகிற அக்கறை உயர்கல்வி குறித்ததும்தான். அவற்றுக்கிடையிலான உள் இணைப்புகளை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். 

கால் நூற்றாண்டுக்கு முன்னால் மக்கள் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டபோது பாவ்லோ ஃப்ரேய்ரின் ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி என்ற நூலை முன்வைத்து நாம் விவாதித்தோம். அவர் வலியுறுத்திய ஜனநாயகத்தை கல்வியில் மட்டுமின்றி அரசியல் இயக்கச் செயல்பாடுகளிலும் சோதித்துப் பார்த்தோம். கூட்டங்கள் நடத்தியபோது மேடை அமைத்து எதிரில் மற்றவர்கள் உட்கார்ந்தால் அதிகார படிநிலை உருவாகும் என்பதால் வட்டமாக அமர்ந்து விவாதித்தோம். கட்சியின் முன்னணிப் பாத்திரத்தை கேள்விக்குட்படுத்தினோம். அரசு அமைப்புக்கும் கல்வி போதிக்கும் முறைக்கும் உள்ள உறவை எடுத்துக் காட்டினோம். இப்போது அதிலிருந்து விலகிப்போய்விட்டோம். அந்த அணுகுமுறையை, விமர்சன நோக்கை புதுப்பிக்கவேண்டிய நேரம் இது. 

‘நாங்கள் சொல்வதை ஏன் என்று கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என ஒரு அரசாங்கம் ஆணையிட்டால் அதை சர்வாதிகாரம் எனச்சொல்லி உடனே எதிர்ப்பு தெரிவிக்கும் நாம், பள்ளியில் ஆசிரியர் சொல்வதற்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என நம் குழந்தைகளிடம் கூறுகிறோம்; அப்பாவை எதிர்த்துப் பேசக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வீட்டிலும் பள்ளியிலும் கேள்வி கேட்பதைத் தடைசெய்வதன்மூலம்தான் அரசாங்கத்துக்கு அடிபணிந்து செல்லும் குடிமக்கள் உருவாக்கப்படுகிறார்கள். அதை நாம் காணத் தவறுகிறோம். எங்கெல்லாம் கேள்விகள் அகற்றப்பட்டு மௌனம் திணிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரத்தின் கொடி பறக்கிறது என்று அர்த்தம். நாம் கல்வியைப்பற்றிப் பேசும்போது இந்த பரந்த பின்புலத்திலிருந்துதான் பேசுகிறோம். அதன் உள் இணைப்புகளைப்பற்றிய புரிதலோடுதான் பேசுகிறோம். 

ராஜிவ்காந்தி ஆட்சியின்போதுதான் திறந்த பொருளாதாரக்கொள்கை அறிமுகம் ஆனது. அதற்கு ஏற்பத்தான் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டது. ஒரு நாட்டில் உள்ள அரசின் வடிவத்துக்கும் அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி முறைக்கும் தொடர்பு இருக்கிறது. இப்போது நாட்டை ஆளும் சனாதனிகள் தமக்கு ஏற்ற கல்வி முறையைக் கொண்டுவரப்பார்க்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முரளிமனோகர் ஜோஷி கல்வியைக் காவி மயமாக்கும் முயற்சியை ஆரம்பித்தார். இப்போது அது தீவிரமாகி  இருக்கிறது. பாடத் திட்டங்கள் மட்டுமல்ல உயர்கல்விக்கூடங்களான பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சமூக நீதிக்கு சாவு மணி அடித்துவிட்டார்கள். அங்கே இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டுவிட்டது. இதுவரை பல்கலைக்கழகத்தை அடிப்படை அலகாக basic unit ஆக வைத்துதான் இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிப்பார்கள். ஆனால் மோடி அரசாங்கம் யுஜிசியின் ஒரு உத்தரவு மூலம் அதை மாற்றிவிட்டது. இப்போது ஒரு துறையை - departmentஐ அடிப்படை அலகாக ஆக்கிவிட்டார்கள். ஒரு மத்திய பல்கலைக்கழகம் இருந்தால் அதில் நூறு துறைகள் இருக்கும் அந்த நூறு துறைகளுக்கும் பேராசிரியர்கள் இருப்பார்கள். அதில் எஸ்சி பிரிவுக்கு 15 சதவீதம் எஸ்டிக்கு 71/2 சதவீதம் ஓபிசிக்கு 27 சதவீதம் என ஒதுக்க வேண்டும் என இருந்தது. ஆனால் இப்போது ஒரு துறையை அடிப்படை அலகாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும்போது ஒரு துறையில் ஒரு பேராசிரியர் பதவிதான் பெரும்பாலும் இருக்கும். அதில் எப்படி இட ஒதுக்கீடு தர முடியும்? இனிமேல் மத்திய பல்கலைக்கழகங்களில் எந்தவொரு பேராசிரியர் பதவிக்கும் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினர் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போக முடியாது. இந்தக் கொள்கை இப்போது ஆட்சி செய்யும் சனாதனவாதிகளின் வர்ணாசிரமக் கொள்கையோடு பொருந்திப்போவதைக் கவனியுங்கள். 

யுஜிசி இப்போது இன்னும் ஒரு மோசமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான civil servants களுக்கான நடத்தை விதிகள் இனி பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என அறிவித்திருக்கிறது. மத்திய மாநில அரசுகளை விமர்சிக்கவோ, விமர்சித்துப்பேசும் கூட்டங்களில் பங்கேற்கவோ கூடாது. அப்படிச்செய்தால் அவர்களை டிஸ்மிஸ் செய்யலாம் என அறிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் அதற்கான சுற்றறிக்கை எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் போன்றவை உடனடியாக அமல்படுத்தப்போவதாகக் கூறியுள்ளன. யுஜியிடம் நிதி பெறுகின்ற அத்தனை பல்கலைக்கழகங்களுக்கும் அது பொருந்தும் என்றுசொல்லப்பட்டிருக்கிறது. எனவே மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் அது நடைமுறைக்கு வந்துவிடும். அப்படி நடைமுறைக்கு வந்துவிட்டால் அரசாங்கத்தின் கல்விக் கொள்கையைப்பற்றிக்கூட ஆசிரியர்கள் பேச முடியாத நிலை ஏற்படும். இது  சனாதன பயங்கரவாதத்தின் வெளிப்பாடு. அது ஏற்படுத்த விரும்பும் சர்வாதிகார ஆட்சிக்கான ஒத்திகை. 

இந்திராகாந்தி அம்மையாரைப்போல எமர்ஜென்சியை வெளிப்படையாக 
அறிவிக்காமல் ஒரு நெருக்கடிநிலையை நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும் எனக் காட்டிக்கொண்டிருக்கும்  மோடி அரசு, இந்த நாட்டை இந்து ராச்சியம் என்று அறிவிக்காமலேயே சனாதன பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கவனித்து எதிர்ப்பு தெரிவிக்கக்கூட இப்போது எவரும் இல்லை. பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆசிரியர் சங்கங்கள்கூட வாய்மூடி மௌனம் காக்கின்றன. அரசியல் கட்சிகளும் இப்படியான பிரச்சனைகளைப் பேசுவதில்லை. எங்கு பார்த்தாலும் பயம், பயத்தால் திணிக்கப்படும் அமைதி. இதுதான் சனாதன பயங்கரவாதத்தின் வெற்றி. இது பாசிசக் கொடுங்கோல் ஆட்சியைவிட ஆபத்தானது. 

இங்கே நாம் பள்ளிக்கல்வியைப் பற்றிப் பேசுவதற்காகக் கூடியிருந்தாலும் உயர்கல்வியைப்பற்றியும் அக்கறைகாட்டவேண்டும். இன்று ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்படும் 
சனாதன பயங்கரவாதத்துக்கும் கல்வி முறைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் நமது போராட்டங்களை வடிவமைக்கவேண்டும். கல்வியை ஒருங்கிணைந்த முறையில் பார்த்து அதிலுள்ள பிரச்சனைகளைப் பேசியாகவேண்டும். அதற்கான துவக்கமாக இந்த மாநாட்டைக் கருதுகிறேன். 

நன்றி வணக்கம்

( 21.10.2018 அன்று திண்டிவனத்தில் நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம் ) 

Friday, October 19, 2018

தேச பக்தியிலிருந்து பயங்கரவாதத்துக்கு - ரவிக்குமார்

தோழர்களுக்கு வணக்கம் ! 
 
பேராசிரியர் கல்யாணி பேசும்போது 1989ல் பனையடிக்குப்பம் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டையும் அதற்காக அமைக்கப்பட்ட உண்மையறியும் குழு பற்றியும் குறிப்பிட்டார். மரண தண்டனைக்கு எதிராக நடத்தப்பட்ட மாநாடு குறித்து திரு ஹென்றியும் இங்கே சுட்டிக்காட்டினார். வகுப்புவாதத்தை எதிர்த்து சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னால் பாண்டிச்சேரியில் நானும் சில தோழர்களும் நடத்திய போராட்டத்தைப்பற்றிய நினைவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 
 
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மேலெழுந்த வகுப்புவாத அலையால் உற்சாகமடைந்த சங்கப் பரிவாரங்கள் இந்த மசூதியை இடிப்போம், அந்த தேவாலயத்தைத் தகர்ப்போம் என ஆங்காங்கே பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நேரம். 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் நாள். பாண்டிச்சேரி வரலாற்றில் மறக்கக்கூடாத நாள். பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கட்டப்பட்ட புகழ்பெற்ற தேவாலயம்.சம்பா கோயில் என மக்களால் அழைக்கப்படும் ஜென்மராக்கினி மாதா கோயில். தென்னிந்தியாவில் உள்ள சிறப்பு வாய்ந்த தேவாலயங்களில் ஒன்று. அந்த மாதா கோயிலில் சனாதன பயங்கரவாதிகள் இருவர் நுழைந்து கற்பூரம் ஏற்றிவிட்டனர். பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டபோது சிவன் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மாதா கோயில் கட்டப்பட்டதாகவும் அங்கே மீண்டும் சிவன் கோயிலைக் கட்டவேண்டும் எனப் புரளி கிளப்பினர். நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த  சம்பவத்தை பெரிய கட்சிகள்கூட கண்டித்துக் களமிறங்கவில்லை. ஆனால் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக இருந்த நாங்கள் சும்மா இருக்கவில்லை. சம்பா கோயில் பற்றிய வரலாற்றையும் அதற்கு ஆதாரங்களாக இருந்த ஆவணங்களையும் திரட்டினோம்.  தமிழறிஞரும் ஐ ஏ எஸ்  அதிகாரியாக இருந்தவருமான பி.எல்.சாமி அவர்களை சந்தித்துப் பல ஆதாரங்களைப் பெற்றோம் . அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து சிறு நூலொன்றை வெளியிட்டோம். எந்தவொரு கோயிலையும் இடித்துவிட்டு அங்கே மாதா கோயில் கட்டப்படவில்லை என்பதை ஆதாரபூர்வமாக நிறுவினோம். அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்களின் பங்கேற்போடு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அதன்பிறகுதான் பெரிய கட்சிகள் அதைப்பற்றிப் பேசினார்கள். அதன் காரணமாக வகுப்புவாத சக்திகளின் அந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது . அத்துடன் இங்கே முளைவிட்ட மதவாதம் என்ற நச்சுச் செடியை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டதாக நினைத்தோம். சனாதன பயங்கரவாதம் புதுச்சேரி மண்ணிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக நம்பினோம். 
ஆனால் அவர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்து வேலை செய்திருக்கிறார்கள். இப்போது புதுச்சேரியின் அதிகாரம் தங்கள்  கைகளில் இருக்கிறது என்ற நினைப்பில்  வகுப்புவாதிகள் மீண்டும் 
உற்சாகமடைந்துள்ளனர்.  இலக்கியத் திருவிழா என்ற பெயரில் அவர்கள் இங்கே நடத்தவிருந்த விழாவை நாம் சரியான நேரத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறோம் என்றாலும் வகுப்புவாத சக்திகள் முன்பைவிட இப்போது பலத்தோடு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள், முன்னிலும் அதிகமான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புறக்கணித்துவிடக்கூடாது. புதுச்சேரியைத் தங்களது பரிசோதனைகூடமாக மாற்றுவதற்கு அவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் சங்கப் பரிவார அமைப்புகள் முளைத்தெழுந்தன. தலித்துகள் மத்தியில், ஆதிவாசிகளின் மத்தியில், பெண்கள் மத்தியில்  தனித்தனி அமைப்புகள் உருவாக்கப்பட்டன . அரசியல் கட்சிகள் வெகுஜன அமைப்புகளை வைத்திருப்பார்கள்.தொழிலாளர்களுக்காக சிபிஐ எம் கட்சி சிஐடியுவை வைத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏஐடியுசி, காங்கிரசுக்கு ஐ.என்.டி.யு.சி . அதைப்போல விவசாய அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பழங்குடியினருக்கான அமைப்புகள் - இப்படி பல அமைப்புகள் உள்ளன. அவை வெளிப்படையாக செயல்படும் அமைப்புகள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு உருவாகியிருக்கும் அமைப்புகள் அப்படியல்ல. அவை தம்மை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகளாகக் கூறிக்கொள்வதில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சொல்வதில்லை. ஆனால் அவை யாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புகள்தான். இந்த சங்கப் பரிவாரங்கள்மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அமைப்பேகூட தனது நோக்கம் இதுதான் என வெளிப்படையாக சொன்னது கிடையாது. இன்னொரு உண்மையையும் நினைவில்கொள்ள வேண்டும். இன்று உலகின் பல நாடுகளில் வலதுசாரிக் கட்சிகள் அதிகாரத்துக்கு வந்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஆனால் உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப்போல 93 ஆண்டுகள் இடையறாத தொடர்ச்சிகொண்ட ஒரு வலதுசாரி அமைப்பு இல்லை. நாடு முழுவதும் ஷாக்காக்கள் என அழைக்கப்படும் 56 ஆயிரம் கிளைகளைக்கொண்ட அமைப்பு, பல்லாயிரக்கணக்கான முழு நேர ஊழியர்களையும், திருமணம் செய்துகொள்ளாமல் துறவிகளாக இருக்கிறோம் எனச் சொல்கிற ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறுப்பாளர்களையும் கொண்ட அமைப்பு - ஆர்.எஸ்.எஸ் போல ஒரு அமைப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை. அந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோதே இதுதான் தனது அரசியல் திட்டம் எனக் கூறியதில்லை. ஒரு ரகசிய அமைப்பைப்போலவே செயல்பட்டது. 
 
காந்தியடிகளின் படுகொலைக்குப்பிறகு இரண்டாவது முறையாகத் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தன் மீதான தடையை விலக்குமாறு கேட்டபோது அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் பட்டேல் மறுத்துவிட்டார். உலகிலேயே பெரிய சிலையை எந்த பட்டேலுக்கு இப்போது பாஜக நிறுவுகிறதோ அதே பட்டேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்மீதான தடையை நீக்க மறுத்துவிட்டார். உங்களுடைய அமைப்பின் சட்ட திட்டம் என்ன? என்பதை எழுத்துபூர்வமாக சமர்ப்பியுங்கள், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும் ஏற்றுக்கொள்கிறோம் என எழுதிக்கொடுங்கள் எனக் கூறிவிட்டார். அதனால் கோபமடைந்த ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் பல பகுதிகளில் பட்டேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஆனாலும் நேரு தலைமையிலான அன்றைய அரசு ஆர்.எஸ்.எஸ் கோரிக்கையை ஏற்கவில்லை. வேறு வழியில்லாமல் அது அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டது, அமைப்பு விதிகள் என ஒப்புக்கு எதையோ எழுதி அரசிடம் காட்டியது. 
 
இந்தியா சுதந்திரம் அடைகிற நேரத்தில் இந்த நாட்டை இந்து ராச்சியம் என அறிவிக்கவேண்டும், இதன் தேசியக் கொடியாக மூவர்ணக்கொடியை வைக்கக் கூடாது காவிக் கொடியைத்தான் அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள். ஆனால் அதைப் புரட்சியாளர் அம்பேத்கரும் மற்ற தலைவர்களும் நிராகரித்துவிட்டனர். மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை இயற்றித்தந்து இந்த நாட்டை ஒரு குடியரசாக அறிவித்ததோடு, தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியையும் அதன் நடுவே அசோகச் சக்கரத்தையும் இடம்பெறச் செய்தவர் அம்பேத்கர். அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ் சின் இந்து ராச்சியக் கனவில் மண்ணை அள்ளிப்போட்டவர் அம்பேத்கர். ‘ இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தவொரு இடத்திலும் மனு நீதியின் மகத்துவம் சுட்டிக்காட்டப்படவில்லை. அதன் அம்சங்கள் இதில் இடம்பெறவில்லை. எனவே இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிக்கிறோம், இந்த மூவர்ணக் கொடியை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என அறிவித்தது ஆர்.எஸ்.எஸ். சுதந்திரதினத்தில் அரசு அலுவலகங்களில் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்படுவது வழக்கம். இடதுசாரிக் கட்சிகள்கூட தேசியக்கொடியை ஏற்றுவார்கள். ஆனால் சுதந்திரம் அடைந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நாக்பூரில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்ற மறுத்த இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். இப்போதுகூட அதன் அமைப்புவிதிகள் என்னவென்பது எவருக்கும் தெரியாது. எல்லா அரசியல் கட்சிகளும் தமது அமைப்பு விதிகள் இதுதான் என்பதை தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பது மட்டுமின்றி அதை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளன. அப்படி வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் நடந்துகொண்டதில்லை. 
 
1925 ஆம் ஆண்டு ஹெட்கேவார் என்பவரால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். மூஞ்சே என்பவரால் பயிற்றுவிக்கப்பட்டவர் ஹெட்கேவார். அவரால் கலகத்தாவுக்கு அனுப்பப்பட்டு அங்கே தலைமறைவாக செயல்பட்டுக்கொண்டிருந்த அனுசீலன் சமிதி என்ற பயங்கரவாத அமைப்பிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுத் திரும்பிவந்தவர். அதன் பின்னர் சிலகாலம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டபடியே கிரந்தி தள் என்ற தீவிரவாத அமைப்பில் ரகசியமாக இயங்கி வந்தவர். ஜெர்மனியின் ஹிட்லரைபோல , இத்தாலியின் முசோலினியைப்போல ராணுவத்தைப் பயன்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஹெட்கேவார் விரும்பவில்லை. நிதானமாக, பொறுமையாக இந்த நாட்டை முற்றிலுமாக ஒரு இந்து ராச்சியமாக மாற்றுவதற்கு அவர் முயற்சித்தார். அப்படி மாற்றப்பட்டால் அதன்பிறகு விடுபடவே முடியாத ஒரு நிலையை உருவாக்க முயன்றுகொண்டிருக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ் சால் இயக்கப்படும் அல்லது அதன் கொள்கையால் வழிநடத்தப்படும் சுமார் நாற்பது அமைப்புகளில் ஒன்றுதான் ’சனாதன் சன்ஸ்தா’ என்ற அமைப்பு. 
 
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மேலெழுந்த இந்துத்துவ அலையின் காரணமாக 1995 ல் உருவாக்கப்பட்ட அமைப்பு சனாதன் சன்ஸ்தா. மும்பையின் சியோன் பகுதியில் வசிய மருத்துவராக தொழில் செய்துகொண்டிருந்த ஜெயந்த் அத்வாலே என்பவர்தான் ’சனாதன் சன்ஸ்தா’, ’ஹிந்து ஜனஜாகிருதி சமிதி’ ஆகிய இரு அமைப்புகளையும் உருவாக்கியவர். இங்கிலாந்தில் ஏழு ஆண்டுகள் ’ஹிப்னோ தெரபி’ எனப்படும் வசிய மருத்துவத்தில் பயிற்சி பெற்று நாடு திரும்பி  1990 வரை மும்பையின் சியோன் பகுதியில் டாக்டராகத் தொழில் செய்தவர் ஜெயந்த் அத்தவாலே. கோவாவைச் சேர்ந்த அஷுதோஷ் பிரபுதேசாய் என்ற மனோதத்துவ டாக்டரின் தொடர்பு கிடைத்ததற்குப்பிறகு அவர் ஆன்மீக வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றுவதோடு வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் பத்தி, கற்பூரம் போன்றவற்றையும், சிறிய அளவிலான சாமி சிலைகளையும் விற்பனை செய்யத் தொடங்கினார். அந்த ஆன்மீக வியாபாரம் லாபகரமாக இருந்ததால் ஊக்கமடைந்த அவர், பக்தர்களிடையே இந்து ராச்சியம் அமைக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்த ஆரம்பித்தார். 1999 ஆம் ஆண்டிலேயே தனது ஆதரவாளர்களுக்குத் தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்தார். ‘ தீய சக்திகளை’ வீழ்த்துவதற்கு ஆயுதம் ஏந்தவேண்டியது அவசியம் என்று வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தார். போலீஸையும், ராணுவத்தையும் எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும் எனப் பேசினார்.  ”இந்தியாவை இந்து ராச்சியமாக மாற்றுவதற்கான போராட்டத்தில் ஐந்து சதவீதப் போராட்டம்தான் ஆயுதம் ஏந்திய போராட்டம். எனவே இந்த அமைப்பில் உள்ளவர்களில் ஐந்து சதவீதம்பேர் ஆயுதப் பயிற்சி எடுத்தால் போதும். நமக்கான ஆயுதங்களை ஆணடவனே ஏதோ ஒரு வழியில் நமக்குக் கொண்டுவந்து சேர்ப்பார்” என எழுதினார். ” 2025 ஆம் ஆண்டுக்குள் இந்து ராச்சியத்தை அமைக்கவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் ‘துர்ஜன்களை’ அதாவது கெட்டவர்களை அழித்தொழிக்கவேண்டும் என்பது அதற்கான முன்நிபந்தனை” என குறிப்பிட்டார். அவர்களைப் பொருத்தவரை முஸ்லிம்களும், கிறித்தவர்களும், முற்போக்காளர்களும்தான் துர்ஜன்கள். சனாதன் சன்ஸ்தா உருவாக்கி வைத்திருக்கும் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் தேர்தலோ, ஜனநாயகமோ,  நீதி அமைப்போ இருக்கக்கூடாது என்கிறது. அந்த அமைப்பின் கல்வி முறையின் நோக்கம் இந்து மதத்தைப் பரப்புவது மட்டும்தான்.
 
சங்கப் பரிவார அமைப்புகள் ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார்கள். தாங்கள் ஆர்.எஸ்.எஸ் சால் இயக்கப்படுவதாக அவர்கள் சொல்லிக்கொள்வதில்லை. சில அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ் சை விமர்சித்துப் பேசுவதுபோல நாடகம் ஆடுவார்கள். சனாதன் சன்ஸ்தாவும் அப்படித்தான். அதன் நிறுவனரான ஜெயந்த் அத்வாலே ஆர்.எஸ்.எஸ் சைக் கடுமையாக விமர்சிப்பார். அது நீர்த்துப்போய் விட்டது, சமரசமாகிவிட்டது எனக் குறை கூறுவார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் லட்சியமும் சனாதன் சன்ஸ்தாவின் லட்சியமும் ஒன்றுதான். அதுதான் ‘இந்து ராச்சியம்’. கௌரி லங்கேஷ் கொலையில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் ஈடுபட்டனர் எனத் தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் அமோல் காலே என்ற பயங்கரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில்தான் எனது பெயர் உட்பட 34 பேர்கள் அடங்கிய கொலைப்பட்டியல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டிலும் 2011 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளிலும் தொடர்புடையது எனத் தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் ஜெயந்த் அத்வாலேவைப் போலத்தான் ’ஷிவ ப்ரதிஸ்தான் ஹிந்துஸ்தான்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சம்பாஜி பிடே என்பவரும், ’சமஸ்தா ஹிந்து ஆகாதி’ என்ற அமைப்பின் தலைவர் மிலிந்த் ஏக்போடே என்பவரும் செயல்பட்டு வருகிறார்கள்.
 
எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் விதமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தன்னெழுச்சியாக இந்தியாவின் பல பகுதிகளிலும் தலித்துகள் போராடினார்கல். நாடே ஸ்தம்பித்தது. அதை பெரிய கட்சிகள் எவையும் ஒருங்கிணைக்கவில்லை. அப்படியிருந்தும் எப்படி இந்த அளவுக்கு எழுச்சி ஏற்பட்டது என மத்திய அரசு குழம்பிப்போனது. அந்த நிலையில்தான் பீமா கோரேகான் என்னுமிடத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது பேஷ்வாக்களின் படையை மஹர் ராணுவ வீரர்கள் தோற்கடித்த வெற்றியின் 200 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடுவதற்காக 2018 ஜனவரி 1 ஆம் தேதி தலித்துகள் லட்சக் கணக்கில் கூடினார்கள். அவர்கள் மீது சனாதன பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். தலித்துகள் பலரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள். அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது சம்பாஜி பிடேவும்,. மிலிந்த் ஏக்போடேவும்தான் எனப் புகார் அளிக்கப்பட்டு அவர்கள்மீது வழக்கும் பதியப்பட்டது. ஆனால் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக சொல்கிறது. ஆனால் பிரதமர் மோடி மகராஷ்டிராவுக்கு வந்தால் அங்கே விஐபியாக நின்று மோடியை வரவேற்பவர் சம்பாஜி பிடேதான். இப்படி சங்கப் பரிவார அமைப்புகள் எல்லாமே ஒரு வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ளன.
 
பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகள் போராடினார்கள். ராமர் கோயில் கட்டுவோம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு அதன்மூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைத்த பாஜக படு தோல்வி அடைந்தது. மதச்சார்பற்ற கட்சிகளின் ஆட்சி மத்தியில் அமைந்தது. ஆனால் 1998 ல் பாஜக ஆட்சி அமைத்தது. சில மாதங்களில் அந்த ஆட்சி கவிழ்ந்த காரணத்தால் 1999 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை பாஜக அமைத்தது. மாநில உரிமைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள், சமூக நீதியை அடைவதற்காகத் துவக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் எல்லாம் பாஜகவின் கூட்டணியில் இணைந்தன. அந்தக் கட்சிகள் தங்களது அதிகார மோகத்தை மறைப்பதற்காக ’கெட்ட கட்சியில் ஒரு நல்ல மனிதர்’ என்று தன்னார்வத்தோடு வாஜ்பாயிக்கு நற்சான்று வழங்கின. ஆனால் அந்த நல்ல மனிதரின் ஆட்சிக்காலமான 1999 – 2004 என்பது பல்வேறு வகுப்புவாத செயல்திட்டங்களை இந்திய அரசியலில் சோதித்துப் பார்க்க வாய்ப்பேற்படுத்தித் தந்தது. அந்தக் காலத்தில்தான் அணுகுண்டு வெடிப்புச் சோதனை செய்யப்பட்டது; குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. இப்போது செய்யப்படுவது போலவே வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலும் அரசு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஊடுருவினர். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி கல்வியைக் காவி மயமாக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்தினார்.
 
வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில்தான் நீதிதுறையிலும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் திட்டமிட்ட முறையில் ஊடுருவினார்கள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்குவதற்கான தீர்ப்பை அளித்தவரும் தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக இருப்பவருமான நீதிபதி ஏ.கே.கோயல் நீதிபதி ஆவதற்குமுன் ஆர்.எஸ்.எஸ் சின் வழக்கறிஞர் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். அவரை நீதிபதியாக நியமிப்பதற்கு அன்று மத்திய சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெய்ட்லி பரிந்துரை செய்தபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அதை நிராகரித்துவிட்டார். மீண்டும் பரிந்துரைக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் அவர் ஒப்புக்கொள்ள நேரிட்டது. நீதிபதி ஏ.கே.கோயலைப்போல ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்கள் இன்னும் எத்தனைபேர் நீதித் துறைக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
 
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு உறுத்தலாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டுத் தங்களுக்கு உகந்த ஒரு சட்டத்தை எழுதுவதற்கு வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிபதி வெங்கடாசலையாவின் தலைமையில் அதற்காக குழு அமைக்கப்பட்டது. அது ஒரு வரைவையும் தயாரித்தது. ஆனால் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் வெளிப்படையாக அந்த முயற்சியை எதிர்த்த காரணத்தால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட
வெங்கடாசலையா கமிஷனின் அறிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
 
வாஜ்பாயி ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளும் சனாதன சக்திகள் தம்மை அரசாங்க ஆதரவோடு வலுப்படுத்திக்கொண்டன. அதனால்தான் 2004 முதல் 10 ஆண்டு காலம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தாலும் 2014ல் மிகப்பெரிய ஆதரவோடு பாஜகவால் வெற்றிபெற முடிந்தது.
 
இங்கே பேசிய தோழர்கள் பலரும் பாஜகவை 2019 பொதுத் தேர்தலில் தோற்கடிப்பதைப்பற்றி பேசினார்கள். அதுவொரு சவால் என நான் கருதவில்லை. புதுச்சேரியில் தற்போது எம்.பி ஆக இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் பாஜகவுக்கு ஆதரவளித்திருக்கிறார். ஆனால் அவரே கூட 2019 தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டால் வெற்றிபெறுவது கடினம். தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் தனித்தனியே போட்டியிட்டதால்தான் 2014ல் ஒரு தொகுதியில் பாஜக வென்றது. இந்தத் தேர்தலில் அந்த ஒரு தொகுதியில்கூட அது வெற்றிபெற முடியாது. இந்திய அளவில் பாஜகவுக்கு போன தேர்தலில் கிடைத்த அளவுக்கு இடங்கள் இப்போது கிடைக்காது என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இப்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் பாஜக அல்லாத அரசே மத்தியில் அமையும் என்று தோன்றுகிறது. அப்படி அமைந்துவிட்டால் சனாதன பயங்கரவாத ஆபத்து நீங்கிவிட்டது என்று அர்த்தமல்ல. அவர்கள் இந்திய சமூகத்துக்குள் செலுத்தியிருக்கிற வெறுப்பு என்னும் விஷத்தை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதுதான் சவால் நிறைந்த பணி. அதை அரசியல் கட்சிகள் மட்டும் செய்ய முடியாது. மனித உரிமை அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும் இணைந்துதான் செய்யவேண்டும்.
 
சனாதன பயங்கரவாதிகள் கொலைப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள 34 பேர்களும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அங்கெல்லாம் அந்த எழுத்தாளர்களுக்கு போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். ஆனால் எந்தவொரு மாநிலத்திலும் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து ஒரு பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்படவில்லை. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் செய்துவருகிறது. அவர்களது கொலைப்பட்டியலில் இருப்பதால் எனக்கு ஆபத்து என நாங்கள் கருதவில்லை. இதை ரவிக்குமாருக்கான ஆபத்தாக,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாக கருதாமல் சனாதன பயங்கரவாதிகளால் இந்த தேசத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாக எமது தலைவர் எழுச்சித் தமிழர் பார்த்தார். அதனால்தான் தேசம் காப்போம் என்ற மாநாட்டை அறிவித்திருக்கிறார். 

ஏனென்றால் இந்தக் கட்சியே ஒரு மனித உரிமை இயக்கம்தான். பொடா சட்டம் வந்தபோது அதை எதிர்த்து அடக்குமுறை சட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பை உருவாக்கியது விசிகதான். இப்போதும்கூட கூடங்குளம் போராட்டமாக இருந்தாலும் சேலம் சென்னை எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் முதலில் களத்தில் நிற்பது விசிகதான். திரு ஹென்றி அவர்கள் கடந்த திமுக ஆட்சியின்போது மனித உரிமைக் கல்வியை அரசுப் பள்ளிகளில் கற்றுத்தரும் ஒரு திட்டத்தை செயல்படுத்தினார். அப்போது விசிகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் தமிழக சட்டப்பேரவையில் குரல் கொடுத்து அதை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தேன். வீரப்பனைக் கொன்ற அதிரடிப்படையில் விடுபட்டுப் போனவர்களுக்கு விருது தரவேண்டும், வீடு தரவேண்டும் என எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்திய நேரத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப் படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என நான்  வாதாடினேன். அதற்குக் காரணம் நாங்கள் அரசியல் கட்சியாக இருந்தாலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களாக எங்களை உணர்வதால்தான். எனவே சனாதன பயங்கரவாதத்தை முறியடிக்கிற சவால் நிறைந்த பணியில் உங்களோடு எப்போதும் நாங்கள் உடனிருப்போம் என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.வணக்கம்
 
( 15.10.2018 அன்று மாலை 
புதுச்சேரியில் மனித உரிமை அமைப்புகளால் 
ஒருங்கிணைக்கப்பட்ட ‘பொது உரையாடலில்’ பங்கேற்றுப் பேசியதன் சுருக்கம் )

Thursday, October 18, 2018

பரியேறும் பெருமாள்: தமிழின் முதல் ‘சேரி மையத் திரைப்படம்’ - ரவிக்குமார்



தோழர்களே !

எனது வாழ்க்கையில் ஒரு திரைப்படத்தைப்பற்றிப் பேசுகிறமுதல் கூட்டம் இதுஅதற்குக் காரணம் நான் திரைப்படம்பார்க்காதது அல்லஇங்கே வந்திருப்போர் எவரையும்விட நான்அதிக எண்ணிக்கையில் படங்களைப் பார்த்திருக்கிறேன் என உறுதியாக்ச் சொல்ல முடியும்எனது பள்ளிப் பருவத்திலேயேஆண்டுக்கு நூறு படங்களுக்குக் குறையாமல்பார்த்திருக்கிறேன்காலை 10 மணி காட்சியில் ஆரம்பித்துஇரவு 10 மணி காட்சி வரை ஒரே நாளில் ஐந்து படங்கள்பார்த்திருக்கிறேன்

நான் சிதம்பரத்தில்தான் படித்தேன்அங்கே பேருந்துநிலையத்துக்கு அருகில் இருந்த நடராஜா தியேட்டரில்ஒவ்வொரு வாரமும் சனிஞாயிறு காலைக்காட்சியில்ஆங்கிலப் படம் போடுவார்கள்அவற்றை ஒரு வாரம்கூடவிடாமல் பார்த்திருக்கிறேன்அப்போது அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஓவியக் கல்லூரி இருந்ததுஅங்கு என்உறவினர் ஒருவர் படித்துக்கொண்டிருந்தார்அவரோடும்அவரது நண்பர்களோடும்தான் ஆங்கிலப் படங்களுக்குப்போவேன்அவர்கள் சினிமாவைப் பார்த்த விதமே வேறுபடத்தின் ஒளி அமைப்புகாட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும்காஸ்ட்யூம்ப்ராப்பர்டீஸ் உட்பட ஃப்ரேம் ஃப்ரேமாகஅலசுவார்கள்கொஞ்ச நாட்களிலேயே எனக்கும் அந்தஅணுகுமுறை பழகிவிட்டதுஅவர்கள்தான் எனக்கு மைக்கேல்ஆஞ்சலோடாவின்ஸி முதல் பிக்காஸோ வரை நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தினார்கள்பாண்டிச்சேரி ரத்னாதியேட்டரில் நல்ல படம் போட்டால் நடராஜா தியேட்டரில்தகவல் சொல்வார்கள்என்னுடைய பள்ளி நாட்களில்சிதம்பரத்திலிருந்து இங்கே வந்து படம் பார்த்துவிட்டுப்போயிருக்கிறேன்ஹிட்ச்காக்கின் North by North west என்றபடத்தை இங்கு வந்துதான் பார்த்தேன்அப்படி சினிமாபார்த்துக்கொண்டிருந்ததால் என் அப்பா ஒருநாள் என்னைவீட்டைவிட்டு போ என்று சொல்லிவிட்டார்அம்மாதான்சமாதானப்படுத்தினார்கள்அன்று நான் பார்த்தது ஒன்றும்பெரிய புரட்சிப் படமல்லஅகத்தியர். அப்படி படங்களைப் பார்த்தாலும் சில படங்களைப் பற்றி கட்டுரைகளை எழுதியிருந்தாலும் ஒரு சினிமாவைப்பற்றி பேசுகி கூட்டம் இதுதான்.  

பரியேறும் பெருமாளைப் பார்க்கவைத்து இங்கே பேசவும்வைத்திருக்கிற தோழர் எஸ்.ஆருக்கு நன்றிமுதலில் இந்தப்படத்தோடு சம்பந்தப்பட்ட சிலரைப் பாராட்டவேண்டும். ‘ரயில்விடப் போலாமா’ பாடலைப் பாடியிருக்கிற ப்ரித்திகாதமிழ் சினிமா இசை உலகுக்குக் கிடைத்திருக்கிற அபூர்வமான குரல். அந்தப் பாடலை எழுதியிருக்கிற விவேக்கையும் பாராட்டவேண்டும்இந்தப் படத்தில் சிறு சிறு பாத்திரங்களில்வருகிறவர்களிடத்திலும் டைரக்டர் நன்றாக வேலைவாங்கியிருக்கிறார்லா காலேஜ் ஆசிரியர்கள்பிரின்சிபால்மாணவர்கள்ஆனந்தியின் அப்பா கேரக்டரில் நடித்திருப்பவர்எல்லோருமே மிகையில்லாமல் பிரமாதமாகசெய்திருக்கிறார்கள் 

இந்தப் படத்தோடு சந்தோஷ் நாராயணன் அசோசியேட்ஆனதை முக்கியமாகக் கருதுகிறேன்நான் இளையராஜாவின்ரசிகன்அவர் இந்தப் படத்தில் ஒர்க் பண்ணியிருந்தால் இந்தக்கதை நிகழும் பூமியை அவருக்கு நெருக்கமாகத் தெரியும்என்பதால் ஆத்மார்த்தமாக செய்திருப்பார்தென்மாவட்டங்களில் நீண்ட காலமாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘ எங்கும் புகழ் துவங்க’ என்ற பாடலை அவருக்குத்தெரிந்திருக்கும்அந்தோணி தாசனைக்கூட அவர் அறிந்திருக்கவாய்ப்பிருக்கிறதுஅவர் நிச்சயம் இந்தக் கதையோடுஒன்றியிருப்பார்ஆனால் இந்தப் படத்தை விலகி நின்றுப் பார்த்து வேலை செய்பவர், நவீனத்துவ பார்வை உள்ளவர் அத்தகைய ஒரு இசை அமைப்பாளரே தேவைந்தத் தேவையை சந்தோஷ் நாராயணன் நிறைவு செய்திருக்கிறார். நான் யார்’  பாடலை அவர் பாடியிருப்பதும் இசைஅமைத்திருப்பதும் சிறப்பாக இருக்கிறதுஅந்தப் பாடலை மாரிசெல்வராஜ்தான் எழுதியிருக்கிறார்சில டைரக்டர்கள் எல்லாவேலையையும் பார்க்க ஆசைப்படுவார்கள்டிராஜேந்தரைப்போலஇயக்குனர் ஷங்கர்கூட பாடல் எழுதியிருக்கிறார்ஆனால் இந்தப் பாடல் மிக வலிமையானசொற்களைக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறதுபாடலாசிரியர்மாரி செல்வராஜை அதற்காக முதலில் பாராட்டுகிறேன்நான் யார் என்ற கேள்வி இருத்தலியல் சார்ந்தது. இந்தப் படத்தின் மையச் சரடாக அந்தக் கேள்விதான் இருக்கிறது. அதை அந்தப் பாடல் மிக உக்கிரமாக எடுத்துரைக்கிறது.

படம் ஆரம்பிக்கும்போது வேட்டை நாய்கள் முன்னே முகத்தை நீட்டி அங்கும் இங்கும் தேடும்போதே ஒருவிதமான பதற்றம் பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்கிறது. அதன் பின் மலையும் மலைசார்ந்த நிலமுமாக விரியும் நிலக்காட்சி ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு பார்வையாளனைத் தயார்படுத்துகிறது. அவனுக்குள் அப்போது ஏறும் வெப்பம் படம் முடியும்வரை குறைவதே இல்லை. 

கதையின் நாயகன் ஆங்கிலம் தெரியாமல் அவமானப்படுகிறான். தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என இப்போதுகூட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி ஒரு பதிவை நான் போட்டிருந்தேன். போராடுகிற மாணவர்களின் சிரமத்தை சரியாகப் புரிந்துகொள்ள பரியேறும் பெருமாள் திரைப்படத்தைஅந்தத் துணைவேந்தர் பார்க்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். ஆங்கிலம் காரணமாகவே கல்லூரிப் படிப்பை இடையில் விட்டவர்களை நமக்குத் தெரியும். இவை எல்லாவற்றையும் தாண்டி ஆங்கிலம் என்பது அவ்வளவு சிரமமானதல்ல என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. நான் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவன் தான். பியுசி படிக்கப்போனபோது அங்கே ஆங்கிலத்தில்தான் வகுப்பு எடுத்தார்கள். அறிவியல் பிரிவில் சேர்ந்திருந்த எனக்கு ஓரிரு வாரங்கள் சிரமமாக இருந்தது. அப்புறம் அது புரிய ஆரம்பித்துவிட்டது. பிஏ படிப்பையும் அதன் பின்னர் பிஎல் படிப்பையும் ஆங்கிலவழியில்தான் படித்தேன். பிஎல் படிக்கும்போது தமிழில் தேர்வு எழுத வாய்ப்பிருந்தது. அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஒரு பேப்பர் மட்டும் நான் தமிழில் எழுதினேன். அதில்தான் அதிக மதிப்பெண்ணையும் பெற்றேன். 

இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு ஒரு எண்ணம் வந்தது. ஏன் இதில் கதாநாயகன் ஆங்கிலம் தெரியாதவனாகவும் நாயகி ஆங்கிலம் தெரிந்தவளாகவும் இருக்கவேண்டும்? அவன் ஆங்கிலத்தில் திறமை பெற்றவனாகவும் அவன் நாயகிக்குக் கற்றுத் தருபவனாகவும் அமைத்திருந்தால் அது கதைக்கு எந்த விதத்தில் இடையூறாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. யதார்த்தத்தில் அப்படி அல்ல என்று இயக்குனர் பதில் சொல்லக்கூடும். சமூகத்தில் இருக்கும் யதார்த்தத்தமும் கலையில் நாம் படைக்கும் யதார்த்தமும் ஒன்று அல்ல. படைப்புக்குள் நாம் உருவாக்கும் யதார்த்தம் என்பது கனவில் நாம் பார்க்கும் யதார்த்தம் போன்றது என லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்யெஸ் கூறுவார். யதார்த்தம் என்றேஎடுத்துக்கொண்டால்கூட இப்போது சட்டக் கல்லூரிகளில் அதிகமான கட் ஆஃப் மார்க்குகளைப் பெற்றிருப்பவர்கள் தலித் மாணவர்கள்தான். ப்ளஸ் டூ படிக்கும்போது அவர்களுக்கு ஏ, பி குரூப்கள் கிடைப்பதில்லை. எனவே ப்ளஸ் டூ முடித்ததும் அவர்களுக்கு இருக்கும் ப்ரஃபொஷனல் படிப்புக்கான வாய்ப்பு சட்டம் படிப்பது மட்டும்தான். அதனால்தான் இப்போது சட்டக் கல்லூரிகளில் அதிகமாக தலித் மாணவர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு ஆங்கிலம் மிகப்பெரிய தடையாக இருக்கிறது என நான் கருதவில்லை.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் தலைவர் திருமாவளவன் என்னோடு பேசினார். படத்தில் சில காட்சிகள் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாகச் சொன்னார். வேட்டைக்குப் போய்த் திரும்பிவந்து ஒரு குளத்தில் பரியனும் மற்வர்களும் குளிப்பார்கள். அங்கு வரும் மற்ற சமூகத்தவர்கள் அந்த குளத்தில் சிறுநீர் கழிப்பார்கள். அதுபோலவே திருமண வீட்டில் அடித்து உதைக்கப்படும் பரியனின் முகத்தில் ஒருவன் சிறுநீர் கழிப்பான். அந்தக் காட்சியை அவ்வளவுதூரம் காட்டவேண்டுமா? எனத் தனக்குத் தோன்றியதாக அவர் சொன்னார். அதுபோலவே பரியனின் அப்பாவுடைய வேட்டியை உருவி நிர்வாணப்படுத்தப்பட்டு ஓடவிடப்படும் காட்சியும் தன்னை பாதித்ததாகக் குறிப்பிட்டார். இந்தக் காட்சிகள் சாதி அபிமானிகள் மனநிறைவு கொள்வதற்காக வைக்கப்பட்டனவா என்ற ஐயம் எழுவதாக அவர் கூறினார்.

பரியனின் அப்பாவைப்போன்ற கிராமியக் கலைஞர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். அவர்கள் மிகவும் விவரம் தெரிந்தவர்களாகவும், தைரியமானவர்களாகவும் இருப்பார்கள். பல ஊர்களுக்கும் சென்று தொழில் செய்வதால் வரும் துணிவு அது. ஆனால் அப்படியொரு கிராமியக் கலைஞர் இந்தப் படத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு கையெடுத்துக் கும்பிட்டபடியே ஓடுகிறார். கல்லூரியின் உள்ளே இருந்து விரட்டிக்கொண்டே போகிறார்கள், வெளியே சாலைக்கு வந்தும் விடாமல் துரத்துகிறார்கள்.அந்தக் காட்சியைப் பார்த்தபோது அப்படி அவர் இழிவுபடுத்தப்படுவதை விலாவாரியாகக் காடியிருக்கவேண்டாமே என்றுதான் எனக்கும் தோன்றியது. 

இந்தப் படத்தில் வில்லனாக வரும் தாத்தா கடைசியில் ரயில் பாதையில் சம்மணமிட்டு அமர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். நாயகன் அவரை அடித்துக் கொல்வதாகக்கூட வேண்டாம், அவன் அடிக்கும்போது மயங்கி விழுந்து தண்டவாளத்தில் கிடப்பவர் ரயிலில்  அடிபட்டு சாவதுபோலவாவது காட்டியிருக்கலாமே எனத் தோன்றியது. அந்த வில்லனின் கொலைகள் மட்டுமல்ல, தற்கொலையும்கூட தியேட்டருக்கு அப்பால் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதுபோலத் தோன்றியது.

தலித் மக்களின் முன்னேற்றத்தைப்பற்றிப் பேசுகிற எல்லோருமே கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவார்கள். ஆனால், படிப்பறிவில்லாத மக்களுக்குக் கல்வியைக் கொடுப்பதைவிட பயந்து கிடக்கும் மக்களுக்கு துணிச்சலைக் கொடுப்பது முக்கியமானது என நான் நம்புகிறேன். இன்று ஏறக்குறைய மற்ற சமூகத்தினருக்கு இணையாக தலித்துகள் படிப்பறிவு பெற்றுவிட்டனர். ஆனால் வன்கொடுமைகள் அதனால் குறைந்துவிடவில்லை. ‘அடங்க மறு, அத்து மீறு; திமிறி எழு, திருப்பி அடி” என்ற தலைவர் திருமாவளவனின் வார்த்தைகள்தான் இன்று லட்சக் கணக்கான தலித் மக்களைத் தலை நிமிர வைத்திருக்கிறது. அச்சத்திலிருந்து விடுதலை பெறாமல் அவமானத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதுதான் தலித்துகள் கற்றிருக்கும் பாடம். இந்தப் படத்தைப் பார்க்கும் தலித்துகளுக்கு ஏற்படும் உணர்வு வேறு, தலித் அல்லாதவர்களுக்கு ஏற்படும் அனுபவம் வேறு. இந்தப் படம் தலித்துகளை அச்சத்திலிருந்து விடுவிக்கிறதா எனப் பார்க்கவேண்டும்.  

பரியனும், அவனது தந்தையும் அவமானப்படுத்தப்படும் காட்சிகள் இயக்குனரின்மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி. அதுபோன்ற கோபத்தை நான் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். நான் யார் பாடலில் ஒரு வரி வருகிறதே ‘ குடிசைக்குள் கதறி எரிந்தேன் நான் யார்?’ என்று. அப்படி குடிசைகள் எரிக்கப்பட்டபோது அங்கெல்லாம் சென்று பார்த்திருக்கிறேன். 1987 ஆம் ஆண்டு ஆலப்பாக்கம் என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டபோது அந்த நெருப்பு அடங்குவதற்கு முன்பே அங்கு போனேன். அதன் பிறகு பல ஊர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டன. அங்கெல்லாம் போய் பார்த்து அந்த மக்களிடம் பேசியிருக்கிறேன். அப்போது இதே மாதிரி கோபம் வரும். முதலில் அந்த மக்கள்மீது ஆத்திரமாக வரும். பத்துபேர் சேர்ந்து நின்றிருந்தால் வந்தவர்கள் ஓடியிருப்பார்களே, கும்பலாக வருபவர்களைப் பார்த்ததும் இவர்கள் ஓடுவதால்தானே கொளுத்துகிறார்கள் என்று ஆத்திரம் ஏற்படும். அது ஆற்றாமையால் வரும் கோபம். அதன்பிறகு அந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற உறுதி ஏற்படும். அப்படியான கோபம்தான் இப்போதும் வந்தது. ஆனால் நிதானமாக யோசிக்கும்போது அந்த ஆத்திரத்தை நமக்குள் ஏற்படுத்துவதற்காகத்தான் இப்படி அந்தக் காட்சிகளை இயக்குனர் வைத்திருக்கிறாரோ என்ற எண்ம் எழுந்தது. கமர்ஷியல் படங்களில் பார்ப்போம், கதாநாயகனே எல்லோரையும் அடித்து வீழ்த்திவிடுவான். நமக்கு எந்த வேலையும் மிச்சம் இருக்காது. ரஜினி படங்களில் அப்படித்தான் நடக்கும். அவரே எல்லோரையும் சுட்டுத் தள்ளி மக்களையெல்லாம் காப்பாற்றிவிடுவார். அடடா இவரே நமது முதலமைச்சராக வந்தால் நம்மையெல்லாம் காப்பாற்றிவிடுவாரே என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்படுவது அதனால்தான். அங்கே பார்வையாளன் செயலற்றவனாக்கப்படுகிறான். இங்கே அப்படி அல்ல. ஆத்திரமடைய வைப்பதன்மூலம் பார்வையாளனை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது, செயலுக்கு உந்துகிறது இந்தப் படம்.

அமெரிக்காவில் இருக்கும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் நிறவெறிக்கு எதிராக சினிமாவை காத்திரமான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் அவர்களைப் பற்றி வெளியான சினிமாக்களில் கறுப்பின மக்கள் கதாபாத்திரங்களாக இருப்பார்கள், அவர்களது வாழிடம் காட்டப்படும். அவர்கள் போதை மருந்து கடத்துவதைப்பற்றியும்,அவர்களுக்குள் நடக்கும் ‘கேங் வார்’களைப் பற்றியும் அந்த சினிமாக்கள் பேசும். பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டால் நிறரீதியான பாகுபாட்டிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற எண்ணத்தை அவை ஏற்படுத்தின.ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாட்டை நுட்பமாகப் பேசின. அந்த மாற்றங்களின் பின்னணியில் மால்கம் எக்ஸ் நடத்திய போராட்டங்களைப் பார்க்கவேண்டும். இலக்கியத்தில் குறிப்பாகக் கவிதையில் அந்த மாற்றம் முன்பே நடந்துவிட்டது. கறுப்பின மக்களின் பிரச்சனைகளைப் பேசியதில் மற்ற எந்த இலக்கிய வடிவத்தைக் காட்டிலும் கவிதைக்கே மிக முக்கியமான பங்கு உண்டு. லாங்ஸ்டன் ஹியூஸ் போன்றவர்கள் மகத்தான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் அது சற்று தாமதமாகவே நிகழ்ந்தது. கறுப்பின மக்களின் பிரச்சனையைப் பேசும் படங்களை ‘ கெட்டோ சென்ட்ரிக் ‘(Ghetto Centric ) படங்கள் என அழைக்கிறார்கள். கெட்டோ என்பது கறுப்பின மக்கள் வாழும் பகுதி. அதை நமது சூழலில் சேரி மையத் திரைப்படம் என மொழிபெயர்க்கலாம். தமிழில் சேரி மக்களைப் பல சினிமாக்கள் காட்டியிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய நோக்கிலிருந்து அந்த மக்களின் வாழ்க்கையைப் பேசுகிற முதல் ‘ சேரி மைய சினிமா’ எனப் பரியேறும் பெருமாளை நாம் கூறலாம். 

பாண்டிய ராஜாக்கள் என்ற ஸ்க்ரிப்டைத்தான் முதலில் எழுதியதாகவும் அது மிகவும் சீரியஸான ஒன்றாக வந்ததால், முதல் படத்தில் அப்படி ரிஸ்க் எடுக்கவேண்டாம் ஜாலியான ஸ்க்ரிப்டாக ஒன்றை எழுது என இவரது நண்பர்கள் சொன்னதால் அதற்கேற்பவே இந்த ஸ்க்ரிப்டை எழுதியதாகவும் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். அப்படி ஜாலியாக நினைத்து எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட்தான் இப்போது ஒரு தீவிரமான சினிமாவாக நமக்கு முன்னால் வந்திருக்கிறது. எந்தவொரு நல்ல படைப்பும் அப்படித்தான், படைப்பாளி திட்டமிடுவதைப்போல அது வெளிப்படாது. சரியாகச் சொன்னால் நல்ல படைப்பை ஒரு படைப்பாளி உருவாக்குவதில்லை, அந்தப் படைப்புதான் படைப்பாளியை ஊடகமாக வைத்துத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒரு கவிஞராகவும் இருக்கிற மாரி செல்வராஜ் அதை உணர்ந்திருப்பார். இந்தப் படமும் அப்படித்தான் வெளிப்பட்டிருக்கிது என நினைக்கிறேன். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டோடு புளியங்குளம் போனதும் அந்த ஊரில், அந்த மக்களிடையே அந்த ஸ்க்ரிப்ட் வேறொரு அவதாரம் எடுத்திருக்கிறது. 

இந்தப் படத்தின் நாயகன் இருவேறு மனநிலை கொண்டவனாக இருக்கிறான். தனது மக்களோடு அவன் இணைந்தும் விலகியும் வாழ்கிறான். பிஎல் படிக்கவேண்டும் என்பது அவனது விருப்பம் அல்ல, அவன் ஊரைச் சேர்ந்த அண்ணன் ஒருவர் போலிஸ் ஸ்டேஷனில் அவமானப்படுத்தப்பட்டு அடிக்கப்படும்போது அவரது விருப்பத்துக்காக பிஎல் படிக்க 

ஒப்புக்கொள்கிறான். கல்லூரியில் அவனது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஒரு குழுவாக இருக்கிறார்கள் அதற்கு ஒரு தலைவர் இருக்கிறார். ஆனால் பரியேறும் பெருமாள் அவர்களோடு சேர்வதில்லை. அவர்களே கூப்பிட்டுக் கேட்கும்போதுகூட அவர்களிடம் தனக்கு நேரும் அவமானங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. ஒருமுறை பேருந்திலிருந்து இறக்கி தூக்கிச் சென்று அடிக்கிறார்கள். பரியேறும் பெருமாள் தப்பி ஓடி அவனது ஊர் எல்லைக்குள் நிற்கிறான், கூப்பிடு தூரத்தில் அவன் ஊர் ஆட்கள் இருக்கிறார்கள் அவனைத் துரத்தி வருபவர்கள் மூன்று பேர்தான், தனது ஊர் ஆட்களைக் கூப்பிட்டு அவர்களை அடித்து விரட்டியிருக்கலாம். அதை அவன் செய்யவில்லை. கல்லூரியில் நடக்கும் பிரச்சனையைப்பற்றி அவன் ஊர் ஆட்கள் விசாரிக்கிறார்கள், நாங்கள் வேண்டுமானால் வருகிறோம் எனச் சொல்கிறார்கள், அதற்கும் அவன் உடன்படுவதில்லை. மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள், மாணவர்கள் அடித்துக்கொள்கிறார்கள், மாணவர்கள் தாமிரபரணி படுகொலையை நினைவுகூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள், ஆனால் எதிலும் பரியன் பங்கேற்பதில்லை. கல்லூரியிலும் சரி ஊரிலும் சரி தான் சார்ந்த சமூகத்திலிருந்து பெரும்பாலும் அவன் விலகியே நிற்கிறான், சில நேரங்களில் அவர்களோடு ஐக்கியமும் ஆகிறான். ஆடும்போதும், பாடும்போதும், வேட்டைக்குப் போகும்போதும் அவர்களில் ஒருவனாக இருக்கிறான். வகுப்பறையில் முன் பெஞ்சில் உட்காரும்போது, ‘நாங்க வரக்கூடாதா’ எனக் கத்தும்போது அவனுக்குள் அந்த அடையாளத்தின் நினைவு தீவிரமாகிறது. தனது சமூகத்தோடு ஐக்கியப்பட்டு நிற்காததால்தான் அவன் எல்லா அவமானங்களையும் சகித்துக்கொள்ளக்கூடியவனாக இருக்கிறானா என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது. பிளவுண்ட மனநிலையோடு அவன் சித்திரிக்கப்பட்டிருக்கிறான். அதனால்தான் ‘நான் யார்?’ என்ற இருத்தலியல் சார்ந்த கேள்வி அவனுக்குள் எழுகிறது.

படத்தின் இறுதியில் நாயகியின் தந்தையோடு அவன் பேசும் வசனங்கள் ஆழமான புரிதலை வெளிப்படுத்துகின்றன. படத்தின் துவக்கத்தில் நாயைக் கொஞ்சுகிற இளைஞன், கல்லூரிக்கு வந்த முதல் நாளில் ஆங்கிலம் தெரியாமல் திணறுகிற இளைஞன், தனது நண்பனோடு காமெடியனைப்போல உலா வரும் இளைஞன் படத்தின் இறுதியில் மிகுந்த முதிர்ச்சியோடு பேசுகிறான். அவன் பட்ட அவமானங்களும், அடி உதைகளும் அவனை வெறுப்பு கொண்டவனாக, மிருகமாக மாற்றவில்லை. அதற்கு மாறாக ஒரு லட்சியத்தை நோக்கி அவனை செலுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.’ இந்த சமூகத்தின்மீது கோபப்படவும், இதை வெறுக்கவும் எனக்கு எல்லா நியாயங்களும் இருக்கின்றன. ஆனால், நான் எனது வெறுப்பையெல்லாம் ஆற்றலாக மாற்றுகிறேன்’ எனப் புரட்சியாளர் அம்பேத்கர் ஒருமுறை எழுதியிருப்பார். அப்படி மாற்றப்பட்ட ஆற்றல்தான் எண்ணற்ற நூல்களை நமக்குத் தந்தது. இந்த நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தரக் காரணமாகியது. சட்டக் கல்லூரியில் சேரும்போது ‘நான் டாக்டர் அம்பேத்கர் ஆகவேண்டும்’ எனக் கூறும் பரியேறும் பெருமாள் படத்தின் இறுதியில் பேசும் வசனங்கள் அவன் விரும்பியபடியே அவன் அம்பேத்கரை நெருங்கியிருப்பதைக் காட்டுகின்றன. 

இந்தப் படம் ஆங்கிலம் கற்பதில் உள்ள இடர்பாடுகளை ’ஜாலி’யாகப் பேசுகிறது; ஒரு பெண்ணின் நாகரிகமான காதலைப் பேசுகிறது; கறுப்பி என்ற வேட்டை நாய்க்கும் அதை வளர்த்த நாயகனுக்குமான உறவைப் பேசுகிறது – எதைப் பேசினாலும் அங்கெல்லாம் மிகவும் நுட்பமாக அரசியலைப் பேசுகிறது. இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் படம். அதே நேரத்தில் அற்புதமான கலைப்படைப்பு. இதைத் தந்திருக்கும் மாரி செல்வராஜ் என்ற கலைஞனை நான் மனதாரப் பாராட்டுகிறேன். முதல் படத்தையல்ல, முதிர்ச்சியான படத்தை நீங்கள் தந்திருக்கிறீர்கள். 

இந்த உலகத்தைக் கலையால், இலக்கியத்தால்தான் காப்பாற்ற முடியும் என நம்புபவன் நான். மனிதர்களை மனிதர்களாக வைத்திருக்கும் ஆற்றல் கலை இலக்கியத்துக்கு மட்டும்தான் இருக்கிறது. அத்தகைய ஆற்றல் வாய்ந்த கலைப் படைப்புகளைத் தரும் படைப்பாளியை நாம் கடவுள் என அழைப்பதில் தவறில்லை. அப்படி ஒரு கலைஞனாக, கடவுளாக இன்று நம்மிடையே அமர்ந்திருக்கிறார் மாரி செல்வராஜ். அவருக்கு என் வாழ்த்துகள்.  

நன்றி, வணக்கம்!  

( 17.10.2018 அன்று மாலை பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து புதுச்சேரியில் தமுஎகச ஒருங்கிணைத்த கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்